Pages - Menu

Showing posts with label Humility. Show all posts
Showing posts with label Humility. Show all posts

Friday, 11 May 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

22. தொண்டர்களுக்கும்  வேண்டும் பணிவு...
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

கடந்த இரண்டு மாதங்களாக தலைவருக்குத் தேவையான பணிவையும் தாழ்ச்சியையும் சிந்தித்தோம். தலைவருக்கு மட்டுமல்ல தலைவருக்குக் கீழே இருக்கின்ற உறுப்பினர்களுக்கும் தொண்டர்களுக்கும் பணிவு அடிப்படையானது என்று சிந்திக்க அன்புடன் அழைக்கின்றேன். 

2013 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டும் வரை அமெரிக்காவில் பார்லின் என்ற பங்கில் பணியாற்றினேன். நான் உதவிப் பங்குத்தந்தை. பங்குத் தந்தை மிகவும் நல்லவர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 93 வயதாகும் அவருடைய தாய், அருகிலிருக்கும் தன் இடத்திலிருந்து விருந்துண்ணுவதற்காக வருவார். பாதர் என்னையும் அழைப்பார். பாதர்தான் சமைப்பார். நன்றாகவே சமைப்பார். ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது பாதரின் தாய்  பாதரிடம் ‘ஜேம்ஸ் அந்த கரண்டியை எடு’ என்றார். பாதர்க்கு கோபம் வந்துவிட்டது. ‘தயவு செய்து’ என்று சொல்லுங்கள்  என்றார். அவரும் அவ்வாறு சொல்ல பின்னர்தான் கரண்டியை எடுத்துக் கொடுத்தார். அந்த அம்மா அதைப்பற்றி கொஞ்சமும் வருத்தப்படவில்லை. தமக்கு வயதாகிவிட்டது. அதனால் மறந்து விடுகிறது. என் மகன் அதனை நினைவுப்படுத்துகிறான். என்னிடம் தவறு இருக்கும்போது நான் அதைத்திருத்திக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையே அவரிடம் மேலோங்கி இருந்ததைப் பார்க்க முடிந்தது.

தலைவர்களுக்கு நிச்சயம் தேவை பணிவு. பணிவு இல்லாமல் ஒரு தலைவர் புரியும் அனைத்து நல்லக் காரியங்களுக்கும் முகவரி இருக்காது. ஒரு தலைவருக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் பணிவுத் தேவை. தொண்டர்களுக்குத் தேவையான பணிவை பின்வரும் விவிலிய வரிகள் சுட்டிக் காட்டுவதைப் பார்க்கலாம்.

(1 தெச 5.12-13) ‘சகோதர சகோதரிகளே உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களை வழிநடத்தி உங்களுக்கு அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பணியின் பொருட்டு அவர்களை உயர்வாகவும் அன்புடனும் கருதுங்கள்.’  (எபிரே 13.17) ‘உங்கள் தலைவர்களுக்குக் கீழ்படியுங்கள். அவர்களுக்கு பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பா யிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியு ள்ளதாய் இருக்கும்படி நடந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.’ சரிங்க உங்கள் தலைவர்களுக்கு எப்படி உங்கள் பணிவைக் காட்டுவது என்று தானே கேட்கிறீர்கள்? அதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.உங்கள் தலைவருக்கு மதிப்பளியுங்கள்.

நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆசரியர் ஒரு மாணவனை மாணவர் தலைவனுக்காக நியமிக்கிறார். அப்பொழுது உங்கள் இயல்பான நடவடிக்கை அவருக்கு எதிராக பேசுவதும் இருப்பதும் ஆகும். ஒரு சில நேரங்களில் மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பது எளிதானக் காரியமாக இருக்கலாம். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையில் சிக்கல் இருக்காது. (குருமடங்களில் குருக்களுக்கு குருமாணவர்கள் பயந்து நடப்பது). சிலர் வேலை போய்விடக் கூடாது அல்லது பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலே இருப்பவர்களுக்கு மதிப்பளிப்பார்கள். உண்மையான தாழ்ச்சி நிறைந்தவர்கள் எந்த விதமான பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பதவியில் உள்ளவர்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தலைவர்கள் குறைகளே இல்லாமல் இருந்ததால்தான் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்றில்லை. இந்த உலகில் குற்றம் குறைகள் இல்லாதவர்கள் யார்? தலைவர்களின் குறைகளோடு அவர்களுக்கு மதிப்பளிக்கும்போது நம் பணிவு முழுமை பெறுகிறது.

2. உங்கள் தலைவரை பின்பற்றுங்கள். 

பொதுவாக சொல்லுவார்கள் ‘நாம் நாமாக இருக்க வேண்டும். யாரையும் பார்த்து நாம் மாறத் தேவையில்லை.’  ஒரு விதத்தில் பார்த்தால் அது உண்மைதான். ஆனால் இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் தலைவர்களிடத்தில் இருக்கின்ற நற்பண்புகளை நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற முன்வர வேண்டும். ஒருவரை தலைவராக நியமித்து இருக்கிறார்கள் என்றால் அவருடைய உயர்ந்த பண்புகள் திறமைகள் அடிப்படையில் தான் நியமித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ஒவ்வொருவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வி­யங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குருவானவர் நன்றாக திருப்பலி வைப்பதை பின்பற்றலாம். (சில குருவானவர்கள் எப்படி திருப்பலி வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்). எப்படி பாடம் நடத்த வேண்டும் என்பதற்கு  உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பொறுமை காக்க வேண்டும் என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம்.  எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பதற்கு சிலர் உதாரணமாக இருக்கலாம். காலம் தவறாமையை கடைபிடித்து சிலர் நமக்கு உதாரணமாக இருக்கலாம். நமக்கு மேலே இருப்பவர்களிடம் மட்டுமல்ல. நமக்கு கீழே இருப்பவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள ஆயிரம் வி­யங்கள் உண்டு என்பதையும் மனதில் கொள்வோம்.

3. உங்கள் தலைவருக்குக் கீழ்ப்படியுங்கள்  

அண்மைக் காலமாக திருச்சபைத் தலைவர்களிடத்தில் ஓர் அருமையான மாற்றத்தைப் பார்க்கிறேன். அவர்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட குருக்களையும் கன்னியர்களையும் பொதுநிலையினரையும் கலந்தா லோசிக்கிறார்கள்.  முன்னொரு காலத்தில் எந்த விபரமும் சொல்லாமல் கீழ்ப்படிய வேண்டும் என்று திருச்சபைத் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். நம்  மூளையின் பலம் அபாரமானது. ஆனால் அது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. இந்த உலகில் உள்ள அனைத்தும் குறையுள்ளது. எனவே நம் மூளையும் குறையுள்ளது. நம் தலைவர்களின் சூழ்நிலைகள் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. 

கீழ்ப்படிதல் என்று சொல்லும் போது இரண்டு விதத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஒன்று தலைவர் விரும்புவதைச் செய்வது. இரண்டு தலைவர் எடுக்கும் காரியங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பது. ஒரு தலைவர் குறிப்பிட்ட கருத்தோடு குறிப்பிட்ட திட்டத்தையும் முன்மொழிந்தால் அந்த தலைவரின் மனப்பான்மையோடு ஒன்றிணைந்து செயல்படுத்துவதற்கு முன் வர வேண்டும். 

அது சரிங்க ஒரு தலைவர் தவறு செய்ய சொன்னால் செய்யலாமா? என்று தானே கேட்கிறீர்கள். உங்கள் தலைவர்க்கு தகுந்த விதத்தில் தகுந்த மரியாதையோடு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். கீழ்ப்படிவதில் மட்டுமல்ல உண்மை நிலையை எல்லோருக்கும் எடுத்துரைப்பதிலும் நம் பணிவையும் தாழ்ச்சியையும் எடுத்தியம்ப முடியும்.            (தொடரும்...)

Saturday, 7 April 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 21. நல்லத் தலைவரின் அடையாளங்கள்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஒரு பணக்கார நாட்டிற்கு பெருமளவில் வேறோரு நாட்டிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். பொதுவாக என்ன நடக்கும்? ஒரு சில பேர் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பார்கள். ஒரு சில பேர் அவர்கள் குடியேறுவதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். அதனால் அந்த நாட்டின் தலைவர் அகதிகளைக் கண்டும் காணாமல் விட்டு வருவார். ஆனால் அண்மையில் ஒரு நாட்டின் தலைவர் விமானநிலையத்திற்கே சென்று அகதிகளை வரவேற்று அவர்களுக்கு குளிர் போக்கும் ஆடைகளை வழங்கி வரவேற்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆமாங்க சிரியா நாட்டு அகதிகளை வரவேற்ற கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூமோதான் அவர்.

ஜஸ்டின் ட்டூடோ ஒரு நல்ல தலைவர். ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் பல அவரிடம் உள்ளன. அவற்றில்  சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால் 

 - அவர் எளிமையானவர். எளிமையாக எல்லோராலும் அணுகக்கூடியவர். அவரைப் பற்றி அவரது குடும்பம் பற்றி பேசத் தயங்காதவர். அவர் சிறிய வயதில் ஏழ்மையில் வாழ்ந்ததை பகிர்ந்து கொள்பவர். அவர் போதைப் பொருள்களை எடுத்துக் கொண்டதை மறைக்காதவர்.

- ஏழைகள் மீதும் ஒடுக்கப்பட்டோர் மீதும் கரிசனை கொண்டவர். சிரியா அகதிகளை இருகரம் விரித்து வரவேற்பவர். தம் அமைச்சரவையில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் அளித்தவர்.

- பிற இன மக்களுக்கும், பிற சமய மக்களுக்கும் மதிப்பு அளிப்பவர். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளை வரவேற்பவர். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக் கூறியவர்.

- ஒரு நல்ல தலைவரின் அடையாளங்கள் எவை என்று கேட்டால், நீங்கள் பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வீர்கள். என் மனதில் பட்ட தாழ்ச்சியின் அடிப்படையில் மூன்று அடையாளங்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன். 

1. ஒரு நல்லத் தலைவர் எளிதாக அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். இந்த உலகின் சிறந்த தலைவர் இயேசு. அவர் எப்போதும் எல்லோராலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். இயேசுவும் திறந்த உள்ளத்தோடு எல்லாரையும்  சந்தித்தார்.

