Pages - Menu

Monday 4 December 2017

தேம்பாவணியில் இயேசு பிறப்பு

தேம்பாவணியில்  இயேசு  பிறப்பு

 பேராசிரியர் முனைவர் ச.சாமிமுத்து, திருச்சி

கற்புக்கு அரசராகிய தூய வளனாரும் புண்ணியத்தின் திருவுருவான கன்னிமரியும் இடையறாது வேண்டிய வேண்டுதலைக் கேட்ட இறைவன் இப்பூவுலகில், தாம் ஆதாம் ஏவாளுக்கு வாக்களித்தவாறு மனிதனாகப் பிறக்க விருப்பம் கொண்டார். எனவே வளனாரையும் கன்னி மரியாவையும் திருமணத்தில் ஈடுபடுத்தி, பழுதில்லா வகையில் பாரில் பிறந்து மனுக்குலத்தின் பாவத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார். ஆகவே, கன்னிமரியிடத்துக் கபிரியேல் தேவ தூதரை அனுப்பி தம் திருவுளத் திட்டத்தை எடுத்துரைக்கச் சொன்னார். அத்தேவதூதரும் ஜெருசலேம் தேவாலயத்துள் விரைந்து நுழைந்து, கன்னிமரிக்கு காட்சியளித்து, கடவுள் திருவுளத் திட்டத்தை எடுத்துரைத்தார். அந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தம் தேம்பாவணிக் காப்பியத்தில் இனிய தம் பாடல் மூலம் நமக்கு எடுத்துரைக்கின்றார். அப்பாடல்,

“வான்செய்த சுடர்ஏய்க்கும் வடிவொடு
வானவன் சடுதி வந்தக் கன்னி
கான் செய்த மலர்ப்பதத்தைக் கண்டிறைஞ்சிக்
கடவுள் அருள் கருதுந் தன்மை
தான்செய்த ஏவலெனத் தவறாதோர்
மணத்து அமைதல் தருமம் என்னத் 
தேன்செய்த கனிச்சொல்லால்  சீர்த்தபல
உறுதிகளும் செப்பினானே”   (பாடல் 317)

என்று நம் செவியில் இன்பத்தேன் பாய்ச்சுகின்றது.

கன்னிமரியிடம் சென்ற கபிரியேல் வானவர் வானத்தை அலங்கரிப்பதற்குரிய சூரியனது வடிவைப்போல் விளங்கினார் என்றும் மரியின் மணம் வீசும் தாமரைத் திருவடிகளை வணங்கினார் என்றும் வீரமாமுனிவர் தம் பாடலில் இலக்கியச்சுவை சொட்டச் சொல்லு கிறார். அவ்வாறு சென்ற தேவதூதர், தேனைப் பொழியும் இன்பமான சொற்களினால் இறைவனுடைய கருத்துப்படி நீங்கள் திருமணம் புரிந்து கொள்ள ஒப்ப வேண்டும் என்றார்! மேலும் உறுதி பயக்கும் நல்லுரைகள் பலவற்றை நவின்றார்.

