Pages - Menu

Showing posts with label Leadership. Show all posts
Showing posts with label Leadership. Show all posts

Friday, 11 May 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

22. தொண்டர்களுக்கும்  வேண்டும் பணிவு...
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

கடந்த இரண்டு மாதங்களாக தலைவருக்குத் தேவையான பணிவையும் தாழ்ச்சியையும் சிந்தித்தோம். தலைவருக்கு மட்டுமல்ல தலைவருக்குக் கீழே இருக்கின்ற உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் பணிவு அடிப்படையானது என்று சிந்திக்க அன்புடன் அழைக்கின்றேன். 

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டும் வரை அமெரிக்காவில் பார்லின் என்ற பங்கில் பணியாற்றினேன். நான் உதவிப் பங்குத்தந்தை. பங்குத் தந்தை மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 93 வயதாகும் அவருடைய தாய், அருகிலிருக்கும் தன் இடத்திலிருந்து விருந்துண்ணுவதற்காக வருவார். பாதர் என்னையும் அழைப்பார். பாதர்தான் சமைப்பார். நன்றாகவே சமைப்பார். ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பாதரின் தாய்  பாதரிடம் ‘ஜேம்ஸ் அந்த கரண்டியை எடு’ என்றார். பாதர்க்கு கோபம் வந்துவிட்டது. ‘தயவு செய்து’ என்று சொல்லுங்கள்  என்றார். அவரும் அவ்வாறு சொல்ல பின்னர்தான் கரண்டியை எடுத்துக் கொடுத்தார். அந்த அம்மா அதைப்பற்றி கொஞ்சமும் வருத்தப்படவில்லை. தமக்கு வயதாகிவிட்டது. அதனால் மறந்து விடுகிறது. என் மகன் அதனை நினைவுப்படுத்துகிறான். என்னிடம் தவறு இருக்கும்போது நான் அதைத்திருத்திக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையே அவரிடம் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

தலைவர்களுக்கு நிச்சயம் தேவை பணிவு. பணிவு இல்லாமல் ஒரு தலைவர் புரியும் அனைத்து நல்லக் காரியங்களுக்கும் முகவரி இருக்காது. ஒரு தலைவருக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பணிவுத் தேவை. தொண்டர்களுக்குத் தேவையான பணிவை பின்வரும் விவிலிய வரிகள் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கலாம்.

(1 தெச 5.12-13) ‘சகோதர சகோதரிகளே உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பணியின் பொருட்டு அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.’  (எபிரே 13.17) ‘உங்கள் தலைவர்களுக்குக் கீழ்படியுங்கள். அவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பா யிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியு ள்ளதாய் இருக்கும்படி நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.’ சரிங்க உங்கள் தலைவர்களுக்கு எப்படி உங்கள் பணிவைக் காட்டுவது என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.உங்கள் தலைவருக்கு மதிப்பளியுங்கள்.

நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆசரியர் ஒரு மாணவனை மாணவர் தலைவனுக்காக நியமிக்கிறார். அப்பொழுது உங்கள் இயல்பான நடவடிக்கை அவருக்கு எதிராக பேசுவதும் இருப்பதும் ஆகும். ஒரு சில நேரங்களில் மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பது எளிதானக் காரியமாக இருக்கலாம். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது. (குருமடங்களில் குருக்களுக்கு குருமாணவர்கள் பயந்து நடப்பது). சிலர் வேலை போய்விடக் கூடாது அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். உண்மையான தாழ்ச்சி நிறைந்தவர்கள் எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பதவியில் உள்ளவர்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தலைவர்கள் குறைகளே இல்லாமல் இருந்ததால்தான் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றில்லை. இந்த உலகில் குற்றம் குறைகள் இல்லாதவர்கள் யார்? தலைவர்களின் குறைகளோடு அவர்களுக்கு மதிப்பளிக்கும்போது நம் பணிவு முழுமை பெறுகிறது.

2. உங்கள் தலைவரை பின்பற்றுங்கள். 

பொதுவாக சொல்லுவார்கள் ‘நாம் நாமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து நாம் மாறத் தேவையில்லை.’  ஒரு விதத்தில் பார்த்தால் அது உண்மைதான். ஆனால் இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் தலைவர்களிடத்தில் இருக்கின்ற நற்பண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற முன்வர வேண்டும். ஒருவரை தலைவராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் அவருடைய உயர்ந்த பண்புகள் திறமைகள் அடிப்படையில் தான் நியமித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொருவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வி­யங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குருவானவர் நன்றாக திருப்பலி வைப்பதை பின்பற்றலாம். (சில குருவானவர்கள் எப்படி திருப்பலி வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்). எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதற்கு  உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பொறுமை காக்க வேண்டும் என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம். காலம் தவறாமையை கடைபிடித்து சிலர் நமக்கு உதாரணமாக இருக்கலாம். நமக்கு மேலே இருப்பவர்களிடம் மட்டுமல்ல. நமக்கு கீழே இருப்பவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள ஆயிரம் வி­யங்கள் உண்டு என்பதையும் மனதில் கொள்வோம்.

