Pages - Menu

Tuesday 13 February 2018

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர் கலம்பகம் இன்றைய தமிழில்

வீரமாமுனிவர் அருளிய திருக்காவலூர் கலம்பகம்
இன்றைய தமிழில்
அருட்பணி. சலுசா
 பாடல் எண்: 18  தினம் வந்தாலும்

அருளளித்து - பாவ
இருளழித்து
மயக்கம் நீக்கி - மனித
மாசு போக்கி
ஒளிதரும் உதயமாய்
உயிருக்கு உயிரான
உன்னதத் தாயே!

அணி அணியாய் அழகு சேர்க்கும்
மணி ஒளிர் திருக்கோயில்
திருவடி வணங்கி புகழாது போனால் - உன்
திருமகன் சொற்படி வாழாது போனால்

தெய்வீகத் திருக்காவலுரானாலும்
மகிழ்ச்சியில்லை மானிடர்க்கு
மறு உலக வாழ்வு மில்லை.
துயரில் வாடி துவண்டு போவர்
இன்னுயிர் காக்க இரங்கிடும் தாயே.

எண்சீர் ஆசிரிய விருத்தம்:
மகிழா ருலகி னணுகார் கதியின்
மடிவார் துயரி லருளா ருன்றாட்
புகழா தவரே பணியா தவரே
புடைநீ காவா துய்யா வுயிரே
திகழார் மணிபோ லணிபூஞ் சினைக்காத்
திருக்கா வனநல் லூரூர்ந் தவரே
நிகழா வருளு மருளு
நிசியற் றுயிரே விளங்கும் பானே. 

சோதனைகளைச் சாதனைகளாக்கிடப் பயிற்றுவிக்கும் தவக்காலம்

சோதனைகளைச் சாதனைகளாக்கிடப் பயிற்றுவிக்கும் தவக்காலம்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

வசந்தத்தின் வாசல்:

ஆண்டுதோறும் நம்மைத் தொட்டுச் செல்லும் தவக்காலம் நமக்கு விட்டுச் செல்லும் அழைப்பும், சிந்தனையும் அற்புதமானவை. கால மாற்றத்தால் கறைபட்டும், குறையுற்றும், மாசுபட்டும் உள்ள மனித சிந்தனை யினையும், செயல்பாட்டினையும் மாற்றியமைக்கும் ஆன்மீகப் பண்புகளையும், விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதே இத்தவக்காலத்தின் மாண்பு. செல்லரித்துப் போன சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் செம்மைபடுத்தி சீர்மிகு வளமையும், மகிழ்ச்சியும் ஏற்பட வழிகளைத் திறந்து விடும் காலம் இது. அன்பும், இன்பமும் மேன்மையும் நிறைந்த இத்தவக்காலத்தினை வசந்தத்தின் வாசல் என்பது பொருத்தமானது தானே! 

 நெற்றியிலே சாம்பல் திலகமிட்டு:

புருவ நடுவே தியான நிலை, ஆன்ம பிரகாசம் உள்ளது என்பது இந்திய மரபு. இந்த இடத்தில் திருநீறு இடுதல் என்பது, மாசற்ற, சுத்த, சாந்த நிலையை அடைய எடுக்கும் முயற்சியின் அடையாளமாகும். மனிதர் மண்ணிலிருந்து வருபவர். மண்ணுக்கே திரும்பக் கூடியவர். மனிதன் மட்டுமல்ல அனைத்துக் கனிம வளங்களும் மண்ணிலிருந்து தானே தோண்டி எடுக்கப்படுகின்றன. இறுதியில் இவை அனைத்தும் திரும்பச் செல்வதும் மண்ணுக்குள் தானே.

எனவேதான் திருச்சபை ஆண்டு தோறும் திருநீறு அல்லது சாம்பல் பூசி தவக்காலத்தினை ஆரம்பிக்கின்றது. இந்த ஆண்டுக்கான இத்தவத்திருநாளே பிப்ரவரி 14. ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான இறைமை நிலையே. நெற்றியில் பூசப்படும் சாம்பல் அல்லது திருநீரு என்பது ஆழ்ந்த பொருளை வெளிபடுத்தும் அடையாளமாகும். ‘மனிதனே! நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய்’  என்னும் சொற்களோடு நெற்றியில் சாம்பல் பூசப்படுகிறது. இது தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு, பாவ பரிகாரம் மேற்கொண்டு இறைவனோடும் மனிதரோடும் ஒப்புரவு கொண்டு வாழ வேண்டும் என்பதற்கான அழைப்பாகும். 

