Pages - Menu

Showing posts with label Anecdote. Show all posts
Showing posts with label Anecdote. Show all posts

Monday, 4 December 2017

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
10 - 12 - 2017
எசா 40: 1-5, 9-1 1,  2 பேது 3: 8 - 14;   மாற் 1: 1-8

பெரிய அரசியல் தலைவர்கள் ஓர் இடத்திற்கு செல்கிறார்கள் என்றால் பல மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை மற்றும் காவல்துறை, வருவாய் துறை போன்றோர், அவ்விடத்தைப் பார்வையிட்டு, தலைவரின் வருகைக்குத் தயார் செய்வார்கள். இயேசுவும்  தான் செல்ல விருந்த இடங்களுக்கு, தன் சீடர்களை  அனுப்பி வைக்கிறார் என்று பார்க்கிறோம். ‘தமக்கு முன்  தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய் சேர்ந்தார்கள்’  (லூக் 9:52) . 

இயேசுவின் முன்னோடியாய் திருமுழுக்கு யோவான், இறைவனால் அனுப்பப்படுகிறார். இயேசுவும், திருமுழுக்கு யோவானும் அவரவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்திப்  பகுதியில் பாலைவனத்தில் திருமுழுக்கு யோவானின் பணியைப் பற்றி பார்க்கிறோம். ஏசாய  நூலில் எழுதியுள்ளபடி, ‘ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வார்’....  என்பது  (விப 23:20) (மலா3: 1) (ஏசா 40:3) ஆகிய குறிப்புகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. பாவ மன்னிப்படைய மனமாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் போதிக்கின்றார். ‘யூதேயாவில் அனைவரும், எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்’ (மாற் 1:5) என்று கூறப்பட்டுள்ளது.  ‘இதோ எனக்குப் பின்வருகிறவரின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தகுதியற்றவன்’ என்று தன் நிலையை பணிவோடு கூறுகிறார். ‘எனக்கு பின்னால் வருகிறவர் தூய  ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்’ என்கிறார். திருமுழுக்கின் பொருள் என்னவென்றால்,  ‘என்னை மாற்றிக் கொள்ள முன் வருகிறேன் என்பதும் அதே நேரத்தில் இறைவன் என் பாவங்களை மன்னிக்க முன் வருகிறார்’ என்பதாகும்.  முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமை தனத்தினால் மனம் ஒடிந்து போயிருந்த மக்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை ஏசாயா கூறுகிறார். ‘கனிமொழி கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள். புதிய வழியை தயார் செய்யுங்கள். ஆண்டவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய வருகின்றார். ஆயனைப் போல் தம் மந்தையை மேய்ப்பார்’.

ஆக ஒரு பக்கம் நமது மனமாற்றம், இறைவனை நெருங்கி செல்வது, மற்றொரு பக்கம், கடவுள் நம்மை நெருங்கி வருவது. இந்த அனுபவங்கள் இன்றைய வாசகங்களால்  எடுத்துச் சொல்லப்படு கின்றன.

இந்த  அனுபவம்தான்  திருவருகைக்  காலத்தின்   இரண்டாம்   வாரத்திலும்   நம்மிடம்   இடம்  பெற  வேண்டும். மனமாற்றத்தினால்  கடவுளின் ஆற்றலினுள் நாம் நுழைகிறோம். மனமாற்றத்தின் இனிமையை பலர் உணராது இருக்கின்றனர். மதுபானங்களின் விலையை அரசு அண்மையில் உயர்த்திய போது, குடிமகன்கள் வேதனைப்பட்டார்கள். ‘எங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை. எங்களுக்காக பேச யாரும் இல்லை’ என்று புலம்பினர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பேதுரு, ‘அவர் உங்களை மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுரை வழங்குகிறார்.

இத்திருவகைக் காலத்தில், நம்மை இன்னும் தூய்மையாக்க முயற்சி செய்வோம். நம்மிடமுள்ள பள்ளத்தாக்குகள், குன்றுகள், கோணலானவை, கரடுமுரடானவை ஆகியவைகளை சீர் செய்வோம். வாகனத்தில் ஒருபாகம் கெட்டுப் போனாலும் வாகனம் ஓடாது. அதேபோல சிறு குறைகளும் இறைவனின் உறவை நிறைவு செய்யாது. 

