Pages - Menu

Showing posts with label Tamil Literature. Show all posts
Showing posts with label Tamil Literature. Show all posts

Saturday, 3 March 2018

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் 
இன்றைய தமிழில்
 அருட்பணி. சலுசா
பாடல் எண் : 49

திருப்பாத மலரழகு
பொன்னி நதி பூரித்து விளையாடி ஒலி எழுப்பி
எண்ணிலா சோலைகள் எங்கும் நிறைந்திருக்கும்.
தன்னிகரில்லா சோழவள நாட்டுச்
சென்னி சூடும் சிறப்பு மலர் ஆத்தி.

ஆத்தி மலர்கள் அழகோடு சரம் தொடுக்கும்
அகில மரங்கள் நறுமணப் புகை எழுப்பும்
நிழல் தரு காவலூர் திறமுடன் சேர்ந்து
குளிர் தரு அருட்காவல் குவலயம் தந்தனள்.

தன்வினைத் தானறிந்து தன் குற்றம் நீங்கிட
வெண்மதி வலிய வந்து வான் அரசி தாங்கினள்.
இளைய நிலா ஏந்துகின்ற ஈடிலாத் திருவடிகள்
நிலையில்லா பாவி நான்தலை தாங்கத் தாராயோ.

ஒளிபொழி திருவடி தரிசனம் கண்டாலே
இருளில்லா பெறுவாழ்வு நிறையின்பம் கிடைத்திடுமே.
பாரில் விளக்கேற்றி பகலாக்கிய பாவையே
நேரில் விண்ணகத்தை கொண்டு வந்த செல்வியே.

உன் பாதமலர் அழகு வான்வீட்டின் பேரழகு
அன்னை அடைக்கலமே அளித்திடுவாய் அம் மகிழ்ச்சி.

                                    வஞ்சிப்பா
சீர்விளங்கிய செல்வியாய்ப்
பார்விளக்கிய பாவையே
தென்காவிரி திரண்டொலிப்ப
மன்காவிரி மலர்கமழப்
பூந்தாதகி மலர்கமழப்
பூந்ததாகி புடைநிழற்றத்
தீந்தாதகில் சினைகுளிர்ப்ப
வருட்காவலூ ரமைந்தளிப்பத்
திருக்காவலூர்ச் சேர்ந்தனளே
சேர்ந்தபின்
நானே பூண்பழி நைய வெண்மதி
தானே பூணபதந் தான்றா ராளோ
திருவடி யயாளிவுளந் தெளிவுறக் கண்டாற்
கருவடி யிருளறக் கண்டு
 மருவடி மலரடி வான்கதி யந்தமே.

Friday, 2 March 2018

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

இலக்கியம் சமுதாயத்தின் சுயசரிதை

 ( இலக்கியம்  என்பதை  இரத்தின  சுருக்கமாக  விளக்கும்  கட்டுரை )

சகோ. விமலிFIHM. இதயா கல்லுVரி, குடந்தை

இலக்கியம் என்பது ஒரு சமுதாயப் படைப்பு. இலக்கியம்
சமுதாயத்திலிருந்து தோன்றுகிறது. அதுவும் சமுதாயத்திற்காகவே தோன்றுகிறது. சமுதாயப் பிரதிபலிப்பாக மட்டுமின்று அதனை மேம்படுத்துவ தாகவும் இலக்கியம் அமைகின்றது. உயர்ந்த எண்ணங்கள்தான் சிறந்த இலக்கியமாக உருக்கொள்கின்றன. சிறப்பானப் பண்புடையது. ஆழமானது. அழகுடையது. இவற்றின் முழுவடிவம்தான் இலக்கியம் “ஸிஷ்மிerழிமிற்re ஷ்வி மிஜுe reஉலிrd லிக்ஷூ ணுeவிமி மிஜுலிற்ஆஜுமிவி”   என்கிறார் எமர்சன். இன வேறுபாட்டாலும், கால வேறுபாட்டாலும் அழியக் கூடாத நிலைத்த இலக்கியமே உயர்ந்த இலக்கியம். எல்லாக் காலத்திலும் படித்து ரசிக்கக்கூடிய கூறுகள் அதில் இருக்க வேண்டும். இலக்கியத்தின் தன்மை நிலைபேறுடையதாக இருக்க வேண்டும்.

இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு

வாழ்க்கையில் நம்மால் காணமுடியாத, காணாமல் விட்ட, கண்டும் காண இயலாத, காண விரும்பாத, காண மறுத்த உண்மைகளை விளக்குபவன் கலைஞன். மறைந்த, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உணர்ச்சிகள் கவிஞனால் வெளிக் கொணரப்படுகின்றன. வாழ்க்கையின் விளக்கம் கவிஞனால் நமக்கு இலக்கியத்தின் வாயிலாக  கிடைக்கிறது.

இலக்கியம் வாழ்க்கையின் விமர்சனம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்களையும் அதன் காரணங் களையும் இலக்கியம் விமர்சனம் செய்கிறது. அந்த விமர்சனங்களை திறந்த மனதுடன் சந்திக்கும் சமூகம் இன்று உலகுக்குத் தேவையாக உள்ளது.

இலக்கியம் வாழ்க்கைக்கு வழிகாட்டி

மனிதன் வாழ்க்கையில் கவனிக்கப்படாத சிறு நிகழ்ச்சியையும் இலக்கியம் தனதாக்கிக் காட்டுகிறது. இலக்கியம் உணர்வைத் தொட்டு உள்ளத்தைத் தன்வயப்படுத்திப் பண்படுத்தும் இயல்புடையது. இயற்கையான வாழ்க்கையும், உணர்வுகளும் மனித உள்ளத்தை விரிவுப்படுத்துவதைவிடக் கற்பனை உணர்ச்சிகள் மனித உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. வாழ்க்கையின் கூறுபாடுகளில் இலக்கியத்தில் பளிச்சிடுவதால் இலக்கியம் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

 இலக்கியம் சமுதாய ஆவணம்

மனிதன் படைக்கும் இலக்கியம் சமுதாயத்தைத் தவிர்த்த ஒன்றில்லை. மனிதர்கள், தான் பிறந்து, வளர்ந்து, வாழ்கின்ற இச்சமுதாயத்தை எந்நிலையிலும் விட்டு விலகி இலக்கியம் படைத்திட இயலாது. ஒரு கலைஞன் படைக்கும் இலக்கியங்கள் சமுதாயத்தில் காலந்தோறும் நடைபெறும் பல நிகழ்வுகளையும், அந்நிகழ்வுகள் படைப்பாளியிடம் ஏற்படுத்திய தாக்கங்களையும் வெளிப்படுத்தும் சாதனங்களாகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையே யான உறவுகளைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கும் சமுதாய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவற்றை அறிய உதவும் ஒரு சமுதாய ஆவணமாக இலக்கியம் அமைந்துள்ளது.

இலக்கியத்தில் பொதிந்துள்ள கருத்துக்கள் காலம் கடந்தும்  மக்களுக்குப் பயன்படும் அளவிற்கு அதன் வாழ்நாள் வளர்கிறது. இலக்கியம் என்பது கவிதை, நாடகம், காவியம், புதினம், சிறுகதை, மடல், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பலவுமாகும். இலக்கியத்திற்குக் கலைத் தன்மையை அளிப்பன  அழகியல், கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்பனவாகும்.
 முடிவாக
ஒருவர் தான் அனுபவித்த ஒன்றை மற்றவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற மனிதப் பண்பே இலக்கியத் தோற்றத்திற்குக் காரணமாகின்றது. ஒருவர் ஒரு பொருளிலோ, நிகழ்ச்சியிலோ கண்ட உண்மையைப் பிறருக்குச் சொல்ல வேண்டும் என்று இயல்பாக எழும் ஆசையே இலக்கியம் தோன்றியதற்கானக் காரணம் எனலாம். ஆழ்ந்த அனுபவித்த உண்மையைக் கூறுவதே இலக்கியம். வாழ்க்கையில் எங்கோ, எப்போதோ தோன்றிய ஒரு நினைவு, ஒரு நிகழ்ச்சி இலக்கியம் பிறக்கக் காரணமாகியுள்ளது. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இலக்கியம் தோன்றுவதற்கான வித்து ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. அதை புரிந்து கொள்வோம். நாமும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகிடுவோம். இனிமையான, ஏற்றமிகு இலக்கியம் படைத்தளிப்போம். அதுவே இன்றைய சமூகத்திற்கான உயரிய வாழ்க்கை சாதனமாகட்டும்.

Tuesday, 13 February 2018

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர் கலம்பகம்
இன்றைய தமிழில்
அருட்பணி. சலுசா
 பாடல் எண்: 18  தினம் வந்தாலும்

அருளளித்து - பாவ
இருளழித்து
மயக்கம் நீக்கி - மனித
மாசு போக்கி
ஒளிதரும் உதயமாய்
உயிருக்கு உயிரான
உன்னதத் தாயே!

அணி அணியாய் அழகு சேர்க்கும்
மணி ஒளிர் திருக்கோயில்
திருவடி வணங்கி புகழாது போனால் - உன்
திருமகன் சொற்படி வாழாது போனால்

தெய்வீகத் திருக்காவலுரானாலும்
மகிழ்ச்சியில்லை மானிடர்க்கு
மறு உலக வாழ்வு மில்லை.
துயரில் வாடி துவண்டு போவர்
இன்னுயிர் காக்க இரங்கிடும் தாயே.

எண்சீர் ஆசிரிய விருத்தம்:
மகிழா ருலகி னணுகார் கதியின்
மடிவார் துயரி லருளா ருன்றாட்
புகழா தவரே பணியா தவரே
புடைநீ காவா துய்யா வுயிரே
திகழார் மணிபோ லணிபூஞ் சினைக்காத்
திருக்கா வனநல் லூரூர்ந் தவரே
நிகழா வருளு மருளு
நிசியற் றுயிரே விளங்கும் பானே. 

Monday, 4 December 2017

தேம்பாவணியில் இயேசு பிறப்பு

தேம்பாவணியில்  இயேசு  பிறப்பு

 பேராசிரியர் முனைவர் ச.சாமிமுத்து, திருச்சி

கற்புக்கு அரசராகிய தூய வளனாரும் புண்ணியத்தின் திருவுருவான கன்னிமரியும் இடையறாது வேண்டிய வேண்டுதலைக் கேட்ட இறைவன் இப்பூவுலகில், தாம் ஆதாம் ஏவாளுக்கு வாக்களித்தவாறு மனிதனாகப் பிறக்க விருப்பம் கொண்டார். எனவே வளனாரையும் கன்னி மரியாவையும் திருமணத்தில் ஈடுபடுத்தி, பழுதில்லா வகையில் பாரில் பிறந்து மனுக்குலத்தின் பாவத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார். ஆகவே, கன்னிமரியிடத்துக் கபிரியேல் தேவ தூதரை அனுப்பி தம் திருவுளத் திட்டத்தை எடுத்துரைக்கச் சொன்னார். அத்தேவதூதரும் ஜெருசலேம் தேவாலயத்துள் விரைந்து நுழைந்து, கன்னிமரிக்கு காட்சியளித்து, கடவுள் திருவுளத் திட்டத்தை எடுத்துரைத்தார். அந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தம் தேம்பாவணிக் காப்பியத்தில் இனிய தம் பாடல் மூலம் நமக்கு எடுத்துரைக்கின்றார். அப்பாடல்,

“வான்செய்த சுடர்ஏய்க்கும் வடிவொடு
வானவன் சடுதி வந்தக் கன்னி
கான் செய்த மலர்ப்பதத்தைக் கண்டிறைஞ்சிக்
கடவுள் அருள் கருதுந் தன்மை
தான்செய்த ஏவலெனத் தவறாதோர்
மணத்து அமைதல் தருமம் என்னத் 
தேன்செய்த கனிச்சொல்லால்  சீர்த்தபல
உறுதிகளும் செப்பினானே”   (பாடல் 317)

என்று நம் செவியில் இன்பத்தேன் பாய்ச்சுகின்றது.

கன்னிமரியிடம் சென்ற கபிரியேல் வானவர் வானத்தை அலங்கரிப்பதற்குரிய சூரியனது வடிவைப்போல் விளங்கினார் என்றும் மரியின் மணம் வீசும் தாமரைத் திருவடிகளை வணங்கினார் என்றும் வீரமாமுனிவர் தம் பாடலில் இலக்கியச்சுவை சொட்டச் சொல்லு கிறார். அவ்வாறு சென்ற தேவதூதர், தேனைப் பொழியும் இன்பமான சொற்களினால் இறைவனுடைய கருத்துப்படி நீங்கள் திருமணம் புரிந்து கொள்ள ஒப்ப வேண்டும் என்றார்! மேலும் உறுதி பயக்கும் நல்லுரைகள் பலவற்றை நவின்றார்.