மணம் என்ற வார்த்தையைக் கேட்கும் முன்னே கன்னிமரியாவின் முகம் வாடிற்று! கண்களில் துன்பநீர் குளமாகப் பெருக வழிய ஆரம்பித்தது. கன்னிமரியோ மூன்று வயது  முற்றுப்பெறா முன்னமேயே திருமணம் புரியாது எப்பொழுதும் கன்னியாய் இருந்து இறைவனுக்குப் பணிபுரியத் தம்மையே ஒப்புக் கொடுத்தவர்கள்.  மனம் கலங்கிய கன்னிமரிக்கு அத்தேவதூதர் இறைவனின் திருவுளத் திட்டத்தை உறுதிபட எடுத்துக் கூறவே, மரியும் மனம் தேறி கல்லினும் வலிய தம் கன்னித் தன்மை என்றும் அழியாத அத்திருமணத்திற்கு இசைவளித்தார். உடனே அவ்வானவர், இறைவனுடைய கட்டளையின்மேல், சமயத் தலைவராக இருந்த சிமியோனுக்குக் காட்சியளித்து மரியயன்னும் பெயர்பூண்ட கன்னிக்குரிய துணைவரை மரியின் குலத்திலேயே தேடித் திருமணம் செய்விப்பாயாக என்றார். அவ்வாறே, தாவீது அரச குலத்தினராகிய இளைஞர் வளனாருக்கும் அதே குலத்து இளம் பெண் மரியாவுக்கும் சமய முறைப்படி திருமணம் நிறைவேறிற்று, எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த வியத்தகு இல்லற ‡ துறவற திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரும் வழுவிலாக் கன்னிமரியாவையும் பழுதிலா வளனாரையும் பலவாறு புகழ்ந்து வாழ்த்தினார் என்று வீரமாமுனிவர் பாடிப் பரவுகின்றார். அறத்தின் -- வேதத்தின் - செல்வத்தின் வடிவங்களைப் போன்றவர்களே வாழக் கடவீர்! எங்கள் உயிரையும், உலகத்தின் உயிரையும், உயிர்களின் உயிர்களையும் போன்றவர்களே! வாழக் கடவீர் என்று வாழ்த்தியதை, 

“வாழி அறவுரு வாழி மறையுரு
  வாழி திருவுரு மானுவீர்
வாழி எமதுயிர் வாழி உலகுயிர்
வாழி உயிருயிர் போலுவீர்”

 என்று இசைக்கின்றார் வீரமாமுனிவர்.

திருமணம் நிறைவேறிய சில நாட்களுக்குப் பிறகு, சிமியோன் வளனாரை அழைத்து, உமது சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் செல்வீர் என்றார். இருவரும் இசைந்து இறைவனை வணங்கிப் புறப்பட்டார்கள்.

மரியம்மாள் மற்றைய கன்னி யர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, இல்லறத் துறவியாகிய வளனாருடன் நாசரேத்து நோக்கி நடந்தார். அச்சிற்றூருக்குச் சென்றபொழுது அங்கிருந்த அனைவரும் அன்புடன் அத்தெய்வ இணையரை வரவேற்றார்கள். அறம் தழைக்க, உலகமீட்பர் உதிக்க, இல்லறமாகிய நல்லறத்தை அக்கன்னியும் கற்பரசும் தொடங்கினர்!

இருவரும் இளமையிலேயே மேற்கொண்ட துறவற ஒழுக்கத்திற்குப் பழுது நேராவண்ணம் இல்லறத்தில் இணைக்கப்பட்டதால் இறைவனுடைய அருட்செயலை எண்ணி மகிழ்ந்தனர். கன்னிமரியின் கன்னித் தன்மை காப்பாற்றப்பட கற்பரசு காவலாயும், அவரின் கற்புக் காக்கப்பட கன்னியரசி காவலாகவும் அமைந்தார்கள் என்பதை வீரமாமுனிவர் கவின்மிக்க கவிதைகளில் பாடும் திறம் போற்றற்குரியது. துறவறம் மேற்கொண்டு இல்லறம் புரிந்த இருவரும் தூய வாழ்வு வாழ்ந்து வருங்கால், அவர்களின் உள்ளங்கள் பளிங்கிபோல் ஒளிர்ந்தன!. பொங்கி வழிந்த பேரார்வத்தால் வளனார் பலவாறு தந்தையாம் கடவுளை வணங்கி வாழ்த்திப் போற்றியதை,

“அறக்கடல் நீயே, அருட்கடல் நீயே,
அருங்கரு ணாகரன் நீயே,
திறக்கடல் நீயே, திருக்கடல் நீயே,
திருந்துளம் ஒளிபட ஞானம்
நிறக்கடல் நீயே, நிகர்கடந் துலகில்
நிலையும் நீ உயிரும் நீ, நிலை நான்
பெறக்கடல் நீயே, தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ யனைத்தும் நீ யன்றோ!”

என்னும் கன்னல் சுவைப்பாடலில் கவிஞர் பாடி இன்புறுகின்றார்.

