Pages - Menu

Showing posts with label Sermon. Show all posts
Showing posts with label Sermon. Show all posts

Wednesday, 1 June 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை, பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு, 05 - 06 - 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை

                      பொதுக்காலம் 10ஆம் ஞாயிறு                   05 - 06 - 2016

-அருட்பணி. கிருபாகரன்,
1 அர 17 : 17 ‡ 24,  கலா 1 : 11 - 19 ,  லூக் 7 : 11 - 17                 உதவி அதிபர், இளங்குருமடம்



இருவகையான மக்கள் கூட்டம், அதில் இருவகையான பயணங்கள், இருவகையான வேறுபட்ட, மாறுபட்ட இலக்கிற்காக பயணிக்கின்றார்கள். முதல் வகை இயேசுவோடு இணைந்து பயணித்தவர்கள். அவர்கள் அப்போதுதான் நூற்றுவர் தலைவனுடைய பணியாளன் பயன் பெற்றதை பார்த்து வியந்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து இருந்தவர்கள் (லூக் 7 : 1 ‡ 10). கடவுளுடைய மகிமையான வெளிப்பாடுகள், மனிதனுடைய துன்ப நேரங்களில் ஆசீர்வாதமாக பொழியப்படுவதை கண்டு களிகூர்ந்தவர்கள். வாழ்வு முழுவதும் ஆச்சரியம், அதிசயம், அருள் எப்போது வேண்டுமானாலும் வாழ்வை புரட்டி போடும் என்கின்ற நற்செய்தியை இயேசுவிடமிருந்து பெற்று, இயேசுவை சுற்றி பயணித்தவர்கள்.

இரண்டாவது மக்கள் கூட்டம், ஒரு விதவையின் கண்ணீரை சுற்றி பயணிக்கின்ற கூட்டம் (இன்றைய நற்செய்திப் பகுதி). தனக்கு மதிப்பு கொடுக்க கூடிய, வாழ்வின் அனைத்து விதமான காரணிகளையும் இழந்து தவிக்கின்ற பெண்மணியை சுற்றி பயணிக்கின்ற கூட்டம். முதலில் கணவனை இழந்தாள், இப்போது மரணம் அவளது மகனையும் கவ்வி கொண்டது. அவளின் இல்லாமையின் வலி அழுகையாகவும், ஒப்பாரியாகவும் இருக்கின்றது. அவளோடு இணைந்து அவள் துன்பத்தில் பங்கு கொண்டு கல்லறை நோக்கி நடப்பதை தவிர வேறு எதையும் விந்தையாக செய்யமுடியாத பயணம் இரண்டாவது பயணம்.

இந்த இரண்டு மக்கள் கூட்டம், தனது இருவகையான பயணங்களில் இரு மாறுபட்ட இலக்கை நோக்கி பயணித்தவர்கள், நயீன் என்னும் ஊருக்கு வெளியே சந்தித்து கொள்கிறார்கள். இதில் மிகவும் பரிதாபமாக லூக்கா நற்செய்தியாளரால் வர்ணிக்கப்படுபவர் அந்த விதவை. ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில் கணவன் என்ற துணையை இழந்து, மகன் என்ற வாழ்வின் ஆதாரத்தை இழந்து, வாரிசை இழந்து நிற்கின்ற பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கைம்பெண்ணாக சித்தரிக்கப்படுகின்றாள். அந்த அபளை பெண்மீது இயேசு பரிவு கொள்கிறார். அப்பெண்மணி கேட்காமலேயே, அவளின் மகனை உயிர்ப்பிக்கிறார். இறைவன் நாம் கேட்காமலும், நமக்கு தேவையானதை கொடுக்க வல்லவர்.

