Pages - Menu

Showing posts with label Baptism. Show all posts
Showing posts with label Baptism. Show all posts

Tuesday, 1 May 2018

புகுமுக அருளடையாளங்கள்... 4. திருமுழுக்கு அருளடையாளம்

புகுமுக அருளடையாளங்கள்...

4. திருமுழுக்கு அருளடையாளம்

-  அருள்பணி. எஸ். அருள்சாமி
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

முன்னுரை:

புகுமுக அருளடையாளங்களின் முதல் படிநிலை திருமுழுக்கு ஆகும். இதன் அவசியத்தைப் பற்றிக் கூறவந்த யோவான் “ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது” (3:5) என்கிறார். இதிலிருந்து விண்ணரசுக்கும், நிலைவாழ்வுக்கும் நுழைவாயிலாக இருக்கிறது திருமுழுக்கு என அறிகிறோம்.

நாம் பெற்றத் திருமுழுக்கை நம் நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பாராட்ட பழகி கொள்வது கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கிறது என்று ‘மூன்றாவது ஆயிரமாம் ஆண்டின் நுழைவாயில்’ ஆவணத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் குறிப்பிட்டுள்ளார். “நம்பிக்கையின் அருளடையாளம் எனப்படும் திருமுழுக்கில் உதயமாகும் கிறிஸ்தவ வாழ்வின் புதின்மையை அறிய முற்படுவது நம்பிக்கையாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இத்தகைய புரிதல் தங்களது அழைப்பின் பொறுப்புகளுக்கு ஏற்ப வாழ உதவியாக இருக்கும்”  என்று ‘நம்பிக்கையாளர்களாகிய பொது நிலையினர்’(Christifideleshaics)    என்ற திருத்தூது ஊக்கவுரையில் வாசிக்கிறோம்.

எனவே இத்தகைய மாண்புயர் திருமுழுக்குப் பற்றிய படிப்பினையையும், அதன் சிறப்பு பண்புகள் பற்றியும் அறிய முயற்சிப்போம்.

 1. உயிர்த்த ஆண்டவரின் போதகம்

இயேசு பதினொரு சீடர்களைப் பார்த்து “விண்ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன்,தூய ஆவியார்  பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் கட்டளையிட்ட யாவையையும் அவர்களும் கடைபிடிக்கும் படிகற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார் (மத் 28:16-20) என்றும்  இயேசு அவர்களை நோக்கி “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”. நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்பு பெறுவர் (மாற் 16:15-16) என்றும் நற்செய்தி நூல்களில் வாசிக்கிறோம்.

திருமுழுக்குப் பற்றி விளக்கும் சடங்குமுறை நூலில் பின்வருமாறு வாசிக்கிறோம். “மாந்தர் தூய ஆவியின் அருளால் ஒளிர்விக்கப் பெற்று, கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்கச் செய்யும் நம்பிக்கையின் அருளடையாளமே திருமுழுக்கு” (குழந்தைகளுக்கான திருமுழுக்கு சடங்குமுறை எண்3)..

மேலே நாம் குறிப்பிட்ட மூன்று பகுதிகளும் ஒருவர் விண்ணரசை நுழையவும், நிலைவாழ்வைப் பெறவும் தகுதியடைய வேண்டுமானால் பின்வரும் சில காரியங்கள் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

- நற்செய்தி போதிக்கப்பட வேண்டும்.
- தூய ஆவியாரின் அருளால் ஒருவர் 
ஒளிர்விக்கப்பட வேண்டும்.
- நற்செய்தியை அவர் ஏற்க வேண்டும்.
- அதில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.
- திருமுழுக்குப் பெற வேண்டும். 
- இயேசுகிறிஸ்துவின் சீடராக வேண்டும்.
- இயேசு கட்டளையிட்டயாவற்றையும் 
கடைப்பிடிக்க வேண்டும்.
- விளைவாக மீட்பு பெறுவர்.

 இத்தனையும் நிகழும்போது ஒருவர் திருமுழுக்கு பெறுகிறார்.

