Pages - Menu

Sunday 13 December 2015

ஏனிந்த தடுமாற்றம்? தேவையா இந்த சபை மாற்றம்?

ஏனிந்த தடுமாற்றம்? தேவையா இந்த சபை மாற்றம்?
பி. சிரில், பட்டதாரி ஆசிரியர், சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,
அன்னமங்கலம்
(பெந்தகோஸ்தே சபையயினர் செய்யும் குழப்பங்களைத் தோலுரித்துக் காட்டுகிறார்.)
சமீபத்தில் நான் கேட்டு ரசித்த, ஆனால், வேதனைப்பட்ட ஒரு துணுக்குச் செய்தி.  “பத்தே மாதத்தில் பணக்காரராக வேண்டுமா? பத்து ஏக்கர் நிலம் இருப்பின் பள்ளி ஒன்றைத் துவக்கு! பத்து சென்ட் நிலமே இருப்பின் பக்த சபை ஒன்றை நிறுவு!”

கேட்டவுடன் சிரிப்பு வந்தாலும், சிந்திக்கும் பொழுது மனம் நோகின்றது. தற்காலத்தில் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளைக் காணுகையில் இது உண்மை என்றே நினைக்கத் தோன்றுகிறது. என்ன இல்லை நம் கத்தோலிக்கத் திருச்சபையில்? ஏனிந்த தாவல் பிறர் சபையில்?
“நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்”. மத் 28 : 19 - 20

இயேசு, தம் விண்ணேற்பிற்கு முன்பு கூறியவை இவைதாம்! ஆனால் புதிய சபைகளின் 
ஊழியர்கள்  “எல்லா மக்களிடத்திற்கும்” செல்கிறார்களா என்றால் அதுதான் இல்லை! பெரும்பாலோர் முதலில் நுழைவது நமது சபை மக்களிடம்தான். நம்மவர்களில் பலரும், அவர்கள் கூறுவதை நம்பி, அப்படியே அப்பக்கம் சாய்வதுதான் வேதனைக்குரியதாக உள்ளது! நம் விசுவாசிகளை கவர்வதற்கு அவர்கள் மூளைச்சலவை செய்யும் மூன்று பிரதான காரியங்கள் திருமுழுக்கு, சுரூபங்கள், புனிதர் வணக்கம்.

1. திருமுழுக்கு :
யோவான் அளித்த திருமுழுக்கை இயேசுவே முன்மாதிரியாக எடுத்துள்ளாரே! ஆனால் கத்தோலிக்கர்கள் குழந்தைகளின் மீதான தெளிப்பு திருமுழுக்கை நடைமுறைப்படுத்துவது தவறல்லவா? இது அவர்களின் வாதம், வாலிப வயதில் அவருக்கு குறித்த வேளை வந்தபோது இயேசு திருமுழுக்கு எடுத்தாரே தவிர, தனக்குப்பின் அனைவரும் கட்டாயமாக வாலிப வயதில்தான் திருமுழுக்குப் பெற வேண்டும் என நான்கு நற்செய்திகளிலுமே, வயதை வலியுறுத்தி இயேசு கூறியதாக எங்கும் காணப்படவில்லை. வாலிப வயதில் பாவங்களை அறிக்கையிட்டு திருமுழுக்கு பெறுவதுதான் சரி என்றால், இயேசு எந்த பாவங்களை அறிக்கையிட்டார்? அவர் பாவமே அண்டமுடியாத இறைவன் ஆயிற்றே! ஆகவே, திருமுழுக்கு என்பது ஓர் இறை அடையாளமே! இதனை எந்த வயதிலும் வழங்கலாம் என்பதற்கான அதிகாரம் நமது திருச்சபைக்கு உண்டு! ஆதியிலே, பிதாவாகிய தந்தையானவர், பிறந்த எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்விக்க வைத்து பாலகர்களை தனது உடன்படிக்கையாளராக எவ்வாறு ஏற்படுத்தினாரோ, அதே முறையில், நமது சபையும் பிறந்த எட்டாம் நாளில் தெளிப்புத் திருமுழுக்கு அளித்து, பாலகர்களை இறை சபையில் சேர்க்கிறது. குழந்தைப் பருவம் முதலே அவர்களை கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பிரியப்படுகிறது. இதிலென்ன தவறைக் கண்டு வெளியேறுகிறீர்கள்? பிதாவின் பாதையில் தானே திருச்சபை பயணிக்கிறது? இதில் தறு இல்லை?
(குழந்தைகளுக்கு திருமுழுக்கு தருவதன் பொருள் இன்னும் பல இருக்கறது. இங்கு கட்டுரை ஆசிரியரின் வாதத்தை மட்டும் கொடுத்திருக்கிறோம்.)