மரணம் என்பது நமது நம்பிக்கையை குலைக்கக்கூடியது. பணம், அந்தஸ்து, பதவி இதில் மாறறம் ஏற்படுத்த போவதில்லை. சந்திப்புக்களும், அழைப்புகளும், இரக்கம் காட்டுகின்ற கடிதங்களும் மாற்றம் ஏற்படுத்த முடியாது. கோவில்கள், குருக்கள், ஆடம்பர மரண ஊர்வலங்கள் இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மாற்றம் ஏற்படுத்த முடியாத மரணத்திற்கு கூட முற்றுபுள்ளி வைத்து, மரணத்திற்கும் மாற்றத்தை கொடுக்கின்றார் இயேசு. இயேசுவினுடைய வார்த்தைகள் விந்தையானவை. அழாதீர்கள் என்று சொல்லி சவபெட்டியை தொட்டு இளைஞனே! எழுந்திரு என்கிறார். யூதரின் தீட்டு வழக்கத்தையும் கணக்கில் கொள்ளாத இயேசு இவ்வாறு செய்கிறார். எண் 19 : 11 - 16 இறந்தவரின் உடல் தீட்டானது. அதை தொடக்கூடாது என்ற சட்டம் இருந்தது.
இறுதி ஊர்வலம், தாயையும், பிள்ளையையும் இணைக்கின்ற இணைப்பு ஊர்வலமாக மாறுகின்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கை பற்றிய விளக்கம் இல்லை, செபங்கள் எழுப்பப்படவில்லை, விண்ணப்பங்கள் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இயேசு முன்சென்று உயிரிப்பிக்கின்றார். இயேசு சிறிய மக்களை பெரிய அளவில் ஆசீர்வதிக்கின்றார் என்பதுதான் லூக்கா நற்செய்தியாளரின் செய்தியாக இருக்கின்றது. கடவுளின் பரிவு பார்வைகள் நம்மீது வீசுகின்ற போது கலக்கம் கொள்ள தேவையில்லை.

மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்த வேண்டுமா?
பரிவு காட்டுங்கள்
நீங்கள் மகிழ்வாயிருக்க வேண்டுமா?
பரிவு காட்டுங்கள்      -   தலாய் லாமா.

பரிவு பண்பு நம் தீமைகளை மன்னிக்கும் வல்லமை வாய்ந்ததது. மற்றவர்களை கண்டனம் செய்யும் பண்பிற்கு இந்த வல்லமை கிடையாது -  யஹன்றி வார்ட் பெக்கர்.

Sunday, 3 April 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 24 - 04 - 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு             24 - 04 - 2016
தி.ப. 14 : 21ஆ - 27,
திரு. வெ 21 : 1 - 5
யோவா 13 : 31 - 33அ, 34 - 35

அன்பு என்ற சொல்தான் உலகில் அதிகமாகப் பேசப்படுகிறது. நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் அன்பு என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. வள்ளுவர் அன்பை, உயிருக்கு இணையாக அன்பின் வழியது உயிர்நிலை என்றும், அன்பு உடலின் உள்ளுறுப்பு என்றும் எழுதினார். ஆண்டவர் இயேசு அன்பை வானுயர எடுத்துச் சென்று அதை இறை மயமாக்கினார். நான் உங்களை அன்பு செய்ததுபோல (யோவா 13 : 34) என்று சொல்லி அன்பை தன் மயமாக்கினார் - கிறிஸ்து மயமாக்கினார். அன்பே கிறிஸ்து. அன்பே கிறிஸ்தவம் என்று அன்பை விண்ணுக்கு விண்வழிதடத்தை உண்டாக்கினார்.
அவர் எவ்வாறு நம்மை அன்பு செய்தார்? தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து, தன்னைத் தாழ்த்தி (பிலி 2 : 6 ‡ 8) நம்மை எல்லாம் அன்பு செய்தார். நாம் பிறரை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்பதை நல்ல சமாரியன் உவமை (லூக் 10 : 29 - 30) வழியாக நமக்கு கற்றுக் கொடுத்தார். பிறருக்கு சிறு உதவிகூட செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25 : 40) என அன்பை ஊக்கப்படுத்தினார்.

இயேசு ஆண்டவர் பிறரை மன்னித்தார். மதித்தார். நட்பு பாராட்டினார். நல்லதை செய்யச் சொன்னார். சுகப்படுத்தினார். சுமைகளை இறக்கி வைத்தார். உறவை வளர்த்தார். உயிர்ப்பித்தார். எதையும் எதிர்பார்க்காமல் கடவுளின் மகிமைக்காகவேச் செய்தார். இவைகள்தான் கிறிஸ்துவின் அன்பின் வழித்தடங்கள். வாழ்வின் பாடங்கள். நாமும் அவ்வாறே செய்கிற போது கிறிஸ்துவின் வழித்தடங்களில் நாமும் பயணிக்கிறோம்.