2. திருமுழுக்கு அடிப்படை தேவைகள்

நற்செய்தி போதகமும், மனந்திரும்புதலும், விசுவாசமும் ஒருவர் திருமுழுக்குப் பெறுவதற்கு தேவையானவை என்பது தெளிவு.
நற்செய்தியைப் போதித்துதான் ஒருவரைச் சீடராக்க வேண்டும் என்பது உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பம். நற்செய்தி போதகம் என்பது வாய்மொழி போதகத்தை மட்டும் குறிப்பிடுவதில்லை. இன்றைய உலகின் சூழலில் எல்லா இடங்களிலும் இதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சில இடங்களில் இதற்குத் தடையும் போடப்பட்டிருக்கலாம். “கிறிஸ்துவின் வாய்மொழியாலும் அவரோடு நடத்திய வாழ்வாலும் அவர்தம் செயல்களாலும் தாம் பெற்றவற்றையும் தூய ஆவியாரின் தூண்டுதலால் தாம் கற்றவற்றையும் திருத்தூதர்கள் தம் வாய்மொழிப் போதனை, வாழ்வின் எடுத்துக்காட்டுகள், ஏற்படுத்திய அமைப்புகள் ஆகியவற்றின் வாயிலாக வழிவழியாக வழங்கினார்” என்று (இ.வெ.எண் 7). இறைவெளிபாடு பற்றிய கோட்பாடு விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதிலிருந்து வாய் மொழி போதகத்தைத் தவிர்த்து வாழ்வின் எடுத்துக்காட்டுக்களாலும் நற்செய்தியைப் போதிக்கலாம் என்று தெரிகிறது. “உண்மையான கிறிஸ்தவ வாழ்வின் சான்றுதான் திருஅவையின் நற்செய்தி போதகப் பணியின் முதல் வழியாகும்”  (சிஹி.41) என்று திருத்தந்தை ஆறாம்பால் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நற்செய்தி போதகத்தைக் கேட்பதாலும், நற்சான்று வாழ்வையும், அறப்பணி செயல்களைப் பார்ப்பதாலும், அவற்றின் பயனை ஒருவர் அனுபவப்பதினாலும் அவர் இயேசுகிறிஸ்துவின் பக்கம் கவரப்படுகிறார். இதை செயலாற்றுபவர் தூய ஆவியார் ஆவர். பயனாக அவர் மனம் மாறுகிறார், இயேசுவைப் பற்றிக் கொள்ள ஒழுக்கத்துக்கடுத்த தகாத தம் நடத்தையை விட்டுவிடத் தூண்டப்படுகிறார். விரும்புவார், அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க முன்வருவார். இதுதான் அவரைப் பொறுத்தமட்டில் மனம் மாறுதல் ஆகும்.

இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடே விசுவாசமாகும். “ஆகவே அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் ” (உரோ 10:17) என்று பவுலடியார் கூறுகிறார். மேலும் ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள் (10:9) என்று அவரே கூறியுள்ளார்.

இவ்வாறு தங்கள் நம்பிக்கையை வெளிப் படுத்தியவர் திருமுழுக்குப் பெறுவர். எத்தியோப்பிய அரச அலுவலர்  ஒருவர் எருசலேம் சென்று கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எசாயாவின் இறைவாக்கு நூலை வாசித்துக் கொண்டு சென்றார். பிலிப்பு என்ற திருத்தொண்டர் தூய ஆவியரால் தூண்டப்பட்டு அவரிடம் சென்று நீர் வாசிப்பதன் பொருள் உமக்குத் தெரிகிறதா? என்று கேட்கிறார். அவர் இல்லை என்றுச் சொல்ல, பிலிப்பு அப்பகுதிக்கு விளக்கம் அளிக்கிறார். அதைக்கேட்டு நம்பிக்கைக் கொண்ட அரச அலுலர் வழியில் தண்ணீர் இருப்பதைக் கண்டு திருமுழுக்குப் பெற்றார் (காண் தி.ப 8:9-40).

இவை அனைத்திலுமிருந்து தெளிவாவது என்னவென்றால் போதகம் மனந்திருப்புதலுக்கு வழிவகுக்கும் மனம்திரும்புவர் நம்பிக்கைக் கொள்ளச் செய்கிறது. நம்பிக்கை திருமுழுக்கு பெறுவதில் முடிவடைகிறது. ஆனால் இவை அனைத்தும் ஒரு நாளில் நிகழ்வதன்று இதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. 

