Pages - Menu

Saturday 3 March 2018

புகுமுக அருள் அடையாளங்கள்...

புகுமுக அருள் அடையாளங்கள்...

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இயேசுகிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவையை அடங்கிய பாஸ்கா மறைபொருளில் பங்குபெறத் தொடங்குவதின் வழியாக ஒருவர் கிறிஸ்வராகுகிறார். இவ்வாறு தொடங்கிவைக்கப்படுவது புகுமுகம் (Initiation) என்று அழைக்கப்படுகிறது. தமிழர் மரபில் இது தீட்சை (Diksa) எனப்படுகிறது.

 1. புகுமுகம் என்பதின் பொருள்

புகுமுகம் செய்தல் என்று பொருளுடைய ஆங்கிலச் சொல் ‘இனிஸியே­ன்’ Initiation) என்பதற்கு தொடங்குதல் (Commence) உள் இட்டுச் செல்லுதல் (Introduce) தொடங்கிவைத்தல் (Inaugurate) என்றும், நிறைவு செய்தல் ( Perfect) அல்லது நிறைவுக்கு இட்டுச் செல்லுதல் (Lead to perfection) என்றும் இருவகைப்பட்ட பொருள் உண்டு. தொடங்குதல் என்ற பொருளில் இவ்வினைச் சொல் ‘மூவேயின்’ (Muein) என்ற கிரேக்க சொல்லையும், நிறைவு செய்தல் என்ற பொருளில் ‘தேலேயின்’ (Telein) என்ற கிரேக்கச் சொல்லையும்  மொழிபெயர்கின்றன. மறைபொருள்களில் நுழைந்து அவற்றில் பங்குபெற்று அனுபவிப்பதின் வழியாக ஒருவர் நிறைவடைகிறார். ஆகவே இவ்விரு கிரேக்க சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இக்கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து புகுமுகம் என்ற சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது. இவை அனைத்தையும் ஒருங்கி ணைத்து தமிழில் தீட்சை என்று குறிப்பிடலாம். கிறிஸ்தவ சமயத்தில் இதை கிறிஸ்தவ தீட்சை என்பது சரியாக இருக்கும்.

2. கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி வைக்கும் அருளடை யாளங்கள்

இன்று நம்மிடையே வழக்கில் இருக்கும் திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்னும் மூன்றும் கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கிவைக்கும் அருளடையாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தொடக்கக் காலத் திரு அவையில் இவை கிறிஸ்தவ புகுமுகம் (தீட்சை) (Christian Initiation) அல்லது வெறுமனே புகுமுகம் (தீட்சை) (Initiation)  என்று அழைக் கப்பட்டன. ஏனெனில் இவை யாவும் ஒரே நிகழ்ச்சியாக, ஆனால் பல படிகளில் அமைக்கப்பட்டு கொண்டாடப் பட்டன. திருமுழுக்கிலிருந்து பிரிக்கப்படாமல் உறுதிபூசுதல் வழியாக நற்கருணை வரை நகரும் ஒரே இயக்கமாக்க இது கருதப்பட்டது என ஜான் மரி என்னும், திருவழிபாட்டு வல்லுநர் குறிப்பிடுகிறார். நாளடைவில்தான் இச்சடங்கு முறையில் இருந்த ஒவ்வொரு படியும் முறையே திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சடங்கும் கிறிஸ்தவ வாழ்வை நோக்கியதாக இருப்பதால் பிளவுபட்ட இம்மூன்று சடங்குகளும் கிறிஸ்தவ வாழ்வுக்கடுத்த அருளடை யாளங்கள் அல்லது கிறிஸ்தவ  புகுமுகத்திற்கடுத்த அருளடையாளங்கள் (Sacraments of Christian Initiation) என அழைக்கப்படுகின்றன.