ஒருமுறை அன்னைத் தெரசா அவர்கள் கல்கத்தாவில் தன் பணிக்கு ஒரு இல்லம் ஏற்படுத்த விழைந்தார்கள். பூசாரி ஒருவர் அன்னையின் முயற்சிகளுக்கு பெரும் தடைக்கல்லாய் அமைந்தார். அன்னையைப் பற்றி அவதூறாகப் பேசினார். அன்னை அவர்கள் கல்கத்தாவில் கால் ஊன்றாமல் இருக்க இந்த பூசாரி அவரால் முடிந்த எல்லா தவறான வேலைகளையும் செய்துகொண்டுதான் இருந்தார்.

அன்னைத் தெரசாள் அவர்கள் கடவுளை நம்பி செபத்தில் ஈடுபட்டார். இறை விருப்பத்தை நாடி செபித்தார். சிறிது நாட்களுக்குப் பிறகு அந்தப் பூசாரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவரைத் தொட, அவரிடம் மகிழ்ந்து பேச. அவருடைய மனைவிகூட அஞ்சினார். மக்கள் அஞ்சினர். உறவினர்கள் அஞ்சினர். நண்பர்கள் அஞ்சினர். அவரைத் தெருவில் தூக்கிப் போட்டு விட்டனர்.  இந்த நிலையில்தான் அன்னைத் தெரசாள் அவரைச் சந்தித்தார். வழக்கம் போல அவர்மீது தன் அன்பைப் பொழிந்து அவரைத் தன் இல்லத்துக்குத் தூக்கிச் சென்று அவரை நன்குப் பராமரித்து குணப்படுத்தினார். பிறகு இந்த பூசாரி அன்னைத் தெரசாவுக்கு பெரிய உதவியாக இருந்தார்.
இந்த அன்பைத்தான், ஆண்டவர் இயேசு தன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். இத்தகைய அன்புதான் இரண்டாம் வாசகத்தில் நாம் கேட்டது போல அனைத்தையும் புதியதாய் ஆக்குகிறது. இத்தகைய அன்பினால் தூண்டப்பட்டு பவுலடியாரும் பர்னபாவும் பல நாடுகளுக்குச் சென்று நற்செய்தியை அறிவித்து திருச்சபைகளை ஏற்படுத்தினர். முதல் வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல கடவுளின் பணிக்கென தங்களையே அர்ப்பணித்துக் கொண்டனர்.

நம்முடைய அன்பு எவ்விதம் உள்ளது? எதையும் எதிர்பார்த்து நாம் பிறரை அன்பு செய்கிறோமா? அல்லது நம்முடைய அன்பில் ஏதாவது நிபந்தனைகள் படிந்துள்ளனவா? இயேசுவைப் போல அன்பு செய்வோம். உயிர்ப்பின் மக்களாக வாழ்வோம்.

ஞாயிறு தரும் இறைவார்த்தை, பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு 03 - 04 - 2016

ஞாயிறு தரும் இறைவார்த்தை

அருட்பணி. சி. குழந்தை, காணியிருப்பு

                      பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு            03 - 04 - 2016