2. சுரூபங்கள் : 
ஆதியிலே வார்த்தையாம் இறைவன் ஆவியாக உலாவிக் கொண்டிருந்தார். பின்னர் மனிதனைப் படைக்கும்போது தனது சாயலாக உருவாக்கினார். ஆனால் தனது முகத்தை மட்டும் காட்டவில்லை. மக்களிடம் ஆவியினாலும், உண்மையாலும் மட்டுமே தன்னை தொழச் செய்து அறிவுறுத்தினார். கட்டளையை மீறி தனக்காக உருவங்களை செய்தபோது மக்களினங்களைத் தண்டித்தார். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், ஏற்ற காலம் வந்தபொழுது, வார்த்தையாம் இறைவன் மனுவுரு எடுத்தார்! முகச் சாயலை வெளிப்படுத்திவிட்டாரே!

ஆனவே, வார்த்தையாம் இறைவனை வார்த்தையாலே தொழுது வந்த மக்கள், வடிவமான இறைவனை வடிவங்கள் மூலம் தொழ ஆரம்பித்தனர்! இதிலென்ன தவறு? தெரியாத இறைவனுக்கு உருவம் கொடுப்பதுதான் தவறு. ஆனால் தெரிந்த இறைவனுக்கு, உருவம் கொடுப்பதில் என்ன பிழை? எருசலேம் எனும் புண்ணிய பூமியில் 33 வருடங்களாக பல்லாயிரக்கணக்கானோர் இயேசுவைக் கண்ணாரக் கண்டிருக்கிறார்களே! ஏதோ ஒரு வடிவத்தைச் செய்து, அதற்கு ஏதோ ஒரு பெயரையும் இட்டு, ஏதோ ஒரு வகையில் வழிபாடு செய்தால்தான் அது சிலை வழிபாடு ஆகும். உண்மையான இறைவனின் வடிவிற்கு முன், உண்மையான இறைவனின் பெயரில், ஆண்டவர் விரும்பிய முறையில் ஆவியோடும், உண்மையோடும் தொழுது கொள்ளும் முறைக்கு சிலை வழிபாடு என்பது பொருந்தாது! ஆகவே சுரூபங்கள் வி­யத்திலும் குற்றமும் இல்லை! குழப்பமும் தேவையில்லை!

