Pages - Menu

Friday 4 December 2015

ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு
31/01/2016
எரே 1 : 4 - 5, 17 -19
1 கொரி 12 : 31 - 13 : 13
லூக் 4 : 21 - 30
நிறைகளே வாழ்வின் தடங்கள்
இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் முதலில் இயேசுவைப் பாராட்டினர் (லூக் 4 : 22). கொஞ்ச நேரத்திற்குள் பல்டி அடித்து விட்டனர். அவரை மலை உச்சியிலிருந்து கீழேத் தள்ளிவிட இழுத்துச் சென்றனர் (லூக் 4 : 29) என்று லூக்கா எழுதினார். மத்தேயுவும் (13 : 53 ‡ 58), மாற்கும் (6 : 1 ‡ 6) அவருடையப் போதனையைக் கேட்டு வியப்புற்றாலும் தொடக்கத்திலேயே அதை ஏற்க மறுத்துவிட்டனர், குறிப்பிட்டனர். இந்த மூன்று நற்செய்தியாளர்களின் இறுதிமுடிவும் இயேசு பெருமான் அவருடைய சொந்த ஊரில் ஏற்கப்படவில்லை என்பதாகும்.
காகங்கள் சில குயில்களின் இனத்தைக் கூண்டோடு அழிக்க மாநாடு நடத்தின. அம்மாநாட்டின் முடிவுகள் குயில்களை விருந்துக்கு அழைப்பதுபோல் அழைத்து குயில் இனத்தை முழுவதும் கொத்திக் கொன்று அழித்திட வேண்டும் என்பதுதான். எனவே காகங்களின் பிரதிநிதிகள் சென்று குயில்கள் இது ஒரு வினோதமான அழைப்பு. இது ஒரு வினோதமான விருந்து எனச் சந்தேகப்பட்டு காகங்களின் பேச்சிலிருந்தும், பார்வையுலிருந்தும் அவைகளின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்டன. அந்த அழைப்பை நிராகரித்தன. காகங்கள் வெட்கம் கொப்பளிக்க தலைத்தொங்க பறந்து சென்றன. காகங்கள் குயில்களை விருந்துக்கு அழைக்கவில்லை, மாறாக குயில்களை விருந்தாக்க ‡ விருந்தாக மாற்ற அழைத்தன. இந்த எண்ணம் கொண்ட யூத மக்களின் வஞ்சகத்தையும் இயேசு புரிந்துக் கொண்டு நழுவிச் சென்றார்.

இஸ்ராயேல் நாட்டின்; வடபகுதி மக்கள் கி.மு. 722இல் அன்னிய அசீரிய ஆட்சிக்கு அடிமைகளாயினர். இஸ்ராயேல் நாட்டின் தென்பகுதி நாடான யூதேயா நாட்டு மக்களும், கி. மு. 587இல் பாபிலோனியாவின் ஆட்சிக்கு அடிமைகளாயினர். இந்த அடிமைத்தனத்திற்கு காரணம் அவர்களது பாவ வாழ்வுதான். அவர்கள்தம் பாவ வாழ்வை விட்டு, இறைவன் வழி வாழ இறைவாக்கினர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். இவ்வகையிலேதான் எரேமியா இறைவாக்கினரும் (முதல் வாசகம் எரே 1 : 4 ‡ 5 ) அழைக்கப்பெற்றார்.

யோசியா அரசன் யூதேயாவை ஆண்ட காலத்தில் (கி.மு. 638 ‡ 609) எரேமியா அழைப்புப் பெற்றார். யோசியா ஒரு நல்லரசன். இவரது காலத்தில் எரேமியாவின் காலம்; ஒரு பொற்காலம். யோசியாவுக்குப் பின் அரசாண்டவர்கள் கடவுள் திருமுன் தீயவை செய்தார்கள். அவர்களது காலத்தில் யோசியாவின் பணி சிலுவைப்பாதையாக இருந்தது. அதனால் இவர் துன்பங்களின் மனிதர் என அழைக்கப்பெற்றார். இவரைப் பிடித்து அடித்துச் சிறையில் தள்ளினர் (எரே 37 : 15). பாழுங்கிணற்றில் தள்ளினர் (எரே 38 : 16). பிறகு அங்கிருந்து அவர் காப்பாற்றப் பெற்றார்.

இதைப் போன்றுதான் இன்றைய நற்செய்தியில் இயேசுவுக்கும் நிகழ்ந்தது. இயேசு அவர்களின்கடினமான இதயங்களைக் கசக்கச் சொன்னார். கல்லான எண்ணங்களை உடைக்கச் சொன்னார். தன்னை இறைமகன் என ஏற்கச் சொன்னார். விளைவு இயேசுவை அவரின் சொந்த ஊர் மக்களே ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மாறாக மலை உச்சியிலிருந்துத் தள்ளிவிட அவரை இழுத்துச் சென்றனர். ஆனால் அவர் நழுவிப் போய் தப்பித்துக் கொண்டார்.

இயேசு பெருமான் இரண்டு வரலாற்று நிகழ்வுகளை தொழுகைக் கூடத்தில் இருந்தவர்களுக்கு விளக்கினார்.
 1. பஞ்ச காலத்தில் இஸ்ராயேலர் இல்லாத சாரிபாத் கைம்பெண் எலியா இறைவாக்கினருக்கு விருந்துப் படைத்தார். விளைவு அவளுடைய இறந்துபோன மகனை உயிர்க்கச் செய்து அவளுக்கு அளித்தார். (1 அரசன் 17 : 1 - 18)

2. இஸ்ராயேலரல்லாத நாமான் என்பவரும் தொழுநோயிலிருந்து எலிசா இறைவாக்கினரால் குணம் பெற்றார். (2 அரசன் 5 : 1 ‡ 14). இறைவனை ஏற்பவர்கள் அவரின் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்பதற்கு இவை வரலாற்றுச் சான்றுகள்.
இறைப்பற்றாளர்களுக்குத் துன்பங்கள், தொல்லைகள், நிபந்தனைகள் நிராகரிப்புகள், தாக்குதல்கள் தர்ம சங்கடங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், தவிப்புகள், தண்டனைகள் உண்டு. இந்நேரங்களில் எல்லாம் அன்பை கவசமாக ‡ அன்பின் பண்புகளை கேடயமாக அணிந்து வாழ வேண்டும் என்பதை பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் தெளிவாக விளக்கினார். அன்பு பொறுமையுள்ளது. பரிவுள்ளது. பிறர்நலம் சார்ந்தது. உண்மையைச் சார்ந்தது என்ற அன்பின் பண்புகளை வரிசைப்படுத்தினர். தனிநபர் வாழ்விலும், சமூக வாழ்விலும் நம் பார்வைகள் ஆரோக்கியமானதாக இருந்தால் அனைவருக்கும் நல்லதே. ஏனெனில் நிறைகளே வாழ்வின் தடங்கள்.

No comments:

Post a Comment

Ads Inside Post