Pages - Menu

Thursday 3 December 2015

அரசியல் களம் என்ன செய்யப் போகிறோம்?

அரசியல் களம்
என்ன செய்யப் போகிறோம்?
- குறிஞ்சி
அண்மையில் என்னுடைய கல்லூரிக் கால நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் நிகழ்ந்த சந்திப்பு. மனம் விட்டு உரையாடினோம். நண்பருடைய அனுபவ பகிர்வில் இருந்து ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நண்பரின் அனுபவப் பகிர்வை இனி அவரது சொற்களிலேயே கேட்போம், வாருங்கள்.
நான்ஆசிரியராகப் பணி செய்தாலும் (மெட்ரிக்குலேசன் பள்ளியில்) என்னுடைய தந்தையார் விட்டுச் சென்ற ஒரு ஏக்கர் விவசாயத்தை விடமுடியாதவனாகவே இருக்கிறேன். காரணம் என்னுடைய தந்தையாரின் மறைவுக்குப் பிறகு என்னுடைய தாயாரை இயக்கிக் கொண்டிருப்பது உயிர்த் துடிப்போடு வைத்திருப்பது அந்த நிலம்தான். எழுபது வயதிலும் அவர் எல்லா வேலைகளையும் செய்வதற்கு அந்த நிலம்தான் காரணம். மகனும், மகளும், பேரக் குழந்தைகளும் 
விளம்பரங்களுக்கு இடையே வரும் தொலைக்காட்சித் தொடர்களைப் போல வந்து போய்க் கொண்டிருந்தாலும், அந்த நிலமும் ‡ விவசாயமும் அவரை உயிர்த் துடிப்போடு பாதுகாத்து வைத்திருக்கின்றன என்றால் மிகையல்ல. எனவே என்னுடைய தாயாருக்காக நானும் விவசாயத்தோடு தொடர்புடையவனாகவே இருக்கிறேன்.
எனது கிராமத்தில் இருந்து எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நகரமே இப்போது என் இருப்பிடம். விடுமுறை நாட்களில் விவசாயப் பணிக்காக கிராமத்தை நோக்கிய பயணம் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது.
கடந்த ஞாயிறு அன்று எப்படியாவது வயல் நடவை முடித்து விட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அடுத்த வாரம் என்னால் கிராமத்திற்கு வரமுடியாது. பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்பு அன்றைக்கு இருக்கிறது. மேலும் வயல் நடவு முடிந்தால் தான் என்னுடைய தாயாரும் கொஞ்சமாவது ஓய்வு எடுப்பார். நானும் 
நிம்மதியாக என் வேலையைப் பார்க்க முடியும்.
ஆனால், கிராமத்து நிலைமைபோல நேர்மாறாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழை நம் கிராமத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன? கடும் மழைக்கு இடையிலும் சனிக்கிழமை இரவே கிராமத்திற்குச் சென்று விட்டேன். என்னுடைய தாயார் ஏற்கனவே வேலையாட்களிடம் சொல்லி வைத்திருந்தார். இருந்தாலும் நானும் ஒருமுறை அவர்களைப் பார்த்து அடுத்த நாள் வேலைக்கு உறுதி செய்துக் கொண்டேன்.
ஞாயிறு பொழுது புலர்ந்தது. இரவில் பெய்த கனமழை காலையில் குறைந்திருந்தது. இலேசான தூறல்தான். எப்படியும் நடவு வேலையை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு வேலையாட்களைப் பார்த்தேன். அவர்களும் “வாத்தியார் வேலையை முடிச்சிருவோம், வாங்க” என்று கிளம்பினர். நடவும் நடந்தது; தூறலும் தொடர்ந்தது. இடைஇடையே வேகமான மழை. ஆனாலும் வேலையை முடித்து விட்டுத்தான் கரையேற வேண்டும் என்பதில் வேலையாட்கள் உறுதியாக இருந்தனர்.
இடையில் ஒருவரை தேநீர்க் கடைக்கு அனுப்பினோம். மழைக் குளிருக்கு இதமாக சூடான தேநீரும், பலகாரங்களும் வாங்கி வருவதற்காக போனவரும் பொருட்களைவாங்கி வந்தார். ஆனால் வந்தவரைக் கண்டதும் எனக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. ஏனெனில், கொதிக்கின்ற தேநீர் பாலிதீன் பையில் மாற்றப்பட்டிருக்கிறது. அவர் கையில் பிடித்துக் கொண்டு வருகிறார். பலகாரங்கள் ஒரு பாலிதீன் பையில். குடிப்பதற்கான குவளைகளும் பாலிதீன் குவளைகளே. அவரிடம் “வழக்கமாக என் தாயாரிடம் சென்று பாத்திரங்களும், டம்ளர்களும் வாங்கிச் செல்வீர்களே இன்றைக்கு ஏன் வாங்கவில்லை?” என்றேன் நான். இதற்கு அவர், “வாத்தியாரே நம்ம ஊரு கடையிலயும் இப்ப இது மாதிரி கொடுக்கிறாங்க. அப்புறம் எதுக்கு நாம பாத்திரமெல்லாம் தூக்கிக்கிட்டு” என்று மகிழ்ச்சியோடு கூறினார். அவரது அறியாமையை நினைத்து எனக்கு அனுதாபம்தான் வந்தது. சரி, சொல்லி புரிய வைப்போம் என்று நினைத்துக் கொண்டே “முதலில் தேநீரை ஊற்றிக் குடியுங்கள்; சூடு ஆறிப் போகும். பின்னர் பலகாரங்களைச் சாப்பிடுவோம்” என்றேன் நான். வந்ததை அனைவரும் பகிரத் தொடங்கினோம்.