Friday, 29 September 2017

இதுக்கென்ன சொல்றது ? - ச. இ . அருள்சாமி

இதுக்கென்ன சொல்றது ?
  - ச. இ . அருள்சாமி

 இப்படியும் மனிதர் இருப்பாங்களா?
 என்ற எண்ணம் அந்நிகழ்ச்சியில் எனக்குப் பளிச்சிட்டது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாடம்  எனக்குக் கிடைத்தது. குடந்தையிலிருந்து கோவைக்கு நேரடியான பேருந்துகள் ஒரு சிலவே இருந்தன. ஒரு சில பேருந்துகள் வசதியான நேரத்தில் செல்பவை.  உதாரணமாக, இரவு 8 மணிக்கு குடந்தையில் புறப்பட்டால் காலை 6 மணிக்கு கோவைக்கு அப்பேருந்து செல்லும். எனவே இரவில் பயணம் செய்து, பகலில் வழக்கமான வேலைகளை செய்யலாம். எனவே அந்த பேருந்துக்கு நிறையபேர் காத்திருப்பர். அப்பேருந்திற்கு முன் பதிவு செய்யலாம். நான் குடந்தையிலிருந்து கோவைக்கு முன் பதிவு செய்தேன். ஜன்னல் ஓரமான ஒரு இருக்கையை கேட்டு பதிவு செய்திருந்தேன். ஒருவர் 30,40 வயதுடையவர் என்னை அணுகி, எனக்கு உடல்நிலை சரியில்லை. அடிக்கடி வாந்திவரும். எனவே உங்கள் இடத்தைக் கொடுங்கள். எனக்கு உதவியாக இருக்கும் என்றார். நானும், இரக்கப்பட்டு  நான் கேட்டு வாங்கியிருந்த இடத்தை அவருக்குக் கொடுத்தது விட்டு, அவரின் இடத்தில் அமர்ந்தேன். விடியற்காலையில் 3 மணிக்கு காங்கேயத்திற்கு வண்டிவந்து சேர்ந்தது. தேநீர் அருந்த பயணிகள் கீழே இறங்கினர். நானும் இறங்கி தேனீர் அருந்தி பேருந்திற்குள் வந்தேன்.  அப்போது நான் இடம் கொடுத்த அந்த பயணி, அவரின் இடத்தில் அமர்ந்திருந்தார். நான் கொடுத்த இடத்தை விட்டு அவரிடத்திற்கு சென்று விட்டார். ஜன்னல் ஓரமான அந்த இடம் குளிராக இருப்பதாகவும், அதனால் தன் சொந்த இடத்திற்கு வந்து விட்டதாகவும் கூறினார். நான் கூறினேன், நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் என் இடத்தை உங்களுக்குக் கொடுத்தேன். இப்போது திடீரென்று இப்படி பல்டி அடிக்கிறீர்கள் என்றேன். ‘சார், உங்க நம்பர் என்ன? அதில் போய் உட்காருங்கள்.  அதிகமாய் பேசாதீர்கள்’ என்றார். பேய் அடித்தது போல் என் இடத்தில் அமர்ந்தேன். நல்லது செய்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசு இதுதான். ‘இப்படியும் மனிதர்கள் உண்டு’ என்று புரிந்துக் கொண்டேன்.
அரசு பேருந்துகளில் இருக்கைகள் சிறுவர்களுக்குரியதை போல் அமைந்திருக்கின்றன. நாளுக்குநாள் மக்கள் குண்டாகிறார்கள். ஆனால் இருக்ககைகளை குறுகியதாக செய்கிறார்கள். நான் சற்று ‘குண்டு’ வகையை சேர்ந்தவன். 75 கிலோ. எனவே பேருந்துகளில் பயணம் செய்வது எனக்கு சற்று சவாலான காரியம். என்னைப் போன்று ‘குண்டு’  மனிதர்கள் என் வரிசையில் அமர்ந்து விட்டால், அன்று அறவை இயந்திரத்தில் அகப்பட்டு  போனது போலதான். எனவே நான் சில தந்திரங்களை விளையாடுவேன். எனக்கு இருக்கைக் கிடைத்ததும், ஒல்லியானவர் யாராவது வருகிறார்களா? என்று பார்த்து அவரை நானே கூப்பிட்டு அருகில் அமர செய்வேன். இதனால் குண்டு உருவமும், மெலிந்த உருவமும் இணைந்து சகிப்புத் தன்மையுடன் செல்லும். அந்த முறை திருச்சியிலிருந்து கோவை வரையில் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தேன். வழக்கம் போல மெலிந்த உருவம் உடையவரை கண்டுபிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டேன். வந்தவர் ஜெயங்கொண்டம் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். கிராமத்து மனோநிலையோடு பேசி பழகினார். மனந்திறந்து பேசினார். பயணம் அழகாய் சென்றுக் கொண்டிருந்தது. பேருந்து கோவையை நெருங்கி விட்டது. அப்போது அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ‘என்ன சார்? உங்களை சமாளிக்கவே முடியல சார்?’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியல. ‘என்ன சார் சொல்லிறிங்க?’ என்றேன். ‘சார் திருச்சியிலிருந்து இங்கு வரவரயிலும், நீங்க தூங்கி தூங்கி என்மீது விழுந்திங்க. எவ்வளவோ தள்ளி பார்த்தேன், முடியல. உங்களோடு போராடுனதே என் பயணம் ஆச்சு’ என்றார். அப்போது, தான் நான் செய்த திருவிளையாடல் புரிந்தது. ‘மன்னிச்சுங்க சார்’. தவறா நடந்திடுச்சு சார். மனசில எதும் வைச்சிக்காதிங்க சார். வாங்க சார், காப்பி சாப்பிட்டு போகலாம் என்று காப்பி வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தினேன். ‘ஏழையர் உள்ளத்தோர்’ எப்படி சகிப்புத்தன்மைப்புடன் நடந்து கொள்கின்றனர் என்று புரிந்துக் கொண்டேன்.  

