Pages - Menu

Wednesday 16 December 2015

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 5

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 5
- நல்லை ஆனந்தன்
திரு.ஆரோக்கியதாஸ், திண்டுக்கல் :
நான் தனியாரில் வேலை செய்கிறேன். கடந்த ஆண்டுகளில் என் முதலாளி தீபாவளிக்கோ, கிறிஸ்மஸ்க்கோ, புதுவருசத்துக்கோ, பொங்கலுக்கோ போனசு எதுவுமே தரவில்லை. ஒவ்வொரு முறையும் கேட்கும் போதெல்லாம் 12 மாதங்கள் வேலை செய்தாய், 12 மாதமும் தந்தேன். நீ என்ன 13 மாதங்களா வேலை செய்தாய்? என்று கேட்கிறார். நான் இந்த ஆண்டு என் முதலாளியிடம் போனசு வாங்க தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்.

பதில் :
தாசண்ணே, வருடம் முழுதும் உண்மையாக உழைத்தும், உங்களை மதிக்காத, போனசு தராத முதலாளியிடம் நீதி கேட்டுப் போராடியதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர் என்கிறார் இயேசுசாமி. எனவே கவலைப்படாதீர்கள், நிறைவடைவீர்கள்.
ஞாயிறு தொடங்கி சனி வரை வாரத்திற்கு 7 நாட்கள். ஒரு மாதத்திற்கு 4 வாரங்கள். அப்போது நாலேழு இருபத்தியயட்டு நாட்கள் ஒரு மாதம். ஆண்டிற்கு 12 மாதங்கள். அப்போது 12 $ 28 ஆகமொத்தம் 336 நாட்கள். ஆனால் காலண்டர் பிரகாரம் ஓர் ஆண்டிற்கு 365 நாட்கள். ஆக நீங்கள் 30 நாட்கள் அதிகமாக உழைத்திருக்கிறீர்கள். எனவே பண்டிகையின்போது ஒரு மாத சம்பளத்திற்கு ஈடாக அல்லது அதற்கு அதிகமாகக் கொடுப்பதுதான் உங்கள் முதலாளிக்கு தகுதியும் நீதியுமாகும். அவரது கடமையும் மனித நேயச் செயலுமாகும். எனவே, உங்களுக்குரிய நியாயமான பங்கை அஞ்சி, கெஞ்சி கேட்காதீர்கள். அஞ்சாமல், தயங்காமல் கேளுங்கள். உங்கள் உழைப்பைச் சுரண்டும் அவர் கடவுளிடம் கண்டிப்பாகக் கணக்கு கொடுக்க வேண்டும்.
மத்தேயு நற்;செய்தி 20ஆம் அதிகாரத்திலே வேலையாட்கள் மட்டில் முதலாளி எப்படி நடக்க வேண்டும் என்பதை ஓர் உவமை வழியாக இயேசு சுட்டிக் காட்டுகிறார். திராட்சைத் தோட்ட முதலாளி விடியற்காலையிலும் 9 மணி, 12 மணி, பிற்பகல் 3 மணி, 5 மணி என்று பலமுறை அலைந்து வேலையாட்களை அழைத்து வருகிறார்; ஏனெனில் திராட்சை பழுத்தவுடன் வெட்டிவிட வேண்டும். மழை விழுந்தால் பழங்கள் வெடிக்கும், அழுகிவிடும், துர்நாற்றம் கிளம்பும், பயனற்றதாகிவிடும். எனவே அந்த முதலாளி நாள் முழுவதும் அலைகிறார்.
மாலை 5 மணிக்கு வேலையாட்களைச் சந்திக்கும்போது அவர்கள், எவரும் தங்களை வேலைக்கு அமர்த்தவில்லை என்கிறார்கள். முதலாளிகள் யாரை வேலைக்கு அமர்த்துவதில்லை? முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நோய்வாய்ப்பட்டு மெலிந்து கிடப்போர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஏழைச் சிறுவர்கள் இவர்களை முதலாளிகள் கழித்து விடுவார்கள். ஆனால் இயேசு காட்டும் முதலாளி அனைவரையும் தம் தோட்டத்திற்கு அழைத்துப்போகிறார். ஆறுமணிக்கு வேலை முடிகிறது.
கடைசியாய் வந்து ஒரு மணி நேரம் வேலை செய்தவர்க்கு ஒருநாள் சம்பளம். காலையிலே வந்து நாள் முழுவதும் வேலை செய்ததற்கு ஒருநாள் சம்பளம். ஏனெனில் அந்த முதலாளி உழைப்பைப் பார்க்கவில்லை. அந்த ஒதுக்கப்பட்ட மக்களின் பிழைப்பையும் பார்த்தார். மணிக்கணக்கை அவர் பார்க்கவில்லை. மனிதத்தை பார்த்தார்.
தாசண்ணே, உங்கள் முதலாளியும் விரைவிலே மனந்திருந்துவார். இந்த ஆண்டு நிச்சயம் உங்களுக்கு போனசு கிடைக்கும் என்று நம்புகிறேன். கவலை வேண்டாம். கடவுள் செயலாற்றுவார். வாழ்த்துக்கள்!