மணம் என்ற வார்த்தையைக் கேட்கும் முன்னே கன்னிமரியாவின் முகம் வாடிற்று! கண்களில் துன்பநீர் குளமாகப் பெருக வழிய ஆரம்பித்தது. கன்னிமரியோ மூன்று வயது  முற்றுப்பெறா முன்னமேயே திருமணம் புரியாது எப்பொழுதும் கன்னியாய் இருந்து இறைவனுக்குப் பணிபுரியத் தம்மையே ஒப்புக் கொடுத்தவர்கள்.  மனம் கலங்கிய கன்னிமரிக்கு அத்தேவதூதர் இறைவனின் திருவுளத் திட்டத்தை உறுதிபட எடுத்துக் கூறவே, மரியும் மனம் தேறி கல்லினும் வலிய தம் கன்னித் தன்மை என்றும் அழியாத அத்திருமணத்திற்கு இசைவளித்தார். உடனே அவ்வானவர், இறைவனுடைய கட்டளையின்மேல், சமயத் தலைவராக இருந்த சிமியோனுக்குக் காட்சியளித்து மரியயன்னும் பெயர்பூண்ட கன்னிக்குரிய துணைவரை மரியின் குலத்திலேயே தேடித் திருமணம் செய்விப்பாயாக என்றார். அவ்வாறே, தாவீது அரச குலத்தினராகிய இளைஞர் வளனாருக்கும் அதே குலத்து இளம் பெண் மரியாவுக்கும் சமய முறைப்படி திருமணம் நிறைவேறிற்று, எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த வியத்தகு இல்லற ‡ துறவற திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரும் வழுவிலாக் கன்னிமரியாவையும் பழுதிலா வளனாரையும் பலவாறு புகழ்ந்து வாழ்த்தினார் என்று வீரமாமுனிவர் பாடிப் பரவுகின்றார். அறத்தின் -- வேதத்தின் - செல்வத்தின் வடிவங்களைப் போன்றவர்களே வாழக் கடவீர்! எங்கள் உயிரையும், உலகத்தின் உயிரையும், உயிர்களின் உயிர்களையும் போன்றவர்களே! வாழக் கடவீர் என்று வாழ்த்தியதை, 

“வாழி அறவுரு வாழி மறையுரு
  வாழி திருவுரு மானுவீர்
வாழி எமதுயிர் வாழி உலகுயிர்
வாழி உயிருயிர் போலுவீர்”

 என்று இசைக்கின்றார் வீரமாமுனிவர்.

திருமணம் நிறைவேறிய சில நாட்களுக்குப் பிறகு, சிமியோன் வளனாரை அழைத்து, உமது சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் செல்வீர் என்றார். இருவரும் இசைந்து இறைவனை வணங்கிப் புறப்பட்டார்கள்.

மரியம்மாள் மற்றைய கன்னி யர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, இல்லறத் துறவியாகிய வளனாருடன் நாசரேத்து நோக்கி நடந்தார். அச்சிற்றூருக்குச் சென்றபொழுது அங்கிருந்த அனைவரும் அன்புடன் அத்தெய்வ இணையரை வரவேற்றார்கள். அறம் தழைக்க, உலகமீட்பர் உதிக்க, இல்லறமாகிய நல்லறத்தை அக்கன்னியும் கற்பரசும் தொடங்கினர்!

இருவரும் இளமையிலேயே மேற்கொண்ட துறவற ஒழுக்கத்திற்குப் பழுது நேராவண்ணம் இல்லறத்தில் இணைக்கப்பட்டதால் இறைவனுடைய அருட்செயலை எண்ணி மகிழ்ந்தனர். கன்னிமரியின் கன்னித் தன்மை காப்பாற்றப்பட கற்பரசு காவலாயும், அவரின் கற்புக் காக்கப்பட கன்னியரசி காவலாகவும் அமைந்தார்கள் என்பதை வீரமாமுனிவர் கவின்மிக்க கவிதைகளில் பாடும் திறம் போற்றற்குரியது. துறவறம் மேற்கொண்டு இல்லறம் புரிந்த இருவரும் தூய வாழ்வு வாழ்ந்து வருங்கால், அவர்களின் உள்ளங்கள் பளிங்கிபோல் ஒளிர்ந்தன!. பொங்கி வழிந்த பேரார்வத்தால் வளனார் பலவாறு தந்தையாம் கடவுளை வணங்கி வாழ்த்திப் போற்றியதை,

“அறக்கடல் நீயே, அருட்கடல் நீயே,
அருங்கரு ணாகரன் நீயே,
திறக்கடல் நீயே, திருக்கடல் நீயே,
திருந்துளம் ஒளிபட ஞானம்
நிறக்கடல் நீயே, நிகர்கடந் துலகில்
நிலையும் நீ உயிரும் நீ, நிலை நான்
பெறக்கடல் நீயே, தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ யனைத்தும் நீ யன்றோ!”

என்னும் கன்னல் சுவைப்பாடலில் கவிஞர் பாடி இன்புறுகின்றார்.

இறைதிட்டம் ஈடேறும் நாள் நெருங்கிற்று. கன்னி மரியின் திருவயிற்றில் மீட்பர் கர்ப்பமாக உருப் பெற விரும்பி, அச்செய்தியைக் கன்னிமரியிடம் தெரிவிக்க கபிரியேல் தூதரை அனுப்பினார். வான் தூதரும் மாசில்லா மரியாவை அணுகி, தேவ வரங்கள் நிரம்ப பெற்றவர் என்றும் இறைவன் வாழும் எழில்மிக்க உளத்தை உடையவர் என்றும் பூவுலக மகளிர்களிலெல்லாம் அளவில்லாத இறையருளைப் பெற்றவர் என்றும் தேம்பாத் தெய்வீக அழகு பெற்றவர் என்றும் இன்னுரைகளால் அவரை வாழ்த்தினார். தேவதூதரின் புகழ்மொழிகளைக் கேட்ட பிதாமகள் நாணமுற்று சித்திரப்பாவை போல் தாழ்ச்சியுடன் இருந்த மாட்சி குறித்து வீரமாமுனிவர்

“தனக்கள வகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கள வுளைந்து நாணி வரைந்த ஓவியமே யயாத்தாள்”

என்று பாடுகின்றார்.

தேவதூதர் மீண்டும் எக்காலத்தும் கன்னித் தன்மை கெடாது விளங்கும் மாதே! இவ்வுலகத்தில் உள்ள பொதுவான முறையினின்று மாறுபட்டு, வியப்புற்குரிய வழியில் இறையருளால் ஒப்பற்ற ஒரு கர்ப்பத்தைத் தாங்கி, பொன்னொளியைப் பழிக்க கூடிய உடலழகுபடைத்த ஒரு மகனைப் பெற்றெடுத்து அம்மகனுக்கு இயேசு என்னும் பெயரிடுவாய் என்றார். அதைக் கேட்டு மரியா பெரிதும் மனம் கலங்கி அழியாத கன்னித் தன்மையுள்ள ஒரு பெண் எவ்வாறு ஒரு பிள்ளையைப் பெறுதல் கூடும் என்று ஐயத்துடன் வினவினார். அதனை,

“மய்யலற் றழிவில் கன்னி
மைந்தனைப் பெறுத லேதென்(று)
ஐய்யமுற் றிவள் வினாவ” 

என்று முனிவர் பாடுகின்றார்.

உள்ளத்தைத் தெரிவிக்க வேண்டி, இறைவனுடைய பேராற்றலைத் தேவதூதர்க்கு விளக்கிக் கூறினார். ஒன்றுமில்லாமையிலிருந்து  இவ்வுலகத் தையும், இவ்வுலகில் உள்ள பொருட்களையும் உண்டா க்கிய இறைவனுக்கு இச்செயல் செய்ய முடியாததோ என்றார். மேலும் கன்னியயாருவர் துன்பமில்லாமல் ஒரு மகனைப் பெறுவார் என்று  இசையாசு இறைவாக்கினர் முன்னுரைத்தது உண்மையாகப் போகிறதென்றும், தூய ஆவியாருடைய அருளால் கருவுற்ற இரண்டாம் ஆளாகிய உலக மீட்பரைப் பெற்றெடுப்பாயாக வென்றும் சொல்லி கன்னிமரியைக் கபிரியேல் தேவதூதர் வணங்கினார். 

நாட்கள் மாதங்களாகி நகர்ந்தன. வளனாருக்கு ஏற்பட்ட உள்ளக்கலக்கங்களையயல்லாம் இறைவன் வானதூதர் மூலம் அகற்றவே, வளனாரும் தம் துணைவி இறைவனையே மனிதனாகப் பெற்றெடுக்கும் மேலான  இறையருள் வரத்தை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து இறைவனின் தாயை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி தாம் ஐயம் கொண்டவர்களாய் அழுது புலம்பினார்! அவருற்ற அளப்பரும் வேதனையைப் பல துன்பச் சுவைமிக்க பாடல்களில் பாடும் வீரமாமுனிவர் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வேண்டியதை, 

“எழுந்திரு அடியை வேண்டினான்.
தொழுந்திரு அடிமிசை மழைக்கண் தூவியே,” 

என்று பக்திச் சுவை  நனி சொட்டப் பாடுகின்றார்.

இறைமகன் பிறப்பதற்கு முன்பு, உரோமைப் பேரரசன் அகஸ்டசு சீசர் என்பவரின் ஆட்சிக் காலத்தில், அரசக் கட்டளை ஏற்றுக் குடிக்கணக்குத் தர நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணாகிய கன்னிமரியும் இறைவனின் வரபலன்களால் நிரம்பப்பெற்ற மாதவ முனிவராகிய வளனாரும் நாசரேத்தூரிலிருந்து பெத்தலேகம் என்னும் தாவீதரசனின் பேரூருக்குப் புறப்பட்டுப் பயணம் போனார்கள்.

இன்ப துன்பங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றையும் கடந்து, நாசரேத்தைவிட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில் வளனாரும், கன்னிமரியும் பெத்லேகம் நகர்போய்ச் சேர்ந்தார்கள். இரவில் தங்குவதற்கு அத்தாவீதன் நகரத்தில் இறைவனைத் தம் மாணிக்கத் திருவயிற்றில் தாங்கிச் சுமந்த நம் தாய்க்கு அங்கு இடம் இல்லை! நம் தவமா முனிவராம் வளனாருக்கு அங்கு இடமில்லை. இந்நிலையில், பெத்லேகம் நகர்க்கு வெளியில் இருந்த மாட்டுத் தொழுவம் அமைந்த குகையில் இருவரும் சென்று தங்கினர். அக்குகையில்தான், மார்கழிமாதம் 25 ஆம் நாள் நடுச்சாம வேளையில், மூன்று உலகங்களிலும் தமக்கு ஒப்பு யாரும் இல்லாத, மூன்று காலங்களிலும் அழிவில்லாத கன்னிகை, வல்லமையில் அளவில்லாத மூன்று ஆட்களில் இரண்டாம் ஆளாகிய திருச்சுதனை, மூன்று சுடர்களைப் பார்க்கிலும் மிகுந்து விளங்குமாறு பெற்றெடுத்தார்கள் என்கிறார் வீரமாமுனிவர்.

பேரருள் பிறந்தது! பேய்கள் மறைந்தன! பேரின்பம் பூமியில் பெருக்கெடுத்து ஓடிற்று! தேவதூதர்கள் இசைமுழங்கி, மண்ணில் பிறந்த மாதேவக் கொழுந்தைத் தேவதாயின் கரத்திலிட்டு வணங்கினர். கன்னிமரி அன்னையோ தாம் பெற்றெடுத்த கடவுள் மகனைப் பேரன்போடு அரவணைத்து, முத்தமாரி பொழிந்து வாழ்த்தி வணங்கினார்கள். கற்புக்கரசராகிய தூய வளனாரும் பேரின்பப் பெருக்கில் தேவபாலனின் திருவடிகளை வணங்கினார். மரியன்னை, தேவாதி தேவனைத் தம் செந்தாமரைக் கரங்களிலே தூக்கி அரவணைத்த நேரத்தில் கன்னி அன்னையின் கரங்களையே தேன் துளிர்க்கும் மலர்ப்படுக்கையாகக் கருதி உயிர்களின் தலைவர் உறங்கினார். அப்போது தாளாத ஆசையால் வளனார் தாலாட்டிய காட்சியை வீரமுனிவர் பின்வரும் பாடலால் உணர்த்துகின்றார்.

“களித்த நாளில் அரும்பும்தென் காலே
இனிதீங் கரும்புதியே,
துளித்த நானம் தேனரும்பத்துணர் நாள்
மலர்காள் அரும்புதிரே,
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் 
பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான்கனிய அன்பு
துயிலாத் துயில்கின்றான்.”

இவ்வாறு வளனார் இனிமையாகத் தாலாட்டவும், எல்லாவற்றையும் கேட்டு இன்புற்றார்போல் தேவபாலன் தன் திருவிழி மலர்ந்து அவரைப் பார்க்க, அவரும் எல்லையற்ற இன்பக்கடலில் மூழ்கினாராம்!.

Friday, 3 November 2017

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம் இன்றைய தமிழில் 

பாடல் எண் - 13   - என் இனிய இளவேனிற் காலம்
- சலூசா
எண்சீர் ஆசிரிய விருத்தம்

பணியாத காமமுதிர் வேனிற் காலம்
பட்டாற்றா தழுங்கடகார் கால மாகிக்
கணியாத நரகச்ச முகுக்குங் கூதிர்க்
காலத்துண் ணடுங்கியபின் கால மும்போய்த்
தவ ஞானம் பூப்பவின வேனிற்கால
மணியாத திருக்காவலூரா ளன்னை
யடிக்கடிமைப் பட்டுற்ற கால மாலோ.

 ஆடி ஆவணி முதுவேனிர் காலம்.
 ஆடி அடங்கும் வாழ்க்கையிலே
 அடங்கா காமம் நிறைந்திடும் சோகம்
 காமம் வெகுளி மயக்கம் நீங்கி

பாவம் எண்ணி அழுது புலம்பி
சாபம் வருமென சங்கடப்பட்டு
கண்ணீர் சிந்தும் மழை உதிர் காலம்
ஆனி புரட்டாசி கார் காலம் - சேர்ந்து

ஐப்பசி கார்த்திகை கூதிர்க் காலம்
 அச்சம் கொண்டு நரக பயத்தால்
 அங்கம் கரைந்து மெல்லுடலாகி
 உள்ளம் நடுங்கும் குளிர் காலம் -போனபின்

மார்கழி தை முன் பனிக்காலம்
பாவம் குறையா பதற்ற காலம்.
மாசி பங்குனி பின் பனிக் காலம்
  நோயும் குறையா மிகு படு காலம் - கடந்து

காமமும் அழுகையும் மெலிவும் பிரிவும்
 நோய்களில் நடந்து காலத்தை கடந்து
 ஞானம் தோன்ற நடந்து வந்தேன்
 இளவேனிற் காலம் இனிது நோக்கி

ஞானம் நிறைந்தது ஞாலம் மகிழ்ந்தது
  காவலூர் அன்னை தாமரைத் திருவடி
  அடிமையாகி சேவடி புரிந்தேன்
அங்கமெல்லாம் பொங்கி மகிழ்ந்தேன்

அதுவே எனக்கு இளவேனிற் காலம்
 சித்திரை வைகாசி சீர்மிகு காலம்
 அடைக்கல அன்னை தேர் உலாக்காலம்.
       