3. உங்கள் தலைவருக்குக் கீழ்ப்படியுங்கள்  

அண்மைக் காலமாக திருச்சபைத் தலைவர்களிடத்தில் ஓர் அருமையான மாற்றத்தைப் பார்க்கிறேன். அவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குருக்களையும் கன்னியர்களையும் பொதுநிலையினரையும் கலந்தா லோசிக்கிறார்கள்.  முன்னொரு காலத்தில் எந்த விபரமும் சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டும் என்று திருச்சபைத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். நம்  மூளையின் பலம் அபாரமானது. ஆனால் அது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. இந்த உலகில் உள்ள அனைத்தும் குறையுள்ளது. எனவே நம் மூளையும் குறையுள்ளது. நம் தலைவர்களின் சூழ்நிலைகள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. 

கீழ்ப்படிதல் என்று சொல்லும் போது இரண்டு விதத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒன்று தலைவர் விரும்புவதைச் செய்வது. இரண்டு தலைவர் எடுக்கும் காரியங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது. ஒரு தலைவர் குறிப்பிட்ட கருத்தோடு குறிப்பிட்ட திட்டத்தையும் முன்மொழிந்தால் அந்த தலைவரின் மனப்பான்மையோடு ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். 

அது சரிங்க ஒரு தலைவர் தவறு செய்ய சொன்னால் செய்யலாமா? என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் தலைவர்க்கு தகுந்த விதத்தில் தகுந்த மரியாதையோடு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். கீழ்ப்படிவதில் மட்டுமல்ல உண்மை நிலையை எல்லோருக்கும் எடுத்துரைப்பதிலும் நம் பணிவையும் தாழ்ச்சியையும் எடுத்தியம்ப முடியும்.            (தொடரும்...)

Saturday, 7 April 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 21. நல்லத் தலைவரின் அடையாளங்கள்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஒரு பணக்கார நாட்டிற்கு பெருமளவில் வேறோரு நாட்டிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். பொதுவாக என்ன நடக்கும்? ஒரு சில பேர் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பார்கள். ஒரு சில பேர் அவர்கள் குடியேறுவதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அதனால் அந்த நாட்டின் தலைவர் அகதிகளைக் கண்டும் காணாமல் விட்டு வருவார். ஆனால் அண்மையில் ஒரு நாட்டின் தலைவர் விமானநிலையத்திற்கே சென்று அகதிகளை வரவேற்று அவர்களுக்கு குளிர் போக்கும் ஆடைகளை வழங்கி வரவேற்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆமாங்க சிரியா நாட்டு அகதிகளை வரவேற்ற கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூமோதான் அவர்.

ஜஸ்டின் ட்டூடோ ஒரு நல்ல தலைவர். ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் பல அவரிடம் உள்ளன. அவற்றில்  சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால் 

 - அவர் எளிமையானவர். எளிமையாக எல்லோராலும் அணுகக்கூடியவர். அவரைப் பற்றி அவரது குடும்பம் பற்றி பேசத் தயங்காதவர். அவர் சிறிய வயதில் ஏழ்மையில் வாழ்ந்ததை பகிர்ந்து கொள்பவர். அவர் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதை மறைக்காதவர்.

- ஏழைகள் மீதும் ஒடுக்கப்பட்டோர் மீதும் கரிசனை கொண்டவர். சிரியா அகதிகளை இருகரம் விரித்து வரவேற்பவர். தம் அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் அளித்தவர்.

- பிற இன மக்களுக்கும், பிற சமய மக்களுக்கும் மதிப்பு அளிப்பவர். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை வரவேற்பவர். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறியவர்.

- ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் எவை என்று கேட்டால், நீங்கள் பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். என் மனதில் பட்ட தாழ்ச்சியின் அடிப்படையில் மூன்று அடையாளங்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன். 

1. ஒரு நல்லத் தலைவர் எளிதாக அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். இந்த உலகின் சிறந்த தலைவர் இயேசு. அவர் எப்போதும் எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். இயேசுவும் திறந்த உள்ளத்தோடு எல்லாரையும்  சந்தித்தார்.