தொழு நோயாளர் அவரை சந்தித்தனர்
குருடர்கள் அவரைத் தேடி வந்தனர்
ஏழைகள் அவரை நாடி வந்தனர்.
பணக்காரர்கள் அவரிடம் பேசினார்கள்
படித்தவர்கள் அவரை சூழ்ந்த வண்ணம் இருந்தனர்
பாமரர் அவரைப்  பின்பற்றிச்  சென்றனர்
குழந்தைகள் அவரை தொடுவதற்கு முயற்சி செய்தனர்
பாவிகள் அவரிடம் அடைக்கலம் புகுந்தனர்.

யாருக்கும் எந்த விதமான அச்ச உணர்வும் இல்லை. எல்லோரையும் இயேசு சமமாக மதித்தார். உடல் நோயால் வருந்துவோருக்கு உடல் நலம் அளித்தார். பாவிகளை அரவணைத்தார். மத்தேயுவை சந்தித்தார். அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும் வழங்கினார். 

சரிங்க, நீங்கள் எளிதாக அணுகக் கூடிய தலைவரா?  என்பதை அறிய ஒரு எளிய சோதனை இருக்கிறது. நீங்கள் ஒரு கூட்டத்திற்குச்  செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் அதிகம் உரையாடுவது, உறவாடுவது அதிகம்  படித்த, பதவிகள் உடைய பெரிய ஆட்களிடமா?  (High Profile People)   அல்லது முக்கியம் இல்லாத பாரமரரிடமா? பாமரருக்கு முன்னுரிமை அளித்து எல்லாரிடமும் நன்கு பழகினால் நல்லத் தலைவரின் வரிசையில் நீங்கள் உள்ளீர்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

2. ஒரு நல்லத் தலைவர் அனைவரின் கருத்துகளையும் வரவேற்று ஏற்புடையவற்றை செயல்படுத்தத் தயங்காதவர். உழவர் சந்தை என்ற ஒன்று நம் ஊரில் இருக்கிறது அல்லவா? ஒரு தலைவர் அதை கொண்டு வந்தார். இன்னொருத் தலைவர் அதை மூடி வைத்தார். மாறாக ஒரு நல்லத் தலைவர் மற்றவர்கள் கொண்டு வந்த நல்லக் காரியங்களைத்  தொடருவார். பொதுவாக அடுத்தவர்கள் நமக்கு அறிவுரை வழங்கும் போது நாம் செய்கின்ற முதல் காரியம் நம்மை நியாயப்படுத்துவது தான். நாம் கேட்கின்ற முதல் கேள்வி, “எனக்கு அறிவுரை சொல்ல நீ யார்?” நாம் சொல்கின்ற முதல் பதில் “அறிவுரை சொல்வது எளிது. என் இடத்தில் இருந்து பார்த்தால் புரியும்”. 

அன்புமிக்கவர்களே, நேர் மறையான விமர்சனங்களை மட்டுமல்ல, எதிர் மறையான விமர்சனங்களையும் ஏற்றுக் கொண்டால்தான் விமர்சனங்கள் தொடரும். இல்லையேல் நமக்கு ஏன் வம்பு? என்று விமர்சனங்கள் செய்வதை நிறுத்தி விடுவார்கள். நமக்கு மேலே உள்ளவர்களின் கருத்துகளை மட்டுமல்ல நமக்குக்  கீழே உள்ளவர்களின் கருத்துக்களையும் உள்ளன்போடு ஏற்று செயல்படுத்துவோம்.

3. ஒரு நல்லத் தலைவர் தம்மை
 முழுமையாக வெளிப்படுத்துவார். தலைவர் என்று சொல்லும்போது குறை இல்லாதவர் இல்லை. குறைகளைக்  கடந்து செயல்படுவதற்கு முன்வருபவர். எனவே நம் குறைகளைப்  பிறர் அறிவதை நாம் தடை செய்யக் கூடாது. அதே வேளையில், நம் குறைகளை எப்போதும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக நம் உண்மைத் தன்மையை  (Personality) மக்களுக்கு உணர்த்த வேண்டும். மக்களிடத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட வி­யங்களின் உண்மை  நிலையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் மக்களிடத்தில் நம் மதிப்பு கூடும். நம் குறைகளை மறைத்தால் மக்கள் நம்மை சந்தேகிப்பார்கள். நம் இயலாமைகளை மக்கள் அறிய செய்தால்  மக்கள் நம் பணிவைப் போற்றுவார்கள்.

சரிங்க, நல்லத் தலைவர்களைப் பற்றி பார்த்தோம்.  இந்த உலகில் மிக மோசமானத் தலைவர்கள் யார் தெரியுமா? அடிப்படை ஞானம் இல்லாத, வெறியை ஊட்டுகின்ற, தன்னலம் மிகுந்த, ஆணவம் நிறைந்த , ஊழல் செய்து வாழ்கின்ற  நம்ப ஊர் அரசியல் வாதிகள் தான்.  (தொடரும்...)

Thursday, 1 March 2018

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

 19. தம்மை நீதிமான்களாக எண்ணுவோர்......

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

அவர் அடிப்படையில் நல்லவர். ஆனால் அவர் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. அவருடைய மனைவி அவரை புரிந்து கொள்ளவில்லை. அவருடைய பிள்ளைகள் அவரை மதிப்பதில்லை. அவருடைய பேச்சை யாரும் கேட்பதில்லை. அவருக்கு உலக வாழ்வே வெறுத்துவிட்டது. அந்த  ஊரில் மிகவும் புகழ் வாய்ந்த  முனிவர் ஒருவர் இருந்தார். நல்லவர் அந்த முனிவரிடம் சென்று, “முனிவரே, எனக்கு இந்த உலகம் வெறுத்துவிட்டது. நான் மோட்சத்திற்கு செல்ல வேண்டும். இப்போதே நான் மோட்சத்திற்கு செல்லும் வழியைக் காட்டுங்கள்” என்றார். முனிவரும், “கவலைப்படாதீர்கள் நண்பரே, இந்த வழியாக எங்கும் நிற்காமல் 100 நாட்கள் செல்லுங்கள். ஓர் ஓலைக்குடிசை இருக்கும். அங்கே இரவு தங்கி விட்டு மீண்டும் 100 நாட்கள் செல்லுங்கள். மோட்சத்தை அடைந்து விடுவீர்கள்”  என்றார். மகிழ்ச்சியோடு அந்த நல்லவரும் புறப்பட்டார். முனிவர் சொன்னதைப் போலவே 100 நாட்கள் நடந்தார். 

ஓலைக்குடிசையும் வந்தது. அதில் உறங்குவதற்கு முன்பு தாம் செல்லும் வழியை மாற்றிவிடக் கூடாது என்பதற்காக தன் காலணிகளை செல்லும் வழிநோக்கி வைத்தார். முனிவரின் சீடர் ஒருவர் அந்த ஊரில் இருந்தார். அவர் அந்த நல்லவர் நன்கு உறங்கிக் கொண்டிருந்த போது காலணிகளின் திசையை மாற்றி எதிர்திசையில் வைத்துவிட்டார். காலையில் எழுந்த நல்லவர் மீண்டும் உத்வேகத்துடன் நடக்கத் தொடங்கினார். 100 வது நாளில் ஓர் ஊரை அடைந்தார். அதுதான் மோட்சம் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். அந்த ஊர் தம் சொந்த ஊரைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். அவர் ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீடும் அவர் சொந்த வீட்டைப் போலவே இருந்தது. அந்த வீட்டில் ஒரு பெண்மணியும், சில பிள்ளைகளும் இருந்தனர். அவர்கள் மோட்சத்தில் இருப்பதால் நல்லவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவர்களிடம் அன்பாக பேசினார். அவர்களும் தன் கணவர் திரும்பி விட்டார். தம் தந்தை திரும்பி வந்துவிட்டார் என்று மகிழ்வோடு உறவாடினார். அந்த இடமே மோட்சமாக அவர்களுக்கு மாறியது. மகிழ்ச்சியை நாம் கைகொள்வதற்கு ஒரு சிறந்த வழி நாம் பார்வைகளை
 (Attitudes)  பரிசீலிப்பதாகும். நாம் உண்மையான பார்வைகளைப் பெறுவதற்கு ஒரு பெரும் தடையாக இருப்பது நான் நீதிமான் என்ற எண்ணம்.  (Self righteous attitude). ஆண்டவர்  இயேசு கிறிஸ்து தம்மை நீதிமான்களாக நினைத்துக் கொண்டு சாதாரண மக்களை குறைசொல்லி வாழ்ந்து வந்த பரிசேயர், மறைநூல் அறிஞர்களை கடுமையாகச் சாடுகிறார். இயேசுவின் காலத்திலும், ஏன் இப்பொழுதும் இறைநம்பிக்கை கொண்டோர் எளிதாக இந்த “நான் மட்டுமே நீதிமான்” என்ற எண்ணத்தில் வாழ்ந்துவிடுவதைப் பார்க்கிறோம். இறைநம்பிக்கை உடையவர்கள் மத்தியில் மட்டுமல்ல இறைநம்பிக்கை இல்லாத உலகைச் சார்ந்த மக்கள் கூட நான் இறைநம்பிக்கை உடையவர்களைப் போல வெளிவேடக்காரன் இல்லை” என்று நினைக்கலாம். 

சமய நல்லிணக்கத்தின் தொடக்கம் நாம் இந்த “நான் நீதிமான் பார்வையை” அகற்றுவதாகும். நம் மதத்தின் பெருமையை நாம் உரைப்பதில் தவறில்லை. மற்ற மதத்தினர் மனத்தைப் புண்படுத்தும்படியாக பேசுவது சமய உரையாடலுக்கு இட்டுச் செல்லாது. சில தேசியவாதிகள், பிரிவினை வாதிகள் நம் அழகிய இந்திய தேசியத்தின் அமைதியை குலைக்கின்றனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் மற்ற மதத்தினரின் உணர்வுப்பூர்வமான நம்பிக்கைகளை நாம் குறைசொல்வதால் சமய நல்லிணக்கம் குலைவதற்கு நாமும் துணை போகிறோமோ என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்
.
நீங்கள் செய்தித்தாளை படிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போது உள்ள பத்திரிக்கைகளில் சமூகத்தில் உள்ள அவலங்கள் தான் பிரதானமாக பிரசுரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்போது உங்கள் கருத்து என்ன? அந்த இடத்தில், அந்த சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் எப்படி நல்விதத்தில் நடந்து இருப்பீர்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். உங்களுக்கு ஓர் இரகசியம் சொல்கிறேன். உங்கள் இடத்தில், உங்கள் சூழ்நிலையில் உங்களைவிட சிறப்பாக செயல்படமுடியும் என்று எத்தனை பேர் நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அப்படி நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இயேசு தாம் நீதிமான்கள் என எண்ணியோரை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். இறைவேண்டல் புரியச் சென்ற இருவருள் இறை ஆசீர் பெற்று வீடு திரும்பியவர் தாழ்ச்சி மிகுந்த ஆயக்காரரே அன்றி “ தான் நீதிமான்”  என நினைத்த பரிசேயர் அல்ல என்று நிரூபித்தார். மத்தேயு நற்செய்தி 23 ஆம் இயலில் பரிசேயர், மறைநூல் அறிஞரின் “நீதிமான்கள் மனப்பான்மையை”  சாடுகின்றார். அவர் வாழ்வு முழுவதும் பரிசேயர், மறைநூல் அறிஞரின்“நான் நீதிமான்”  எண்ணத்தை எதிர்த்து போர் புரிகிறார் என்பதை நாம் காணமுடியும்.

