Pages - Menu

Friday 11 December 2015

1. வெற்றி உங்கள் கையில் ......, அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

1. வெற்றி உங்கள் கையில் ......
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

[கல்வியியலில் முனைவர் பட்டம் பெற தயாரித்து வருகிறார் இக்கட்டுரையின் ஆசிரியர். வெற்றியின் தாரக மந்திரத்தை இக்கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.]

“தயாரிப்பு வெற்றியின் முதல்படி
உழைப்பு வெற்றியின் இரண்டாம்படி
விடாமுயற்சி வெற்றியின் மூன்றாம்படி
நேர்மை வெற்றியின் நான்காம்படி”
 சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘அன்னை’ என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதி, நடிகர் சந்திரபாபு பாடும் ஒரு பாட்டில், “வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை” என்ற ஒருவரி வரும். இதன் கருத்து, வெற்றி பெறுவதற்கு புத்தி முக்கியமானது இல்லை. அதிகம் புத்தி இல்லாத மனிதர்கூட உழைப்பினால் வெற்றி அடையலாம்.
அண்மைக் காலத்தில், வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் நம்மிடையே அதிகரித்திருக்கிறது. சுய முன்னேற்ற நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. வெற்றி பெறுவது எப்படி என்று பல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன. ஒவ்வொருவருடைய மனப்பான்மைக்கு ஏற்ப, வெற்றி என்பதன் பொருள் வேறுபடும். ஒருவருக்கு பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற இலக்கு. இன்னொருவர் அறிவியல் ஆராய்ச்சி செய்து புதியன கண்டுபிடிக்க வேண்டும் என்ற இலக்கு. சிலருக்கு புகழ்பெற்ற மருத்துவர்களாக மாறவேண்டும் என்ற இலக்கு. வேறு சிலருக்கு ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக வேண்டும் என்ற இலக்கு. இப்படியாக, பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு இலக்குகள். இவற்றில் எதையுமே தவறு என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவர்களுடைய இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சி முக்கியமானதாகும். ஆம்! முயற்சி இல்லாமல் வெற்றி இல்லை.
உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரராக முகமது அலி திகழ்ந்த போது அவருடன் மோதுவதற்காக லியான்ஸ் பிரிங்ஸ் என்ற வீரர் தயாரானார். அனைவருக்கும் வியப்பு. ஏனெனில் எவராலும் வெல்ல முடியாதவராக முகமது அலி திகழ்ந்தார். தோற்று விடுவோம் என்று தெரிந்தும் கூட போட்டியில் கலந்து கொள்வது ஏன்? என்று பத்திரிக்கை நிருபர்கள் பலரும் கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. “நான் தோற்றுவிடுவேன் என்று எப்படி உறுதியாகச் சொல்லுகிறீர்கள்? இந்த உலகில் நிரந்தரமான சாம்பியன் யாருமில்லை. இந்த முகமது அலியும் ஒருநாள் யாரிடமாவது தோற்றுத்தான் ஆக வேண்டும். ஒருவேளை அவரை வெல்லுவது நானாகவும் இருக்கலாம். நீங்கள் சொல்வது போல் நான் தோற்றுப் போனாலும் உலகச் சாம்பியனுடன் போட்டியிட்டுத் தோற்றேன், என்ற பெயர் எனக்கு மிஞ்சும். அதைக் கூட வாங்க விட மாட்டீர்களா?” என்ற நகைச்சுவை உணர்வுடன் கேட்டார். கடைசியில் இந்த மனிதரிடம்தான் அந்த உலகச் சாம்பியன் தோற்றுப் போனார். முயற்சி உடையவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை. ஆகவே, வெற்றிக்கு வேண்டியது தொய்வில்லாத முயற்சி, தொடர்ந்த முயற்சி, விடாமுயற்சி.
“வெற்றிக்கான சந்தனக் காற்று நம் சன்னலில் வீசட்டும்.
சரித்திரம் நம் சாதனை பேசட்டும்.”

No comments:

Post a Comment

Ads Inside Post