கூதிர்காலம் - குளிர்காலம்.                                                         

Monday, 2 October 2017

இன்றைய தமிழில் வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்

இன்றைய தமிழில் 
வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர்க் கலம்பகம்

-அருள்பணி.ச. லூர்துசாமி, பவனமங்களம்.   

பேரின்பம்  ஈட்ட
கலி விருத்தம்:
 தங்கடேக மதங்கடீர மறக்கடேயுக தாழ்வெலா
மங்கவேத வறங்கடேற மனங்கடேர வழங்கிவா
னங்கிலாப மடைந்துவாழ வடங்கலேதிருக் காவலூர்
நங்கைசேவடி நம்பிநாளு நயந்துசூடுக நாடியே.   (பாடல் எண் 11)

ஓங்கு உடல் நலம்
           உயர்ந்து வாழ
 வீங்கு பாவம்
             வீழ்ந்து மடிய
 தேங்கு தாழ்வு
               தினமும் போக
 மங்கா அறங்கள்
              மலையாய் உயர
 குன்றா புகழுடை
               மனிதர் சேர
 தேடிய செல்வம்
             வாடிய மனிதர்க்கு
 நாடியே நல்கி
             பேரின்பம் ஈட்ட
 பாடியே வருவீர்
             பாருலகோரே
 திருகாவலூர் அன்னை
           திருவடி மலரை
 மலரடி சூடி
           மகிழ்திடுவீரே...!   

Sunday, 20 August 2017

தஞ்சை பெரியகோவிலில் கல்வெட்டுகளில் காணப்படும் ஆடல் அழகிகளின் பெயர்கள்

தஞ்சை பெரியகோவிலில் கல்வெட்டுகளில் காணப்படும் ஆடல் அழகிகளின் பெயர்கள் நாகசாமி என்ற தமிழ்நாடு தொல் பொருட்துறை இயக்குனர் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

சேரமங்கை
எடுத்தபாதம்                                                                                
இன்னிளவஞ்சி                                                                            
சோழகுல சுந்தரி                                                                          
கயிலாயம்
தில்லை அழகி                                                                            
ஆடவல்லாள்
மதுர வாசகி                                                                                
இளங்கோயில்
மாதேவடிகள்                                                                              
அறிவாட்டி
இரவி குலமாணிக்கம்                                                                  
கல்லறை
மாதேவி                                                                                      
சோமநாதி
சீருடையாள்                                                                                          
ஆரா அமுது                                                                              
மழலை சிலம்பு                                                                          
திகைச் சுடர்                                                                                  
காமக்கோபு                                                                                
பொற்கேசி                                                                                  
ஆறாயிரம்                                                                                
தில்லைகூத்தி                                                                          
செம்பொன்    
கன்னரதேவி
சுந்தர சோழி  
இராமி
சற்ப தேவி  
ஊதாரி
அறநெறி  
குந்தவை
பொற்கேசி   
அருள்மொழி
                                                           
50 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் 600 க்கும் மேற்பட்ட ஊழியர் அங்கு பணி செய்துள்ளனர்.

Tuesday, 4 July 2017

இரட்சணிய யாத்திரிகம் - திரு. குமார், ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பக்தி நெறியின் பங்கு தமிழ், உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் பத்தி நெறியின் மொழி எனப் பாராட்டப்படும் சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றமையால் அவை பத்தி இலக்கியங்களாகவேயுள்ளன. சமண, பெளத்த, சைவ, வைணவ சமயங்கள் தமது சமயக் கோட்பாடுகளைப் பரப்பத் தமிழ் மொழியைத் தக்க கருவியாகப் பயன்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்த மாட்டிலும் காலத்தால் பிற்பட்டுப் பரவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களும் முற்குறிப்பிடப்பட்ட சமயங்களைப் பின்பற்றித் தமது இலக்கியங்களைத் தமிழில் இயற்றின. இயற்றமிழைக் காட்டிலும், இசைத் தமிழ் பக்தியுணர்வை ஊட்டப் பெரிதும் துணை நல்கும் என்பதையுணர்ந்த சைவ, வைணவ பெரியார்கள் தமிழிசை வழியாகப் பாடுதற்கரிய பக்திப் பனுவல்களை இயற்றி நாளும் இன்னிசையால் தம் சமயம் பரப்பினர். கோயில் வழிபாடுகளில் இசைக்கு முதலிடம் கொடுத்துத் தம் இறைவனைப் பாடிப் பரவினர். பாடுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாரது மனங்களை ஈர்க்கும் வல்லமை இசைக்குண்டு. சைவ,வைணவப் புலவர்கள் பக்தியுணர்வோடு இசைத்திடுதற்கேற்ற தமிழ் பாவைகளைத் தம் நூலுள் கையாண்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாகவே தனிநாயக அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி எனப் பாராட்டினார். தமிழில் பக்திப் பனுவல்கள் பல்லவர் காலத்தில், நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் திருப்பாடல்களில் முழுமை பெற்றன. தமிழ் மொழியின் தனித்தன்மையான பக்தி நெறி உணர்வு எச்.ஏ. கிருட்டிணனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அனைத்திறகும் மேலாக இவரை ஆட்கொண்ட கிறிஸ்து பெருமானின் அன்பு இவரை பக்தி நெறியில் திளைத்திடச் செய்தது. பக்தி என்பது புறதோற்றமன்று. உள்ளத்தின் ஆழத்தில் இடையறாது பெருக்கெடுத்தோடுதம் ஆன்ம உணர்வாகும். தான் சுவைத்த அன்பின் அமுதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற தாகம், ஆத்தும வேட்கை இவரைப் பக்தி நெறிக் கவிஞராக ஒளிவிடச் செய்தது. மனமாற்றத்தால் ஏற்பட்ட பக்தியுணர்வின் வேகம் இவரது பாடல்களில் நிறைந்து ததும்பி வழிந்தோடிற்று. தமக்குமுன் வாழ்ந்த சமய அடியார்கள் போலவே இறைவனை தந்தையாய், தாயாய், அரசனாய் நண்பனாய் பாவித்து அவ்வுணர்வினால் நிரப்பப்பட்டு பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி பக்தி நெறி கவிஞரானார். இரட்சணியயாத்திரிக பக்திநெறி தனி மனிதன் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும், எனத் தனி மனித நிலையில் வைத்துச் சொல்படினும், உலக மக்களின் பிரதிநிதியாகவே யாத்திரிகன் காட்டப்படுகிறான். அதன்காரணமாகத்தான் நூலின் தொடக்கம் “ உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” என்று அமைத்துள்ளது. அத்துடன் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவைமிசையேறிய மெஞ்ஞான சூரியனாகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டைக் கூறத் தொடங்கும் பொழுது, “உலக மகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற அலகையுலந் திகிலேற வகண்டபரி பூரணனார் அருள்மெய்வாக்கு விலகிலதாய் நிறைவேறத் துதியேற நா வுருவாய் விளங்கி அன்பால் சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியடியைச் சிந்தை செய்வோம்” (இரட்சணிய சரிதப் படலம் ‡2) எனக் குறித்துள்ளது இரட்சணிய யாத்திரிக பக்தி நெறியில் இறைவன் மக்களிடத்துக்காட்டும் அன்பு, மக்கள் இறைவனிடத்து செலுத்தும் அன்பு என்ற இரு நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இறைவனது தியானமும், மன்றாட்டும் இடம் பெறுவதோடு மக்களது ஆன்மிக வேட்கையும், தவிப்பும், இரங்கலும், புலம்பலும் இடம் பெற்றுள்ளன.

இரட்சணிய யாத்திரிகம்
- திரு. குமார், ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 

பக்தி நெறியின் பங்கு


தமிழ், உலக மொழிகளுள் பலவற்றுள்ளும் பத்தி நெறியின் மொழி எனப் பாராட்டப்படும் சிறப்புடையது. தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றமையால் அவை பத்தி இலக்கியங்களாகவேயுள்ளன. சமண, பெளத்த, சைவ, வைணவ சமயங்கள் தமது சமயக் கோட்பாடுகளைப் பரப்பத் தமிழ் மொழியைத் தக்க கருவியாகப் பயன்படுத்தின. தமிழகத்தைப் பொறுத்த மாட்டிலும் காலத்தால் பிற்பட்டுப் பரவிய கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களும் முற்குறிப்பிடப்பட்ட சமயங்களைப் பின்பற்றித் தமது இலக்கியங்களைத் தமிழில் இயற்றின. இயற்றமிழைக் காட்டிலும், இசைத் தமிழ் பக்தியுணர்வை ஊட்டப் பெரிதும் துணை நல்கும் என்பதையுணர்ந்த சைவ, வைணவ பெரியார்கள் தமிழிசை வழியாகப் பாடுதற்கரிய பக்திப் பனுவல்களை இயற்றி நாளும் இன்னிசையால் தம் சமயம் பரப்பினர். கோயில் வழிபாடுகளில் இசைக்கு முதலிடம் கொடுத்துத் தம் இறைவனைப் பாடிப் பரவினர். பாடுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாரது மனங்களை ஈர்க்கும் வல்லமை இசைக்குண்டு. சைவ,வைணவப்   புலவர்கள் பக்தியுணர்வோடு இசைத்திடுதற்கேற்ற தமிழ்  பாவைகளைத் தம் நூலுள் கையாண்டு வெற்றி பெற்றனர். இதன் காரணமாகவே தனிநாயக அடிகளார் தமிழைப் பக்தியின் மொழி எனப் பாராட்டினார். தமிழில் பக்திப் பனுவல்கள் பல்லவர் காலத்தில்,  நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோரின் திருப்பாடல்களில் முழுமை பெற்றன.
தமிழ் மொழியின் தனித்தன்மையான பக்தி நெறி உணர்வு எச்.ஏ. கிருட்டிணனுக்குப் பெரிதும் கைகொடுத்தது. அனைத்திறகும் மேலாக இவரை ஆட்கொண்ட கிறிஸ்து பெருமானின் அன்பு இவரை பக்தி நெறியில் திளைத்திடச் செய்தது. பக்தி என்பது புறதோற்றமன்று. உள்ளத்தின் ஆழத்தில் இடையறாது பெருக்கெடுத்தோடுதம் ஆன்ம உணர்வாகும். தான் சுவைத்த அன்பின் அமுதத்தை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற தாகம், ஆத்தும வேட்கை இவரைப் பக்தி நெறிக் கவிஞராக ஒளிவிடச் செய்தது. மனமாற்றத்தால் ஏற்பட்ட பக்தியுணர்வின் வேகம் இவரது பாடல்களில் நிறைந்து ததும்பி வழிந்தோடிற்று. தமக்குமுன் வாழ்ந்த சமய அடியார்கள் போலவே இறைவனை தந்தையாய், தாயாய், அரசனாய் நண்பனாய் பாவித்து அவ்வுணர்வினால் நிரப்பப்பட்டு பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடி பக்தி நெறி  கவிஞரானார்.

இரட்சணியயாத்திரிக பக்திநெறி

தனி மனிதன்  மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும், எனத் தனி மனித நிலையில் வைத்துச் சொல்படினும், உலக மக்களின் பிரதிநிதியாகவே யாத்திரிகன் காட்டப்படுகிறான். அதன்காரணமாகத்தான் நூலின் தொடக்கம் “ உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்”  என்று அமைத்துள்ளது. அத்துடன் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவைமிசையேறிய மெஞ்ஞான சூரியனாகிய கிறிஸ்துவின் சிலுவைப்பாட்டைக் கூறத் தொடங்கும் பொழுது,  

“உலக மகிழ்ந் தீடேறப் பரலோக வாசிகளுக் குவகையேற
அலகையுலந் திகிலேற வகண்டபரி பூரணனார் அருள்மெய்வாக்கு
விலகிலதாய் நிறைவேறத் துதியேற நா வுருவாய் விளங்கி அன்பால்
சிலுவைமிசை யேறியமெய்ஞ் ஞானசூ ரியடியைச் சிந்தை செய்வோம்”

(இரட்சணிய சரிதப் படலம் -2) எனக் குறித்துள்ளது

இரட்சணிய யாத்திரிக பக்தி நெறியில் இறைவன் மக்களிடத்துக்காட்டும் அன்பு, மக்கள் இறைவனிடத்து செலுத்தும் அன்பு என்ற இரு நிலைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் இறைவனது தியானமும், மன்றாட்டும் இடம் பெறுவதோடு மக்களது ஆன்மிக வேட்கையும், தவிப்பும், இரங்கலும், புலம்பலும் இடம் பெற்றுள்ளன.