நம் அன்றாட வாழ்வில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை நாம் உணரலாம். நம் தனிப்பட்ட வாழ்வில் கூட நன்மைக்கும், தீமைக்கும் போராட்டம் நடைபெறுவதையும் அதில் எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ அவ்வாறே நம் வாழ்வும் அமையும் என்பதையும் நாம் அறிவோம். அது சரிங்க, அதே வேளையில் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதாவது பிறர் தவறு செய்யும்போது நாம் அதை தவறு என்று எடுத்துச் சொல்வது நம் கடமைதானே. அந்த சமயத்தில் நாம் குற்றப்படுத் தலாமா? என்று எண்ணலாம்.  பிறர் தவறு செய்யும்போது அந்த குறையை அந்தக் குற்றத்தின் கடுமைக்கேற்ப நாம் சுட்டிக்காட்ட வேண்டும். அந்தக் குற்றத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அந்த குற்றத்தை சுட்டிக்காட்டும்போது நாம் என்னவோ தவறே செய்ய இயலாத புனிதர் போலவும் அவர் மட்டும் தான் குற்றம் செய்கிறார் என்பதை போலவும் நினைக்கக் கூடாது. மாறாக அவருடைய உண்மையான முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும்.

சரிங்க, உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் எந்த அளவிற்கு பிறரைப் பற்றி பிறருக்கு பின்னால் பேசுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு “நான் நீதிமான்”  என்ற எண்ணம் இருக்கிறது. இந்த எண்ணத்தை புதிய ஆண்டில் தவிர்க்க புறணி பேசுவதை தவிர்ப்போம்.
இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார்:

“தம்மை நீதிமான்களாக எண்ணுவோருக்கு ஐயோ கேடு. அவர்கள் அழிவை விரைவில்  காண்பார்கள். ஏனெனில் அழிவுக்கு முந்தியது அகந்தை”

Monday, 4 December 2017

பணிவு என்னும் இனிய பாதை, 18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!

பணிவு என்னும் இனிய பாதை
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

18. அனைத்தும் இறைவனின் கொடைகளே!

அநேகமாக அனைத்துக் கலாச்சாரங்களிலும் நன்றி விழா இருப்பதை நாம் காணலாம். அதாங்க  நம் பொங்கல் விழா. நம் நாடு வெப்பம் மிகுந்த நாடு. எனவே மழைக்காலம், குளிர்காலம் முடிந்த பிறகு விவசாயம் நன்முறையில் நடைபெற்றதற்காக ஜனவரி மாதத்தில் பொங்கல் விழாவை விமரிசையாகக் கொண்டாடுகிறோம். அமெரிக்கா போன்ற குளிர் மிகுந்த நாடுகளில் குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நன்றிவிழாவை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் நன்றிவிழா  (
Thanksgiving Day) நவம்பர் மாதத்தில் வரும் 4 வது வியாழக்கிழமை ஆகும். அந்த விழாவை கொண்டாடும் போது அவர்கள் விருந்தில் கட்டாயம் ஓர் உணவு வகை இருக்கும். வான்கோழி இல்லாமல் நன்றி விழா இருக்காது. அதற்கு ஒரு காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதாவது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா சென்று குடியேறிய போது அவர்கள் உண்ணுவதற்கு பெரிதும் துணைபுரிந்தது காட்டு வான்கோழிகள் தானாம். எனவே அதற்கு ஒரு நன்றியாக நன்றி விழாவின் போது வான்கோழி கட்டாயம் இடம் பெறுகிறது.

நன்றி விழா உணவை உண்ணுவதற்கு முன்பு வழக்கமாக தொடக்க செபம் (Grace) செய்வது வழக்கம். அந்தக் குடும்பத்தில் அனைவரும் சாப்பிடுவதற்கு முன்பாக ஜான் என்ற 8 வயது சிறுபிள்ளை செபம் செய்ய சொல்லி பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவனுக்கு திடீரென எதுவும் மனதில் தோன்றவில்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தான். பிறகு சொன்னான். ‘ஆண்டவரே, என்னை இது போன்று ஒரு வான்கோழியாக படைக்காததற்காக உமக்கு நன்றி சொல்கிறேன். அல்லது நானும் இது போன்று இறந்திருப்பேன்’ என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டனர். இறைவன் நமக்கு வழங்கியுள்ள முதன்மையான கொடை, முக்கியமான கொடை நம் வாழ்க்கை.  வாழ்க்கை என்பது இறைவனின் இனிய அழைப்பு. இன்னொரு விதத்தில் பார்த்தால் வாழ்க்கை என்பது இறைவனின் இலவசக் கொடை. நாம் வாழ்க்கையைக்  கொண்டாடும்போது அதனை பரிசாக வழங்கிய இறைவனையே கொண்டாடுகிறோம். நாம் வாழ்க்கையை  சிறப்பிக்கும்போது அதனை வழங்கிய இறைவனையே பெருமைப்படுத்துகிறோம். நம் வாழ்க்கை  மட்டுமல்ல, மற்றவர்கள் வாழ்க்கையும் இறைவனின் இனிய கொடைகளே! அவற்றை நாம் மதிக்கும் போது அதன் கொடையாளியாகிய இறைவனையே மகிமைப்படுத்துகிறோம். நமக்கு வாழ்க்கையை அளித்து அதனை பலரால், பல விதங்களில் சிறப்பாக்கிய இறைவனை நினைத்துப் பார்த்து அவருக்கு நன்றி சொல்வது நம் கடமையாகும். நன்றி என்னும் ராகம் இல்லாமல் உலகம் என்னும் பாடல் இனிமை பெறாது. நன்றி என்னும் வண்ணம் இல்லாமல் வாழ்க்கை என்னும் ஓவியம் நிறைவு பெறாது.
உங்களின் வாழ்க்கை வரவு செலவு அட்டவணையை (யழியிழிஐஉe றீஜுeeமி) கொஞ்சம் பார்ப்போமா? உங்கள் பிறப்பு தான் உங்களின் தொடக்க இருப்பு. (Balance Sheet) உங்களிடம் வந்து சேருபவை வரவு. உங்களிடம் இருந்து செல்பவை செலவு. உங்கள் இறப்பு இறுதி இருப்பு. உங்கள் நல்லப் பண்புகள் உங்களின் சொத்துக்கள். உங்களின் தீய பழக்க வழக்கங்கள் உங்களின் தேய்மானம். உங்கள் மகிழ்ச்சியே உங்களின் இலாபம். உங்கள் கவலைகளே உங்களின் நஷ்டம். உங்கள் நல் வாழ்வே உங்களின் மூலதனம். உங்கள் பணிவே நீங்கள் பெறுகின்ற வட்டி. உங்கள் ஆணவமே நீங்கள் செலுத்துகின்ற வட்டி. இறுதியில் நினைவில் கொள்ளுங்கள். இறைவனே உங்கள் தணிக்கையாளர் (Auditor).

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு என்பதையும் கவனித்தீர்களா? 15 வயது வரையில் பாராட்டையும், பராமரிப்பையும் அதிகமாக பெறுவீர்கள். 15 வயது முதல் 25 வயது வரை எல்லோருடைய கவனத்தையும் உற்சாகப்படுத்துதலையும் பெறுவீர்கள். 25 வயது முதல் 35 வயது வரை குடும்ப மகிழ்ச்சியையும், குழந்தை மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். 35 வயது முதல் 45 வயது வரை உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த ஆசானாய் சிறந்த தலைவராய்  (Hero)  தெரிவீர்கள். 45 வயது முதல் 60 வயது வரை பொறுப்பின் சிகரமாய், தியாகத்தின் உருவமாய் திகழ்வீர்கள். 60 வயதிற்கு மேல் மீண்டும் குழந்தையாய் ஆனால் சிறந்த மாதிரியாக  (Model) இருப்பீர்கள். எல்லா காலக்கட்டத்திலும் சில கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால் எல்லா  வயதிலும் பல சிறப்புகளை கொண்டிருப்பீர்கள். முடி கருப்பாக இருந்தால் அதற்கு சில மரியாதைகள் உண்டு. ஆனால் முடி வெள்ளையாகும் போதும் சில மரியாதைகள் உண்டு. தலை வழக்கையாக இருந்தால் வணக்கம் சொல்ல மட்டும்தான் தோன்றும். ஆனால் சில முகங்களுக்கு  தலை வழுக்கையாக இருந்தால் வணங்கி மகிழத் தோன்றும். எல்லா உருவங்களும், எல்லா வயதினரும், எல்லா நிறத்தினரும் சிறப்பு மிக்கவர்களே? நான் இளைஞனாக இருந்த போது கொஞ்சம் கலராக இருப்பேன். ஆனால் ஒல்லியாக இருப்பேன். இப்போது கலர் மங்கி விட்டது. ஆனால் சதை போட்டுவிட்டது. அந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள் இருந்தார்கள். இந்தக் காலத்திலும் எனக்கு அன்பர்கள்  இருக்கிறார்கள்.   

