Pages - Menu

Tuesday 31 May 2016

நற்கருணை நம் வாழ்வின் நடுநாயகம் (ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தரும் அனுபவம்)

நற்கருணை நம் வாழ்வின் நடுநாயகம்
(ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் தரும் அனுபவம்)

 அருள்பணி. ரா. ரஞ்சித் குமார்,

நற்கருணை இயேசுவில் அன்பிற்குரியவர்களே!

நற்கருணை வழியாக நம் வாழ்வில் தம்முடைய விலை மதிக்க முடியாத “இருத்தலால்” நம்மீது கொண்டிருக்கும் பற்றையும், பாசத்தையும் கிறிஸ்து வெளிபடுத்துகிறார். அவரது உடனிருப்பு நமக்கு மகிழ்வையும், மனநிறைவையும் அளிக்கிறது. தனது பிறப்பு வழியாக கடவுள் நம்மோடு இருக்கிறார். தனது இறப்பு (சிலுவை) வழியாக கடவுள் நமக்காக இருக்கிறார். ஆனால் நற்கருணை வழியாக கடவுள் நம்முள் இருக்கின்றார். இதுதான் நற்கருணையின் உடனிருப்பின் உச்சம். ஆகவேதான் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுகின்றது. நற்கருணை, கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும், மையமுமாக இருக்கின்றது. (திருச்சபை எண் ‡ 11). மற்ற திருவருட்சாதனங்கள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில்தான் இறைவன் அருள்  பொழிகின்றது. ஆனால் நற்கருணை என்னும் திருவருட்சாதனம் மட்டுமே, எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும், தனது ஊற்றில் இருந்து அருள் பொழியும் தன்மையுள்ளது - என்று திரிதெந்தின் சங்கம் 1551 கூறுகின்றது.

நற்கருணை நாதர், மேலெழுந்த வாரியான அழைப்பு விடுத்துவிட்டு அகன்று நிற்பதில்லை. ஏனையோரைப் போன்று அல்லாது உரிமையோடு, உவகையோடு உளமாற ஏற்று நம்மோடு உறவுகொண்டு நம்மை நற்கருணை மைய வாழ்வு வாழ அழைக்கின்றார்.

ஐந்து அப்பம், இரண்டு மீன் :

யோவான் நற்செய்தி 6 : 1- 15 என்ற இறைவசனங்களில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்ச்சியைப் பார்க்கின்றோம். தம்மைத் தேடி வந்த மக்களின் பசியை ஆற்ற ஒரு சிறுவனிடம் இருந்து பெற்ற, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். இந்த நற்செய்திப் பகுதியில் பார்க்கின்ற, அப்பம் பலுக செய்யும் நிகழ்வு, நற்கருணை திருவிருந்தின் ஒரு முன்சுவை எனலாம். இந்த ஐந்து அப்பங்கள் வழியாகவும், இரண்டு மீன்கள் வழியாகவும், ஐந்து வகை நற்கருணை மைய வாழ்விற்கான பயிற்சிகளையும்,  இரண்டு மீன்கள் வழியாக இரண்டு வகை நற்கருணை மைய வாழ்விற்கான அழைப்பையும் ஆண்டவர் இயேசு நமக்கு விடுக்கின்றார் என்று பொருள் விரித்துக் காணலாம்.

நற்கருணை தரும் பயிற்சி :

இயேசுவின் இலட்சிய வாழ்வில் பின்வரும் பரிமானங்களை நற்கருணையில் நாம் நினைவு கூர்கின்றோம். இந்தப் பரிமாண படிநிலைகளை நமதாக்க இக்கருத்துகளை விரிவாக்குகின்றேன் ...

முதல் அப்பம் : பற்றுறுதிமிக்க வாழ்வு :

இறைவன் மனிதரோடு செய்து கொண்ட உடன்படிக்கை இயேசுவின் வழியாக நிறைவேறியது. இயேசுவின் புதிய உடன்படிக்கை பழைய சீனாய் மலை உடன்படிக்கையின் அடிப்படைகளையே மீண்டும் வலியுறுத்தியது. இஸ்ராயேல் மக்கள் இறைவனோடு ஏற்படுத்திக் கொண்ட வாக்குறுதிகளை மறந்து, ஏழைகளையும், அடிமைகளையும் கவனிக்காத ஆதிக்க சக்திகளாக உருபெற்று, பணம், பதவி, அதிகாரம், ஆடம்பரம் போன்ற சிலைகளை வணங்கி, உடன்படிக்கையின் இறைவனையும் மறந்து தங்களின் பற்றுறுதியில் பலமிழந்தார்கள்.