இது தொடக்கக்கால திருஅவையில் ‘ஆயத்தக் காலம்’ (தயாரிப்புக்காலம் ‡ ளீழிமிeஉஜுற்துலிதுமிe)                                       என அழைக்கப்பட்டது. இந்த தயாரிப்பு காலம் காலப்போக்கில் சீரழிந்துவிட்டது என்று முந்திய சிந்தனையயான்றில் குறிப்பிட்டோம். இதை புதுப்பிப்பது எவ்வாறு என்று இனிவரும் சிந்தனையில் விளக்கம் காணலாம்.

3. திருமுழுக்கின் பயன்கள்

திருமுழுக்குப் பெறுவதினால் பாவங்களுக்கு மன்னிப்பு பெறுகிறோம்; கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் பங்கு பெறுகிறோம்; இருளின் வல்லமையிலிருந்து விடுபட்டு, இறைவனின் சுவிகாரப் பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தப்படுகிறோம்; நீரினாலும், தூய ஆவியினாலும் புதுப்படைப்பாக மாறுகிறோம். அதனால் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம்; திருஅவையின் உறுப்பினராகின்றோம்; இறைவனின் உறவிடமாகக் கட்டி எழுப்பப்படுகிறோம்; மறுபிறப்படைந்த மற்றவர்களுடன் ஒற்றுமைப் பிணைப்பைப் பெறுகின்றோம்; புனித எண்ணெய்யால் திருநிலைப்படுத்தப்பட்டு இயேசு கிறிஸ்துவின் அரச, குருத்துவ, இறைவாக்குரைக்கும் பணிகளில் பங்கு பெறுகின்றோம். சுருங்கச் சொல்லின் நாம் பெறும் திருமுழுக்கு நம்மில் தீவிர மாற்றத்தைக் கொணர்கின்றது.

“நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்” (திப 2:38) என்று புனித பேதுரு கூறுவதிலிருந்து திருமுழுக்கினால் மனந்திரும்புவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. பாவங்கள் என்பது பிறப்பு வழி பாவங்களையும், செயல்வழி பாவங்களையும் குறிக்கும்.

திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அவருடைய சாவிலும் இணைந்திருக்கிறோம்... இறந்த கிறிஸ்துவை மாட்சிமைக்கு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் திருமுழுக்கினால் புதுவாழ்வு பெற்றுள்ளோம். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நமது நம்பிக்கை என்று புனித பவுல் கூறுகிறார் (உரோ 6:3-10 காண்க).

திருமுழுக்குப் பெற்றவர்கள் ‘கிறிஸ்துவின் உறுப்புகள்’ (1 கொரி 6:15) ‘அவர் எழுப்பிய கட்டடம்’ (1 கொரி 3:9) என்றும், ‘ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார்’ (1 கொரி 6:17)என்றும், ‘தூய ஆவி தங்கும் கோவில்’ (1 கொரி 3:16; 6:19) என்றும் பவுல் குறிப்பிட்டிருப்பது திருமுழுக்கினால் நம்மில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை -  அதாவது நாம் கிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பதால் அவரது மறைஉடல் ஆகிறோம். தூய ஆவியார் நம்மில் குடிக்கொண்டிருக்கிறார் - கோடிட்டுக் காட்டுகிறது.

இறைவன் நிறைவான நிலையில் இவ் வுலகைப் படைத்தார். ஆனால் மனிதனின் பாவம் படைப்பைப் பங்கப்படுத்தி விட்டது. இது பற்றி விவரிக்க விரும்பிய புனித பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது. தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தியவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை” (உரோ 8:20). ஆனால் கிறிஸ்து இயேசுவில் புதிய படைப்பு ஏற்கனவே தோன்றியுள்ளது. இது முதன்முதலில் மனிதனில் நிகழ்ந்துள்ளது.அவன் பெற்ற திருமுழுக்கு வழியாக அவன் புதுப்படைப்பாக (காண் கலா 6:15; கொலோ 3:10) பிறந்துள்ளான்.

திருமுழுக்கு வழியாக ஒருவர் திருஅவையின் உறுப்பினர் ஆகின்றார். இதுபற்றி திருத்தூதர் பணியில் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்”  (2:41). இங்கு “அவர்களோடு”  என்பது திருஅவையைக் குறிக்கும்.

இதன் விளைவாக திருமுழுக்குப் பெற்றவர் மற்ற நம்பிக்கையாளர்களுடன் ஒன்றிக்கிறார்கள். இது பற்றி புனித பவுல் இவ்வாறு கூறுகிறார். “கிறிஸ்து இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துக் கொண்டீர்கள். இனி உங்களிடம் யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்”  (கலா 3:26-28).