 தி.ப. 5 : 12 - 16,  திவெ 1 : 9 - 11அ, 12 - 13, 17 - 19 , யோவா 20 : 19 - 31

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அன்று தமிழ்த் தாய்மார்களிடம் ஒரு நல்லப் பண்பு இருந்ததாம். தம் மகன்களை போருக்கு அனுப்பும்போது நெற்றியில் வெற்றித்திலகமிட்டு அனுப்பி வைப்பர். நெஞ்சில் பாய்ந்த ஈட்டிகளோடு வீடு திரும்கிய மகன்களை மீண்டும் வெற்றித்திலகமிட்டு வரவேற்பர். முதுகில் அடிபட்டு வந்தவர்களை மீண்டும் போர்க்களத்துக்கே அனுப்பி வைப்பர்.
உலகமெல்லாம் அமைதிக்காக ஏங்கிக் கிடக்கிறது. உலகில் உண்டான போர்களினால் அமைதியை நிலை நாட்ட முடியவில்லை என்பதே நிதர்சனம். உண்மையான அமைதியை அளிக்கவல்லவர் உயிர்த்த இயேசு மட்டுமே. தான் உயிர்த்தபின் தன் சீடர்களுக்கு முதற் கொடையாக வழங்கியது அமைதி, அமைதியின் ஊற்றான தூய ஆவியார். தூய ஆவியாரின் அருளில் உருவான மன்னிப்பு. மன்னிப்பு அளித்தவர் புனித தோமாவையும் மன்னித்து திடப்படுத்தினார்.
யூதர்களுக்கு அஞ்சி, சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருக்கையில் இயேசு தோன்றி, உங்களுக்கு அமைதி உண்டாகுக என்றார். சீடர்கள் தங்களையே பயத்தில் சிறைப்படுத்திக் கொண்டனர். பயம், வெட்கம், துரோகம் ‡ இவைபோன்ற குற்ற உணர்வுகள் அவர்களைத் தலைகுனியச் செய்து கூடத்திலே முடக்கிப் போட்டிருந்தது. ஒருவர் மறுதலித்து இருந்தார், மற்றவர்கள் புறமுதுகுக் காட்டி ஓடியவர்கள். இந்தப் பின்னணயில் தான் உயிர்த்த ஆண்டவர் அவர்களுக்குத் திடம், துணிவு, மன்னிக்கப்பட்டதன் உணர்வு, இய¼சுவின் ஏற்பு ‡ இதை சீடர்களின் இரண்டாவது அழைத்தல் எனலாம். இவைகளின் ஊற்றான தூய ஆவியார் ‡ போன்ற கொடைகளை வழங்கினார்.
இந்த அமைதியை ­லோம் என்ற எபிரேயச் சொல் குறிக்கிறது. ­லோம் என்ற வார்த்தை எல்லா நன்மைகளாலும் இணைந்து அதனால்வரும் கறைபடாத, களவாடமுடியாத அமைதியைக் குறிக்கிறது. இந்த அமைதியை பொன்னும், பொருளும், பெண்ணும், புகழும், பதவியும் கொடுக்க இயலாது. இறைவன் மட்டுமே ‡ கொடுக்க முடியும். எனவேதான் ஆண்டவர் இயேசு தன் உயிர்ப்பின் முதற் கொடையாக அமைதியை அளித்தார். எனவேதான் திருப்பலியில் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன் என உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே என்று நினைவு கூறுகிறோம். இஸ்லாமியச் சகோதரர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் என்ற வார்த்தையைச் சொல்லித்தான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
உலகின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அமைதியின் சூழலில்தான் உருப்பெற்றன. அமைதியான சூழலில்தான் தெளிவுகள் பிறக்கும். தீர்மானங்கள் தெளிவுபெறும். கோபம், வர்மம், வைராக்கியத்தோடு களத்தில் எவர் பணியாற்றினாலும் பலன் தரமுடியாது. எனவேதான் ஆண்டவர் இயேசு தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகையில், யூதர்களையும் மன்னித்து, பயமின்றி பணியாற்றுங்கள் என்று சொல்லி அனுப்பினார். தன் நெஞ்சில் ஈட்டி ஊடுருவிய காயத்தழும்பையும் தோமாவுக்கு காண்பித்து, தானும் அவர்களை மன்னித்த உணர்வோடு புறப்படச் செய்தார். தூய ஆவியாரின் துணை கொண்டு, தொடர் துயர்களையும் வெல்ல முடியும் என தூய ஆவியாரை அவர்களுக்குக் கொடையாக வழங்கினார். யூதர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்த போது இந்த ஆவியார்தான் அவர்களை வெற்றிப் பாதையில் வழி நடத்தினார். இவர்களின் இத்தகைய செயல்பாட்டை முதல் வாசகம் தெளிவாகவே விளக்கிப் பேசுகிறது. அஞ்சாமல் பணியாற்றும் பண்பைத்தான் இரண்டாம் வாசகமும் விவரிக்கிறது. தூய ஆவியாரின் துணையோடுதான் யோவான் பணியாற்றியதாக இரண்டாம் வாசகத்தில் விளக்கினார். நாமும் பயமற்ற மனநிலையில் பணியை ஆற்ற அழைக்கப்படுகிறோம்.