அன்பிற்கினியவர்களே! நாம் வாழ்வை நினைத்துப் பார்த்து மகிழ்வின் பாதையில் எப்போதும்  அதை அமைத்துக்கொள்ள முன் வர வேண்டும். ஒவ்வொரு பகலும் இனிய நாளாக அமைய இயலாது. ஆனால் ஒவ்வொரு நாளிலும் சில இனிய தருணங்களை நாம் ஏற்படுத்தலாம். ஒரு கடைக்கு எழுதுப்பொருட்கள் வாங்குவதற்காக சென்றேன். பேசிக்கொண்டிருக்கும் போது கடைக்காரர் சொன்னார். சார் ஒவ்வொரு நாளும்  சராசரியாக 200 பேர் என் கடைக்கு வருகிறார்கள். ஆனால் சராசரியாக இரண்டு பேராவது எனக்கு எரிச்சலூட்டும்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் நான் அதனை பொருட்படுத்துவதில்லை. அந்த 198 பேரை நினைக்காமல்  வெறும் 2 பேரை மனதில் கொள்வது முட்டாள்தனம் என்றார். ஒவ்வொரு நாளும் நாம் பணிவோடு இறைவனுக்கு நன்றி செலுத்தும்போது வாழ்க்கைக் கணக்கில் மகிழ்ச்சி என்னும் சொத்து அதிகமாகும். நாம் தாழ்ச்சியோடு பிறருடைய குறைகளை பெரிதுபடுத்தாமல் இனிய தருணங்களை மனதில் கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கைக் கணக்கில் வட்டியோடு நாம் பலன் பெறலாம்.

புனித அன்னை தெரசாவின் படத்தை போட்டு அதன் கீழே இந்த வசனங்கள் இருப்பதை நான் ஓரிரு இடங்களில் பார்த்திருக்கிறேன். ‘வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை’ அந்த வார்த்தைகள் அவருக்கு நூறு சதவீதம் பொருந்தும். நாம் வாழ்க்கை என்னும் கொடையை பயன்படுத்தி இறைவனை மகிமைப்படுத்த புலரும் புத்தாண்டில் உறுதி எடுப்போமா? (தொடரும்)

Thursday, 2 November 2017

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

17. உறவுகளே வாழ்வின் வேர்கள்

அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் தன் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தோடு வாழ்க்கைப் பாடத்தையும் சொல்லித் தருவது வழக்கம். அதைப்போல அன்று ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தந்தார். அன்று வகுப்பிற்கு ஒரு பெரியக் கண்ணாடிக்குடுவையை எடுத்துவந்து மாணவர்களுக்கு முன் வைத்தார். பிறகு ஒரு பையிலிருந்து பெரிய பெரிய கற்களை எடுத்து வந்து அந்தக் கண்ணாடிக் குடுவையின் விளிம்பு வரை போட்டுவிட்டு, இப்போது இந்தக் கண்ணாடிக் குடுவை நிரம்பியிருக்கிறதா? என்றுக் கேட்டார். மாணவர்கள், ஆம் என்றார்கள். அப்போது ஆசிரியர் நீங்கள் சொல்வது தவறு. இந்தக் கண்ணாடி குடுவையில் உள்ள கற்களுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது என்று சொல்லிவிட்டு இன்னொரு பையிலிருந்து கூழாங்கற்களை எடுத்து விளிம்புவரை நிரம்பினார். பிறகு மாணவர்களிடம் கேட்டார். இப்போது மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள். இல்லை சார், கூழாங்கற்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது என்றார்கள். ஆசிரியர் இன்னொரு பையைத் திறந்து அதிலிருந்த மணலை குடுவையில் கொட்டி நிரப்பிவிட்டு, இப்போது குடுவை நிரம்பி இருக்கிறதா? என்று கேட்டார். மாணவர்கள் நிரம்பி இருக்கிறது சார், என்றார்கள். அப்போது ஆசிரியர் நீங்கள் சொல்வது தவறு. இன்னும் மணல்களுக்கு இடையே இடைவெளி இருக்கிறது என்று சொல்லிவிட்டு கண்ணாடிக் குடுவையின் விளிம்பு வரை  தண்ணீர் ஊற்றினார். பிறகு மாணவர்களைப் பார்த்து சொன்னார். இப்போதுதான் இந்தக் குடுவை நிரம்பி இருக்கிறது.

பிறகு வாழ்க்கைப் பாடத்தை ஆரம்பித்தார். இதைப்போன்றுதான் நம் வாழ்க்கை. நம் வாழ்க்கையின் வேர்கள்தான் உறவுகள். உறவுகள் இல்லாமல் நம் வாழ்வு என்றும் வளர முடியாது. கனி தர முடியாது. நிழல் தர முடியாது. நம் வாழ்வின் ஆணிவேரைப் போன்றது நம் இறை உறவு. தண்ணீரைப் போன்றது இறை உறவு. தண்ணீரைப் போல இருக்கும் இறைவனை நாம் பார்க்க முடியாது. ஆனால் அந்த தண்ணீரைப் போல இறைபிரசன்னம் இல்லாத இடமே இல்லை. மேலும் அந்தத் தண்ணீரைப் போல எல்லா உறவுகளையும் இணைப்பதும் இறைவன்தான். எவ்வாறு தண்ணீர் இல்லாமல் அந்த கண்ணாடிக்குடுவை நிறைவுப் பெறாதா அதைப்போலவே இறைவன் இல்லாமல் நம் வாழ்வும்  நிறைவு அடையாது.

அந்தக் குடுவையில் உள்ள மணலைப் போன்றதுதான் நம் குடும்ப உறவுகள். கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், முதியவர்கள் அனைவருக்கும் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நாம் எப்படி குடும்பத்தில் இருக்கிறோமோ அதைப் போன்றுதான் நம் வாழ்க்கையிலும் இருப்போம். நம் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்தால் நம் வாழ்விலும் மகிழ்ச்சியாக இருப்போம். நம்குடும்பத்தில் அமைதியின்றி இருந்தால் நம் வாழ்க்கை முழுவதும்  அமைதியின்றி இருப்போம்.  எனவே நம் குடும்பத்தின் மீது நாம் அக்கறை காட்ட வேண்டும். நம் குடும்பத்தின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். நம் குடும்பத்தில் மனவருத்தம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அந்த மனவருத்தத்தை எவ்வளவு சீக்கிரமாக களைகிறோமோ  அவ்வளவு மகிழ்ச்சி மிக்கதாக நம் குடும்பம் மாறும். அதே வேளையில் நம் குடும்பத்தின் மீது அதீத  அன்பு காட்டக்கூடாது. நம் குடும்பத்தின் மீதான அதீத அன்பு மற்ற உறவுகளைச் சிதைத்து விடும். இறைவனுக்கு மேலாக குடும்பத்தை  அன்பு செய்யத் தொடங்கும்போது செபம் அர்த்தமற்றதாகி, பொழுதுபோக்கு, தொழில் முதலியவை முன்னிலை வகிக்கின்றன. குடும்ப உறவு மட்டுமே போதும், சமூக நலன் வேண்டாம் என்று நினைப்பவர்கள்தான் ஊழல், இலஞ்சம், ஏமாற்று வேலைகள் போன்றவை உலகில் நிஜம் பெறுகின்றன. அவ்வாறு அந்தக் கண்ணாடிக் குடுவையில் மணலோடு சேர்ந்து தண்ணீர், கூழாங்கற்கள், பெரிய கற்கள் இடம் பெற்றனவோ அதைப்போலவே நம் வாழ்விலும் குடும்ப உறவைத் தாண்டி இறை உறவும், பிறர் உறவும் இடம் பெற ¼ண்டும்.

அந்தக் குடுவையில் உள்ள கூழாங்கற்களைப் போன்றவர்கள் நம் பணித் தளத்தில் இருப்பவர்கள் மற்றும் நண்பர்கள். எவ்வாறு கண்ணாடி குடுவையை கூழாங்கற்கள் பெரிதும் ஆக்கிரமித்துள்ளதோ அதைப் போன்றே பணித்தள நபர்களும், நண்பர்களும் நாம் வாழ்வை பெரிதும் ஆக்கிரத்திருப்பதை நாம் உணரலாம்.

நண்பர்களோடு பொழுது போக்குவது நம் வாழ்வில் மறக்க முடியாத இனிய நினைவுகளைத் தரும். பள்ளிப்பருவ நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் நம் வாழ்வின் பக்கத்தை பெரிதும் நிரப்பி உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். அண்டை வீட்டாரோடு நல்ல உறவு, தொழில் புரியும்போது உண்மை, அன்பு,கருணை முதலிய பண்புகளை நாம் கடைபிடிக்கும் போது இந்த உறவுநிலைகள் சிறப்பாக இருக்கும்.

அந்தக் குடுவையில் உள்ள பெரியக் கற்களை போன்றதுதான் நாம் வாழும் இந்த பூமி மற்றும் நாம் சார்ந்து வாழுகின்ற சமூகம். பல சமயங்களில் நம்மீது நாம் காட்டுகின்ற அன்பில் நூறில் ஒரு பகுதியைக் கூட நாம் சமூகத்திற்கு காட்டுவதில்லை. நம் குடும்பத்தின் மீது நாம் காட்டுகின்ற அன்பில் பத்தில் ஒரு பகுதியைக் கூட நம் சமூகத்திற்குக் காட்டுவதில்லை. நம் அனைவருக்கும் இன்றும் கொஞ்சம் அதிகமாக சமூக அக்கறையும், சமூக பொறுப்பும் இருக்க வேண்டும் என அண்மைக் காலமாக அதிகமாக உணர்கிறேன். இந்த பூமி என்பது நம் பெரியக் குடும்பம். நம் சமூகம் அல்லது ஊர் (பங்கு) என்பது கொஞ்சம் சிறியக் குடும்பம். இப்பதிலே மிகவும் குட்டியான குடும்பம்தான். நம் மனைவி, மக்கள். எனவே பெரியக்குடும்பங்களையும், நம் குட்டிக் குடும்பம் போன்று பாவித்து அன்பு செய்ய வேண்டும். நம் வீட்டில் குப்பை இருந்தால் நாம் வெறுக்கிறோம். அதே நேரத்தில் நம் ஊரில் குப்பை இருந்தால் அதனை சரி செய்கிறோமா? நம் வீட்டில் யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் வருந்துகிறோம். நம் தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் பலியானவர்களுக்காக போராட தயாராக இருக்கிறோமா?