முடிவுரை :

ஒருவர் மனந்திரும்பி திருமுழுக்குப் பெறுவதினால் அவரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அவர் அடைந்துள்ள புதிய நிலையின் மாண்பினை எடுத்துரைத்தோம். இவற்றை வாழ்வியலாக மாற்றி வாழ்வது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கடமையாகும்.

இதுவரை திருமுழுக்குப் பற்றிய பொதுப் படிப்பினைப் பற்றிய விளக்கம் கண்டோம்; திருமுழுக்குப் பெற அடிப்படையான தேவைகள் பற்றியும் பட்டியலிட்டோம். இனிவரும் சிந்தனைகளில் இவையனைத்தும் எவ்வாறு குழந்தைகளின் திருமுழுக்கிலும், முதியோருக்கான திருமுழுக்கிலும்  சித்திப்  பெறுகின்றது என்றும், அங்கு நாம் சந்திக்கும் சவால்கள் யாவை, அவற்றை எவ்வாறு மேற்கொள்வது எனக் காண்போம்.
                                                                                                                                                   (தொடரும்...)

Saturday, 3 March 2018

புகுமுக அருள் அடையாளங்கள்...

புகுமுக அருள் அடையாளங்கள்...

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இயேசுகிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவையை அடங்கிய பாஸ்கா மறைபொருளில் பங்குபெறத் தொடங்குவதின் வழியாக ஒருவர் கிறிஸ்வராகுகிறார். இவ்வாறு தொடங்கிவைக்கப்படுவது புகுமுகம் (Initiation) என்று அழைக்கப்படுகிறது. தமிழர் மரபில் இது தீட்சை (Diksa) எனப்படுகிறது.

 1. புகுமுகம் என்பதின் பொருள்

புகுமுகம் செய்தல் என்று பொருளுடைய ஆங்கிலச் சொல் ‘இனிஸியே­ன்’ Initiation) என்பதற்கு தொடங்குதல் (Commence) உள் இட்டுச் செல்லுதல் (Introduce) தொடங்கிவைத்தல் (Inaugurate) என்றும், நிறைவு செய்தல் ( Perfect) அல்லது நிறைவுக்கு இட்டுச் செல்லுதல் (Lead to perfection) என்றும் இருவகைப்பட்ட பொருள் உண்டு. தொடங்குதல் என்ற பொருளில் இவ்வினைச் சொல் ‘மூவேயின்’ (Muein) என்ற கிரேக்க சொல்லையும், நிறைவு செய்தல் என்ற பொருளில் ‘தேலேயின்’ (Telein) என்ற கிரேக்கச் சொல்லையும்  மொழிபெயர்கின்றன. மறைபொருள்களில் நுழைந்து அவற்றில் பங்குபெற்று அனுபவிப்பதின் வழியாக ஒருவர் நிறைவடைகிறார். ஆகவே இவ்விரு கிரேக்க சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இக்கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து புகுமுகம் என்ற சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது. இவை அனைத்தையும் ஒருங்கி ணைத்து தமிழில் தீட்சை என்று குறிப்பிடலாம். கிறிஸ்தவ சமயத்தில் இதை கிறிஸ்தவ தீட்சை என்பது சரியாக இருக்கும்.

2. கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி வைக்கும் அருளடை யாளங்கள்

இன்று நம்மிடையே வழக்கில் இருக்கும் திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்னும் மூன்றும் கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கிவைக்கும் அருளடையாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொடக்கக் காலத் திரு அவையில் இவை கிறிஸ்தவ புகுமுகம் (தீட்சை) (Christian Initiation) அல்லது வெறுமனே புகுமுகம் (தீட்சை) (Initiation)  என்று அழைக் கப்பட்டன. ஏனெனில் இவை யாவும் ஒரே நிகழ்ச்சியாக, ஆனால் பல படிகளில் அமைக்கப்பட்டு கொண்டாடப் பட்டன. திருமுழுக்கிலிருந்து பிரிக்கப்படாமல் உறுதிபூசுதல் வழியாக நற்கருணை வரை நகரும் ஒரே இயக்கமாக்க இது கருதப்பட்டது என ஜான் மரி என்னும், திருவழிபாட்டு வல்லுநர் குறிப்பிடுகிறார். நாளடைவில்தான் இச்சடங்கு முறையில் இருந்த ஒவ்வொரு படியும் முறையே திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சடங்கும் கிறிஸ்தவ வாழ்வை நோக்கியதாக இருப்பதால் பிளவுபட்ட இம்மூன்று சடங்குகளும் கிறிஸ்தவ வாழ்வுக்கடுத்த அருளடை யாளங்கள் அல்லது கிறிஸ்தவ  புகுமுகத்திற்கடுத்த அருளடையாளங்கள் (Sacraments of Christian Initiation) என அழைக்கப்படுகின்றன.