ஆனால் இம்மூன்று அருள் அடையாளங்க ளிடையே நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி கூறும் போது “திருமுழுக்குத் தொடங்குவதை, நற்கருணை நிறைவுச் செய்கிறது. இதுவே கிறிஸ்தவ வாழ்வுக்கும் நிறைவைக் கொணர்கின்றது. திருமுழுக்கு, உறுதிபூசுதல் ஆகிய அருளடையாளங்களின் நோக்கம் நற்கருணைக்குத் தயார் செய்வதே என்று சொல்லலாம். இதில் மட்டுமே நாம் கிறிஸ்துவோடும், அவர் வழியாகத் தந்தையோடும் கொண்டுள்ள கூட்டுறவு நிறைவெய்துகின்றது” என்று சார்லஸ் டேவிஸ் என்னும் இறையியல் வல்லுநர் குறிப்பிடுகிறார்.  (The Making of Christian 1966, p.145).

  திருத்தந்தை ஆறாம்பால் இதையே இன்னும் தெளிவாக விவரித்துள்ளார். “கிறிஸ்துவின் அருள் வழியாக நாம் இறையியபில் பெரும் பங்கானது, மனித பிறப்பு, வளர்ச்சி, உணவூட்டம் போன்ற வாழ்க்கைக் கட்டங்களோடு தொடர்புடையது. திருமுழுக்கில் நம்பிக்கையாளர் மறுபடியும் பிறக்கின்றார்கள். உறுதிபூசுதல் என்னும் அருளடையாளத்தால் புது வாழ்வில் உறுதிபடுத்தப்படுகின்றார்கள். இறுதியாக நற்கருணை உணவால் பேணிக் காக்கப் படுகின் றார்கள். கிறிஸ்தவ தீட்சக்கடுத்த இவ்வருள் அடையாளங்கள் வழியாக நம்பிக்கையாளர்கள் இறைவாழ்வின் வளர்ச்சியைப் பெறுகின்றார்கள். அன்பின் நிறைவை நோக்கி முன்னேறுகின்றார்கள்” (உறுதிபூசுதல் அருளடையாளம் பற்றிய திருத்தூது அமைப்பு விதி தொகுப்பு (Apostolic Constitution) 

3.புகுமுக அருளடையாளங்களின் கொண்டாட் டத்தில் சீர்குலைவு

நாளடைவில் கிறிஸ்தவ புகுமுக அருளடையாளங் களில் அமைப்பு முறையிலும், கொண்டாடும் விதத்திலும் சீர்குலையத் தொடங்கியது.

3.1. பிளவுபட்ட கொண்டாட்டம்

திருஅவையின் தொடக்கத்தில் வயதுவந்தவர் கள்தான் (Adults) கிறிஸ்தவ மறையைத் தழுவினார்கள். நீண்டகால (மூன்று ஆண்டுகள்) தயாரிப்புக்குப் பின் திருமுழுக்கு அளிக்க இருக்கும் தவக்காலத்தில் உடனடியான தயாரிப்பு இடம் பெறும். அதன்பின் பாஸ்கா  திருவிழிப்பின் போது இவர்களுக்குப் புகுமுக அருளடையாளங்கள் மூன்று அளிக்கப்படும். கொண்டாட்டின் போது  திருத்தொண்டர், அருள்பணி யாளரோடு மறைமாவட்ட ஆயரும் இருப்பார். புகுமுகத்தின் இரண்டாவது படியாகிய உறுதிபூசுதலை ஆயர் கொடுப்பார். 

ஆனால் தொடக்க திருஅவை காலத்தில் கிறிஸ்தவ மறையைத் தழுவியர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்தது. அதனால் நம்பிக்கையாளர் களின் குழுமமும் பலவாகின. இதற்கு ஏற்றாற்போல் ஆயர்களின் எண்ணிக்கை (மறைமாவட்டங்கள்) அதிகரிக்கவில்லை. அதனால் பாஸ்கா திருவிழிப்பின் போது ஒவ்வொரு இடத்து திருஅவையில் புகுமுக கொண்டாட்டம் இடம் பெற்றபோது எல்லா இடத்து திருஅவைகளுக்கும் ஆயர் வர முடியாத சூழ்நிலை உருவாக்கிற்று. அதனால் திருமுழுக்குச் சடங்குக்குப் பின் உறுதிபூசுதல் சடங்கு ஆயருக்கே உரியதாகையால், அது ஒத்தி வைக்கப்பட்டது. 