சரிங்க, இந்த கண்ணாடிக் குடுவை உவமையினால் நான் சொல்ல வருவது என்னவென்றால் நம் வாழ்வில் உறவுகள் தான் அடிப்படை. உறவுகள் சிறப்பாக இருந்தால்  வாழ்வு சிறப்பாக இருக்கும். உறவுகளின் ஊற்றுக்கண். அன்பு நம் அன்பு எப்போதும் பலமடங்கு அதிகமாக பலனளிக்கும். அதற்கு என் வாழ்விலிருந்தே ஒரு உதாரணம் தருகிறேன். எனக்கு ஒருவரை மிகவும் பிடிக்கும். அவரும் என்னை அன்பு செய்கிறார். நான் அவரை அன்பு செய்வதைப் போல 4 மடங்கு அதிகமாக அவர் என்னை அன்பு செய்கிறார். அவர் பெயர் ரோசி. என்னாங்க, ரொம்ப யோசிக்காதீங்க. அவர்தான் நான் வளர்க்கும் என் செல்ல நாய்க்குட்டி. எனவே அன்பு செய்வோம். உறவை வளர்ப்போம். அப்போது வாழ்வு இனிமை பெறும். - (தொடரும்...)

Tuesday, 3 October 2017

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

16. நிறைய கேளுங்க... கொஞ்சமா பேசுங்க...

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

ஆற்றுப்படுத்துதல் (Counsellin) நம் அன்றாட வாழ்வில் அண்மைக் காலமாக அதிgகரித்து விட்டது என்று சொல்லலாம்.  ஆற்றுப்படுத்துதலில் முக்கியமான படி (Step) என்னவென்றுத் தெரியுமா? அதை சற்று விபரமாகக் காணலாம். குடும்பப்பிரச்சனை உள்ள ஒருவர் (Client) உங்களிடம் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் உங்களிடம் வந்து இவ்வாறு சொல்கிறார், ‘என் கணவர் குடிகாரர். தன் சம்பளம் முழுவதையும் குடித்தே தீர்த்து விடுகிறார். தினமும் வீட்டில் சண்டைதான். நாங்கள் சண்டை போடுவதால் என் இரண்டு பிள்ளைகளும் என் பேச்சை கேட்பதில்லை. பிள்ளைகள் சரியாக படிப்பதில்லை. குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே எனக்கு வாழவே பிடிக்கவில்லை’ என்று  சொல்லி அழுகிறார். உங்களுடைய பதில் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? ‘சரிம்மா, உங்கள் பிரச்சனை எனக்குப் புரிகிறது. உங்கள் கணவர் குடிகாரர். அதனால் உங்களுக்கு பணப்பிரச்சினை மனஉளைச்சல். அதுமட்டுமல்ல வீட்டில் சமாதானம் இல்லாததால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. படிப்பிலும் கவனம் இல்லை. எந்த அளவிற்கு நீங்கள் மனஉளைச்சளில் இருக்கிறீர்கள் என்றால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைக்கிறீர்கள். என்னம்மா நான் சொல்வது சரிதானே?’ இவ்வாறு அவர் சொன்னதையே திரும்பச் சொல்லி நீங்கள் அவரது பிரச்சனையை உற்று கவனித்தீர்கள். அவர்கள் மேல் அன்பு, மிகுந்த இரக்கம் (Empathy) கொண்டுள்ளீர்கள். அவர்கள் பிரச்சனையை மதிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் பிரச்சனையை நன்கு கவனித்து கேட்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டீர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

ஆற்றுப்படுத்துதலுக்கு மட்டுமல்ல நம் வாழ்விற்கு நம் வாழ்வின் வெற்றிக்கு, நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கு சிறந்த காரணி பிறருக்கு செவிமடுப்பதாகும். இந்த உலகில் மிகவும் எளிதான காரியம், இயல்பானக் காரியம் எதுத் தெரியுமா? பிறருக்கு அறிவுரைக் கூறுவதுதான். இந்த உலகில் மிகவும் கடினமானக் காரியம் எது தெரியுமா? பிறர் கூறும் அறிவுரைகளுக்கு செவிமடுப்பதுதான். நாம் அறிவுரைக் கூறும் ஒவ்வொரு முறையும், பிறர் நமக்கு அறிவுரை கூறும்போது நமக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். நாம் பிறருக்கு அறிவுரை  கூறுவதற்கு முன்னால் அவர்களுடைய சூழ்நிலை, அவர்களுடைய இயல்புகள், அவர்களுடைய இயலாமைகள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பங்கில் நான் பங்குத்தந்தையாக இருந்த போது அந்தப்பங்கில் கிறிஸ்மஸ் ஜோடனையை இளைஞர்கள் செய்துக்  கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் ஜோடனை முடிந்தவுடன் அப்படி செய்யலாம், இப்படி செய்யலாம் என்று ஆலோசனை சொல்வது வழக்கம். அதனால் அந்த ஆண்டு ஜோடனை செய்யும்போது ஒரு காரியத்தை இளைஞர்கள் செய்தார்கள். ஜோடனைக்கு முன்பு ஒரு போர்டு வைத்து அதில், ‘தயவு செய்து கருத்து வேண்டாம்’ என்று எழுதி வைத்தார்கள். அறிவுரைகளை வாரி வழங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது தெரியுமா? அதாவது பிறருக்கு என்ன தெரியும்? இளைஞர்களுக்கு என்ன  தெரியும்? வயதானவர்களுக்கு என்ன தெரியும்? என்ற ஆணவ எண்ணம்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. நம்மிடம் உள்ள சிறப்புகள் மற்றவரிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்றவரிடம் உள்ள சிறப்புகள் நம்மிடம் இல்லை என்பதையும் மனதில் வைப்போம். பொதுவாக வலது என்பதை விட இடது என்று சொல்லும்போது கொஞ்சம் தாழ்வாக நினைக்கிறோம். ஆனால் இடது பக்கத்திற்கும் ஒரு சில சிறப்புகள் இருப்பதைக் கவனித்தீர்களா? ஆம், நாம் போன்னை  எடுப்பது பொதுவாக நம் இடக்கையினால். நாம் போன்னை வைப்பது பொதுவாக நம் இடக்காதில். நம் இதயம் இருப்பது நம் இடதுப்பக்கம்தான். நாம் பயணம் செய்வதும் இடதுபுறம்தான். 

ஒரு         Taxi Driverஐ விட நாம் சிறப்பாக காரை ஓட்டுவது கடினம். ஏனென்றால் அதில் அவர் அதிக பயிற்சிப் பெற்றிருக்கிறார். ஒரு நல்ல விவசாயியைவிட நாம் நன்கு பயிரிடுவது கடினம். ஏனென்றால் அவர் வானிலை, காலமாற்றம், மண்வளம் போன்றவற்றில் நம்மைவிட அதிகம் ஞானமிக்கவர். சாதாரண வேலை செய்யும் துணி துவைப்பவர்கள், தட்டச்சு செய்வோர், கார் மெக்கானிக் இவர்களைவிட நாம் அதிகமாக பணம் வைத்திருக்கலாம். கெளரவமான வேலையில் இருக்கலாம். ஆனால் அவர்கள் வேலையில் அவர்கள்தான் திறமைசாலிகள்.  அவர்கள் பணிகளில் 50% சதவீதத்தை கூட நாம் அறிந்து கொள்வது கடினம். அப்படி இருக்கின்றபோது நாம் அறிவுரைகளை எல்லாருக்கும் வாரி வழங்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை சற்று நினைவில் கொள்ள வேண்டும்.  
நான் பணிபுரிந்த ஒரு பங்கில் மணி என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் பெயரே  Idea மணி. ஏனென்றால் அவர் எல்லாருக்கும் Idea க்களை வாரி வழங்குவார். ஒரு முறை எனக்குத் தெரிந்த ஓவியர் (Artist) ஒருவரை அந்தப் பங்கிற்கு வரவழைத்து பீடத்திற்கு மேல் சிலுவையைச் சுற்றி கல்வாரி நிகழ்வை வரையுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் திறமையான ஓவியர். மாதா, யோவான் மற்றும் கள்வர்கள் அனைத்தையும் சிறப்பாக வரைந்திருந்தார். அதற்கு பின்னணியாக மரங்களையும், பறவைகளையும் வரைந்திருந்தார். அவர் முடித்த பிறகு Idea மணி  வந்தார். என்னிடம் சொன்னார்.  Father  எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சிறிய குறை இருக்கிறது. சிலுவையின் இடதுபுறம் மூன்றுப் பறவைகள், வலதுபுறம் இரண்டு பறவைகள் என்று இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றார். மனிதரை திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.
  இன்னொருப் பங்கிலே ஈஸ்டரின் போது ஆலயத்தில் தண்டமாலைகளை இளைஞர்கள் கட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் அந்தப்பக்கமாக போனேன். அப்போது உயரம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னார்கள். வலதுபக்கம் உள்ள மாலையை 2 இன்ச் தூக்குங்கள் என்றேன். தூக்கிக்கட்டி விட்டு இப்போது சரியாக இருக்கிறதா? என்றுக் கேட்டார்கள். இல்லை, இல்லை 2 இன்ச் இறக்குங்கள் என்றேன்.  Father  முன்பே அங்குதானே கட்டி இருந்தோம் என்றார்கள். ‘அதுசரி என்னிடம் ஆலோசனை கேட்டபிறகு நான் எதுவும் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அதற்காகத்தான் சொன்னேன்’ என்றேன். என் நகைச்சுவை உணர்வை எண்ணி சிரித்தார்கள்.
அறிவுரையும், ஆலோசனையும் கேட்டால் கொடுங்கள் அல்லது கொடுப்பதற்கு முன்பு இது தேவையா என்று பலமுறை யோசியுங்கள். ஆனால் மற்றவர்கள் தரும் ஆலோசனைகளை கூர்ந்து கவனியுங்கள். சாதாரண மனிதர்கள் மூலமாகக் கூட ஆண்டவர் நமக்கு ஆலோசனைகளைத் தருவார்.
                                                                                                                                                 (தொடரும்...) 
   


Saturday, 23 September 2017

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

     15. பயன் தருவோம்

Dear Friends, உங்கள் அறையை சற்று சுற்றிப் பாருங்கள். உங்கள் அறையில் உள்ள சில பொருட்கள் உங்களுக்கு வார்த்தையால் அல்ல வாழ்க்கையால் பணிவை கற்றுத் தந்துக் கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்தீர்களா? ஆமாங்க, உங்கள் அறையை நீங்கள் சற்று உற்றுப் பாருங்கள். நீங்கள் அதை உணர்ந்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, நாம் சாதாரணமாக நினைக்கும் தொடப்பத்தை எடுத்துக் கொள்ளலாம். உங்கள் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேவைப்பட்ட போதெல்லாம் எழுந்து வந்து அறையை சுத்தம் செய்து விட்டு  அவ்வாறு சுத்தம் செய்யும் போதெல்லாம் தன்னையே கொஞ்சம்  தியாகம் செய்து தேய்ந்து கொண்டு, ஏன் கொஞ்சம் அசுத்தத்தையும் சுமந்து கொண்டு எதுவுமே புரியாதது போல மூலையில் போய் அமர்ந்து கொள்கிறது. அதற்கு பெறுவதில் அல்ல தருவதில் தான் மகிழ்ச்சி.