Saturday, 25 February 2017

நல்ல மனிதர்களும் உண்டு

நல்ல மனிதர்களும் உண்டு

பாபநாசம், கோடுகிளி என்ற கிராமத்திற்கு கார் ஒன்றில் சென்றேன். அதன் ஓட்டுநர் ஓர் இளைஞர். அவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் பணத்தை பற்றி கேட்பதில்லை. முதலில் நோயாளியை மருத்துவ மனையில் சேர்த்திட எந்த மருத்துவமனை என்று கேட்டு அங்கு அழைத்துச் செல்வேன். பிறகு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்றார், இந்த மனநிலை எப்படி தனக்கு வந்தது என்றும் விளக்கினார்.

அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. சாகும் நிலையில் இருந்தார். அவரை தஞ்சாவூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல டாக்சி வாகனங்களை கேட்டிருக்கிறார். வழியில் அவர் இறந்துவிடுவார் என்று டாக்சி ஓட்டுநர் அனைவரும் அவர் தந்தையை எடுத்து செல்ல மறுத்துவிட்டனர். பிறகு ஆட்டோ பிடித்து அழைத்து சென்றார். பிறகு இவர் டாக்சி ஓட்டுநராக ஆனபிறகு தான் சந்தித்த அனுப வம் முள்ளாக குத்தியிருக்க, மருத்துவத்திற்காக யார் டாக்சி கேட்டாலும் உடனடியாக வண்டி எடுத்துக் கொண்டு செல்வேன் என்றார். மற்றொரு அனுபவத்தை யும் கூறினார். அவரின் 2 வயது பையனுக்கு கிட்னியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு நண்பர் ஒருவர் இரண்டு  லட்ச ரூபாய் கொடுத்து  உதவினார். பிள்ளைக்கு இந்த கிட்னி பிரச்சனை அவரின் மனைவியிடமிருந்த தைராய்டு காரணமாகத் தான் ஏற்பட்டது என்று கூறினர்.

ஆனால், தன் மனைவிக்கு தைராய்டு நோய் இருப்பது திருமணத்திற்கு முன் தெரியும். தைராய்டு நோயினால் குழந்தை பிறப்பில் சிக்கல் உண்டாகும் என்றும் தெரியும். இருப்பினும் ஒரு பெண்ணுக்கு நாம் வாழ்வளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்களுடன் உறவு உண்டாகிறது. ஏழைகளின் உறவு உருக்கமானது, நெருக்கமானது என்றார்.

Ads Inside Post