Pages - Menu

Thursday 3 December 2015

இறை இரக்கம் மனிதரானார் ...... நாம் இறை இரக்கத் தூதர்களாகிட .....

இறை இரக்கம் மனிதரானார் ......
நாம் இறை இரக்கத் தூதர்களாகிட ......
- அருள்தந்தை அ. பிரான்சிஸ், பாபநாசம்

உலக மீட்பர் உதயமான வரலாற்று நிகழ்வுதான் கிறிஸ்மஸ். விண்ணகம் வாழும் இறைவன், கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி, உருவாகி மனிதருள் ஒருவரானார். இதனையே,
உருவிலான் உருவாகி உலகில் ஒரு மகனுதிப்பக்
கருவிலாக் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆயினையே
என்று வீரமாமுனிவர் கூறுகின்றார்.கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர். (எசாயா 7 : 14) என்று இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்தது இயேசுவின் பிறப்பில் நிறைவுறுகின்றது. இயேசு பிறப்பின் நிகழ்வுகளில் வானதூதர்களின் செயல்பாடுகளைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.
1. கபிரியேல் வானதூதரால், திருமுழுக்கு யோவான் பிறப்பின் முன் அறிவிப்பு (லூக் 1 : 5 - 20)
2. அன்னை மரியாவுக்கு, கபிரியேல் வானதூதரின் இயேசு பிறப்பின் முன் அறிவிப்பு (லூக் 1 : 26 - 38)
3. யோசேப்பின் ஐயப்பாடு நீங்கிட பெயரிடப்படாத வானதூதரின், செயல்பாடு (லூக் 1 : 18 - 21)
4. இடையர்களுக்கு மட்டும் விண்ணகத்தூதர் பேரணியினரின் மெசியாவின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சியின் செய்திப் பறைசாற்றப்படல் (லூக் 2 : 8 - 14)
5. ஏரோதுவிடமிருந்து குழந்தை இயேசுவை காப்பாற்ற, எகிப்துக்குச் செல்லுமாறு யோசேப்புக்கு அறிவுறுத்திய வானதூதர் (மத் 2 : 13 - 15)
விண்ணுலகத் தூதர்களின் காட்சிகள் வழியாக நம் உள்ளத்தின் ஆழத்தில் இருத்த வேண்டிய கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்போம்.
அ. திருமுழுக்கு யோவானின் தலையாய பணி (லூக் 1 : 17) :
பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்களுள் கடைசியானவர் மலாக்கி. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் எருசலேம்
ஆலயம் கட்டப்பட்டதற்குப் பின் இந்நூல் எழுதப்பட்டது. குருக்களும், மக்களும் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இல்லாமல் நெறி தவறி வாழ்ந்தனர். இறைவனின் திருப்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தினர். எனவே தம் மக்களைத் தண்டித்துத் திருத்திட ஆண்டவர் வருவார். அவரது வருகையை ஆயத்தம் செய்ய தம் தூதரை அனுப்புவார் என்பதே நூலின் மையக்கருத்து. அத்தகு வரலாற்றுப் பின்னணியில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றி உற்றுநோக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
யோவானின் முக்கிய பணி, ஆண்டவருக்கேற்ற மக்களினத்தை தயாரிப்பது. இதற்கு மூன்றுவித பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எலியாவின் உளப்பாங்கையும், வல்லமையையும் பெற்றிருத்தல். பாகால் இறைவாக்கினர்களோடு மல்லுக்கு நின்று இஸ்ரயேலின் ஆண்டவரே கடவுள் என்பதை நிலை நாட்டியவர் இறைவாக்கினர் எலியா (1 அரசர் 18). அடுத்து, தந்தையரும், மக்களும் உளம் ஒத்துப் போகச் செய்ய வேண்டும். மூன்றாவதாக நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் செய்ய வேண்டும்.
ஆ. அன்னை மரியாவுக்கும், கபிரியேல் வானத்தூதருக்கும் இடையில் நடந்த சந்திப்பு (லூக்1 : 26 -32) :
அருள் மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்ற வாழ்த்தொலியோடு ஆரம்பமாகும் இந்தச் சந்திப்பு. ஓர் இறை ‡ மனித உறவு நெருக்கத்தின் உரையாடலாகத் தொடர்கிறது.
3. மரியாவின் மனதிலோ ஒரு கலக்கம். உள்ளத்திலே ஒரு தயக்கம். எப்படி நிகழுமோ என்றதொரு ஏக்கம். அதன்பின்னர் எழுந்ததுவே, ‘இதோ! ஆண்டவரின் அடிமை’ என்ற மன உறுதிப்பாட்டின் தாக்கம். இத்தாக்கத்தின் நான்கு வெளிப்பாடுகள்: 1. கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுக்க வேண்டும்.
2. அவரது பெயர் இயேசு.
3. அவர் பெரியவராய் இருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
4. அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.
இஸ்ரயேல் மக்களின் விடுதலை தாகத்தைத் தணித்து, உரிமை வாழ்வு வழங்கி, மகிழ்ச்சி மழை பொங்கிட, மெசியா தோன்றுவார் என்று இறைவாக்கினர்கள் முன்னறிவித்தனர். காத்திருந்த மக்களின் கண்ணீர் துடைக்கப்படவில்லை. மெசியா பிறப்பு கானல் நீராகி விடுமோ என்று தவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலம் நிறைவேறிய போது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும், அனுப்பினார். (கலாத் 6 : 4 - 5)

இ. விண்ணகத்தூதர் பேரணியின் வாழ்த்து :
சாமக்காவல் காத்து வந்த இடையர்களுக்குக் காட்சி தந்த விண்ணுலகத் தூதர்கள் உரைத்த செய்தி நான்கு பிரிவுகளைக் கொண்டதாகத் திகழ்கின்றது.