ஆனால் இம்மூன்று அருள் அடையாளங்க ளிடையே நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி கூறும் போது “திருமுழுக்குத் தொடங்குவதை, நற்கருணை நிறைவுச் செய்கிறது. இதுவே கிறிஸ்தவ வாழ்வுக்கும் நிறைவைக் கொணர்கின்றது. திருமுழுக்கு, உறுதிபூசுதல் ஆகிய அருளடையாளங்களின் நோக்கம் நற்கருணைக்குத் தயார் செய்வதே என்று சொல்லலாம். இதில் மட்டுமே நாம் கிறிஸ்துவோடும், அவர் வழியாகத் தந்தையோடும் கொண்டுள்ள கூட்டுறவு நிறைவெய்துகின்றது” என்று சார்லஸ் டேவிஸ் என்னும் இறையியல் வல்லுநர் குறிப்பிடுகிறார்.  (The Making of Christian 1966, p.145).

  திருத்தந்தை ஆறாம்பால் இதையே இன்னும் தெளிவாக விவரித்துள்ளார். “கிறிஸ்துவின் அருள் வழியாக நாம் இறையியபில் பெரும் பங்கானது, மனித பிறப்பு, வளர்ச்சி, உணவூட்டம் போன்ற வாழ்க்கைக் கட்டங்களோடு தொடர்புடையது. திருமுழுக்கில் நம்பிக்கையாளர் மறுபடியும் பிறக்கின்றார்கள். உறுதிபூசுதல் என்னும் அருளடையாளத்தால் புது வாழ்வில் உறுதிபடுத்தப்படுகின்றார்கள். இறுதியாக நற்கருணை உணவால் பேணிக் காக்கப் படுகின் றார்கள். கிறிஸ்தவ தீட்சக்கடுத்த இவ்வருள் அடையாளங்கள் வழியாக நம்பிக்கையாளர்கள் இறைவாழ்வின் வளர்ச்சியைப் பெறுகின்றார்கள். அன்பின் நிறைவை நோக்கி முன்னேறுகின்றார்கள்” (உறுதிபூசுதல் அருளடையாளம் பற்றிய திருத்தூது அமைப்பு விதி தொகுப்பு (Apostolic Constitution) 

3.புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட் டத்தில் சீர்குலைவு

நாளடைவில் கிறிஸ்தவ புகுமுக அருளடையாளங் களில் அமைப்பு முறையிலும், கொண்டாடும் விதத்திலும் சீர்குலையத் தொடங்கியது.

3.1. பிளவுபட்ட கொண்டாட்டம்

திருஅவையின் தொடக்கத்தில் வயதுவந்தவர் கள்தான் (Adults) கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். நீண்டகால (மூன்று ஆண்டுகள்) தயாரிப்புக்குப் பின் திருமுழுக்கு அளிக்க இருக்கும் தவக்காலத்தில் உடனடியான தயாரிப்பு இடம் பெறும். அதன்பின் பாஸ்கா  திருவிழிப்பின் போது இவர்களுக்குப் புகுமுக அருளடையாளங்கள் மூன்று அளிக்கப்படும். கொண்டாட்டின் போது  திருத்தொண்டர், அருள்பணி யாளரோடு மறைமாவட்ட ஆயரும் இருப்பார். புகுமுகத்தின் இரண்டாவது படியாகிய உறுதிபூசுதலை ஆயர் கொடுப்பார். 