பேனாவை எடுத்துக்கொள்வோம். நீங்கள் சிந்திப்பதை எழுத்தாக தந்துவிட்டு அதுபோல எழுதப்படும்போது நம்மையே கரைத்துக் கொண்டு எழுதி முடித்த பின் எதுவுமே நடவாதது போல மேஜையில் போய் அமர்ந்து கொள்கிறது. அதற்கு பயன் பெறுவதைவிட பயன் தருவதான் வாழ்க்கை.

இன்னுமொரு உதாரணமாக  டார்ச் லைட்டை எடுத்துக் கொள்வோம். மின்சாரம் இல்லை என்றால் உடனே எழுந்து நமக்கு அச்சத்தைப் போக்கி நாம் நடப்பதற்கு, பணிகளை செய்வதற்கு வழிகாட்டி பிறகு கரண்ட் வந்தவுடன் என் பணி முடிந்து விட்டது என சென்று விடுகிறதே அதன் நோக்கம் பயன் பெற வேண்டும் என்பதல்ல, மாறாக பயன் அளிக்க வேண்டும் என்பதே.

நம் தலைவர் இயேசு,  மானிட மகன் பணிவிடை பெறுவதற்கு அன்று பணிவிடை புரியவே வந்தேன் என்கிறார். இந்த உலகம் இலாப நோக்கோடு செயல்படுகிறது என்றால் அது மிகையாகாது. இதனை நான் உங்களுக்குச் செய்தால் எனக்கு என்ன இலாபம்? என்றுதான் பல சமயங்களில் நம் மூளை கணக்குப் போடுகிறது. அதனை நாம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் வேண்டினால் கடைபிடிக்க நேரிடலாம். ஆனால் அதனையே வாழ்க்கையின் கொள்கையாகக் கொண்டால் வாழ்க்கை இனிக்காது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமே ஒன்றுக்கு ஒன்று துணைபுரியும் வண்ணம்தான் கடவுள் நம்மை படைத்துள்ளார். விலங்குகளின் வேஸ்ட் தாவரத்திற்கு உரம். தாவரங்கள் பல விலங்குகளின் உணவு. நாம் வெளியே விடும் கார்பன் - டை - ஆக்ஸைடு தாவரங்களின் உயிர்காற்று. தாவரங்கள் வெளியே விடும் ஆக்சிஜன் நம் உயிர் காற்று. தருவதும், பெறுவதும் இயற்கை. ஒன்றை மட்டும் கொள்வோம் என்றால் அது செயற்கை. 

சரிங்க, நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. நான் பங்குத்தந்தை, அல்லது நான் ஒரு நிறுவனத்தின் தலைவர். எனக்குக் கீழே பலர் பணிபுரிகின்றனர். அவர்கள் தானே எனக்கு பணிபுரிய வேண்டும், நானா அவர்களுக்கு பணிபுரிய வேண்டும்?    பாஸ் என்ற வார்த்தைக்கும் லீடர் என்ற வார்த்தைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருப்பதை பார்த்தீர்களா? பாஸ் என்பவர் ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கட்டளைகளை பிறப்பிப்பவர். தான் சொன்ன அனைத்தும் செய்யப்பட்டு விட்டனவா என்று அறிந்து அதற்கேற்ப தமக்கு கீழே இருப்பவர்களுடன் நடத்துபவர். ஆனால் லீடர் என்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதை  தமக்குக் கீழே இருப்பவர்களுடன் உரையாடுபவர். அவர்களோடு சேர்ந்து பணிபுரிபவர். பணியாளர்களின் இன்ப, துன்பங்களை அறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துபவர். அவ்வப்பொழுது பணியாளருக்குத் தேவையான ஆறுதலையும், அரவணைப்பையும், பாராட்டையும் வழங்குபவர்.

நான் அமெரிக்கா சென்றபோது என்னிடம் லேப்டாப் இல்லை. ஒருநாள்  பிடைரிக்  என்பவர் என் அறைக்கு  வந்தார். என்னிடம் லேப்டாப் இல்லை என்பதை கவனித்து விட்டார். உடனே வீட்டிற்குச் சென்று ஒரு பயன்படுத்திய லேப்டாப்பை கொண்டுவந்து கொடுத்து, பாதர், என்னிடம் இரண்டு  லேப்டாப் உள்ளது. எனக்கு பயன்படாத அனைத்தும் தேவைப்படுவோருக்குத் தானே சொந்தம். எனவே என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார். அமெரிக்காவில் தனக்குத் தேவைப்படாத Furniture மற்றும்   Electronic Things ஐ வீட்டிற்கு முன்பு வைத்து விடுகிறார்கள். தேவைப்படுவோர் அதனை இலவசமாக எடுத்துச் செல்லலாம். 

அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் Salvation Army மற்றும்   Good Will Store  போன்ற சமூகப் பணி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. அதாவது வீட்டில் உள்ள ஆடைகள், ஆபரணங்கள், Furniture, புராதனப் பொருட்களை இந்த நிறுவனங்களுக்கு இலவசமாக மக்கள் வீட்டை சுத்தம் செய்யும் போது கொடுத்து விடுவார்கள். அதனை குறைந்த விலைக்கு விற்று அந்த வருவாய் மூலம் அவர்கள் சமூகப்பணி செய்கிறார்கள். அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் உண்டு. அவர் பெயர் ரொன்ல்ட். அவர் ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கம்பெனிக்கு செல்லும்போது கோட், சூட், போட்டுக்கொண்டு  செல்வது வழக்கம். அவர் ஓய்வு பெற்றுவிட்டதால்   Salvation Army  நிறுவனத்திற்கு எல்லா கோட், சூட்டையும் கொடுத்துவிட்டார். பிறகு 2 மாதம் கழித்து அவர் ஒரு சுபநிகழ்ச்சிக்குப் போக வேண்டியிருந்தது. ஆகவே Salvation Army   கடைக்குச் சென்று 50 டாலர் கொடுத்து  ஒரு கோட், சூட் வாங்கி வந்தார். இரண்டு நாட்கள் கழித்துதான் அவர் உணர்ந்து கொண்டார் அந்த கோட், சூட் அவர் நன்கொடையாகக் கொடுத்தவைகளில் ஒன்று.
நாம் வாழும் பூமி (குறிப்பாக இந்திய அரசியல்வாதிகள், இந்திய அரசுப் பணியாளர்கள்) எனக்கு என்னப் பயன் என்றுதான் எல்லா செயல்பாடுகளுக்கும் கேட்கிறார்கள். ஆனால் நான் வாழும் ஒவ்வொரு நாளும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு,ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் என்னால் இயன்ற பயனைத் தருவேன் என்று வித்தியாசமான வாழ்க்கையை நாம் வாழ்ந்து காட்டலாம் வாருங்கள்.
     -  (தொடரும்...)

Tuesday, 4 July 2017

பணிவு என்னும் இனிய பாதை அருள்பணி. மகுழன், பூண்டி மாதா தியான மையம்

பணிவு என்னும் இனிய பாதை

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

என் எழுத்தை வாசிக்கிறவர்கள் என்னிடத்தில் கேட்கிற கேள்வி, உங்கள் கதைகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கின்றன? நான் அவர்களிடத்தில் சொல்வேன். பல கதைகள் நான் வாசிக்கும் புத்தகங்களில் இருந்து எடுப்பேன். 
(வாசிப்பது வாழ்வின் நடுப்பகுதியாக மாறும்போது வாழ்வில் மகிழ்ச்சி கூடுகிறது). ஒரு சில கதைகளை நான் கேட்டதிலிருந்து பகிர்ந்து கொள்வேன் என்பேன். அதுபோல நான் கேட்ட ஒரு கதை இது.

அந்த இளம் தம்பதி அந்த குடியிருப்புப் பகுதிக்கு புதிதாக குடிவந்தனர். காலை எழுந்தவுடன் கணவர் காபி குடித்துக் கொண்டே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டு தன் மனைவியிடத்தில், “என்ன இந்தப்பகுதி மக்கள் சுத்தத்தை சுத்தமாக மறந்து விட்டார்கள்” என்று சொன்னார். அடுத்த நாள் காலையும் எழுந்தவுடன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். “இந்த பகுதி மக்கள் குளிப்பதே இல்லை போலிருக்கிறது. எவ்வளவு அழுக்காக இருக்கிறார் கள்”என்று  தன் மனைவியிடத்தில் அலுத்துக் கொண்டார். மூன்றாம் நாள் காலையிலும் கணவர் எழுந்தவுடன் ஜன்னல் வழியே பார்த்தார். குப்பை கூளங்களை கண்டவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது.  ‘இந்த மக்களைப் போல அசுத்தமான மக்களை நான் பார்த்ததே இல்லை’ என்று தன் மனைவியிடம் முறையிட்டார். அப்போது அந்த இளம் மனைவி என்னதான் நடக்கிறது என்று வந்து ஜன்னலைப் பார்த்தார். ஜன்னலைப் பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார். ஜன்னலின் கண்ணாடிகள் துடைக்கப்பட்டு பல மாதங்கள் இருக்கும். எங்கும் ஒட்டடை. அந்த அழுக்கான ஜன்னல் வழியாகப் பார்த்ததால் அந்த கணவருக்கு அனைத்தும் அழுக்காய் தோன்றின. உடனே ஒரு துணியை எடுத்து வந்து துடைத்தாள். அப்போது கணவன் வெளியே பார்த்து விட்டு,  “மக்கள் நன்றாக தூய்மையாகத்தான் இருக்கிறார்கள். நான்தான் தவறாக நினைத்து விட்டேன்” என்று வருத்தமுற்றார். 

பணிவு அல்லது தாழ்ச்சி என்பதன் பொருளை பலவிதங்களில் நாம் விளக்கலாம். அதில் ஒன்று பணிவு என்பது  உண்மையான வி­யங்களை, உண்மையான மனப்பான்மையோடு பார்ப்பது.
* நான் கடவுள் அல்ல, கடவுளின்  சிறு படைப்பே என்று ஏற்றுக்கொள்வது.