இறைதிட்டம் ஈடேறும் நாள் நெருங்கிற்று. கன்னி மரியின் திருவயிற்றில் மீட்பர் கர்ப்பமாக உருப் பெற விரும்பி, அச்செய்தியைக் கன்னிமரியிடம் தெரிவிக்க கபிரியேல் தூதரை அனுப்பினார். வான் தூதரும் மாசில்லா மரியாவை அணுகி, தேவ வரங்கள் நிரம்ப பெற்றவர் என்றும் இறைவன் வாழும் எழில்மிக்க உளத்தை உடையவர் என்றும் பூவுலக மகளிர்களிலெல்லாம் அளவில்லாத இறையருளைப் பெற்றவர் என்றும் தேம்பாத் தெய்வீக அழகு பெற்றவர் என்றும் இன்னுரைகளால் அவரை வாழ்த்தினார். தேவதூதரின் புகழ்மொழிகளைக் கேட்ட பிதாமகள் நாணமுற்று சித்திரப்பாவை போல் தாழ்ச்சியுடன் இருந்த மாட்சி குறித்து வீரமாமுனிவர்

“தனக்கள வகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கள வுளைந்து நாணி வரைந்த ஓவியமே யயாத்தாள்”

என்று பாடுகின்றார்.

தேவதூதர் மீண்டும் எக்காலத்தும் கன்னித் தன்மை கெடாது விளங்கும் மாதே! இவ்வுலகத்தில் உள்ள பொதுவான முறையினின்று மாறுபட்டு, வியப்புற்குரிய வழியில் இறையருளால் ஒப்பற்ற ஒரு கர்ப்பத்தைத் தாங்கி, பொன்னொளியைப் பழிக்க கூடிய உடலழகுபடைத்த ஒரு மகனைப் பெற்றெடுத்து அம்மகனுக்கு இயேசு என்னும் பெயரிடுவாய் என்றார். அதைக் கேட்டு மரியா பெரிதும் மனம் கலங்கி அழியாத கன்னித் தன்மையுள்ள ஒரு பெண் எவ்வாறு ஒரு பிள்ளையைப் பெறுதல் கூடும் என்று ஐயத்துடன் வினவினார். அதனை,

“மய்யலற் றழிவில் கன்னி
மைந்தனைப் பெறுத லேதென்(று)
ஐய்யமுற் றிவள் வினாவ” 

என்று முனிவர் பாடுகின்றார்.

உள்ளத்தைத் தெரிவிக்க வேண்டி, இறைவனுடைய பேராற்றலைத் தேவதூதர்க்கு விளக்கிக் கூறினார். ஒன்றுமில்லாமையிலிருந்து  இவ்வுலகத் தையும், இவ்வுலகில் உள்ள பொருட்களையும் உண்டா க்கிய இறைவனுக்கு இச்செயல் செய்ய முடியாததோ என்றார். மேலும் கன்னியயாருவர் துன்பமில்லாமல் ஒரு மகனைப் பெறுவார் என்று  இசையாசு இறைவாக்கினர் முன்னுரைத்தது உண்மையாகப் போகிறதென்றும், தூய ஆவியாருடைய அருளால் கருவுற்ற இரண்டாம் ஆளாகிய உலக மீட்பரைப் பெற்றெடுப்பாயாக வென்றும் சொல்லி கன்னிமரியைக் கபிரியேல் தேவதூதர் வணங்கினார். 

நாட்கள் மாதங்களாகி நகர்ந்தன. வளனாருக்கு ஏற்பட்ட உள்ளக்கலக்கங்களையயல்லாம் இறைவன் வானதூதர் மூலம் அகற்றவே, வளனாரும் தம் துணைவி இறைவனையே மனிதனாகப் பெற்றெடுக்கும் மேலான  இறையருள் வரத்தை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து இறைவனின் தாயை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி தாம் ஐயம் கொண்டவர்களாய் அழுது புலம்பினார்! அவருற்ற அளப்பரும் வேதனையைப் பல துன்பச் சுவைமிக்க பாடல்களில் பாடும் வீரமாமுனிவர் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வேண்டியதை, 

“எழுந்திரு அடியை வேண்டினான்.
தொழுந்திரு அடிமிசை மழைக்கண் தூவியே,” 

என்று பக்திச் சுவை  நனி சொட்டப் பாடுகின்றார்.