ஆனால் தொடக்க திருஅவை காலத்தில் கிறிஸ்தவ மறையைத் தழுவியர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்தது. அதனால் நம்பிக்கையாளர் களின் குழுமமும் பலவாகின. இதற்கு ஏற்றாற்போல் ஆயர்களின் எண்ணிக்கை (மறைமாவட்டங்கள்) அதிகரிக்கவில்லை. அதனால் பாஸ்கா திருவிழிப்பின் போது ஒவ்வொரு இடத்து திருஅவையில் புகுமுக கொண்டாட்டம் இடம் பெற்றபோது எல்லா இடத்து திருஅவைகளுக்கும் ஆயர் வர முடியாத சூழ்நிலை உருவாக்கிற்று. அதனால் திருமுழுக்குச் சடங்குக்குப் பின் உறுதிபூசுதல் சடங்கு ஆயருக்கே உரியதாகையால், அது ஒத்தி வைக்கப்பட்டது. 

இத்தகைய பிளவுக்கு இன்னுமொரு காரண மும் உண்டு. தொடக்கத் திருஅவையில் நம்பிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கிறிஸ்தவ குடும்பங்களும் அதிகரித்தன. அக்குடும்பங் களில் பிறந்த குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் பழக்கமும் பரவலாயிற்று. இந்த நிகழ்ச்சியும் பாஸ்கா திருவிழிப்பின் போது இடம் பெற்றதால் குழந்தைகளுக்குப்  புகுமுகத்தின் முதல்படி நிலையாகிய திருமுழுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. மற்ற இருபடி நிலைகளும் (உறுதிபூசுதல், நற்கருணை) ஒத்திவைக்கப்பட்டன. இவ்வாறு புகுமுகத்தின் மூன்று படிநிலைகளும் பிளவுபட்டு போயின.

 3.2. புகுமுகத்தின் முரணான கொண்டாட்டம்

புகுமுக அருளடையாளக் கொண்டாட்ட த்தில் மற்றொரு சீர்குலைவும் தோன்றியது. அதாவது, திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்ற வரிசை மாற்றப்பட்டு திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் என்ற வரிசை பெருவாரியாகப் பழக்கத்திற்கு வந்தது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

புகுமுக சடங்கின் இரண்டாவது படிநிலையாகிய உறுதிபூசுதல் பற்றி திருஅவை வரலாற்றின் இடைக் காலத்தில் உருவான ஓர் இறையியல் சிந்தனை முதல் காரணம். இச்சிந்தனைபடி உறுதிபூசுதல் பக்குவமடைந்த வர்களுக்குக் கொடுக்கப்படும் அருளடையாளம். அதாவது வயது முதிர்ச்சியின் தொடக்கக் காலத்தில் (At the age of puberty)

  ஒரு நம்பிக்கையாளர் பக்குவமடைகிறார், பொறுப்பு ணர்வுடன் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக் கிறார் என்பதாகும். உறுதிபூசுதல் திருஅவையில் திருத்தூது பணிக்கு (Apostolic ministry) ஒருவரைத் தகுதியாக்குகிறது என்ற தவறுதலான ஒரு சிந்தனை. இதனால் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுத்தபோது உறுதிபூசுதல் சடங்கு முதிர்ச்சி வயதுகென விடப்பட்டது.

அதே வேளையில் புத்தி விவரம் அடைந்த சிறுவர்களுக்கு (அதாவது ஆறு வயதையடைந்த சிறுவர்களுக்கு) நற்கருணை வழங்கலாம் என்ற நான்காவது லாத்தரன் சங்கத்தின் (1215) போதகம் உறுதிபூசுதலுக்கு முன் சிறுவர்களுக்கு முதல் நற்கருணை (First communion) வழங்குவதற்கு வழிகோலியதோடு அல்லாமல், புகுமுக அருளடையா ளங்களின் வரிசை முறையை மாற்றியது. இத்தகைய புதிய பழக்கம் திருத்தந்தை பத்தாம் பயஸின் போதகத்தால் (Quam Singular 1910) நிலை நாட்டப்பட்டது.

இவ்வாறு படிநிலைகளில் உருவாக்கப்பட்ட புகுமுக அருளடையாளங்களின் வரிசை முன்னுக்கு முரணாக்கப்பட்டது. இத்தகைய முரண்பட்ட, மாறுபட்டக் கொண்டாட்டங்களை இன்றும் கூட நாம் பார்க்க முடிகிறது.