தேநீரை அனைவருக்கும் ஊற்றிக் கொடுத்த செந்தாமரை அக்கா “எங்க சுய உதவி குழுவுல இந்த பாலிதீன், பிளாஸ்டிக் பத்தியயல்லாம் ஒருநாள் பேசுனாங்க. இதெல்லாம் மண்ணுல விழுந்தா மக்காதாம். மக்குலன்னா காலப் போக்குல மண்ணே பாலிதீன், பிளாஸ்டிக்கா ஆயிடுமாம். அப்புறம் இந்த மண்ணுல எதுவுமே முளைக்காதாம். படிப்படியா எல்லா உசுரும் அழிஞ்சு போயிருமாம். எங்க குழுவுல சொன்னாங்க” என்று சொல்லி விட்டு என்னைப் பார்த்தார். நானும், “நீங்க சொன்னது சரிதான், நான் சொல்லனும்னு நினைச்சத நீங்களே சொல்லிட்டீங்க” என்றேன். அவர் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது. உடனே நானும் பாலிதீன், பிளாஸ்டிக்கினால ஏற்படும் கெடுதல்களைப் பத்தி கொஞ்சம் எடுத்துச் சொன்னேன். “இப்போது ஏற்பட்டுள்ள கன மழை பாதிப்புல வடிகால் வாய்க்கால்களை நீர் நிலைகளை நாசமாக்குவதில் இந்த பாலிதீன், பிளாஸ்டிக்குக்குப் பெரும்பங்கு இருக்கு. அதனால இந்த வி­யத்துல நாம பழைய காலத்துக்குத் திரும்பனும். பாலிதீன், பிளாஸ்டிக்குக்குப் பதிலா பாத்திரங்களதான் பயன்படுத்தனும்” என்று நான் சொன்ன போது எல்லோரும் ‘இது சரிதான்’ என்ற உணர்வோடு தலையாட்டினர்.
அப்போது, மகனைப் பார்க்க சென்னைக்குப் போய் வந்த (கன மழைக்கு முன்பு) அம்மாக்கண்ணு “ஏம்பா நீ என்னமோ எங்கள மாதிரி படிக்காதவங்கதான் இந்த மண்ணைக் கெடுக்கிறதா நினைச்சு பேசிக்கிட்டு இருக்க. ஆனா மெட்ராசுக்கு போயிட்டு வந்தப்ப பார்த்தேன். அத்தனை வடிகால் வாய்க்காலும் பாலிதீன் குப்பையால நிறஞ்சுக் கெடக்கு. பத்தாததுக்கு வயக்காடு வயக்காடா வூட்ட கட்டி வச்சிருக்கீங்க. எங்க பார்த்தாலும் பிளாட் போட்டு கெடக்கு. ஆமா தண்ணி வர்ற வழியில வூட்ட கட்டி வச்சுக்கிட்டு வெள்ளம் வருது, வெள்ளம் வருதுன்னு சொல்லுறீங்க. வடிகால், வாய்க்கால் எல்லாம் தூர் வாராம மெட்ராசே மெதக்குதுன்னா, மெதக்காம என்ன பண்ணும்? சரி... எனக்கு தோனுற இந்த வி­யமெல்லாம் உங்க மந்திரிங்களுக்கும், ஆபீசருங்களுக்கும் தெரியாதாப்பா? எல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்களாச்சே!” என்று பொரிந்து தள்ளினார்.
அவரது பேச்சைக் கேட்ட பாப்பம்மா “அக்கா எல்லாம் நம்ம வாத்தியாரு மாதிரி படிச்சவங்க தான். இலஞ்சம் குடுத்தும், வாங்கியும் இந்த மண்ண இப்படி கெடுத்து வச்சிருக்காங்க. அதனால வந்த கேடுதான் இவ்வளவும்” என்று ஒரே போடாகப் போட்டார். பாப்பம்மா தனது பேச்சின் ஊடே என்னையும் படித்து இலஞ்சம் வாங்கும் வர்க்கத்தின் பிரதிநிதியாய் மாற்றியிருந்தார். கேட்பதற்குச் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி ‡ கிராமங்களுக்குள்ளும் விழிப்புணர்வின் வெளிச்சம் படரத் தொடங்கியிருப்பதை நினைத்து மனம் மகிழ்ச்சியில் திளைத்த போது ஒரு குரல், “வாத்தியாரே! வயக்காட்டில கனவு காணாதீங்க. நடவு முடிஞ்சுருச்சில்ல கரையேறுவோம், வாங்க” என்றார் ஒருவர். நம்பிக்கையோடு எல்லோரும் கரையேறினோம்.
மேற்கண்ட நண்பரின் அனுபவ பகிர்வு சுகமான சுமையாக என் மனத்தில் இருந்தது. இறக்கி வைத்துவிட்டேன். பகிர்தல்தானே வாழ்க்கை.
$$$$$$

No comments:

Post a Comment

Ads Inside Post