இத்தகைய பிளவுக்கு இன்னுமொரு காரண மும் உண்டு. தொடக்கத் திருஅவையில் நம்பிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கிறிஸ்தவ குடும்பங்களும் அதிகரித்தன. அக்குடும்பங் களில் பிறந்த குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் பழக்கமும் பரவலாயிற்று. இந்த நிகழ்ச்சியும் பாஸ்கா திருவிழிப்பின் போது இடம் பெற்றதால் குழந்தைகளுக்குப்  புகுமுகத்தின் முதல்படி நிலையாகிய திருமுழுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. மற்ற இருபடி நிலைகளும் (உறுதிபூசுதல், நற்கருணை) ஒத்திவைக்கப்பட்டன. இவ்வாறு புகுமுகத்தின் மூன்று படிநிலைகளும் பிளவுபட்டு போயின.

 3.2. புகுமுகத்தின் முரணான கொண்டாட்டம்

புகுமுக அருளடையாளக் கொண்டாட்ட த்தில் மற்றொரு சீர்குலைவும் தோன்றியது. அதாவது, திருமுழுக்கு, உறுதிபூசுதல், நற்கருணை என்ற வரிசை மாற்றப்பட்டு திருமுழுக்கு, நற்கருணை, உறுதிப்பூசுதல் என்ற வரிசை பெருவாரியாகப் பழக்கத்திற்கு வந்தது. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.

புகுமுக சடங்கின் இரண்டாவது படிநிலையாகிய உறுதிபூசுதல் பற்றி திருஅவை வரலாற்றின் இடைக் காலத்தில் உருவான ஓர் இறையியல் சிந்தனை முதல் காரணம். இச்சிந்தனைபடி உறுதிபூசுதல் பக்குவமடைந்த வர்களுக்குக் கொடுக்கப்படும் அருளடையாளம். அதாவது வயது முதிர்ச்சியின் தொடக்கக் காலத்தில் (At the age of puberty)

  ஒரு நம்பிக்கையாளர் பக்குவமடைகிறார், பொறுப்பு ணர்வுடன் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக் கிறார் என்பதாகும். உறுதிபூசுதல் திருஅவையில் திருத்தூது பணிக்கு (Apostolic ministry) ஒருவரைத் தகுதியாக்குகிறது என்ற தவறுதலான ஒரு சிந்தனை. இதனால் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுத்தபோது உறுதிபூசுதல் சடங்கு முதிர்ச்சி வயதுகென விடப்பட்டது.

அதே வேளையில் புத்தி விவரம் அடைந்த சிறுவர்களுக்கு (அதாவது ஆறு வயதையடைந்த சிறுவர்களுக்கு) நற்கருணை வழங்கலாம் என்ற நான்காவது லாத்தரன் சங்கத்தின் (1215) போதகம் உறுதிபூசுதலுக்கு முன் சிறுவர்களுக்கு முதல் நற்கருணை (First communion) வழங்குவதற்கு வழிகோலியதோடு அல்லாமல், புகுமுக அருளடையா ளங்களின் வரிசை முறையை மாற்றியது. இத்தகைய புதிய பழக்கம் திருத்தந்தை பத்தாம் பயஸின் போதகத்தால் (Quam Singular 1910) நிலை நாட்டப்பட்டது.

இவ்வாறு படிநிலைகளில் உருவாக்கப்பட்ட புகுமுக அருளடையாளங்களின் வரிசை முன்னுக்கு முரணாக்கப்பட்டது. இத்தகைய முரண்பட்ட, மாறுபட்டக் கொண்டாட்டங்களை இன்றும் கூட நாம் பார்க்க முடிகிறது.

 3.3. ஆயத்த நிலையில் சீர்கேடு

நாம் மேலே குறிப்பிட்ட சீர்குலைவுகள் திருமுழுக்குக்காக பயன்பாட்டில் இருந்த கிறிஸ்தவ புகுநிலையில் (Catechemunate) குறைபாட்டிற்கு வழிவகுத்தது. தொடக்கத் திருஅவையில் திருமுழுக்குக் காக தயாரிப்பு என்ற ஒருநிலை இருந்தது. இது சில சமயங்களில் மூன்று ஆண்டுகள் கால அளவைக்கு நீடித்தது. நாளடைவில் வயது வந்து (Adults) கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களுக்கும், தொடக்கக் கால கிறிஸ்தவ  பெற்றோர்களுடைய குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே சடங்கு முறையில் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தயாரிப்புக் காலம் சாத்தியமற்றதாகவும் பொருளற்றும் போய் விட்டது. மூன்றாண்டுகள் கால அளவு குறுக்கப்பட்டு தவக்காலத்தில் தயாரிப்பாகவும், அடுத்து அது தவக்காலத்தில் கடைசி மூன்று வாரங்களுக்கு சுருக்கப்பட்டு, இறுதியில் முழுவதுமே கைவிடப்பட்டது.