Wednesday, 3 May 2017

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

 நற்கருணை என்னும் திருவிருந்து

- திரு.குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., விரகாலூர்

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் உயிர் மூச்சாய் திகழும் ஒப்பற்ற அருள் அடையாளம்  நற்கருணை. மனித இனத்தைக் கிறிஸ்துவோடு இணைப்பதுவும் நற்கருணையின் நோக்கம். நற்கருணையின் தியாகப் பலியிலே நாம் பங்கு பெறும் போது, மீட்பு  அனைவர்க்கும் கிடைக்கிறது என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான் நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவை  மையமாகக் கொண்டுதான் திருச்சபையானது ஒரே மக்கள் குலமாக, ஒரே ஆலயமாக, கடவுளின் ஒரே குடும்பமாக, அதாவது தூய, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்கத் திருச்சபையாக வளர்கிறது.  வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவருக்குப் பசியே இராது (யோவான் 6:35)  உணவும், தண்ணீரும் நமது  உடலின் பசியையும் தாகத்தையும் தணிக்க வல்லவர் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆவார்.
கிறிஸ்து மனிதர்களை மீட்பதற்காகப்பட்ட வாதைகள் பெரியவை. மனுக்குலத்தின் மீட்பு நிறைவேற வேண்டிதான் அடையப் போகின்ற துன்பங்களைப்  பொருட்படுத்தாது முன்னிரவுப் (பெரிய வியாழன்)  பொழுதில் தம் பன்னிரண்டு சீடர்களுடன் ஒரு வீட்டில் திருவிருந்து செய்தார். அப்பொழுது சீடர்கள் மனத்தில் பதியுமாறு பல நல்லுரைகளை அருளினார். அதன் பின் திருச்சபையின்  திருச்சாதனங்களில் ஒன்றான புதிய உடன்படிக்கைச் சின்னமாக திருவிருந்தை அளித்தார். பேரின்ப பெருவீட்டை அருள, மனித  குமாரனாகப் பிறந்த இயேசு, தமது கையினால் அப்பத்தை எடுத்து, அதைப்பிட்டு, நன்றி செலுத்தி, தன் சீடர்களுக்குக் கொடுத்து அது அவர்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படும் தமது உடல். தம்மை நினைவு கூறும்படி உண்ணுங்கள் எனக் கூறி மீண்டும் சுவையுள்ள திராட்சை இரசத்தை எடுத்து அதை ஆசீர்வதித்து அனைவரும் குடியுங்கள் என்று கூறி அது தமது புதிய உடன்படிக்கைக்காகச்
சிந்தப்படும் தம்முடைய இரத்தமென்றும், பாவமன்னிப்பு அதனால் உண்டாகுமென்றும் தமது தந்தையாகிய  இறைவனுடைய  வீட்டில்  
அனைவரும் வந்து சேரும்வரைத் தாம் அதைப் பானம் பண்ணுவதில்லை என்று கூறினார்.  இப்பொருள் அமைந்த  பாடல்கள் 
இதோ,பொங்கு பரமானந்த நமக்கருள வந்த மனுப்புதல்வர் தாமே

 செங்கரத்தா லப்பமெடுத்ததைப் பிட்டுத் தோத்தரித்துச் சீடரிக் கிந்
துங்களுக்காய் 
மரணத்துக் கொப்பி விக்குமெனதுடல்  தென்னையுன்ணித் தங்கிட 

நீரிந்த வகையியற் றியயனக் கருணையோடு சாற்றிப்  பின்னும்  
 ( இரட்சணிய யாத்திரிகம் - 8)

இனிமைதரு பழரசபாத் திரமேந்தி  ஸ்துதி செலுத்தியிதிலே 

நீங்கள்அனைவரும் பருகுமின் மற்றிது புதிய உடன்படிக்கை 

சுமையச் சிந்திப் எனதிரத்தம் பாவமன்னிப் பிதனாலே யுண்டாகு 

மிதியப்பாண்டுதனை நுகரேஎன பரம தந்தை யிராஜ்ஜியந் தனினீர் சாருமட்டும்.
( இரட்சணிய யாத்திரிகம் - 38)

என  நற்கருணை  திருவிருந்து  பற்றி  இரட்சணிய யாத்திரிகம் குறித்துள்ளது. இத்திருவிருந்தினைக் கிறிஸ்துவத் திருச்சபை தூய கூட்டுறவு, நற்கருணை என வழங்குகின்றது.

இதனைக் குறித்து மேலும் திருச்சபையின் உறுதியாக வழங்கி வரும் ஞானவரம் நிறைந்த அருள் சதானங்கள் இரண்டு. அதில் ஒன்று திருமுழுக்கு, மற்றொன்று  நற்கருணை என்னும் திருவிருந்தாகும். திருமுழுக்கு  பெறுகின்றவர்கள் கிறிஸ்துவின் மந்தையாகிய திருச்சபையில் முதலாவதாக சேருகின்றார்கள். பாவம் அற்றவராகிய இயேசு பெருமான், தம்முடைய இரத்தத்தைச் சிந்தி  தமதுயிரையும் விட்டார். இதை மனத்தில் தியானித்து   உருகி விசுவாசத்தில் ஊன்றி நிற்க நற்கருணையைப் பயபக்தியுடன் உட்கொள்ள வேண்டும்.

முந்துறை ஞானஸ்நானமடைவீர் திருச்சபை புகுவோர் 

முறையினின்றுபந்தமனு காதபரா பரன்மதலை எம்முடை 

பாவந்தாங்கினு சிந்தினர் செங்குருதியுயிர் விருத்தன ரென்றுள 

நினைந்து சிந்தையன் பால்நைந்துருகி 

விசுவாசத் துன்றி நிற்பச் நற்கருணை நயந்துட் கொள்ளில்  
 ( இரட்சணிய யாத்திரிகம் - 39)

 கிறிஸ்து இத்திரு விருந்தளித்த பின்னர் தமது தந்தையை நோக்கில் செபம் செய்வதற்காகச் சீடர்களுடன் ஒலிவ மலையிலுள்ள கெத்சமனே என்னும் சோலைக்குச் சென்றார். இரட்சணிய யாத்திரிகம் தருக்க ரீதியில் இச்செயலை இணைத்து நினைத்துப் பார்க்கின்றது. ஆதிமனிதனாகிய ஆதாம், ஏதேன் என்னும் சோலையில்  கீழ்ப்படியாமையாகிய பாவத்தினைச் செய்து மனுக்குலம், முழுமையும் பாவக்கறை படியுமாறு செய்தான். அவன் அச்சோலையில் விளைத்த பாவத்தை மற்றொரு சோலையாம் கெத்சமனேயில் தந்தையின் சித்தத்திற்குக் கீழ்ப்படிதல்  என்ற செயலைச் செய்து இரண்டாம் மனிதனாகிய இறைவன் இயேசு மனுக்குலத்தின்  பாவக்கறையை நீக்கினார். முதல் மனிதனின் கீழ்ப்படியாமையில் விளைந்த பாவம் இரண்டாம் மனிதன் இயேசுவுடன் கீழ்ப்படிதலால் அகன்றது. ஏனெனில் தோன்றிய பாவம் கெத்சமனேயில் நீங்கிற்று. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்குத் தம்மை ஒப்புக்கொடுத்ததே பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததாகும். பாவமற்றவராகிய கிறிஸ்து உலகத்தின் பாவத்தை தம்மேல் ஏற்றுக்கொண்டு  பாவமானார். கெத்சமனே தோட்டத்தில் அவர் அடைந்த ஆன்ம வேதனையையும் பிற நிகழ்ச்சிகளும் புனித விவிலியத்தில் கூறியுள்ளவாறே இரட்சணிய யாத்திரிகம் விவரிக்கின்றது.
  

Monday, 27 February 2017

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய  யாத்திரிகம்

- திரு. குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 
விரகாலூர்
சிலுவைப்பாடு

இறைவனது  மேலான அளவிடற்கரிய அன்பினைக் கிறித்துவ திருமறை, புதிய ஏற்பாட்டில் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார் (யோவான் 3 : 16). இறை மகனாகிய கிறித்துவின் அன்பினைச் சொல்லும்பொழுது, அவர்தம் மகிமையயல்லாம் துறந்து, தம்மைத் தாமே வெறுமையாக்கி தம்மை உயிர் பலியாகச் சிலுவையில் அறைவதற்கு ஒப்பிக் கொடுத்ததோடு தம்மைத் துன்புறுத்தியவர் களுக்காக, தம்மைச் சிலுவையில் அறைந்தவர் களுக்காகத் தம் தந்தையிடம் மன்றாடிய அன்பின் அறிய நிலை கூறப்பட்டுள்ளது. 

வான்புகழ் வள்ளுவரின், 
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் 
என்பும்  உரியர் பிறர்க்கு” (குறள் 72)
என்ற வாக்கு நினைத்ததற்குரியது.

இரட்சணிய யாத்திரிகம் இறைவனாம் பிதாவின் அன்பை,

“தன்னொரு மகவைத்தந்த தற்பான் அன்புவாழி
பொன்னுலக கிழிந்து வந்த புண்ணியன் வாழி வாழி
மன்னுயிர் புரக்க வந்த மனுமகன் சரணம் வாழி
என்னையிந நிலைபாலிக்கு 
எம்பிரான் கிருபை வாழி”

(இரட்சணிய யாத்திரிகம், ஆதிபருவம், இராசதுரோகம் படலம் பா ‡ 7) என்று கூறப்பட்டுள்ளது.

கிறித்து சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து காட்சியளித்து விண்ணகம் சென்ற மீட்பின் செய்தியாகிய கிறித்துவ சமயச் செய்திகளை இரட்சணிய யாத்திரிகம் திறம்படச் சித்திரிக்கின்றது.

“மரணமே உன்கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே?” என பவுல் 1 கொரி 15 : 55இல் கூறுவது போல, இயேசு வள்ளல் மரணத்தின் கூர் ஒடியவும், சாத்தானின் தலைநசுங்கவும், வேத வாக்குகள் நிறைவேறவும் காரணமாக சிலுவைப்பாடு என்னும் செய்கை முற்றுமாறு கல்வாரி மலையை நோக்கிச் சென்றார் இறைமகன்.

தனி மனிதன் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும்.
யாத்திரிகன் எனத் தனி மனித நிலையில் வைத்து சொல்லப்படினும்,  உலக மக்களின் பிரிதிநிதியாகவே அவன் காட்டப்படுகிறான். அதன் காரணமாகத்தான் நூலின் தொடக்கம்

“உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” (வரலாற்றுப் படலம், பாடல் - 1) என்று அமைந்துள்ளது. அத்துடன் குமார பருவத்தில் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவையின் மேல் ஏறிய மெய்ஞான சூரியனாகிய கிறித்துவின் சிலுவைப் பாட்டைக் கூறத் தொடங்கும்பொழுது,

“உலக மகிழ்ந்த தீடேறப் பரலோக வாசிகளுக்குவகை யேற
அலகையுளந் திகிலேடி லகண்டபரி பூரணனார் அருள்மெய் வாக்கு
விலகியதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கி அன்பால்
சிலுவை மிசை ஏறியமெய்ஞ் ஞான
சூ ரியனடியைச் சிந்தை செய்வாம்”

(இரட்சணிய  சரிதப்படலம்) எனக் கூறப்பட்டுள்ளது.
- (தொடரும்)

திருகாவலூர் கலம்பகம்

திருகாவலூர் கலம்பகம்

எளிய  உரையில் - குடந்தை  சலூசா 

வீரமாமுனிவர், இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர். இயேசு சபை மறை பணியாளராக இந்தியா வந்தவர். தமிழ்நாட்டில் ஏலாக்குறிச்சி என்ற உள்கிராமத்தில் 22 ஆண்டுகள் தங்கியிரக்கிறார். தமிழநாட்டில் தங்கியிருந்த 36 ஆண்டுகளில் 36 நூலகளக்கு மேல் எழுதியுள்ளார். அவைகளில் முக்கியமானவை : தேம்பாவணி, திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை ஆகியவை. இந்நூல்கள் செய்யுள் யாப்பு விதிகளுடன் எழுதப்பட்டுள்ளன. முன்னூறு ஆண்டுகளுக்கு முன் (1726) எழுதப்பட்ட இக்காவியம், தற்கால மொழி முறையில் சாமானியர்களுக்கு படிக்க கடினமானது. அதனை எளிமைப்படுத்தி, வீரமாமுனிவரின் மொழி திறனையும், மொழி எழிலையும் காண, அருள்பணி.லூர்துசாமி அவர்கள் முயற்சி எடுத்து, விளக்கம் தந்துள்ளார் கள். மூல செய்யுளையும் அதன் விளக்கத்தையும்  கவிதை நடையிலேயே தந்திருக்கிறார் தந்தை அவர்கள். இரண்டு பாடல்களுக்கு உரிய விளக்கத்தை இங்கு காணலாம்.

கலம்பகப் பாடல் - 1

தண் சுடர் காண் மதிக்குழலி
தாங்கியபூ வடி விளங்கத்
தெண் சுடர் காலுடு வளைந்த
திருமுடிகொள் சிரமிமைப்பப்
பனியுயிர்த்து மனங்குளிர்த்தப் பருதியுடுத்து டலிங்கத்
தணியுயிர்த்து மர ரணியாய்த்
தரிப்பதுநின் விருதாமோ

பாடலின் விளக்கம் :

நீரெனக் குளிரும்  
 நிலாப்பிஞ்சில் தடம் பதித்து
மீன்(கள்) மின்னும்   
மண்முடி சீரம் ஒளிர
இரக்கம் சுரக்கம்   
இதயமே கொண்டு மக்கள்
மனந்தாமரை மலர்ந்து   மனம் மகிழ்ந்து
பரிதி உடுத்திய பொன்   
ஒளிர் மேனியுடன்
ஒப்பில்லா இறைவனை   
உலகில் ஈன்றெடுத்த
அன்னையே அரச அணிகலன்
அழகாக அணிந்திருப்பது - நின்
கொற்றத்தின் வெற்றிச் சின்னமே

Friday, 10 February 2017

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- திரு.குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 
விரகாலூர்
இலக்கியக் கொள்கை

இறைவன் என் இதயத்தை திறந்தார், அவரைத் துதிக்கதான் எனது வாயைத் திறந்தேன் என எழுதி வைத்தவர் கிறித்தவக் கம்பர் எச்.ஏ.கிருட்டிணன். இவருடைய நூல்கள் பெரும்பாலும் இரட்சணியம் என்ற சொல்லைக் கொண்டன. அவை இரட்சிப்பினைப் பற்றி கூறுவன. இதிலிருந்து இவரது தலையாய இலக்கியக் கொள்கை இரட்சிப்பினை, பேரின்பப் பெரு வாழ்வு நெறியினை எடுத்தக் கூறுவது என எண்ணலாம். மனமாற்றத்தால் மதம் மாறிய இவர் தாம் அறிந்த பேரின்பப் பெருவாழ்வு நெறியினை, இரட்சிப்பினை உலகம் அறியவேண்டும் என்ற வேட்கையுடையவராய்ச் செயல்பட்டார் எனலாம்.