 3.3. ஆயத்த நிலையில் சீர்கேடு

நாம் மேலே குறிப்பிட்ட சீர்குலைவுகள் திருமுழுக்குக்காக பயன்பாட்டில் இருந்த கிறிஸ்தவ புகுநிலையில் (Catechemunate) குறைபாட்டிற்கு வழிவகுத்தது. தொடக்கத் திருஅவையில் திருமுழுக்குக் காக தயாரிப்பு என்ற ஒருநிலை இருந்தது. இது சில சமயங்களில் மூன்று ஆண்டுகள் கால அளவைக்கு நீடித்தது. நாளடைவில் வயது வந்து (Adults) கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களுக்கும், தொடக்கக் கால கிறிஸ்தவ  பெற்றோர்களுடைய குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே சடங்கு முறையில் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தயாரிப்புக் காலம் சாத்தியமற்றதாகவும் பொருளற்றும் போய் விட்டது. மூன்றாண்டுகள் கால அளவு குறுக்கப்பட்டு தவக்காலத்தில் தயாரிப்பாகவும், அடுத்து அது தவக்காலத்தில் கடைசி மூன்று வாரங்களுக்கு சுருக்கப்பட்டு, இறுதியில் முழுவதுமே கைவிடப்பட்டது.

இந்த சீர் கேட்டிற்கு மற்றொரு காரணமும் உண்டு. பொதுவாக கிறிஸ்தவ சமயத்தை தழுவ முன் வந்தவர்களுக்கு விவிலிய போதகம், ஒழுக்க நெறி அறிவுறுத்துதல், கோட்பாட்டு விளக்கங்கள் (Scriptural, moral, doctrinal, catechesis)  கொடுக்கப் பட்டன. கிறிஸ்தவ யுகம் (Christian era) என்று சொல்லப்பட்ட காலத்தில் பிற சமயங்களின் தாக்கத்திற்கும், ஒழுக்க கேட்டிற்கும் இடமில்லை என்று கருதப்பட்டதால், திருமுழுக்குக்குரிய தயாரிப்பு நீண்ட காலத்திற்கு இடம் பெறாவிட்டாலும் பாதகமில்லை என்ற ஒரு மனபாங்கு பரவலாக இருந்தது.

  கிறிஸ்தவ யுகம் என்னும் கொன்ஸ்டான்டின் பேரரசர் காலத்தில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுப்பதே பொதுவான பழக்கமாக இருந்தது. அவ்வப்போது சில வயதுவந்தவர்கள் (Adults) கிறிஸ்தவ மறையைத் தழுவிய போது அவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் போதும் குழந்தைகளுக்கான திருமுழுக்கு சடங்குமுறையே கையாளப்பட்டது. இத்திருமுழுக்கு களுக்கான தயாரிப்பு பற்றி திருஅவை எவ்வித திட்டமும் வகுக்கவில்லை. கிறிஸ்தவ ஒழுக்கத்திலும் நம்பிக்கை யிலும் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தைகளால் நம்பிக்கை அறிக்கை செய்யமுடியாததால் திருமுழுக்குத் தயாரிப்பவர்களின் நம்பிக்கையைப்  பரிசோதிக்கும் நிகழ்வுகளும் (Scrutinies) ஒழுக்க முறையையும் மறைகோட்பாடுகளையும் போதிப்பதும் கைவிடப்பட்டன. நற்செய்தி போதகம் நய்செய்தி நூலை அடையாள முறையில் கொடுப்பதிலும் அடங்கியது. 

திருமுழுக்கின் போது கிறிஸ்தவ குழுமத்தின் ஈடுபாடு குறைந்தது. திருமுழுக்கு கொடுப்பது அருள்பணியாளரின் செயலாக மாறியது.  பயனாக திருப்பலி முடிந்து தனியாக பெற்றோர்கள் ஞான பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறியது.

இவ்வாறு கிறிஸ்தவ புகுமுக அருளடையாளங் களில் சீர்குலைவு  அன்று முதல் இரண்டாவது வத்திக்கான் பொதுசங்கம் வரை நீடித்து வந்துள்ளது. வெறும் சடங்குகளின் செயல்பாடாக இந்த அருள் அடையாளங்களின் கொண்டாட்டம் நடந்தனவே தவிர பொருள் உள்ள விதத்திலும் பயன் உள்ள முறையிலும் கொண்டாடப்படவில்லை.

இந்த சூழலில் வத்திக்கான் சங்கம் சில சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது. அடுத்த சிந்தனையில் அவை என்னவென்றும், எவ்வாறு செயலாக்கத்தில் நடைபெறுகின்றன என்றும் விளக்கம் காண்போம். 
 - தொடரும்...

Ads Inside Post