3. மாதா மற்றும் புனிதர் வணக்கம் :
பூமியில் பிறந்தவர் யாராயிருப்பினும் அவர்கள் மரித்தால் மரித்ததுதான்! இனி கடைசித் தீர்வை நாளன்றுதான் உயிர்ப்பு! அதுவரை அவர்கள் மண்ணில் அடக்கம்தான்! விண்ணில் அவர்களுக்கு இடமில்லை! எனவே, மாதா முதல் புனிதர் வரை அனைவரும் சாதாரண மனிதர்களே! அவர்களிடம் புனிதத் தன்மை எதுவும் கிடையாது! அவர்களும் மரித்தோரே ஆவார்! இது பெற்தகோஸ்தே சபையாரின் வாதம்.
இந்த (பிடி)வாதத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டு மனம் தடுமாறும் சகோதர்களே! இந்த மரித்தோர் மற்றும் வாழ்வோர் என்பது உடலின் நிலைப்பாட்டைப் பொறுத்தது அல்ல! அது ஆன்மாவின் நிலைப்பாட்டைப் பொறுத்தது! அதாவது, மண்ணகத்தில் உடலோடும், உயிரோடும் வாழும்போது, தீராத மற்றும் சாவான பாவத்தில் விழுந்தோரே  “ஆன்மாவில் மரித்தோர்” ஆவர். இறைவார்த்தைகளின்படி வாழ்ந்து, தூய ஆவியின் அச்சாரத்தைப் பெற்றோர்  “ஆன்மாவில் வாழ்ந்தோர்” ஆவர்.  “தூயவர்களின் மரணம் கடவுளின் பார்வைக்கு அருமையானது” என விவிலியத்திலும் உள்ளது. இந்த ஆன்ம நிலைப்பாட்டின் தீர்ப்பானது உடலின் மரணத்திற்குப் பின்னரும், விண்ணகத்திலும் தொடரும்! அவற்றின் பலனை அடையும்! அந்த வகையில், இறை தன்மையும் ஆசியும் பெற்று, தூய வாழ்வு வாழ்ந்த இறை அன்னை கன்னி மரியாள் முதல் பல பரிசுத்தவான்களையும் நமது கத்தோலிக்கத் திருச்சபை  “அருளாளர்களாக” (புனிதர்கள்) அறிவித்து அவர்களைப் போற்றுதலுக்குரியவர்களாக்கி உள்ளது. இதற்கு ஆதாரமாக நமது ஆண்டவர் இயேசு கூறுவதைப் பாருங்களேன். (மத் 22 : 32)  “ஆபிரகாமின் கடவுள் , ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே ”: என்று அவர் (பிதா) கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல. மாறாக வாழ்வோரின் கடவுள்.
தமது சொல்படி வாழ்ந்து வந்த நமது முற்பிதாக்களையே வாழ்வோர் என்று இயேசுவே கூறியிருக்க அவருக்காகவே வாழ்ந்து, பாடுபட்டு, துன்பங்கள் பல அனுபவித்து, இறந்து இறைபதம் அடைந்த இறை அன்னையும், அருளாளர் பலரும் எந்த விதத்தில் மரித்தோர் ஆகிவிட்டனர்? அதே இறைவனின் திருச்சபையில் நமது கத்தோலிக்கச் சபையும் அத்தகைய வாழ்வோரை இறைவனோடு என்றும் விண்ணில் வாழும், புனித ஜீவாத்துமாக்களாக அறிவிப்பது எந்த விதத்தில் தவறாகிவிடும்? இத்தகையதொரு உயர்வான பாதை காட்டும் நமது சபையைவிட, பூமியில் இறந்தோர் எல்லோருமே செத்தவர்களே எனும்போது நமது இறைவனும் “செத்தவர்களின் இறைவன்” என்றல்லவா ஆகிவிடுகின்றார்? அந்த வாதம் நியாயமா? அந்த போதனையில் நீதி உள்ளதா? தேவையா தடுமாற்றம்? எது உயரிய போதனை? சிந்தியுங்கள்! நமது இறைவன் வாழ்வோரின் இறைவனா? இறந்தோரின் இறைவனா?
நமது இறைவனும், திருவிவிலியமும், திருச்சபையும் நமக்குக் கற்பிப்பது தூய்மையான இறைவழிபாடு, அப்பழுக்கற்ற மனித செயல்பாடு, கீழ்ப்படிவு மிகுந்த இறை அன்பு, தியாகம் நிறைந்த பிறரன்பு! இவற்றினை நமது வாழ்வில் கடைபிடிக்க, நமது கத்தோலிக்க திருச்சபை நடைமுறைப்படுத்தி வரும் இறை நடத்துதல்களில் எள்ளளவும் குறையே கிடையாது. அதில் குறுக்கே புகுந்து குழப்பம் விளைவிப்போரின் கூற்றை நம்பி யாரும் குழம்பவேண்டியதில்லை!