இந்த சீர் கேட்டிற்கு மற்றொரு காரணமும் உண்டு. பொதுவாக கிறிஸ்தவ சமயத்தை தழுவ முன் வந்தவர்களுக்கு விவிலிய போதகம், ஒழுக்க நெறி அறிவுறுத்துதல், கோட்பாட்டு விளக்கங்கள் (Scriptural, moral, doctrinal, catechesis)  கொடுக்கப் பட்டன. கிறிஸ்தவ யுகம் (Christian era) என்று சொல்லப்பட்ட காலத்தில் பிற சமயங்களின் தாக்கத்திற்கும், ஒழுக்க கேட்டிற்கும் இடமில்லை என்று கருதப்பட்டதால், திருமுழுக்குக்குரிய தயாரிப்பு நீண்ட காலத்திற்கு இடம் பெறாவிட்டாலும் பாதகமில்லை என்ற ஒரு மனபாங்கு பரவலாக இருந்தது.

  கிறிஸ்தவ யுகம் என்னும் கொன்ஸ்டான்டின் பேரரசர் காலத்தில் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு கொடுப்பதே பொதுவான பழக்கமாக இருந்தது. அவ்வப்போது சில வயதுவந்தவர்கள் (Adults) கிறிஸ்தவ மறையைத் தழுவிய போது அவர்களுக்குத் திருமுழுக்கு கொடுக்கும் போதும் குழந்தைகளுக்கான திருமுழுக்கு சடங்குமுறையே கையாளப்பட்டது. இத்திருமுழுக்கு களுக்கான தயாரிப்பு பற்றி திருஅவை எவ்வித திட்டமும் வகுக்கவில்லை. கிறிஸ்தவ ஒழுக்கத்திலும் நம்பிக்கை யிலும் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தைகளால் நம்பிக்கை அறிக்கை செய்யமுடியாததால் திருமுழுக்குத் தயாரிப்பவர்களின் நம்பிக்கையைப்  பரிசோதிக்கும் நிகழ்வுகளும் (Scrutinies) ஒழுக்க முறையையும் மறைகோட்பாடுகளையும் போதிப்பதும் கைவிடப்பட்டன. நற்செய்தி போதகம் நய்செய்தி நூலை அடையாள முறையில் கொடுப்பதிலும் அடங்கியது. 

திருமுழுக்கின் போது கிறிஸ்தவ குழுமத்தின் ஈடுபாடு குறைந்தது. திருமுழுக்கு கொடுப்பது அருள்பணியாளரின் செயலாக மாறியது.  பயனாக திருப்பலி முடிந்து தனியாக பெற்றோர்கள் ஞான பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறியது.

இவ்வாறு கிறிஸ்தவ புகுமுக அருளடையாளங் களில் சீர்குலைவு  அன்று முதல் இரண்டாவது வத்திக்கான் பொதுசங்கம் வரை நீடித்து வந்துள்ளது. வெறும் சடங்குகளின் செயல்பாடாக இந்த அருள் அடையாளங்களின் கொண்டாட்டம் நடந்தனவே தவிர பொருள் உள்ள விதத்திலும் பயன் உள்ள முறையிலும் கொண்டாடப்படவில்லை.

இந்த சூழலில் வத்திக்கான் சங்கம் சில சீர்திருத்தங்களைக் கொணர்ந்தது. அடுத்த சிந்தனையில் அவை என்னவென்றும், எவ்வாறு செயலாக்கத்தில் நடைபெறுகின்றன என்றும் விளக்கம் காண்போம். 
 - தொடரும்...

No comments:

Post a Comment

Ads Inside Post