* என் வாழ்வில் துன்பங்கள் மட்டுமல்ல. அல்லது, என் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிஜமல்ல. இன்பமும், 
 துன்பமும், வெற்றியும், தோல்வியும், இருளும், ஒளியும் என் வாழ்வில் தோன்றி மறையும் என்று உணர்வது.

* நான் 100% நல்லவன் அல்ல. அறிவாளி  அல்ல. திறமை மிகுந்தவன் அல்ல. என்னிடத்தில் குறைகள் உண்டு. அதைப்போல மற்றவர்களிடத்திலும் ஏராளமான நன்மைகள் உண்டு.  (அந்த கணவரைப் போல) நாம்தான் அதனை புரிந்து கொள்வதில்லை. மற்றவர்களிடத்தில் உள்ள சிறிய குறைகளைக் கூட நாம்தான்  பெரிதுபடுத்துகிறோம்.

* என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்பாக கடவுளின் திட்டத்திற்கு நான் செவிசாய்க்க வேண்டும். அதற்கு நான் அவரிடத்தில் செல்ல வேண்டும். அவரோடு  பேச வேண்டும். அமைதியில் வாழ வேண்டும். 

இந்த உலகில் வாழும் மனிதருள் பெரும்பாலும் (90 சதவீதத்திற்கு மேல்) ஆணவம்தான் அவர்களை ஆட்சி செலுத்துகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் தாழ்வுமனப்பான்மையும் ஒரு சிலரை  ஆட்டிப் படைக்கிறது. எனக்கு திறமை இல்லையே, என்னிடத்தில் எல்லாவிதமான பாவங்களும் இருக்கின்றனவே, என்னை யாரும்  அன்பு செய்வதில்லையே என்று ஒரு சிலர் தம்மை தாழ்வாகக் கருதி பிறரை உயர்வாக எண்ணி வாழ்வார்கள். இவர்கள் செய்யும் மிகவும் தீமையானக் காரியம், இவர்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கவிட மாட்டார்கள். கட்டாயம் நாம் அனைவரும் பாவிகள். நாம் அனைவரும் தவறு செய்கிறோம். நாம் பாவத்தை விலக்குவதற்கு சிரமப்படுகிறோம். நம்மிடத்தில் நல்லப் பண்புகள் அதிகம் இல்லை. நாம் ஒரு சிலரைப் போன்று திறமையானவர்கள் இல்லை.

ஆனால் இவை நம்மை நாம் தாழ்வு மனப்பான்மை என்னும் படுகுழியில் தள்ளுவதற்கு  (றீeயிக்ஷூ- க்ஷிற்துஷ்யிஷ்ழிமிஷ்லிஐ)   அழைத்து செல்லக் கூடாது. மாறாக இவை  உண்மையான தாழ்ச்சிக்கு (க்ஷிற்துஷ்யிஷ்மிதீ) அழைத்து செல்ல வேண்டும். கடவுளின் அருள் இருந்தால்தான்  நாம் முழுமை அடைவோம் என்ற புரிதலுக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். என்னோடு வாழ்பவர்கள் எனக்கு முக்கியம். அவர்களோடு நல்உறவோடு நான் வாழ வேண்டும். அவர்களின் நல்வாழ்விற்கு என்னால் இயன்ற உதவிகளை நான் புரிய வேண்டும் என்ற நல்மனப்பான்மைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.     
      
           “குழந்தாய், பணிவிலே நீ  பெருமை கொள். உன் தகுதிக்கு ஏற்ப உன்னையே நீ மதி. தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான் காண யார் கணிப்பர்?” தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யார் பெருமைபடுத்துவர்?   ( சீஞா 10: 28‡29).

ஜான் கிறிஸ்டர் என்னும் அறிஞர் இவ்வாறு கூறுகிறார். பணிவு அல்லது தாழ்ச்சி என்பதின்  ஆங்கில பதம் “க்ஷிற்துஷ்யிஷ்மிதீ”,“க்ஷிற்துஷ்யிஷ்மிதீ” என்ற ஆங்கில வார்த்தை “க்ஷிற்துற்வி”என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. க்ஷிற்துற்வி    என்றால் “நிலம்” என்று பொருகள். நிலம் தம்மை மிகவும் உயர்வாக எண்ணுவதில்லை. தம்மையே மிகவும் தாழ்வாகவும் கருதுவதில்லை. அதைப்போல பணிவு உள்ளவர்கள் அவர்களாக நடந்துகொள்வார்கள். அவர்கள் தங்களைப் பற்றி மகிழ்ச்சி  கொள்கிறார்கள். எனவே எப்படிப்பட்ட குழுவிலும் அவர்கள் மகிழ்ச்சியோடு உறவாட முடியும். ஏனென்றால் அவர்களுக்கு அவர்களைப்பற்றி  நன்குத் தெரியும். அவர்களைப்பற்றி  அவர்களுக்கு நன்குத் தெரிவதால் அவர்கள் வாழ்க்கை இலகுவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் மற்றவர்களின் வழிகாட்டுதலுக்கு, மற்றவர்களின் கருத்துகளுக்கு திறந்த மனத்தோடுக் காத்திருக்கிறார்கள்.
          
   பணிவு மிக்கவர்களோடு சேர்ந்து  வாழ்வது ஓர் இனிய அனுபவம். ஏனென்றால் அவர்கள் வேடம் போடும் பரிசேயர்கள் அல்ல. மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி தம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஒரு குழுவில் இருக்கும்போது தாங்கள் பெரியவர்கள் எனக் காட்டிகொள்வதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அவர்கள் அவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களைவிடப் பெரியவர்களும் யாரும் இல்லை. சிறியவர்களும் யாரும் இல்லை. எல்லாம் சரிசமமாக கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.
( தொடரும்)... 

Friday, 30 September 2016

பணிவு என்னும் இனிய பாதை 7. இயற்கையாக வரும் ஆணவம்

பணிவு என்னும் இனிய பாதை

7. இயற்கையாக வரும் ஆணவம்

-அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்,

இந்த முறை ஒரு இரகசியத்தோடு கட்டுரையை தொடங்குகிறேன். ஒரு சாமியாரின் (பங்குத்தந்தையின்) நன்மதிப்பை நீங்கள் பெற வேண்டுமா? அதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. “இன்றைக்கு உங்கள் பிரசங்கம் விற்ஸ்ரீer ய்ழிமிஜுer” என்று சொல்லிப் பாருங்கள். அநேகமாக எல்லாக் குருக்களும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நல்ல, ஞானம் மிக்க, ஆற்றல் வாய்ந்த குருவானவர். அவரிடம் ஒருநாள் பங்கின் உறுப்பினர் ஒருவர் சென்று, “உங்கள் பிரசங்கம் எனக்குப் புரியவில்லை. நான் வேறு ஒரு கோவிலுக்குப் போகிறேன்” என்றார். உடனே அந்த குரு கோபப்படவில்லை. “நண்பரே, நீங்கள் வேறு கோவிலுக்குப் போவதை நான் தடைசெய்யவில்லை. ஆனால் எனக்கு ஓர் உதவி செய்துவிட்டு செல்லுங்கள். ஒரு நான்கு வாரங்கள் தொடர்ந்து கோவிலுக்கு வாருங்கள். நான் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தை புதன்கிழமையே எழுதி உங்களிடம் தந்துவிடுகிறேன். அதில் உங்களுக்கு எது புரியவில்லையோ அதனை என்னிடம் சொல்லுங்கள். அதை மாற்ற முயற்சி செய்கிறேன். ஏனெனில் உங்களைப் போல என் பிரசங்கம் புரியாவிட்டாலும் என்னிடம் எப்படி சொல்லுவது என தயங்கிக் கொண்டு சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்” என்றார். “அந்த நபர், எனக்கு பேருதவியாக இருந்தார். நான் நல்ல பிரசங்கியராக வருவதற்கு உதவி புரிந்தார்” என்று தாழ்ச்சியோடு அந்த சம்பவத்தைப் பற்றி அந்த குருவானவர் நினைவு கூர்கின்றார்.

நமக்கு மிகவும் இயற்கையாக வருவது ஆணவம்தான். அதனால்தான் பணிவு அல்லது தாழ்ச்சி மிகவும் அரிதாக இருக்கிறது நமக்கு மிகவும் இயற்கையாக வருவது ஆணவம்தான் என்பதற்கு பல உதாரணங்களைச்  சொல்லலாம். நீங்கள் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். (பேச்சுப் போட்டி, நடனப் போட்டி). அந்தப் போட்டியில் வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. உங்கள் பெயர் வராவிட்டால் ஏன் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றுதான் நினைப்பீர்கள். அதைப் போல ஒரு குரூப் போட்டோ எடுக்கிறீர்கள். அதை பிரிண்ட் எடுத்து பார்க்கும்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றுதான் தேடுவீர்கள். என் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்னையின் அருட்சுடர் வந்தவுடன் என் கட்டுரை எங்கு இருக்கிறது? என்றுதான் தேடுகிறேன். (அடுத்த முறை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்கிறேன்). எனவே ஆணவம் இயற்கையாக வருகிறது என்பதும், பணிவு அரிதாக இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் உங்களது பெருமைகளுக்கு எந்தவிதமான அடித்தளமும் இல்லை. உதாரணமாக உங்கள் குடும்பப் பெருமைகளை (சாதிப் பெருமைகள்) பற்றி நீங்கள் பேசலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் (சாதியில்) பிறந்ததைவிட உங்கள் பங்களிப்பு அதில் எதுவும் இல்லை. சிலர் அவர்களின் சாதனைகளைப் பற்றி சொல்வார்கள். நீங்கள் ஓர் அருமையானக் கட்டிடத்தை கட்டியிருக்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு பொறியாளர் இல்லாமல், கொத்தனார் இல்லாமல், சித்தாள் இல்லாமல், தச்சர் இல்லாமல், பெயிண்டர் இல்லாமல் அந்த சிறந்தக் கட்டிடத்தின் நூறில் ஒரு பகுதியைக் கூட உங்களால் இருக்க முடியாது. இன்னும் கட்டி சிலர் சொல்வார்கள். நான் கஷ்டப்பட்டு உழைத்து நல்ல நிலைக்கு வந்துள்ளேன். சார், உங்களுடைய வாழ்வின் முதல் ஆண்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இரண்டாவது ஆண்டைப்பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் பிறந்த போது உங்களுக்கு நடக்கத் தெரியுமா? பேசத் தெரியுமா? இன்று நீங்கள் நன்றாக இருப்பதற்கு உறுதுணையாக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை மறந்துவிட்டு, நான்தான் என்று சொன்னால் அது உண்மைக்கு எதிரானதாகும்.