அன்பின் நூலாம் வேதாகமத்தை, ஆராய்ச்சி நூலாக்கி, புதிய புதிய நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து, நமது சபையைக் குற்றப்படுத்தும் குறும்பாடுகளுக்கு நாம் ஏன் செவிசாய்க்க வேண்டும்? நம்மிடம் வருவோரை வாழ்த்தி, கிறிஸ்துவையே அறியாத மக்களிடத்திற்கு அவர்களை அனுப்பி வைக்கலாமே! அதை விட்டுவிடட்டு, ஆமாம் சாமி போட்டுவிட்டு, ஆமென்சேசுவே என்று கூறிவிட்டு ஏன் அவர்கள் பின்னே ஓடவேண்டும்?
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நமது இந்திய ஊடகங்களில் வந்த ஒரு கணக்கெடுப்பினைப் பற்றி அகில உலகமும் நன்கு அறியும். அதாவது, இந்தியாவில் இசுலாமியர்களின் விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்துக்களின் விழுக்காடு குறைந்துள்ளது. கிறிஸ்தவர்களின் விழுக்காட்டில் மாற்றமில்லை.
இப்பொழுது தெளிவாகி விட்டதா உண்மை? ஆக, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, தூய தோமையார் முதல் பல அருளாளர்களின் மாசற்ற வேத சாட்சிகளான வாழ்வின் மூலம் வளர்க்கப்பட்ட நமது கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் சில பாரம்பரிய சபைகளிலிருந்து கிறிஸ்தவ மக்களை மட்டுமே பாதை மாற்றி, கிறிஸ்தவ சபைகளின் எண்ணிக்கையை மட்டுமே வளர்த்திருக்கின்றது தவிர “எல்லா மக்களிடத்திற்கும் சென்று” கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை வளர்க்கவில்லை! அன்று சீடர்களை ஆசீர்வதித்து, ஊழியத்திற்கு வழி அனுப்புகிறபோது இயேசு மனதுருக்கத்துடன் இவ்வாறு கூறுவார்.  “ஆடுகளை ஓநாய்க் கூட்டத்திற்குள்ளே அனுப்புவதுபோல் நான் உங்களை அனுப்புகிறேன்”. ஆனால் தற்காலத்திலோ இந்தக் குறும்பாடுகள் (குறும்பு + ஆடுகள்) வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் வரையாட்டுக் கூட்டத்திற்குள் மட்டுமே புகுந்து இழுத்து, ஆண்டவர் இயேசுவுக்குப் பொய்க்கணக்கைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களை ஆண்டவரே பார்த்துக் கொள்வார். நாம் ஒன்றும் சொல்லவேண்டாம். வாழ்த்து மட்டும் கூறுவோம்!
அன்புச் சகோதரர்களே குறைபாடு நமது கத்தோலிக்க திருச்சபையில் இல்லவே இல்லை! நம்மிடம்தான் முழுக்க, முழுக்க உள்ளது! துறவறத்தார் செய்ய வேண்டிய இறைபணியை, இல்லறத்தார் நாம் ஏன் செய்ய வேண்டும் என்ற தவறான சிந்தனையும், சோம்பேறித்தனமும், விவிலியத்தை அறிந்து கொள்வதில் உள்ள ஈடுபாடு இன்மையும்தான் நமது முக்கியக் குறைபாடுகள். மற்றவர்கள் விழித்துக் கொண்டார்கள். நாம் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறோம். விழித்தெழுவோம்! இறைபணி என்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை! அழைப்புப் பெற்றோர் சென்று உபதேசிப்போம். தாலந்து (திறமை) உள்ளோர் அதன் வழி செல்வோம்! எதுவும் இயலாதவர்கள் உப்பாக, ஒளியாக வாழ்ந்து காட்டி இறை இயேசுவை நம்மில் வெளிப்படுத்துவோம்! ஆகவே, நமக்குத் தேவை மனமாற்றமும், செயலாற்றமும் தானே தவிர, சபை மாற்றம் அல்ல! சிந்திப்போம்! செயல்படுவோம்!

No comments:

Post a Comment

Ads Inside Post