Wednesday, 11 November 2015

15-11-2015 பொதுக்காலம் 33ஆம் வாரம்

I. தானி 12 : 1 -  3 ; II. எபி 10 : 11 -  14, 18
நற்செய்தி : மாற் 13 : 24 -  32
இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாற வேண்டும் (மாற் 1 : 15)
மானிட மகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் (மாற் 13 : 29)
ஆனால் அந்த நாளும் வேளையும் தந்தையைத் தவிர எவருக்கும் தெரியாது (மாற் 13 : 32)
இயேசவின் இரண்டாம் வருகை விரைவில் வர இருக்கிறது என்று ஒரு சில பிரிவினை சகோதரர்கள் தீவிரமாக பேசி வருகிறார்கள். அண்மையில், இளம்குரு ஒருவர் டெங்கு காய்ச்சலினால் திடீரென்று இறந்து விட்டார். சொர்ணமாணிக்கம் என்ற தீவிர நற்செய்தி பணியாளர் நேற்று (16- 10- 2015) அன்று திடீரென்று இறந்து விட்டார். இவையயல்லாம் எதிர்பாராதவை. கதிரவன் இருண்டுவிடும், நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணம் இருக்கும். அப்போது மானிட மகன் மேகங்கள் மீது மிகுந்த வல்லமையோடு மாட்சியுடனும் வருவார். வருகின்ற டிசம்பர் 16 முதல் 22 வரை உலகில் இருள் நிலவும் என்று நாசா நிறுவனத்தில் ஒருவர் கூறியுள்ளார். சூரியனில் ஏற்படும் ஒரு புயலினால் இப்படி உண்டாகலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். சூரியன் இன்னும் 5 இலட்சத்தின் இலட்சம் ஆண்டுகளுக்கு (5 பில்லியன்) எரிந்து ஒளிக் கொடுக்கும். ஏற்கனவே 4.6 இலட்சத்தின் இலட்சம் ஆண்டுகளுக்கு (4.6 பில்லியன்) எரிந்து ஒளி கொடுத்துவிட்டது.
இன்றைய நற்செய்தி பகுதி, மாற்கு நற்செய்தியில் வருகிற இயேசுவின் இறுதி உரை (மாற் 13 : 1 -  37) என்ற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மானிட மகனின் வருகையைப் பற்றியும் சீடர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பார்க்கிறோம். கதிரவன் இருண்டுவிடல், நிலா ஒளி கொடுக்காதது என்பவை பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (எசா 13 : 10, எசே 32 : 7, ஆமோ 8 : 9 யோவேல் 2 : 10 -  31, 3 : 15, எசா 34 : 4, ஆகாஸ் 2 : 6 -  21 ). இந்த விண்ணக கோள்களின் அழிவு நிலை மானிட மகனின் வரவிற்குமுன்பாக நடைபெறுகிறது. பழைய ஏற்பாட்டில், விண்ணக கோள்களின் அழிவுநிலை தண்டனையின் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறன்று உலக முடிவினைப் பற்றியும், மானிட மகனின் வருகையைப் பற்றியும் படிக்கிறோம். உலக முடிவு பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் உலக முடிவு காலத்தைப் பற்றி தந்தை ஒருவருக்குத் தான் தெரியும். ஆனால் நம் வாழ்வு உலக முடிவைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நம் முடிவின் கால நேரத்தை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில் பணிவுடனும், பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும். தலையில் தூக்கிகிட்டு போரதில்லை என்று கூறுவோம். ஆனால், தலைகனம் பிடித்தவர்களாய், பொருள் ஆசை, பேய் பிடித்தவர்களாய் வாழ்கின்றோம். அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் பொருளுக்குமேல் பொருளும், பணத்திற்கு மேல் பணமும் சேர்க்கிறார்கள். பகிர்வதைப் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்தியாவில் 2 1/2 இலட்சம் கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஆளால் 32.7 சதவிகித மக்கள் வறுமை கோட்டிற்கும்கீழ் வாழ்கிறார்கள். நடமாடக் கோயில் நம்பர்க்கொன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்க தாமே -  திருமந்திரம்
ஏழையர் நடமாடும் கோயில். அவர்களுக்கு உதவிசெய்வது இறைவனுக்கே செய்வது என்று இயேசுவின் கருத்துக்களை அருமையான கவிதை வடிவில் கூறுகிறார். பகிர்தலினால் மரண பயம் போகும்.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