இந்நிலையில்தான் புதிய உடன்படிக்கையின் சின்னமாக இயேசு வருகிறார். புரட்சிகரமாக வரலாற்று மாற்றத்தையும், ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும், சிறைபட்டோருக்கும் விடுதலை கீதத்தை முழக்கமிடவும், (லூக் 4 : 18 ‡ 19) இயேசு தன் பணிவாழ்வை அர்ப்பணிக்கின்றார். அவர் வழி வாழ அழைக்கப்பட்டோர் அனைவரையும் இந்தப் புதிய உடன்படிக்கையில் பற்றுறுதிமிக்க சீடராக வாழ அழைக்கின்றார். ஆகவே ஒவ்வொரு நற்கருணை கொண்டாட்டத்திலும் இயேசுவின் உண்மையான, பற்றுறுதிமிக்க வாழ்வுக்கான அழைப்பு நினைவு கூறப்பட்டு, நிகழ்வாக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆண்டவர் இயேசு இறுதிவரை தந்தையின் திருவுளப்படி வாழ்ந்து, தனக்கும் தந்தைக்கும் உள்ள பற்றுறுதிமிக்க வாழ்வை மெய்ப்பித்தார் (யோவான் 4 : 34). ‘தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே என் உணவு’ என்று கூறுவதன் மூலம் தந்தையோடு இருந்த பற்றுறுதிமிக்க வாழ்வின் ஆழத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றார்.

இரண்டாம் அப்பம் : பந்தியமரும் வாழ்வு :

மற்றவர்களுக்கு விருந்து அளித்தலும், பிறர்தரும் விருந்தில் பங்கேற்பதும் மிகுந்த ஆழமான உறவின் வெளிப்பாடாகும். இதைத்தான் நமது கலாச்சாரங்களில் பார்க்கின்றோம். திருமண காரியங்கள் குறித்து பேச பெண் வீட்டிற்குச் செல்லும்போது இறுதியில் கை நனைத்து செல்லுங்கள் என்பார்கள். காரணம் விருந்தில் பங்கேற்று செல்வதன் மூலம் அந்த  இரு குடும்பங்களுக்கும் இடையே புதிய உறவு மலர்ந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. அதுபோல ... இறைவனும் தன் மக்களோடு தனக்கிருக்கும் உறவின் நெருக்கத்தைதான் அளிக்கவிருக்கும் விருந்தின் வடிவில் வெளிபடுத்துகின்றார்.

பழைய ஏற்பாட்டில் கூட இதை நாம் காண முடிகிறது (எசாயா 25 : 6 - 7). ‘படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார், அதில் சுவைமிக்கப் பண்டங்களும், பழரச பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்’ என்று புதிய வாழ்வை குறித்து வாக்களிக்கும்போது விருந்தை அடையாளப்படுத்துகின்றார்.

இதே போல புதிய ஏற்பாட்டில் பார்க்கின்ற போது இயேசு பாவிகளோடும், ஒதுக்கப்பட்டவர்களோடும் விருந்து உண்டு மகிழ்வதன் வழியாக, புதிய வாழ்வை வாக்களிக்கின்றார். மேலும் திருப்பாடல் 23 : 5இல் “என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்” என்ற பகுதி எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட புதிய விடுதலை வாழ்வை மையப்படுத்துவதாக அமைகின்றது.

மூன்றாவது அப்பம் : பணிபுரியும் வாழ்வு :

நற்கருணை, இயேசுவின் பணி வாழ்வை நினைவு கூர்கின்றது. இயேசு இறைமகனாக இருந்தும் தம்மையே வெறுமையாக்கி, பணிபுரியும் அடிமையாக, மனிதர்களின் இன்ப துன்பத்தில் பங்கேற்கும் மனித பிறப்பாக உருவெடுத்தார். தன்னை முழுவதும் பணிவாழ்வுக்காக கையளித்து “பணிவிடை பெற அல்ல, பணிவிடை புரியவே வந்தேன்” என்று கூறி இதுவே என்னைப் பின்பற்றும் சீடர்களின் தனித் தன்மை என்பதை “நான் செய்தது போலவே நீங்களும் ஒருவர் மற்றவர்களுக்குப் பணிபுரிந்து வாழுங்கள்” (யோவா 13 : 14 ‡ 16) என்ற அன்புக் கட்டளையை விடுத்தார். தான் இறைமகன் என்று அறிந்தும் 30 ஆண்டுகள் தச்சுப்பட்டறையில் பணியாற்றினார். ஒவ்வொரு நற்கருணை பலியும் இயேசுவின் பணிவாழ்வை ஆணித்தரமாக அறிக்கையிடுகின்றது. எனவே, இயேசுவின் பணிவுடைமையையும், பணியாளராகிய பாங்கையும் நினைவு கூறாமல் நற்கருணையைக் கொண்டாட இயலாது. எனவே, நற்கருணை, உறவை வளர்க்கும் விருந்து என்ற கருத்தை இங்கு நினைவு கூறலாம்.