தொழு நோயாளர் அவரை சந்தித்தனர்
குருடர்கள் அவரைத் தேடி வந்தனர்
ஏழைகள் அவரை நாடி வந்தனர்.
பணக்காரர்கள் அவரிடம் பேசினார்கள்
படித்தவர்கள் அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தனர்
பாமரர் அவரைப்  பின்பற்றிச்  சென்றனர்
குழந்தைகள் அவரை தொடுவதற்கு முயற்சி செய்தனர்
பாவிகள் அவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

யாருக்கும் எந்த விதமான அச்ச உணர்வும் இல்லை. எல்லோரையும் இயேசு சமமாக மதித்தார். உடல் நோயால் வருந்துவோருக்கு உடல் நலம் அளித்தார். பாவிகளை அரவணைத்தார். மத்தேயுவை சந்தித்தார். அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும் வழங்கினார். 

சரிங்க, நீங்கள் எளிதாக அணுகக் கூடிய தலைவரா?  என்பதை அறிய ஒரு எளிய சோதனை இருக்கிறது. நீங்கள் ஒரு கூட்டத்திற்குச்  செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் அதிகம் உரையாடுவது, உறவாடுவது அதிகம்  படித்த, பதவிகள் உடைய பெரிய ஆட்களிடமா?  (High Profile People)   அல்லது முக்கியம் இல்லாத பாரமரரிடமா? பாமரருக்கு முன்னுரிமை அளித்து எல்லாரிடமும் நன்கு பழகினால் நல்லத் தலைவரின் வரிசையில் நீங்கள் உள்ளீர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

2. ஒரு நல்லத் தலைவர் அனைவரின் கருத்துகளையும் வரவேற்று ஏற்புடையவற்றை செயல்படுத்தத் தயங்காதவர். உழவர் சந்தை என்ற ஒன்று நம் ஊரில் இருக்கிறது அல்லவா? ஒரு தலைவர் அதை கொண்டு வந்தார். இன்னொருத் தலைவர் அதை மூடி வைத்தார். மாறாக ஒரு நல்லத் தலைவர் மற்றவர்கள் கொண்டு வந்த நல்லக் காரியங்களைத்  தொடருவார். பொதுவாக அடுத்தவர்கள் நமக்கு அறிவுரை வழங்கும் போது நாம் செய்கின்ற முதல் காரியம் நம்மை நியாயப்படுத்துவது தான். நாம் கேட்கின்ற முதல் கேள்வி, “எனக்கு அறிவுரை சொல்ல நீ யார்?” நாம் சொல்கின்ற முதல் பதில் “அறிவுரை சொல்வது எளிது. என் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்”. 

அன்புமிக்கவர்களே, நேர் மறையான விமர்சனங்களை மட்டுமல்ல, எதிர் மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டால்தான் விமர்சனங்கள் தொடரும். இல்லையேல் நமக்கு ஏன் வம்பு? என்று விமர்சனங்கள் செய்வதை நிறுத்தி விடுவார்கள். நமக்கு மேலே உள்ளவர்களின் கருத்துகளை மட்டுமல்ல நமக்குக்  கீழே உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்ளன்போடு ஏற்று செயல்படுத்துவோம்.

3. ஒரு நல்லத் தலைவர் தம்மை
 முழுமையாக வெளிப்படுத்துவார். தலைவர் என்று சொல்லும்போது குறை இல்லாதவர் இல்லை. குறைகளைக்  கடந்து செயல்படுவதற்கு முன்வருபவர். எனவே நம் குறைகளைப்  பிறர் அறிவதை நாம் தடை செய்யக் கூடாது. அதே வேளையில், நம் குறைகளை எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக நம் உண்மைத் தன்மையை  (Personality) மக்களுக்கு உணர்த்த வேண்டும். மக்களிடத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட வி­யங்களின் உண்மை  நிலையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் மக்களிடத்தில் நம் மதிப்பு கூடும். நம் குறைகளை மறைத்தால் மக்கள் நம்மை சந்தேகிப்பார்கள். நம் இயலாமைகளை மக்கள் அறிய செய்தால்  மக்கள் நம் பணிவைப் போற்றுவார்கள்.

சரிங்க, நல்லத் தலைவர்களைப் பற்றி பார்த்தோம்.  இந்த உலகில் மிக மோசமானத் தலைவர்கள் யார் தெரியுமா? அடிப்படை ஞானம் இல்லாத, வெறியை ஊட்டுகின்ற, தன்னலம் மிகுந்த, ஆணவம் நிறைந்த , ஊழல் செய்து வாழ்கின்ற  நம்ப ஊர் அரசியல் வாதிகள் தான்.  (தொடரும்...)

Ads Inside Post