சிற்றின்பம் பற்றி பாடாத நிலை :

இலக்கியத்தின் பயன்களாக இன்பமாய் இருத்தல், அறிவுறுத்தல் என்ற இரண்டினைப் பொதுவாகச் சொல்வதுண்டு, கிறித்தவ கம்பருக்கு இன்பம் என்ற நோக்கத்தில் சிறிதும் நாட்டமில்லை. சிற்றின்ப வாயிலாகப் பேரின்ப நிலையறிதல் என்பதும் உடன்பாடில்லை. வெற்று நேரப் பொழுது போக்கு என்பதாக இலக்கியப் பயன் அமைதல் கூடாது என்பவைகளில் அழுத்தமான நம்பிக்கையுடையவர். தமது இலக்கியக் கொள்கைகளாக, தமது இரட்சணிய யாத்திரிகச் சிறப்புப் பாயிரத்தில், நூலின் மையக் கருத்தைச் சுட்டும் முகத்தான்.

“வெற்று நேரப்போக காய்ப்புகல் வினோதமுமன்று
புற்ற ராவிடம் பொதிந்த செப் பெனக்கவி புனைந்து
சிற்றின் பத்திறம் திருத்தியு காதையு மன்று
மற்றி தாத்தம ரட்சணை வழங்குமோர் மருந்தாம்”

எனத் தெளிவுப்படுத்தியுள்ளார். ஆதலின் சிற்றின்பம் பாடுதல் இவர் கொள்கையன்று என்பதும், சிற்றின்பம் பாடுதல் பாம்பின் விடத்தைச் செம்பில் அடைத்து வைக்கும் தன்மையை ஒத்தது என்பதில் நம்பிக்கை உடையவர். ஆன்மாக்களை மீட்பதற்கு நூல்கள் இயற்றலே தமது இலக்கியக் கொள்கையாகக் கொண்டவர் என்பதும் உறுதிப்படுகின்றது.

மனத்தை உருக்கும் இயல்பு :

பக்தி இலக்கியப் பாங்கிற்கேற்ப உள்ளத்தை உருக்கும் இயல்பு இவரது படைப்புகளில் பெரிதும் காணப்படுகிறது. கிறிஸ்து தம்மை ஆட்கொண்ட நிலையைக் கற்போர் மனமுருக கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.

“பிறவியிற் பிடிவாத கொடியவை ணவனாய்ப்
பிறந்துமுப் பதுவவற்சாம்
பிரபஞ்ச மயல்கொண்டு மூடாந்தகாரப்
பிழல்பிலடை பட்டுழன்று
மறவினைக் காளாகி நெறிநிலாத் தூர்த்த மன
வாஞ்சைக் கொடுத்து
மருளுற்று வறிதுநாட் செலவிட்ட நீசனெனை
மலரடிக்காட் படுத்திக்
குறைவிலாப் பேரரு ளனித்தின்று காறுங்
குறிக் கொண்டு கடத்தியயனிறு
கொச்சைமதி யேற்கின்னு நன்றியறி யாக் கெட்ட
குணதோச மொழிய விலையே
இறைவலப் புறமிருந்தடியருக் காப்பரிந்
தென்று மன் நாடுமுகிலே
ஏகநா யகசருவ லோகநா யககிறிஸ்
தியேசு நாயக சுவாமியே”
என வரும் பாடல்கள் நிறைய உள்ளன.

தாய்த் தமிழின் இலக்கிய மரபு போற்றல் :

கிறித்துவக் கம்பரின் இலக்கியக் கொள்கையாகத் தமிழ் இலக்கிய மரபுப் போற்றுதல் சொல்லுதற்குரிய ஒன்று. எந்தவொரு படைப்பாளனும் தனக்கே முற்றிலும் சொந்தமான இலக்கிய அமைப்பினை உடையவனாய் விளங்குவதில்லை. தனக்கு முன் தோன்றிய இலக்கியங்களின் அமைப்பினை, மரபினை ஏற்றே நூல்கள் படைக்கப்படுகிறது. கிறித்துவக் கம்பரும் தமது படைப்புகளைத் தமிழ் இலக்கிய மரபுகளையேற்றுப் போற்றியே படைத்துள்ளார். இரட்சணிய யாத்திரிகம் என்னும் இவரது தனிப்பெரும் படைப்பு தமிழ்க்காப்பிய மரபுகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இவர் இரட்சணிய யாத்திரிகக் கதையினை ஜான் பனியனிடத்திலும், காப்பிய வடிவ அமைப்பின் பெரும் பகுதியைக்  கம்பனிடத்தில் அறிந்து கொண்டார் எனலாம். தமிழ் நூல்களில் நல்ல பயிற்சியுடைய இவரது உள்ளம் தாம் படித்த நூல்களில் உள்ள இலக்கியச் சுவையை தாம் படைத்த நூல்களில் இடம் பெறச் செய்ய மறக்கவில்லை. எனவே இரட்சணிய யாத்திரிகத்தில் தமிழ்க்காப்பிய மரபுகளும், தேவார திருவாசக, திவ்வியப் பிரபந்தகங்களின் இனிமையும், உருக்கமும், கருத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றது. இரட்சணிய யாத்திரிகத்தின் இடையிடையே இவரால் எழுதப் பெற்ற தேவாரப் பதிகங்கள் இடம் பெற்றுள்ளன.

உருவகத்தைப் போற்றல் :

உருவகத்தைப் பயன்படுத்தி மெய்ப்பொருளை விளக்குவது என்பதும் கிறித்தவ கம்பரின் இலக்கியக் கொள்கையாக கூறுதற்குரியது. பக்தியுணர்வை வெளிபடுத்த உருவகப் பாடல்கள் பெரிதும் துணை செய்வன. உருவகமானது கருத்தினை ஆற்றல்படச் சொல்லும் வலிமையுடையது. இதனை நன்குணர்ந்த கிறித்தவக் கம்பர் உருவகத்தைத் தமது பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். இரட்சணிய யாத்திரிகத்தின் மூல நூலான மோட்சப் பிரயாணம் முற்றுருவக நூலகப் பாடியுள்ளார். தமிழில் காணப்படும் ஒரே முற்றுருவகக் காப்பியம் என்னும் சிறப்பிற்குரியது என்பர். இரட்சணிய யாத்திரிகக் கதையில் வரும் பாத்திரங்களும் இடங்களும் நிகழ்ச்சிகளும் உருவகங்களே. இவ்வாறு காப்பியமே முற்றுருவகக் காப்பியமாக அமைந்திருப்பதோடு, பாடல்களிலும் உருவக அணி பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்று மூவொரு கடவுளில் ஒருவரான பரிசுத்த ஆவி, உள்ளமாகிய வயலை உழுது, மெய்பக்தி  என்னும் விதை விதைத்து, நாட்டம் வைத்து, அருள் பாய்ச்சி, நலிவு என்னும் களையகற்றி, முளைத்த பயிரை வாடாமற் காத்து, நற்கதி விளைவித்து அடியார்களை வாழச் செய்யும் என்று உருவக நிலையில் கூறியுள்ளது. உழுதல், விதைத்தல், நீர் பாய்ச்சுதல், களையகற்றல், காத்தல், விளைவித்தல் என்னும் உழுவுத் தொழிலை முறைமை சிறிதும் மாறாத குறிப்பிடப்பட்டுள்ள செயல் கருதற்குரியது. இவ்வுருவக நிலையை,

“கோட்டமற்று உளம்திருத்தி குலவுமெய்ப் பக்தி வித்தி
நாட்டம் வைத்து அருள் நீர்பாய்ச்சி நலிவெலாம் அகற்றியாதும்
வாட்டம் இன்றாக ஒம்பி வரகதி விளைவித்து அன்பர்
ஈட்டம் ஆர்த்து  உய்த்துப்பிக்கும் இதய நாயகனே போற்றி”
என்ற பாடல் வழி உணர முடிகின்றது.

உரைநடை செய்யுள் நூலாதல் :

தமிழகத்தில் உரைநடை வளரத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த கிறித்தவக் கம்பர், மோட்சப் பிராயணம் என்னும் உரைநடை நூலை மூல நூலாகக் கொண்டு, இரட்சணிய யாத்திரிகத்தைச் செய்யுள் நூலாகப் படைத்தமை இவரது இலக்கியக் கொள்கையை சுட்டுவதாகவுள்ளது. கவிஞருக்குப் பக்தி, உணர்ச்சி, ஒழுக்கம் பற்றிய நூல்கள் செய்யுள் வடிவில் அமையுமானால், உரைநடை நூல்களிலும் சிறந்து விளங்கும் என்ற கருத்து உண்டு. எனவே உரைநடை வடிவிலுள்ள கிறித்துவத் திருமறை, செய்யுள் வடிவில் ஆகவேண்டுமென்ற முயற்சியும் இரவது படைப்புகளில் வெளிப்படுத்துவதாக உள்ளன.

இதன் மூலம் கிறித்துவக் கம்பர் காப்பியக் கொள்கையறிந்தவராகவும், தோத்திர நூல் கொள்கையைப் போற்றுபவராகவும், சாத்திர நூல் கொள்கையை உணர்ந்தவராகவும் அறிய முடிகின்றது. (தொடரும்).

தற்கால இலக்கியத்தில் பெண்ணியப் படைப்பாளிகள்

தற்கால இலக்கியத்தில் பெண்ணியப் படைப்பாளிகள்

(இலக்கியங்கள் சமதாயத்தின் உரைகற்கள், இடிபாறைகள், முன்னோட்டங்கள். இன்றைய தமிழ் இலக்கியங்களை கோடிட்டு காட்டுகிறார் சகோதரி அவர்கள்)

- அருட்சகோ. விமலி FIHM, 
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

கி.பி. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டு முதல் பெண்களின் சமூக விடுதலைக்கான இலக்கியங்கள் அதிகமாக படைக்கப்பட்டு வந்துள்ளன. பாரதியார், பாரதிதாசன், வாணிதாசன், சாரதா, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் முதலிய கவிஞர்களும், தற்காலத்தில் வானம்பாடி கவிஞர்கள் சிற்பி, புவியரசு, மேத்தா, சக்திக்கனல், அக்கினிபுத்திரன், அ.மார்க்ஸ் முதலிய கவிஞர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வழியில் பல முற்போக்குக் கவிஞர்கள் தொடர்ந்து எழுதி வருகின்றனர். சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை மணம், கைம்மை, பலதார மணம், சொத்துரிமை மறுப்பு, பெண்கல்வி, பர்தாமுறை, தேவதாசிமுறை ஆகியவற்றைக் கருப்பொருளாக வைத்து நாவல்கள் பலவும் பிற்காலத்தில் படைக்கப்பெற்றன. லட்சுமி, வை.மு. கோதைநாயகி, அனுமத்தா, ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி முதலிய பெண் நாவலாசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ் இலக்கியங்களில் பெண் சிந்தனையாளர்கள் பற்றிப் பேசுவோர் சங்ககால ஒளவையாரிலிருந்து சமீப கால அம்பை வரை உதாரணங்களாக கொள்வர். சமீப கால எழுத்தாளரிடையே அம்பை, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர்லதா, கிரிஜா, இரா.மீனாட்சி, அமரந்தா, அழகுநிலா, அரசுமணிமேகலை, அனுஷாரசி, ஆனந்தி, இந்திரா சுந்தர், கனிமொழி, சல்மா, செல்வநாயகி, மாலதி மைத்ரி, இளம்பிறை, இன்பரதி, திலகபாமா, கல்பனா, பாரதி கண்ணம்மா என இக்கால பெண் கவிஞர்களின் வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது. இவர்களின் அனுபவமும் நடப்பியல் உண்மையும் உரிமையோடு பெண்ணியமாக மிளிர்கின்றது. மேலும் பெண்களது சமூக கலாச்சார ஒடுக்குமுறை பற்றிய உணர்வினைத் தமது சிறு கதைகளிலும், நாவல்களிலும் வெளிப்படுத்தியுள்ளனர். இக்கால பெண் மொழிக்கான அடையாளப் பதிவாகவும் இவை  உள்ளன.

இக்காலக் கட்டங்களில் தோன்றும் புதினங்கள் பலவும் நடப்பியல் கூறுகளையே முதன்மையாகக்  கொண்டு படைக்கப்பட்டுள்ளன. இன்றைய சமுதாயத்தின் வளர்ச்சியினையும் வீழ்ச்சியினையும் வெளிப்படுத்துவதாகவே அமைகின்றன. சமுதாயத்தோடு நெருங்கிய தொடர்புடையது இலக்கியம். இது மனித வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு பெற்றிருப்பதால் சமூக எல்லைக்குள் அடையக் கூடியதாய், அறிவுப்பூர்வமானதாய், வாழ்க்கையை அமைதியாக விளக்கும் படைப்பிலக்கியமாய் இலக்கியம் அமைகிறது.

பெண்ணின் சிந்தனையிலும், செயலிலும் புதுமை பிறக்க வேண்டும். பாரதி கூறியதுபோல நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் இந்தப் பூமிதனில் பெண்கள் வலம்வர வேண்டும் என்று பெண்ணுரிமை பேசும் புதிய சிந்தனையாளர்கள் இன்றைய காலத்தின் தேவையாகும். பெண்களின் சொந்த வாழ்க்கையின் இழப்பையும், சமூக வாழ்க்கையின் இழப்பையும் இணைத்துச் சொல்லும் இலக்கியங்கள் இன்று தேவையாக  உள்ளன. 21ஆம் நூற்றாண்டில் ஊடகங்கள் பெரிய மாற்றத்திற்கு ஆளாகிவிட்டன. கைப்பேசி, தொலைக்காட்சி, இணையதளம், முகநூல் என மாற்றம் பெற்றுள்ள இக்காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. அனைவரும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுகின்றனர். தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையேயுள்ள போட்டி காரணமாக பெண்ணடிமைத்தனமும், மூடப்பழக்கங்களும், வேண்டாத சடங்குகளும் தொடர்ந்து திணிக்கப்படுகின்றன.

விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல் என்ற அனைத்து வாய்ப்புகளையும், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கலை இலக்கியம் என அனைத்து தளங்களிலும் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய இலக்கியப் படைப்பாளிகளிடம் இருக்க வேண்டும். இலக்கியங்கள் இன்றைய மனிதர்களின் உணர்ச்சிகள், கற்பனைகளை வெளிக்கொணரும் வகையில் எழுத்துப் படைப்புகள் திகழ்தல் வேண்டும்.
ஓர் எழுத்தாளர் புறக்கணிக்கப்படலாம். ஆனால் அவரது எழுத்துகள் எப்போதும் புறக்கணிக்கப்படக் கூடாது. இதற்கு பாரதி மிகச்சிறப்பான முன்னுதாரணமாவார். கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஓரிடத்தில் நின்றுவிடாமல், அடுத்தடுத்த நகர்வுகளுக்கு ஊர்ந்துகொண்டே இருக்க வேண்டும். எழுத்தாளர் நிலத்தடி நீர் போன்றவர்கள் சமூகத்துக்குள் மறைந்துள்ள ஈரத்தை வெளிப்படுத்துவதே எழுத்தின் நோக்கமாக வேண்டும். பெண்மை நலம் காக்க, முற்போக்கு சிந்தனை கொண்டப் படைப்புகள் வெளிவர வேண்டும். அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.


வேதநாயகரின் இலக்கிய நெஞ்சம்

வேதநாயகரின் இலக்கிய நெஞ்சம்

(நீதியரசர் வேதநாயகர், நீதியை வாழ்ந்துகாட்டிய செம்மல்)

- முத்தமிழ் மாமணி, பேராசிரியர் ச.சாமிமுத்து,

இந்த இலக்கியத் திங்களிலாவது நம் கிறித்தவ இலக்கியங்களில் நம் கவனத்தைத் திருப்புவோம். தமிழகத்தில் கிறித்தவ சமய வளர்ச்சிக்கு நம் தமிழ்க் கவிஞர்கள் பலர், அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்களின் வாயிலாய் அருள்பணி புரிந்துள்ளார்கள். அவர்களுள் ஒருவராகிய மாயூரம் வேதநாயகரைப் (வேதநாயகம் பிள்ளை) பற்றி அன்னையின் அருட்சுடர் வாசகர்களோடு சில செய்திகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேதநாயகர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள குளத்தூரில் 1826ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் சவரிமுத்து, ஆரோக்கியமரியம்மாள் என்னும் பெற்றோர்க்கு மகனாகப் பிறந்தார். இளமையிலிருந்தே தமிழையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றுச் சிறந்த புலமை பெற்றார். இவர் மேலும் இலத்தீன், பிரஞ்சு, வடமொழி ஆகிய மொழிகளையும் கற்றுப் பன்மொழி அறிந்தவராகத் திகழ்ந்தார்.

இவர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் தம் இருபத்தி இரண்டாம் வயதில் ஆவணப் பதிவுப் பொறுப்பாளர் (யூeஉலிrd லுeeஸ்ரீer) பணியில் சேர்ந்தார்.  அதிலிருந்து அவர்தம் அறிவுத் திறமையாலும், நன்னடத்தைப் பண்பாலும் இறையருள் பெற்று முறைமன்றத் தலைவராகவும்  உயர்ந்தார். தரங்கம்பாடியிலும், சீர்காழியிலும், திருமயிலாடுதுறையிலும் (மாயூரம்) முறைமன்றத் தலைவராகப் (District Munisiff)  பல்லாண்டு பணியாற்றினார்.

இவர் திரிசிராபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாருடன் நெருங்கிய நட்புக்கொண்டிருந்தார். தாம்  இயற்றிய நீதி நூலை அவரைக்கொண்டு அரங்கேற்றினார். பெண்களின் பெருமையைக் கூறக் கருதி ‘பெண்மதி மாலை’ என்னும் அரிய நூலை வெளியிட்டார். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’, ‘சுகுண சுந்தரி சரித்திரம்’ ஆகிய இரண்டும் இவருடைய புதினங்கள் ஆகும். ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ முதன் முதலில் தமிழ்மொழியில் தோன்றிய தலைசிறந்த நாவலாகும். இந்தப் புதினந்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஏன் இருபதாம் நூற்றாண்டில்கூட புதின ஆசிரியர்களுக்கெல்லாம் வழிகாட்டும் நூலாக அமைந்தது. இவர் ‘தேவமாதா அந்தாதி’, ‘திருவருள் அந்தாதி’, ‘திருவருள் மாலை’, ‘பெரியநாயகி அம்மாள் பதிகம்’ போன்ற சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இவரது இசைத்தமிழ் ஈடுபாட்டை இவருடைய ‘சத்திய வேதக் கீர்த்தனை’, ‘சருவசமய சமரசக் கீர்த்தனை’ முதலிய நூல்களால் நாம் அறியலாம். இன்னும் பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார். தமிழ் உரைநடைக்கும், புதினத்திற்கும் இசைத்தமிழுக்கும் வேதநாயகர் ஆற்றியுள்ள தொண்டைக் கிறித்தவத் தமிழ்ப் பொதுநிலையினரும், துறவிகளும் போற்ற வேண்டிய பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள்
.
வேதநாயகர் இயேசுபெருமானின் இறையரசுப் பணியைத் தம் வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். அவர் படைத்த இலக்கியங்களில் மட்டுமல்ல, அவர் ஆற்றிய நீதியரசர் பணியிலும் சமுதாயத் தொண்டிலும் இறைமகன் இயேசுவையே வழியும், வாழ்வும், ஒளியுமாகக் கொண்டே செயலாற்றி இருக்கின்றார்.

வேதநாயகர் மாயூரத்தில் நீதிமன்றத் தலைவராகச் சேர்ந்து, தாம் தம் நீதிநூலில் அரசர் இயல்பு என்னும் அதிகாரத்தில் கூறியிருப்பதைப் போன்று, வழக்காளியும் (வழக்குத் தொடுப்பவர்), எதிர் வழக்காளியும் (எதிர் வழக்குத் தொடுப்பவர்), சான்று சொல்பவரும் (சாட்சி), கூறியவற்றையும் (விசாரணையில்) வழக்குப் பதிவுகளில் கண்டவற்றையும் ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முறை (நீதி ) வழங்கி வந்தார். எல்லோருக்கும் சரிநிகர் நீதி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே என்று எல்லோரும் ஏத்திப்போற்றும் அளவிற்குத் தம் பணியில் இவர் உயர்ந்து நின்றார். இன்று நம் வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையாக, பொது வாழ்வைப் பெரிதும் பாதித்துப் பாழ்படுத்தக் கூடியதாக இருக்கின்ற இலஞ்ச ஊழல் வேதநாயகரின் சொல்லிலோ, செயலிலோ எவ்வடிவத்திலும் இடம் பெறவில்லை. தம்மோடு பணிபுரிந்து வந்த பணியாளர்களிடத்திலும் இவ்வூழல் குடிபுகாதவாறு கண்டிப்பாய் இருந்து பார்த்துக் கொண்டார். கையூட்டுப் பெறுவதும் (இலஞ்சம்), கமி­ன் வாங்குவதும் (இடைநிலை ஊதியம், கிம்பளம்) போன்ற தீய பழக்கத்தால் நாடும், வீடும் நலிவுறும் என்பதை நன்கறிந்த வேதநாயகர், அவர்தம் நற்றமிழ்ப் பாக்கள் வாயிலாய்ச் சமுதாயத்தை நெறிபடுத்தும் நன்னெஞ்சப் புலவராய் விளங்கினார்.

ஒருவர் இலஞ்சம் பெறுகின்றார் என்பதை அறிந்து மற்றொருவர் தம் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு தாமும் இலஞ்சம் பெறலாம் என்று துணிகின்றார். தீய பழக்க வழக்கங்கள் தொற்றுநோய் போன்றவை. நோய் நம்மையும் பற்றாமல் இருக்க வேண்டுமென்றால் அந்நோய்க்கு ஆளானவரோடு இரக்கச் செயல்பாட்டிற்கு மாறான நோய் பற்றற்குக் காரணமான தொடர்புகளைத் தவிர்க்கவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். உயிரையே வாங்குவது ஒரு நஞ்சு என்றால், மற்றொரு நஞ்சு நம் வாழ்வையே பாழ்படுத்தும், அதுதான் இலஞ்சம் என்னும் நஞ்சு! இவ்வுண்மையை நன்குணர்ந்துதான் வேதநாயகர் தம் நெஞ்சை நோக்கி,

“ஆர்வேணுமோ அவர்வாங்கட்டும் நீ - இலஞ்ச 
ஆசை வையாதே - நெஞ்சமே”

என்று பாடியுள்ளார். இலஞ்சத்திற்குக் காரணம் பொருளாசை (பணம், நகை, நிலம், வீடு, வாகனம் முதலியன). இந்த ஆசைக்கு இடம் கொடுப்பது ஒருவரது நெஞ்சம். நெஞ்சத்தை நாம் அடக்கி நன்னெறிக்கு உரிய இடமாக ஆக்கிவிட்டால் தீய எண்ணம், சொல், செயல் புறமுதுகு காட்டி ஓடிவிடும். அதனால்தான் போதுமென்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்று நம் மூத்தோர் மொழிந்தனர்.

இலஞ்சம் வாங்குவதால் என்ன விளையும் என்பதையும் இச்சீர்த்திருத்தச் செம்மல் ஒரு பாட்டில் சுட்டி, நச்சென்று ஒரு கொட்டு வைக்கின்றார்!

“எதுக்கு வாங்குகிறீர் இலஞ்சம் - உமக்கு
இதைவிட வேண்டுமோ பஞ்சம்”

என்று வினாத்தொடுத்து எள்ளி நகையாடுகின்றார். இலஞ்சத்தால் விளைவது பஞ்சம்! அது என்ன பஞ்சம்? அதுதான் ஒழுக்கம் இல்லா வாழ்வுப் பஞ்சம். வள்ளுவரும் இவ்வுண்மையை,

“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்”

என்னும் குறட்பாவினால், நெஞ்சம் கொண்ட ஆறறிவு படைத்த மனித விலங்குக்கு உரிய வாழ்வு நெறியாகக் கூறுகின்றார்.

இலஞ்ச ஊழல்களைப் பற்றி நெஞ்சு நெகிழப் பாடும் நம் பெருங்கவிஞர், சமுதாயத் திருடர்களைப் பற்றியும் மனம் புழுங்கிப் பாடுகின்றார். பகலில், பலர் முன்னிலையில், பற்பல தனியார் மற்றும் அரசத் துறைகளில் பணியாற்றுகின்றவர்கள் கவர் வாங்குகிறார்கள். கவரின் உள்ளே பத்திரமாகப் பதுங்கி இருப்பது இலஞ்சப் பேய்! இப்படிப்பட்ட இலஞ்சப் பேயைப் பத்திரமாகக் காகித உறைக்குள்ளே பதுக்கி வைத்து நெஞ்சுக்குள் ஏற்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், பதவியிலிருப்பவர்கள் என்பதுதானே இன்றைய உண்மை. கறுப்புப் பணமாம்! அடப்பாவிகளா பணம் எப்படி கறுப்பாச்சு? நீங்களெல்லாம் பகல் திருடர்களாக, பகல் கொள்ளைக்காரர்களாக, பகல் பக்திவேடதாரிகளாக மாறியதால்தானே! மக்கள் நலம்கருதி  உரிய ஊதியம் பெற்றுப் பணிபுரிகின்றவர்கள் அடிக்கும் பகல் கொள்ளையால் சமுதாயமே பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகின்றதே! தனக்கென்று எதுவுமே இல்லாத ஏழை மகனும் பாதிக்கப்படுகின்றானே!

நீதி, நேர்மை வாழ்க்கையால், இறைநெறி நெஞ்ச வாழ்க்கையால் நம்மை நீதி  பிறழாத  நீதிபதியாக வாழ வைக்க நினைத்த பிறரையும் அவ்வாறே வாழ வைக்க வாழ்ந்த நீதியரசர் வேதநாயகர்,

“...அநீதியே ஓட்டம் பிடிக்க
இலஞ்சம் வாங்கிகள் வெட்கத்தால் உயிர்மடிக்க
நானே பொதுநீதி தானே செலுத்திட
நல்வரம் அருள் கோனே”
என்று மூவொரு கடவுளிடம் முறையிட்டு வேண்டுகின்றார்!

இலஞ்சம் வாங்குபவர்களை ஆறறிவுக்கு உரிய மனிதர்களாக வேதநாயகர் மதிக்கவில்லை. எனவேதான், இலஞ்சம்  வாங்கிகள்  என்று அஃறிணையில் விலங்கு நிலையில் வைத்துப் பாடுகின்றார்!

Friday, 2 December 2016

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
கிறித்துவின் பிறப்பு

தமிழ்க் கிறித்தவக் காப்பியங்கள் உலக மீட்பராம் கிறித்து பிறந்த காட்சியினைச் சிறப்பாகப் பாடியுள்ளன. கிறித்தவக் காப்பியங்களில் ஒன்றான இரட்சணிய யாத்திரிகம் கன்னிபாலானாய்க் காசினியில் அவதரித்த கிறிஸ்துவின் பிறப்பை மிகுந்த பக்தியுணர்வோடு பாடியுள்ளதை அதன் பாடல்கள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

கிறித்துவின் பிறப்பு பேய்களுக்கு எல்லாம் தலைவனான சாத்தானுடைய கைகால்களை விலவிலக்கச் செய்கின்றது. அவனது உள்ளம் திகிலுற்றுப் பயத்தினால் பறையறைகின்றது. அவனது ஆருயிர் நடுங்குகின்றது. அவனது கருமையான முகம் குப்புறவிழுந்து கவிழ்கின்றது. அவனது கொடிய வினைகளெல்லாம் பயந்து ஓடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பாவ இருள் கலைந்தோட ஞானசூரியன் உதயஞ்செய்வது போல் கிறிஸ்து பிறந்தார் என்று கூறியுள்ளது. மேலும் இந்த அகிலத்தை, மண்ணை, விண்ணை, சூரியனை, திங்களை, விண்மீன்களை, விரிகடலை, மழையை, முகிலைத் தமது ஒரு வார்த்தையால் படைத்த அச்சுதன் கடவுள், ஊனுருக் கொண்டு, மனித குமாரனாய் இந்த  உலகமெல்லாம் மகிழ்ச்சியடையுமாறு பிறந்தார் எனக் கிறித்துவின் பிறப்புக் காட்சியை இரட்சணிய யாத்திரிகம் பாடியுள்ளது. பக்திச்சுவை நனிசொட்டச் சொட்ட அப்பாடல்கள் உருவெடுத்துள்ளன.