நான்காவது அப்பம் : பகிர்ந்தளிக்கும் வாழ்வு :

நேரம், காலம் பாராமல் உழைத்த இயேசுவின் வாழ்வு, ஒரு பகிர்வின் வாழ்வாகும். நற்கருணை வழியாக தன்னைப் பகிர்ந்தளிக்கிறார். நற்கருணை என்பது இயேசுவின் அளவு கடந்த பகிர்வின் வெளிப்பாடு. மேலும் தன்னை முழுவதுமாக வெறுமையாக்கி கொண்டதின் அடையாளம். (லுeஐலிவிஷ்வி). புனித அகுஸ்தினார் கூறுவார்,  “றூலிd உழிஐ’மி eதுஸ்ரீமிதீ ஜுஷ்துவிeயிக்ஷூ லிஸer ழிஐd ழிணுலிஸe. சிஐஉஜுழிrஷ்விமி ஷ்வி மிஜுe ஜுஷ்ஆஜுeவிமி க்ஷூலிrது லிக்ஷூ சிதுஸ்ரீமிஷ்ஐeவிவி லிக்ஷூ றூலிd”, என்று அதாவது ‘நற்கருணையில் தன்னை வெறுமையாக்கியதைவிட வேறு சிறந்த ஒன்றை கடவுளால் கொடுக்க இயலாது. காரணம் நற்கருணையில் தன்னை வெறுமையாக்கியது, இயேசு தன்னை வெறுமையாக்கியதன் உச்சக்கட்டம்’.

உலகில் ஏற்றத் தாழ்வு நீங்கி, பஞ்சம், பட்டினி, பற்றாக்குறை போன்ற தீய சக்திகள் அகற்றப்பட வேண்டுமானால் பகிர்வு இன்றியமையாதது என்பதை ஐயாயிரம் பேருக்கு உணவளித்த நிகழ்வு (யோவா 6 : 1 ‡ 13) நமக்கு நினைவூட்டுகிறது. இந்தப் பகிர்ந்தளிக்கும் உள்ளத்தோடு இயேசு அப்பத்தைப் பிட்டு பகிர்ந்தளித்தார். தன் உடலைப்பிட்டு பகிர்ந்தளித்தார். இயேசுவின் பெயரால் ஒன்று கூடிய ஆதிக்கிறிஸ்தவர்கள் இப்பகிர்தலின் மேன்மையை வாழ்வாக்கினார்கள். ஆகவே ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டமும் பகிர்வின் கொண்டாட்டம் என்பதை உணர்ந்து பகிர்ந்தளிக்கும் வாழ்வுக்கு அழைக்கப்படுகிறோம்.

ஐந்தாவது அப்பம் : பலியாகும் வாழ்வு :

இயேசுவின் மனுவுருவான வாழ்வு ஒரு தியாக வாழ்வு, தன்னை இழத்தலும், சிலுவை சுமத்தலும், கல்வாரியில் தியாகப் பலியாக தன் உயிரையே தருதலும் இல்லாமல் சீடத்துவ வாழ்வு இல்லை என்பதை வாழ்ந்து காட்டிய தியாக வாழ்வு. எந்த ஒர் உறவும் முன்வந்து செய்யாத தியாக பலியை இயேசு மனுகுலத்தின் மீது வைத்திருந்த அன்பால் செய்தார். இதன் வெளிப்பாடுதான் ஒவ்வொரு நற்கருணை பலியும், பிரசன்னமும், பலியாக்கும் வாழ்வு இல்லாமல் நற்கருணை கொண்டாட்டம் இல்லை. “வாழ்வது நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்” என்று கூறிய புனித பவுலடிகளாரைப் போலவும், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதற்காக தண்டனை தீர்ப்புக்கு கையளிக்கபட்டபோது “வாழ்ந்தால் கிறிஸ்துவுக்காக வாழ்வேன், இறந்தால் கிறிஸ்துவோடு வாழ்வேன்” என்று கூறிய சவுதி அரேபியாவை சேர்ந்த முகமது போலவும், கிறிஸ்துவுக்காக பலியாகும் வாழ்வு வாழ நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.

அழைப்பு :
இதுவரை நற்கருணை மைய வாழ்வின் பொருளை ஐந்து அப்பங்களை அடையாளமாக வைத்து பார்த்தோம். அடுத்து இரண்டு மீன்கள் வழியாக நற்கருணையின் பொருள் காண சுருக்கமாக முயலுவோம்.

முதல் மீன் : அவராக மாற அழைப்பு :

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும் (பிலிப்பியர் 2 : 5).

இரண்டாம் மீன் : அவராக வாழ அழைப்பு :

இதை என் நினைவாகச் செய்யுங்கள் (லூக் 22 ‡ 19).
பிறரன்பு பணியில் வளர ...
பிறர் துன்பத்தில் தோள் கொடுக்க ...
சாதியம் தாண்டிய சமத்துவ வாழ்வு வாழ ...
நற்கருணை இறைவனின் உடனிருப்பின் ஒப்பற்றக் கொடை.
அதனை வாழ்ந்து மகிழ்வோம்.  

No comments:

Post a Comment

Ads Inside Post