இறைமகன் பிறப்பதற்கு முன்பு, உரோமைப் பேரரசன் அகஸ்டசு சீசர் என்பவரின் ஆட்சிக் காலத்தில், அரசக் கட்டளை ஏற்றுக் குடிக்கணக்குத் தர நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணாகிய கன்னிமரியும் இறைவனின் வரபலன்களால் நிரம்பப்பெற்ற மாதவ முனிவராகிய வளனாரும் நாசரேத்தூரிலிருந்து பெத்தலேகம் என்னும் தாவீதரசனின் பேரூருக்குப் புறப்பட்டுப் பயணம் போனார்கள்.

இன்ப துன்பங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றையும் கடந்து, நாசரேத்தைவிட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில் வளனாரும், கன்னிமரியும் பெத்லேகம் நகர்போய்ச் சேர்ந்தார்கள். இரவில் தங்குவதற்கு அத்தாவீதன் நகரத்தில் இறைவனைத் தம் மாணிக்கத் திருவயிற்றில் தாங்கிச் சுமந்த நம் தாய்க்கு அங்கு இடம் இல்லை! நம் தவமா முனிவராம் வளனாருக்கு அங்கு இடமில்லை. இந்நிலையில், பெத்லேகம் நகர்க்கு வெளியில் இருந்த மாட்டுத் தொழுவம் அமைந்த குகையில் இருவரும் சென்று தங்கினர். அக்குகையில்தான், மார்கழிமாதம் 25 ஆம் நாள் நடுச்சாம வேளையில், மூன்று உலகங்களிலும் தமக்கு ஒப்பு யாரும் இல்லாத, மூன்று காலங்களிலும் அழிவில்லாத கன்னிகை, வல்லமையில் அளவில்லாத மூன்று ஆட்களில் இரண்டாம் ஆளாகிய திருச்சுதனை, மூன்று சுடர்களைப் பார்க்கிலும் மிகுந்து விளங்குமாறு பெற்றெடுத்தார்கள் என்கிறார் வீரமாமுனிவர்.

பேரருள் பிறந்தது! பேய்கள் மறைந்தன! பேரின்பம் பூமியில் பெருக்கெடுத்து ஓடிற்று! தேவதூதர்கள் இசைமுழங்கி, மண்ணில் பிறந்த மாதேவக் கொழுந்தைத் தேவதாயின் கரத்திலிட்டு வணங்கினர். கன்னிமரி அன்னையோ தாம் பெற்றெடுத்த கடவுள் மகனைப் பேரன்போடு அரவணைத்து, முத்தமாரி பொழிந்து வாழ்த்தி வணங்கினார்கள். கற்புக்கரசராகிய தூய வளனாரும் பேரின்பப் பெருக்கில் தேவபாலனின் திருவடிகளை வணங்கினார். மரியன்னை, தேவாதி தேவனைத் தம் செந்தாமரைக் கரங்களிலே தூக்கி அரவணைத்த நேரத்தில் கன்னி அன்னையின் கரங்களையே தேன் துளிர்க்கும் மலர்ப்படுக்கையாகக் கருதி உயிர்களின் தலைவர் உறங்கினார். அப்போது தாளாத ஆசையால் வளனார் தாலாட்டிய காட்சியை வீரமுனிவர் பின்வரும் பாடலால் உணர்த்துகின்றார்.

“களித்த நாளில் அரும்பும்தென் காலே
இனிதீங் கரும்புதியே,
துளித்த நானம் தேனரும்பத்துணர் நாள்
மலர்காள் அரும்புதிரே,
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் 
பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான்கனிய அன்பு
துயிலாத் துயில்கின்றான்.”

இவ்வாறு வளனார் இனிமையாகத் தாலாட்டவும், எல்லாவற்றையும் கேட்டு இன்புற்றார்போல் தேவபாலன் தன் திருவிழி மலர்ந்து அவரைப் பார்க்க, அவரும் எல்லையற்ற இன்பக்கடலில் மூழ்கினாராம்!.

No comments:

Post a Comment

Ads Inside Post