செல்வி. அருள்மேரி, தஞ்சாவூர் :

எனக்கு 20 வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்கும் எதிலும் உலகத்தில் எப்போதும் காதல் என்ற பேச்சுத்தான். இந்த காதலில் அப்படி என்னதான் இருக்கிறது.? ஏன் காதலுக்காக தற்கொலை செய்கிறார்கள்? அல்லது பிறரைக் கொலை செய்கிறார்கள்? கடவுள் இந்த காதலை உலகத்திலே ஒழித்துவிட்டால் எவ்வளவு நல்லது?

பதில் :

அருளக்கா, சமூகப் பொறுப்புணர்வோடு தாங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். காதலுக்காகத் தற்கொலைகள், கெளரவக் கொலைகள் என்ற செய்திகளைப் படித்து கவலை கொண்ட தங்கள் உள்ளத்திற்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை.
கடவுள் உலகப் படைப்புகள் அனைத்தையும் ஆண் ‡ பெண் என்று பிரித்துப் படைத்து அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்புசக்தியை வைத்தார். அந்த ஈர்பபினால்தான் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அதனால் இந்த உலகம் தொடர்ந்து இயங்குகிறது. அந்த ஈர்ப்பு சக்தியே காதல் என்று கொள்க. கடவுள் இந்த காதலை உலகிலே ஒழித்துவிட்டால், ஈர்ப்பு சக்தி இழந்த படைப்புகள், இனவிருத்தி அடையாமல் அழிந்து கொண்டே போய் அடுத்த நூற்றாண்டிலேயே இந்த பூமி ஒரு வெற்று மண் உருண்டையாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
இந்த உலகத்திலே காதல் முதன்முதலில் எப்போது தோன்றியது தெரியுமா? விவிலியத்தில் தொடக்கநூல் 2 : 22இல் ஆரம்பமாகிறது. ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதரிடமிருந்து (ஆதாம்) எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார் (ஏவாள்). இப்போது காதல் வயப்பட்டு முதல் காதல் கவிதையை வடிவமைத்தான். “இவள் என் எலும்பின் எலும்பும் சதையின் சதையுமானவள்”. (இதற்கு என்ன அர்த்தம்?) ஆதாம் ஏவாளால் ஈர்க்கப்படுகிறான். காதல் வயப்படுகிறான் என்பதைக் கடவுள் புரிந்துக்கொண்டார். இதைத்தான் அவர் எதிர்பார்த்தார். அது அன்று அப்படியே “ஒர்க்அவுட்” ஆகிவிட்டது.
இந்த உலகில் ஆண்களுக்கு ரோல் மாடல் அப்பாதான். அப்பா போலவே நடை, உடை, பாவனைகள், பழக்க வழக்கங்களை மகன் பின்பற்றுவான். ஆனால் மகனின் லவ் ஆப்ஜெக்ட் அம்மாதான். அவன் அதிகம் அன்பு செய்வது அம்மாவைத்தான். அதேபோல் பெண்களுக்கு ரோல் மாடல் அம்மாதான். லவ் ஆப்ஜெக்ட் அப்பாதான். இதுதான் உளவியல் பாடம்.
தனது லவ் ஆப்ஜெக்ட் போல யார் செயல்படுகிறார்களோ, அவர்கள் மேல்தான் சட்டென்று காதல் முளைத்துவிடுகிறது. அருளக்கா, உங்கள் அப்பாவைப்போல தோற்றத்தில், பேச்சில், கவனிப்பில், உபசரிப்பில், அன்பில், பழகுவதில், செயல்படுவதில் ஒப்புமை உள்ள ஒருவர் உங்கள் வாழ்வில் வரும்போது நீங்கள் அவர்மேல் காதல் வயப்படுவீர்கள். அப்படி ஒரு நிகழ்வை இயற்கையும் இறைவனும் நிகழ்த்துவார். ஏனெனில் இந்த உலகம் தொடர்ந்து இயங்க வேண்டும் அல்லவா?
“காதல் போயின் சாதல்” என்பது போன நூற்றாண்டின் காலாவதியான தத்துவம். காதல் போயின் வாழ்தல் என்பதே என் ஆலோசனை. ஏனெனில் வாழ்க்கை என்னும் புத்தகத்தில் காதல் ஒருபக்கம் மட்டுமே. காதலைத்தவிர வேறு எதுவுமே வாழ்க்கையில் இல்லை என்று உயிர்களைக் கொல்லவும், தம் உயிரை மாய்க்கவும் முன்வருவது இறைவன் விரும்பும் செயல் அல்ல! இயற்கையின் நோக்கமும் அதுவல்ல! எனவே உலகத்தை வாழவைக்கும் காதலை வரவேற்பு செய்யுங்கள். கண்மூடித்தனமான காதல் செயல்பாடுகளை மண்மூடிப் போகவிட்டு, வாழ்வை அழகாக்குங்கள். காதல் மிக அழகானது. வாழ்தல் மிகமிக அருமையானது. எனவே வாழுங்கள், என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post