‡ அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். அது என்ன?
‡ இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திக்கிறார். அடையாளம் என்ன?
‡ குழந்தையைத் துணியில் சுற்றித் தீவனத் தொட்டிலில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இத்தெய்வக் குழந்தை தனது பிறப்பால் உலகுக்குத் தரும் செய்தி என்ன தெரியுமா?
‡ உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி.

மகிழ்ச்சியே கிறிஸ்து பிறப்பு நமக்குக் கொடுக்கும் கொடை. மது, மங்கை கண்களுக்குக் களிப்பூட்டும் காட்சிகள்,  சொகுசான வாழ்க்கை இவற்றிலிருந்து கிடைக்கும் சந்தோ­ம் தற்காலிகமே. நிலையில்லா இவ்வுலகில் மகிழ்ச்சி மழை பொழிந்திடவே இயேசு நம்மில் ஒருவரானார்.
கிறிஸ்து பிறப்பின் செய்தி, மூன்று பண்புகளைக் கொண்டது. பாவத்தில் அமிழ்ந்திருந்தாலும் இஸ்ரயேல் மக்களைக் கைவிடாது அவர்கள்மீது தான் கொண்டுள்ள அன்பையும், இரக்கத்தையும், பிரமாணிக்கத்தையும் இறைவன் வெளிப்படுத்துதல். மக்களின் மீட்பு, இறைவனுக்கு மகிமை, மனிதனுக்கு மகிழ்ச்சி. நீதியை விட இரக்கமே உருவானவர் இறைவன். இரக்கத்தின் மறுபதிப்பே குழந்தை இயேசு.
2013ஆம் ஆண்டு மார்ச், 17 அன்று உரோமையின் ஆயராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் பகல் 12 மணி மூவேளைச் செப வேளையில், ‘உலக மாற்றத்திற்கு இறை இரக்கத்தினை உணர்ந்து செயல்படுதலே அடித்தளமாய் அமையும்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டார்.
1992 ஆம் ஆண்டு ஆயராகப் பொறுப்பேற்ற பொழுது, இறை இரக்கமே இவரின் விருது வாக்கானது. ‘உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்’ (லூக் 6 : 36) என்பதனை மையமாகக் கொண்டே 2016ஆம் ஆண்டு இறை இரக்க ஆண்டாக திருச்சபை அறிவித்துள்ளது. ஆன்மீக மறுமலர்ச்சிக்கான தொடர்பயணமாக இந்த ஆண்டு அமையும். 2015 டிசம்பர் 8 அமல அன்னை விழா முதல் 2016 நவம்பர் 20 கிறிஸ்து அரசர் பெருவிழா வரையிலான இந்நாட்கள் இறை இரக்கப் பெருக்கின் காலமாக அமையட்டும்.
இந்த இறை இரக்க ஆண்டின் நுழைவாயிலில் நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் இறை இரக்கக் கிறிஸ்மஸ் ஆகட்டும். பாவம் போக்கி மகிழ்ச்சி வழங்கிட வந்திட்ட இறை இரக்கக் குழந்தை இயேசுவின் பிறப்பு விழா இறை இரக்கத்தின் பிறப்பினை உலகுக்கு பறைசாற்றிய வானதூதர்கள் போன்று நாமும் இறை இரக்கத்தின் தூதர்களாவோம்.
ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்.
பெருமை பெறும் நினதுபுகழ் பேச வேண்டும். பொய்மை பேசாதிருக்க வேண்டும்.
மதிவேண்டும், நின்கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்.
                                                                                                                                    ‡ வள்ளலார்.
மேற்காணும் வரிகள் நமது தினசரி செபமாகட்டும். இச்செபம் நமது வாழ்வாகட்டும்.
இறைத்தந்தையின் இரக்கத்தினை உணர்ந்து பாவத்தளையிலிருந்து விடுபடுவோம். இன்றைய உலகுக்குத் தேவை விடுதலை, சாவினின்று விடுதலை, சாபத்தினின்று விடுதலை, நோயிலிருந்து விடுதலை.இறை இரக்கத்தினை உணர்வோம். பாவ வாழ்வினை விட்டெழுந்து இறை இரக்கக் குழந்தை பிறப்பின் மகிழ்ச்சியில் மகிழ்வோம். நாமும் இறை இரக்கத் தூதர்களாவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post