ஆணவம் இயற்கையாக நம் வாழ்வில் தவழ்கிறது. அரிதான பணிவை கொஞ்சம் கொஞ்சமாக தவழவிட்டு, பெருமைகளை தவிர்த்து வாழும்போது நம் வாழ்வும் அழகு பெறும். இனிமை பெறும். (தொடரும்)

Saturday, 3 September 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

6. அனைத்து பாவங்களுக்கும் அடிப்படை ஆணவமே
 அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.

 என்னிடத்தில் ஆற்றுபடுத்துதல் செய்ய வருபவர்கள் அடிக்கடி சொல்லும் குறைகள்: ‘எனக்கு மிகவும் கோபம் வருகிறது. நான் அதிகமாக புறணி பேசுகிறேன்’ என்பார்கள். நான் அவர்களிடத்தில் சொல்வேன்: கவலைபடாதீர்கள். இவை இரண்டும் உங்கள் பாவங்கள் மட்டுமல்ல. மனித குலத்தின் பாவங்கள். நம் எல்லாருடைய பாவங்கள். இவற்றிற்கு உட்படாத ஆட்களே உலகில் இல்லை. ஆனால் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் அடிப்படை ஒன்று உண்டு. அதை அகற்றிவிட்டால் இந்த இரண்டு பாவங்களும் உங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகலும். அதுதான் ஆணவம் என்று சொல்வேன்.

ஆணவம் என்றால் என்ன? ஆணவத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அதன் பல்வேறு வடிவங்கள் வழியாகத்தான் அதனை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

1. ஆணவம் என்பது ‘என்னால் எல்லாம் முடியும் என்ற மனப்பான்மை: எனக்கு யார் உதவியும் தேவையில்லை, என் சூழ்நிலைகளைப் பற்றி என்னைவிட யாருக்கும் அதிகம் தெரியாது’ என்ற அதிரடியான உணர்வு.

2. ஆணவம் என்பது ‘நான் மிகவும் நல்லவன் என்ற எண்ணம்; நான் அவர்களைப் போல இல்லை, நான் எல்லாவற்றிலும் சரியானவன் என்ற தற்பெருமை.

3. ஆணவம் என்பது தற்பெருமை: ‘நான் செய்தவற்றை பாருங்கள். என்னைப் போல சிறப்பாக யாராலும் செயல்பட முடியாது என்ற பிடிவாதம்’.

4. ஆணவம் என்பது உயர்வு மனப்பான்மை: ‘நான் சொல்வது போல தான் மற்றவர்கள் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது’ என்ற திமிர்.

5. ஆணவம் என்பது மற்றவர்களை தாழ்வாக நினைப்பது : ‘நீ சொல்வதை நான் கேட்க வேண்டும் என்று எனக்குத் தேவையில்லை’.

6. இன்னும் ஆணவத்தின் சில வடிவங்கள் :
- பிடிவாதம்
- போட்டி மனப்பான்மை
- பொறாமை
- அடுத்தவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி
- அடுத்தவர்களின் வெற்றியில் வருத்தம்

இந்த  ஆணவம் எப்பொழுதும் வீழ்ச்சிக்கும், பாவத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் உணரலாம்.
மீதூய்மையற்ற வாழ்வு : என்னுடைய இன்பம் மட்டுமே எனக்கு முக்கியம். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்.
மீவெறுப்பு : நான் உன்னைவிட சிறந்தவன். அதனால் நான் உன்னை வெறுப்பது சரியே.

- நன்றியின்மை : என் திறமையினால் அனைத்தும் எனக்குக் கிடைத்தன. நான் யாருக்கும் நன்றி சொல்லத் தேவையில்லை.

- பிரிவினை : நான் தனித்தீவாக வாழ்ந்து கொள்ள முடியும். ஒற்றுமை எனக்குத் தேவையில்லை.
- கீழ்ப்படிதலின்மை : நல்லது எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட யாருக்கும், எந்த மனத்திற்கும் நன்மை எது என்று தெரியாது.

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லட்டுமா? மேற்சொன்ன ஆணவத்தின் பல வடிவங்கள் என்னிடத்தில் இருக்கின்றதே என்று கவலைப்படாதீர்கள். இந்த உலகத்தில் வாழும் அனைவரும் ஆணவம் என்ற கொடிய மிருகத்தின் கரங்களில்தான் இருக்கிறோம். இந்த ஆணவத்தின் கைவன்மையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி பணிவை ஏற்கும்போது வாழ்வில் இனிமை பெருகும். (தொடரும்)

Monday, 25 July 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

5. அன்பின் வடிவம் பணிவு
 அருள்பணி. மகுழன்
பூண்டி மாதா தியான மையம்

அரசர் ஒருவர் இருந்தார். அவர் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தார். மக்களை வீணாக சிறையில் அடைப்பதும் அவர்களை துன்புறுத்துவதும் அவர் பொழுதுபோக்கு. ஒருமுறை அவர் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். ஒரு புள்ளிமானைக் கண்ட அவர் அதனைத்  துரத்திச் சென்றார். ஆனால் அந்த மான் அவரைவிட வேகமாக ஓடிவிட்டது. வழிதவறிய அவர் காடடுவாசிகளிடம் மாட்டிக்கொண்டார். காட்டுவாசிகளின் மொழி அவருக்குப் புரியவில்லை. தான் அரசர், அதிகாரம் மிகுந்தவர் என்பதைச் சுட்டிக் காட்ட அவர்களிடம் கோபமாகப் பேசினார். அவர்களை அடிக்க முற்பட்டார். காட்டுவாசிகளுக்கு கோபம் வந்துவிட்டது. அவரை அடித்துத் துவைத்தனர். ஒருவாரம் அவருக்கு உணவு கொடுக்கவில்லை. பசியால் வாடிய அவர் குரலைத் தாழ்த்தினார். அன்பாகப் பேச ஆரம்பித்தார். காட்டுவாசிகளின் கோபம் தணிந்தது. அவருக்கு வேண்டிய உணவைக் கொடுத்தனர்.

ஒரு முறை காட்டுவாசிகள் மத்தியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. தன் ஆடையில் இருந்த விலை உயர்ந்த மாணிக்கக் கற்களை மாலையாகக் கோர்த்து அந்த தம்பதியினருக்கு அணிவித்தார். அதைக் கண்ட காட்டுவாசிகளின் மனம் மாறியது. காட்டுக்குதிரை ஒன்றை பிடித்து நன்கு பழக்கப்படுத்தி அரசரிடம் கொடுத்தனர். அவரும் மனமாற அவர்களை வாழ்த்திவிட்டு அரண்மனைக்குச் சென்றார்.

அரசரிடம் இருந்த ஆணவம் மறைந்ததால் மக்களைக் கொடுமைப்படுத்துவதற்குப் பதிலாக மக்களுக்கு நற்பண்புகளால் பணியாற்றினார். அரசரின் மனமாற்றத்தைக் கண்ட மக்களும் அரசரை அன்பு செய்ய ஆரம்பித்தனர்.

பணிவு என்பது ஓர் அன்பின் பண்பு. அன்பு செய்வதில் பல வடிவங்கள் இருக்கின்றன. நாம் ஒருவரை அன்பு செய்யும் போது அவருக்கு நன்மை செய்கிறோம். அவரைப் பாராட்டுகிறோம். அவரிடம் பொறுமை காக்கிறோம். அவரை மன்னிக்கிறோம். அவருக்கு ஆறுதல் கூறுகிறோம். அதைவிட அவரிடம் பணிவாக நடந்து கொள்கிறோம். நாம் எல்லாரிடமும் பணிவையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தி பிறரை அன்பு செய்கிறோம் என்பதை தெளிவுபடுத்துவோம்.

அன்பைப் பற்றிய சில சிந்தனைகள் :

1. உலகில் சிலர் பணத்தைத் தேடுகிறார்கள்.
சிலர் நேரத்தைத் தேடுகிறார்கள்
சிலர் அமைதியைத் தேடுகிறார்கள்
சிலர் இன்பத்தைத் தேடுகிறார்கள்
சிலர் நண்பர்களைத் தேடுகிறார்கள்
சிலர் உறவுகளைத் தேடுகிறார்கள்
ஆனால் உண்மை என்னவென்றால் அடிப்படையில் அனைவரும் அன்பைத் தேடுகிறார்கள்.

2. நாம் சில நேரங்களில் அன்பு செய்வதை அன்பு செய்கிறோம். சில நேரங்களில் அன்பு செய்யப்படுவதை அன்பு செய்கிறோம். எல்லாரும் உங்களை அன்பு செய்ய வேண்டுமா? அதற்கு ஒரே வழிதான் இருக்கு. பிறரை அன்பு செய்யுங்கள்.

3. எப்போதும் அன்பு செய்யுங்கள். எல்லாரையும் அன்பு செய்யுங்கள். காரணம், அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக அல்ல, நீங்கள் நல்லவர்கள் என்பதற்காக.

4. கவலையைக் கைவிடுங்கள். புன்னகையை அதிகரியுங்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறருக்கு செவி கொடுங்கள். மன்னிப்பை வழங்குங்கள். சுருக்கமாகச் சொன்னால் வெறுப்பை அகற்றுங்கள். அன்பை அணிந்து  கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியைக் கைகொள்வீர்கள்.

5. நீங்கள் ஒரு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உறங்கச் செல்லுங்கள். நீங்கள் ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உல்லாசப்பயணம் செல்லுங்கள். நீங்கள் ஒரு மாதம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? திருமணம் செய்யுங்கள். நீங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? பிறரை அன்பு செய்யுங்கள்.

6. சில அழகான விட யங்கள் :

பூக்கள் : குழந்தையின் சிரிப்பு.
வானவில் : மழையின் போது மண் வாசனை
காலைப்பனி : அருவி
இனியச் சொற்கள்: இவை எல்லாவற்றையும்விட மிகவும் அழகானது எல்லோரிடத்திலும் அன்பு.அன்பு செய்ய எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் அன்பு செய்யுங்கள். ஆனால் அன்பு செய்ய எப்பொழுதும் முடியும் என்பதையும் மனதில் வையுங்கள் - தலாய் லாமா. (தொடரும்)

Ads Inside Post