கள்ளம்புரி அலகைக்குஇறை கைகால் விலவிலக்க
உள்ளம்பறை யறையத் திகில் உற்று ஆர்உயிர் நடுக்கம்
கொள்ளக் கரிமுகம் குப்புறக் கொடுந்தீவினை குலைய
அள்ளிக் கதிர்வீசும் சுடர் அருணோதயம் இதுஎன
வானோமகி தலமோசுடர் மதியோவயங்கொளிர்வான்
மீனோவிரி கடலோமழை முகிலோ ஒருவிதியில்
ஆனாநெறி அமைத்தாக்கிய அகிலாண்ட அச்சுதன்ஓர்
ஊனாடிய திருமேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப
என அப்பாடல்கள் வந்துள்ளன.

 இங்கு இவ்விரட்சணிய யாத்திரிகப் பாடல் கம்பன் கவிதையோடு ஒப்புநோக்கி மகிழ இடந்தருகின்றது. இராமன், சீதையோடு காட்டிற்கு செல்லும்போது அவனது அழகினைக் கம்பன்,

வெய்யோன் ஒளிதன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோ! எனும் இடையாளொடும் இளையாளொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான்

எனப் பாடியுள்ளார். தேம்பாவணிக் கவிஞரான வீரமாமுனிவர் கிறித்துவின் பிறப்பினை உலகங்கள், காலங்கள் முதலானவற்றுளுள்ளும் உவமை கூறுதற்கியலாத  குற்றமில்லாத  கன்னியாகிய மரியன்னை, அளவிடற்கியலாத பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றனுள் நடுவில் விளங்குபவரும், மூச்சுடர்களைக் காட்டிலும், ஒளிமிகுந்தவராகத் திகழும் திருக்குமாரனை, பளிங்கு எவ்வாறு  தனக்குச் சிறிதுச் சேதமும் இல்லாது தன்னிடத்துப் படியும் ஒளியினை வெளியிடுகின்றதோ அதுபோலத் தன்கன்னித்தன்மை சேதமுறாது அளவற்ற வல்லமையுடைய அமலனாகிய இயேசு பிரானைப் பெற்றுத் தந்தனள் எனக் கூறியுள்ளார்.

கிறித்துவின் பிறப்பைக் கூறும் தேம்பாவணி, கிறிஸ்து தமிழ் மாதமாகிய மார்கழி மாதம், இருபத்தைந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பதினைந்தாம் நாழிகையில் பிறந்தார் எனக் கூறியுள்ளது. தேம்பாவணி கிறிஸ்து பிறந்த மாதத்தினை டிசம்பர் எனச் சொல்லாது மார்கழி மாதம் எனக் குறிப்பிட்டது தமிழக மரபிற் கேற்ப அதனை அமைத்தல் வேண்டும் என்பதற்காகவே என்று கூறலாம்.  தேம்பாவணியில்,

மாதம் மார்கழி வைகல் ஐயைந்தாய்
ஏதிலா நிசிக்கு இருத்தை மூலைந்தாய்
ஆதி நாளென ஆதி நாதனை
காதல் நாயகி களிப்பின் நல்கினாள்
என வந்துள்ளது.

தமிழ்க் கிறித்தவக் கவிஞருள் ஒருவராகிய தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் தன் திருஅவதாரம் என்ற  நூலில் கிறித்துவின் பிறப்பை வியந்து பாடியுள்ள பாடல் வரிகளும் இத்துடன் எண்ணத்தக்கனவாகும்.

வானம் பூமியோ பராபரன் மானிடர் ஆனாரோ - ஆ! என்னவிது
வானம் பூமியோ பராபரன் மானிடர் ஆனாரோ
                                   - மறைதிரு மாணிக்க ஆசிர்வாதம் (1865 - 1948)

அக்கவிஞருக்கு இறைவன் இம்மண்ணில் மனித குமாரானப் பிறந்தது பேரதிசயமாக பேரற்புதமாகக் காணப்பட்டது. 
எனவே அவர் அதனை,

என்னனோஇவ் வற்புதம்பார் ஈசனிங்கே வந்தார் புவியி
    என்னவோஇவ் வற்புதம்பார் இந்நிலைமை யாளரே
என்னோஇவ் வற்புதத்தை எப்படி மறப்பாய் பாவி

என மிக இனிய எளிய சொற்களால் பாடியுள்ளார்.
கவி ஆரோக்கியசாமி, சுடர்மணி என்னும் தம் காப்பியத்தில், கிறிஸ்துவின் பிறப்புக் காட்சியைச் சந்தேக நயத்துடன் இசைத்துள்ளார்.

நடுநிசி தன்னில் ஆங்கோர் நல்லொளி தோன்ற மேலே
திடமுளவால்மீன் தோன்றித் திக்கெட்டு மொளி பரப்பப்
படும் வலியேதும் இன்றிப் பாவையும் மகவையீன
மடை திறந்தனைய தேவதூதரும் மல்கி நின்றார்

என்பது சுடர்மணிப் பாடலாகும். அன்னை மரியாள் கன்னித்தாய், பிரசவ வலி எதுவுமில்லாமல் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு ஈன்றளித்தாள் என அப்பாடல் கூறுவதுடன், கிறிஸ்து பிறந்த சூழலை விவரித்துள்ளது. நடுநிசிநேர ஒரு நட்சத்திரம் வானில் நல்லொளி பரப்பிக் கொண்டுள்ளது. கிறிஸ்தவின் பிறப்பை அவனிக்கெல்லாம் அறிவிக்கும் நட்சத்திரம் அது. அதன் அரிய ஒளி திக்கெட்டும் ஒளி பரப்புகின்றது. அது கிறிஸ்துவின் அருள் ஒளி உலகெங்கும் வீசபோவதை முன்னறிவிப்பது போலுள்ளது. இச்சூழல் அன்னை மரி எவ்விதத் துன்பமும் இல்லாமல் வள்ளல் இயேசுவை, கிறிஸ்துவைப் பெற்றுத்தந்தாள். தேவதூதர்களில் மடைதிறந்தாற் போலப் பாலனைச் சூழ்ந்து நின்றனர் என அக்காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

கவியரசு கண்ணதாசனின் இயேசு காவியத்திலும் கிறிஸ்துவின் பிறப்புக் காட்சி இடம் பெறுகின்றது. குழந்தையாய்ப் பிறந்த கிறிஸ்துவைக் கண்ணால் கண்டு மகிழ்ந்த  இடையர்களை அவர்தம்  உணர்வுநிலையில் நின்று கவிஞர் போற்றியுள்ளார். இதனை, 

ஆயர் மக்கள் அனைவரும் ஒன்றாய்
ஆநிரைத் தொழுவினை அறிய நடந்தனர்
தேவதூ தன் செப்பிய படியே
பொன்னொளி மாலைப் புகழுடம் பணிந்து
மின்னலின் பிழம்பாய் மேனி வடித்துத்
தண்ணொளி பரப்பும் தகைசால் மைந்தனைக்
கண்ணால் கண்டு களித்தனர் ஆயரே

என்ற அவரது பாடல்  சுட்டுகின்றதாக  உள்ளது. இயேசு என்னும் பாலகனது பிறப்புச் செய்தியைத் தேவதூதர்கள் அறிவித்தவுடனே, ஆயர்கள் அனைவரும் அவ்வற்புதக் காட்சியைக் காணப் புறப்பட்டுச் செல்லுகின்றனர். அங்கு தேவதூதர்களின் சொல்லுக்கிணங்க மாட்டுக் கொட்டிலில், பொன்னார்மேனியுடன், மின்னலின் பிழம்பாய் மேனிதுலங்க, குளிர்ந்த ஒளி பரப்பும் மதியயன விளங்கும் இயேசுபாலனைத் தமது கண்களால் கண்டு களித்தனர்.

இரட்சணிய யாத்திரிகத்தில் பாடப்பட்ட கிறிஸ்துவின் பிறப்புக் காட்சி வேறு பல தமிழ்க் கிறித்தவ நூல்களிலும் பாடப்பட்டுள்ளன. கிறித்தவத்  திருமறைக்கிணங்க, சிறிதும் வேறுபாடில்லாது அவை பாடப்பட்டுள்ளன என்பதை  உணரும்பொழுது இந்நூல்களின் பெருமையை, குறிப்பாக இரட்சணிய யாத்திரிகத்தின் சிறப்பினை அறிந்து போற்ற முடிகின்றது. (தொடரும்).

Sunday, 30 October 2016

இரட்சணிய யாத்திரிகம், இறைவனின் பண்புகள்

இரட்சணிய யாத்திரிகம்

இறைவனின் பண்புகள்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்

இறைவன் நீதி, கருணை, தூய்மை, அன்பு, தானாயிருத்தல், வல்லமை, அறிவு முதலிய பண்புகள் நிறைந்தவர். மேலும் அவர் குற்றமற்றவர், காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழிக்கின்றவர்; பாவத்தை எரிக்கின்றவர், ஆதியும், அந்தமுமானவர் என இறைவனது பண்புகளை இரட்சணிய யாத்திரிகம் விரித்துரைக்கின்றது. அடுத்து இறைவன் பண்புகளை கலியாண குணத்து இறை என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி,

“நித்தியமாய்ப் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையமாகிச்
சத்திய ஞானந்தர்மம் தயை சாந்தம் பரிசுத்தஞ் சர்வசக்தி
இத்தகைய அனந்த கலியாண குணத்து இறை”

எனக் கூறியுள்ளது. இப்பாடலால் இறைவன், என்றும் அழியாமை, முழுமை, களங்கமின்மை, பேரானந்தம், சத்தியம், ஞானம், தர்மம், தயவு, சாந்தம், தூய்மை, சர்வசக்தி முதலான அளவற்ற கலியாண குணங்களுக்குரியவன் என்ற இறைநிலையை அறிய முடிகின்றது. இறைவனின் தன்மையைத் திரியேகத் தன்மையாகக் கருதுவது சமய உலகப் பொதுச் சிந்தனை. பல்வேறு சமயங்களிலும் திரியேகம் பற்றிய சிந்தனை உண்டு. ஆனால் வேறுபாடுடையது. கிறித்தவ சமயத்தில் இறைவன் பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியாகவும் உள்ளார் என்ற கணிப்பு பிற சமயங்களில் காணப்படாத தனிநிலை எனக் கூறலாம். சைவ, வைணவ சமயங்கள், இலக்கியங்கள் கூறும் திரியேகத்தைக் கிறத்தவமோ, தமிழ்க் கிறித்தவ இலக்கியங்களோ கூறவில்லை. எனினும் கிறித்தவத்தில் சொல்லப்படும் திரித்துவத்தை. திரயேகநிலையைச் சுட்ட சைவ, வைணவ இலக்கியங்கள் பயன்படுத்திய சொற்களை எடுத்தாண்டுள்ளது. இரட்சணிய யாத்திரிகம், சச்சிதானந்தம்; என்று இறைமையைக் கித்தவ சமய திரித்துவத்தோடு இணைத்துக் கூறியுள்ளது. மேலும், திரியேகதேவன், திரியேகன், திரியேகபரமன், மூவரிலொருவராம் முதல்வன் என்பன திரித்துவம் குறிக்க அவர் பயன்படுத்திய சொற்களாகும். இரட்சணிய யாத்திரிகப் பாடலொன்றில்,

“சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமு மிலதாய்ச்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே”

என வந்துள்ளமை சிறப்பாகச் சுட்டுதற்குரியது.

பிதாவாகிய இறைவன் அழிவில்லாதவராகவும், நிலைபெற்றவராகவும், உலகங்கள் யாவையும் சொல்லொன்றால் படைத்து, தமது படைப்பு நன்றென மகிழ்ந்து உலகிற்கு மீட்பை அருளுகின்ற சத்தியமும், ஞானமும், ஆனந்தமுமாக விளங்குகின்றார். அவரே எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய முதற்பொருள். இறப்பு, நிகழ்வு, எதிர்ப்பு என்னும் முப்பாகுபாடுகளையும் கடந்துநிற்பவர். வேதங்களால் அளவிட முடியாத அருட்பெருங்குணங்களும் செயல்களும் அடைந்த நல்ல தலைவன். அவர் தொடக்க காலமுதல் மெய்யான திருவாக்காகவும், ஒளியாகவும், விளங்கி இவ்வுலகத்திற்கு வந்தவரான கிறிஸ்து என்னும் தம் காதல் மைந்தனைக் கருணையால் தந்து இவ்வுலகிற்கு மீட்பை, இரட்சிப்பை புதுப்பித்து உண்டாக்கிய தந்தை எனப் பிதாவின் தன்மை சுட்டப்பட்டுள்ளது.

இறைவனாகிய குமாரன்,, கிறிஸ்து என்னும் மனித குமாரனாகப் பிறந்து, தமது திருநோக்கால், திருவாக்கால், திருவருளால், திருச்செயலால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்து, பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, பிதாவின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார் என்பது கிறித்தவ சமய நம்பிக்கை. மனித குல மீட்பானது, அவர் மனித குமாரனாக வந்ததால் கிடைத்தது. கிறிஸ்துவின் பிறப்புச் செய்தியை இரட்சணிய யாத்திரிகம்.