22-11-2015 கிறிஸ்து அரசர் பெருவிழா

I. தானி 7 : 13 -  14 ; II. தி.வெ. 1 : 5 -  8
நற்செய்தி : யோவா. 18 : 33 -  37
               முடியரசு மறைந்து குடியாட்சி கோலோட்சும் இக்காலத்தில் இன்னும் சில நாடுகளில் பாரம்பரிய மன்னர்கள், அவர்களின் வழிமரபினர், அவர்களின் பாரம்பரியம் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் காட்சிப் பொருளைப் போல வலம் வருகிறார்கள். இங்கிலாந்தின் தற்போதைய அரசி, எலிசபெத் 63 ஆண்டுகள் அரசியாக இருந்து வரலாறு படைத்திருக்கிறார். ஹாலந்து, பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து ஆகிய வளர்ந்த  நாடுகளிலும் அரச பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அரசி, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கும் அரசியாக விளங்குகிறார். அரச வாரிசு பிறந்து விட்டால் அதனை பெரிதாக கொண்டாடுகிறார்கள். இயேசு அரசர் என்று இயேசுவின் தலைமை வழி நடத்துதலை இன்று கொண்டாடுகிறோம். முதலில் இயேசு விண்ணகம் சென்ற விழாவை கிறிஸ்து அரசர் பெருவிழாவாக கொண்டாடினார்கள். 1925இல் பதினோராம் பியுஸ் என்ற திருத்தந்தை அக்டோபர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழாவைக் கொண்டாட ஆணையிட்டார். ஆனால் 1965இல் திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் செய்த திருவழிபாட்டு சீர்த்திருத்தத்தில் திருவருகைக் காலம் தொடங்குவதற்கு முந்தைய ஞாயிறன்று இவ்விழாவை குறித்தார்.
               இன்றைய நற்செய்தியில், பிலாத்துவின்முன் உண்மையைப் பற்றி இயேசு கூறுகின்ற விளக்கத்தைப் பார்க்கின்றோம். “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி, இதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” (யோவா 18 : 37) என்கிறார் இயேசு.
யோவான் நற்செய்தியில் பல இடங்களில் இயேசு உண்மைக்குச் சாட்சியம் அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (யோவா 5 : 33, 8 : 40 -  45, 46). இயேசுவின் சீடர்களும் அந்த உண்மையை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் (யோவா 14 : 6 ; 17 : 17 -  19). இயேசு உண்மையின் உருவம். சாத்தான் பொய்மையின் உருவம். உண்மை என்பதற்கு எபிரேயத்தில் ஏமெத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏமெத் என்றால் பிரமாணிக்கம் என்று பொருள். கடவுளுடான உறவில் உடன்படிக்கையில் உறுதியாயிருப்பது. இயேசு இறை உறவில் உறுதியாய் இருந்தார். அதே உறவில் வாழ தன் சீடர்களை அழைத்தார். எனவேதான், “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார் (யோவா 8 : 32). நம் நாட்டின் தலைவர்கள் சுயநலத்தின் வேர்களாக விளங்குகிறார்கள். பொய்மையின் தாய்நாடாக வாழ்கிறார்கள். மருந்துவிற்கும் ஏஜெண்ட்டைப் பார்த்து, “எப்படி வியாபாரம் செய்கிறாய்?” என்று ஒருவர்¼ கேட்டார். “கையிலேயே பை, கழுத்திலே டை, வாயிலே பொய்” என்றார். ஓர் ஊருக்கு அரசியல்வாதி சென்றார் அங்கு “இந்த ஊருக்கு பாலம் கட்டித் தருவேன் ” என்றார். அவருடைய செயலர், “இங்கு ஆறே இல்லை சார்” என்றார். “புதிதாக ஆறு கொண்டு வந்தால் போகிறது” என்றார் தலைவர். பொய்மையின் தலைநகராக விளங்குகிறார்கள் நம் தலைவர்கள். கிறிஸ்து அரசர் கொண்டு வந்த அரசு
உண்மையின் அரசு, நீதியின் அரசு. உண்மையுடன் வாழ்ந்து, இறையாட்சியை உலகில் நிலவிட செய்வோம்.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

Ads Inside Post