வானோ மகிதலமோ சுடர்மதியோ வயங்கொளிவர்வான்
மினோ விரிகடலோ மழைமுகிலோ வொருவதியில்
ஆனா நெறியமைந்தாக்கிய அகிலாண்ட அச்சுதனோர்
ஊனாடிய திருமேனி கொண்டுதிதார் உலகுவப்ப

எனக் கூறியுள்ளது.

இரட்சணிய யாத்திரிகத்தில் இடம் பெற்றுள்ள இரட்சணிய யாத்திரிகப்பாடலும் இறைமையைப் பெரிதும் வெளிப்படுத்தும் பகுதி எனலாம்.  இரட்சணிய யாத்திரிகம் கூறும் இறைமை, மனிதகுல மீட்புச் செயலில் அடங்கியுள்ளது. கிறித்தவ சமயம் மீட்பின் சமயம் என்பது இரட்சணிய யாத்திரிகத்தின் முடிந்த முடிவு. மனித குமாரனின், கிறிஸ்துவின் மனித குல மீட்பு செய்தியை,

தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்தெந்தாய்
இன்னதென வறிகிலார் தாம் செய்த திவர் பிழையை
மன்னியுமென் றெழிற் கனிவாய் மலர்ந்தார் நம்மருள் வள்ளல்
என்றும்,

கீண்டிருப்பு முறையுடலைக் கிழித்துருவி வதைப்புண்டு
மாண்டுபடும் போதிவர்க்கு மன்னியும் என்றுரைத்த மொழி
ஈண்டிவரே உலகினுக்கோர் ரட்கசகர் என்றெடுத்துரைக்கும்
வேண்டுமாயினிச் சான்று இதை விடுத்து வேறொன்றே
என்றும் பாடியுள்ளது. 

கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை,

இன்னதோர் அமையந்தன்னில் இருநில உலகிற்கெல்லாம்
பன்னரு நலத்த தாய் பரகதிப் பயனை ஈட்டித்
துன்னிய ஐடவியோகத் துயிலுணர் சூழ்ச்சிபோல்
உன்னத தேவமைந்தன் உயிர்தெழுந்த தருவிப் போந்தார்
எனக் கூறியுள்ளது.

பரிசுத்த ஆவியாகிய கடவுள், திருமறையின் ஒளியை மனத்தில் ஒளிவிடச் செய்து, அஞ்ஞானமாகிய இருள் விலகும்படி நீக்கி, எக்காலத்தும் ஒப்பற்ற மீட்பிற்குத் துணையாக நின்று, அடியார்களை வழிநடத்துவதே குறிக்கோளாகக் கொண்டு, எண்ணுகின்ற நற்செயல்களெல்லாம் கைகூட தம் அருட்பெருங்கருணையைத் தருபவர் எனப் பரிசுத்த ஆவியாகிய கடவுளின் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பரிசுத்த ஆவியாகிய இறைவன் ஆற்றும் செயல்களாக ஏழு செயல்களைக் குறிப்பிட்டுள்ளது. அவை, உள்ளத்தில் உள்ள கோணலைத் திருத்துவது, மெய்பக்தி என்னும் விதையை மனத்தில் விதைப்பது, விதைத்தது முளைத்துள்ளதா எனப் பார்த்து அதற்கு அருள்நீர் பாய்ச்சுவது, துன்பங்கள் என்னும் களைகளை அகற்றுவது, வளரும் பக்தியாகிய பயிர் வாடாமல் காப்பது, பரிசுத்த ஆவியின் கனிகளை விளையச் செய்வது, தம் அடியார்களின் கூட்டத்தை வாழச் செய்வது என்பனவாம்.
“பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என இறைமையைக் கூறிய இரட்சணிய யாத்திரிகம்,

ஒன்றிலே மூன்றாய் மூன்று மொன்றதா யுலப்பிலாததாய்
நின்றுல கனைத்தும் தூயநினைவுமாத் திரையிற்தந்த
நன்றென வுவந்திரஷை நல்கு மெய்ஞ்ஞானத்தைக்
குன்றினை அகத்துத் தாங்கிச் சிந்தனை கூடி வாழ்வாம்”
என்றும், 

“தந்தையாகி உலகனைத்தும் தந்து மனுக்குள் தமைப்புரக்க
மைந்தனாகிப் புனிதாவி வடிவாய் ஞானவரமருளிப்
பந்தமற நின் றிலங்கு திரியேக பரமன் பதாம்புஜத்தைச்
சிந்தையாரத் தொழுதேத்திச் சேரவாரும் ஜெகத்தீரே”
எனவும் அழைப்பு விடுக்கின்றது.                                             தொடரும்.

Thursday, 6 October 2016

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- எம்.சி.குமார், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.,
விரகாலூர்
குரு தரிசனப்படலம் தொடர்ச்சி :
விண்ணகத்தின் சிறப்பு

விண்ணகத்தில் எல்லாம் வல்ல இறைவனே ஆட்சி செய்கின்றார். அங்கு தூய்மை, அறம், அருள் முதலியவை சிறந்து விளங்குகின்றன. இறைவனுடைய மாட்சியால் அந்நாடு செழித்து விளங்குகின்றது. அந்நாட்டிலிருந்து அருளாகிய மேகம் கிளம்பி அன்பாகிய கடலில், அமுதமாகிய நீரை எடுத்துக் கொள்ளும். அது தெய்வத்தன்மை பொருந்திய  ஒப்பற்ற அருள் மழை பொழியும். நன்மை தரும் வெள்ளம் பெருகி வாழ்வளிக்கும் கங்கையாறாய் அந்நாட்டில் ஓடும். அந்த நதி மிக உயர்ந்த இமயமலையிலிருந்து இறங்கி தூய கற்பக மலரை ஏந்தி இரு கரைகளில் சிறந்த மேலான ஞானமணிகளை ஒதுக்கி, உலகம் செழிக்குமாறு பெருக்கெடுத்து ஓடியது. தந்தை, மகன், தூயாவி என்னும் மூன்று சிகரங்களிலிருந்து தோன்றி குற்றமில்லாத அறிவாகிய உணவுப்பொருள்களை விளையச் செய்து, அதை  உண்ணுமாறு உணவைத் தந்து கறைபடிந்த பித்தளை உலகை, தூய்மை விளங்கும் பொன்னுலகமாக்கி, மேன்மை பொருந்திய ஒழுக்கத்தை எக்காலமும் உடையதாக இருக்கும்.

“அருண்முகில் கிளம்பி யன்பி னார்கலி யமுதமொண்டு
திரமலி தருர ட்சண்ய திவ்விய சிகரி போர்த்துப்
பொருவருங் கருணை மாரி பொழிந்த புண்ணியமா நீத்தம்
ஒருமக மாகி ஜீவ கங்கையா யுலாய தன்றே”

இந்த ஆறு, திருமறைக்கு ஒப்பானாதாய் உள்ளும் வெளியும் தெளிவுடையதாய் குற்றங்களாகிய மரங்களை முறித்துத்தள்ளி நன்மைதரும் சிறந்த நெற்பயிர் வளரச் செய்து செழுமையை உண்டாக்கி பேரின்பக் கடலுள் சென்றுசேரும் தன்மையை உடையதாகும்.

இந்த ஆறு, இயேசுபெருமானின் அருளைப் போல விளங்குகின்றது. குளிர்ந்த அருளையுடையதாய், உயிருக்கு ஆதரவான வடிவம் பெற்றதாய், விண்ணிலிருந்து இறங்கிவரும் புதுமை அடைந்து, கட்டளைபடி நல்லொழுக்கம் கொண்டு உலகமக்கள் வாழ அன்பு பூண்டு உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுகின்றது.

இந்த ஆறு இம்மானுலேரின் இரத்தத்தைப் போன்றது. மனிதருடைய வாழ்வின் குற்றங்களின் அழுக்கைக் கழுவி, தூய்மையான உணவாகி, தாகம் தணிக்கும் தண்ணீருமாகி எப்பொழுதும் அறிவு வாழ்வை வளர்த்து, நற்பேறு அடைதலாகிய வாழ்வைத் தந்து பயன்படுகின்றது. மேலும் ஐந்து வகையான நிலங்களின் வேறுபாடுகளை நீக்கி, மருத நிலமாக வளப்படுத்தி அறத்தைப் பாதுகாத்து உயர்வு தாழ்வு இல்லாமல், மண்ணுலகில் எங்கும் சமமாய் நடத்தும் ஆற்றல் மிகுந்த இறைவனின் ஆணையைப் போன்றது. விரிந்த விண்ணில் தோன்றி, பல யுகங்களாக அசைந்து, நின்று அழிந்து, புறவுலகில் தோன்றும் பற்பல கோடிக்கணக்கான வியர்க்கத்தக்க வேறுபாடுகளின் வாழ்வு, கங்கையாற்றின் நீர்க்குமிழ்களைப் போன்று அழகாய் மிகுந்து காணப்படும்.

“புண்ணிய நதிதீ ரத்துப் பொருவரு மருத வைப்பில்
நண்ணிய பயிர்வ ருக்கந் தருக்குலம் பிறவு நல்கும்
எண்ணரும் பயனையீட்டி யிறைவனைப் பரவித் துய்த்துக்
கண்ணகன் றிருநா டெங்குங் கடிவிழாக் கொள்ளுமன்றே”

மிகுந்த வனத்தையுண்டாக்கி, நிலையான வாழ்வுதரும் கங்கையாறு எல்லா இடங்களுக்கும் பிரிந்து சென்று குளம், மடு, தடாகம் முதலியவற்றைக் குறைவில்லாமல் நிரப்பி உண்மை பொருந்திய மருத நிலத்தின் களங்கத்தை நீக்கி, இதயமென்னும் வயல்களில் சென்று சேர்ந்தது. இறைவனுடைய நிலத்தை வளப்படுத்தும் உழவர்கள், ஏரினால் நிலத்தை உழுது, இறைவனை வணங்கி, விதைகளை விதைத்து, நீரைப் பாய்ச்சி எப்போதும் பயிர் வளத்தை உண்டாக்குவர். பிறவிப் பாவமும், நாம் அன்றாடம் செய்யும் பாவங்களாகிய புதிர்களை திருமறையாகிய வாளைக் கொண்டு வேரோடு வெட்டிச் சாய்ப்பர். நன்மை தரும் தூய நீர்க்கால்வாய்களைக் கொண்டு காட்டு நிலங்களை மருத நிலங்களாக மாற்றிப் பயன்படுத்துவர்.

“ஜீவநீர்த் தடங்க டோறுஞ் செழும்புணல் குடைவோ ரீட்டம்
தாவருங் கழனி தோறுந் தருமச்செஞ் சாலி யீட்டம்
பூமலர் பொய்கை தோறும் புதுமதுத் திவலையீட்டம்
மீவரு மெழிலி தோறும் வேந்தனோர் கருணையீட்டம்”

நம்பிக்கை ஏராகவும், ஆர்வம், ஊக்கம் ஆகிய இரண்டையும் எருதுகளாகவும், கடமையே எருதுகளை இணைக்கும் நுகத்தடியாகவும், ஒரே சிந்தையே அவற்றைக் கட்டும் கயிராகவும், இறைவனுடைய திருவார்த்தையை நன்றாக உழுது மனமாகிய வயலை வளமாக்கி திருப்பணி செய்வர். களைப் பரித்து பயிரைப் பாதுகாப்பர். மேன்மை பொருந்திய திருநாடெங்கும் உழவரின் உழைப்பினால் நெற்பயிரில் கருத்தோன்றி கதிர் முற்றி விளைந்து மிகுந்த இன்பத்தை உண்டாக்கும்.

வீரர்கள் தேனை உண்டு மகிழ்வர். மக்கள் மகிழ்ந்து நிழலில் அமர்ந்து இறைவனின் பண்புகளையும், பெயர்களையும் நெஞ்சம் நெகிழ்ந்து உள்ளம் உருகிப்புகழ்ந்து இசைப்பாடுவர். கரும்பு கணுக்களை விட்டு வளர்ந்து இனிய சுவை மிகுந்த பாகினைத் தரும். இறைமக்கள் இன்புற்று அனுபவிப்பர்.

விண்ணுலகில் உள்ள விண்நகரைச் சுற்றிலும் மலையரண், மதிலரண், நீரரண் உண்டு. இந்நகரின் கோபுர வாயிலில் செந்நிறக்  சிலுவைக்கொடி, தேடி வரும் வாடிய மக்களை வருக வருகவென வரவேற்கும். இறைவனைப் போற்றும் வாழ்த்தொலி இந்நகரெங்கும் கேட்கும். பல வண்ணங்களுடைய மாளிகைகளும், வாழ்வு தரும் நீர் நிலைகளும் அங்கு உண்டு. இறைவனுடைய மாட்சியே அங்கு ஒளியாய் விளங்கும். அங்கு இன்பத்தைத் தவிர துன்பம் என்பதே இல்லை. இறைவனுடைய அருள் செல்வம் திருக்கூட்டத்தினரின் நட்புறவு, இறைவனைப் போற்றும் இசையயாலி, இத்தகைய பேரின்பச் செல்வங்கள் அங்கு உண்டு.

அந்நகரத்தில் இறை தூதர்களும், தூய ஆவியின் கூட்டமும் இறைவனின் ஆணையின்படி ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடன் பணி செய்யும் கூட்டமும் இயங்கும். இறைவனை தூயவர், தூயவர், தூயவர் என்னும் மும்முரசு ஒலியும் இறைவனை வானவர் வாழ்த்தும் ஒலியும், பாடல் ஒலியும், யாழின் ஒலியும் அந்நகரில் எங்கும் கேட்கும். இங்குள்ள ஆற்றில் குளிப்பவர் மரணமில்லா வாழ்வைப் பெறுவர். இறைவனுடைய அருள் செல்வம், இறைமைந்தனின் திருக்காட்சி, அறிவுத் தெளிவினைத் தரும் தூய ஆவியின் தொடர்பு, இறைவனைப் புகழ்ந்துபாடும் பாடகர்களும், பாடல்களும் அந்நகரில் உண்டு. (தொடரும்)

Ads Inside Post