 விவிலியம் கூறும் தவக்காலம்:

‘மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்’ (மாற் 1:15) என்பதுவே தவக்காலச் செய்தி. தவக்கால நோன்பு பற்றிய செய்தி பழைய ஏற்பாட்டு நூல்களில் நிறைய காணக்கிடக்கின்றது. குறிப்பாக யோனா இறைவாக்கினர் அறிவித்த தூதுரையினை ஏற்று பாவப்பரிகார வாழ்வினை மேற்கொண்டனர் நினிவே நகர மக்கள். பாவத்தினால் விளையும் தண்டனையி லிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நினிவே நகர மக்கள் இறைவாக்கினரின் யோனா வின் வாக்கினுக்குச் செவிமடுக்கின்றார்கள். மன்னவன் முதல் மக்கள் வரை சாக்கு உடை அணிந்து கொண்டு சாம்பலில் அமர்ந்து தவத்தினை மேற் கொள்கின்றனர். இதன் விளைவாகக் கடவுள் அவர்களைத் தண்டிக்காது வருகின்றார்.

எசாயா 55:7 மூன்று முக்கிய பண்புகளை முன் வைக்கின்றது.

1.கொடியவர் தம் வழிமுறைகளையும், தீயவர் தம் தீய எண்ணங்களையும் விட்டு விடட்டும்.
 2. ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்.
3. கடவுள் அவருக்கு இரக்கம் காட்டுவார். ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.
உண்மையான மனமாற்றம் என்பது ஒருவரின் சிந்தனை, உணர்வு, செயல்பாடு, உறவுமுறை இவற்றிலேயே அடங்கியுள்ளது.
 - ‘மனம் மாறுங்கள். இறை அரசு நெருங்கி வந்து விட்டது.’ (மத் 3:2)
 - ‘மனம் மாறாவிடில் நீங்கள் அழிவீர்கள்’. ( லூக் 13:3)
எனவே இத்தவக்காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டியது மனமாற்றம்.

 திருச்சபையின் வரலாற்றில் தவக்காலம்:

கி.பி 320இல், இன்றைய துருக்கியின் நிலப் பகுதியாக விளங்கும், நிசாயா என்னுமிடத்தில் திருச்சங்கம் கூடியது. இதில் திருச்சபையின் வாழ்வு முறைகள் பற்றிய முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிசேயா திருச்சங்கத்தின் கொள்கைத் திரட்டு 20 பிரிவுகளைக் கொண்டது. இதில் 5 ஆவது பிரிவு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவுக்கான தயாரிப்புக் காலம். ஏன் 40 நாட்கள். ஆண்டவர் இயேசு 40 நாட்கள் பாலைவனத்தில் சோதிக்கப்பட்டார் என்பதை பின்பற்றி எனலாம் (மத் 4:1,2). மேலும் நிசேயா  திருசங்க கொள்கைத் தொகுப்பு 5 ஆம் பிரிவு பாவ மன்னிப்பு மற்றும் கிறிஸ்தவ மக்களின் ஒன்றிப்பு பற்றியும் எடுத்துரைக்கிறது. இக்கருத்தினை அனைத்து பிரிவினை சபைகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆங்கிலிக்கன் திருச்சபை:

1563 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபை ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் புரிந்து 29 பகுதிகளைக் கொண்ட கொள்கைத் திரட்டினை வெளியிட்டது. இதில் 21 ஆவது பகுதி நிசேயா திருச்சங்கத்தின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. கிறிஸ்தவ சபைகள் தங்களுக்குள் பிளவுண்டு கிடப்பது வருத்தத்திற்குரியதே. இருப்பினும் நிசேயா திருச்சங்கத்தின் கருத்தினை ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்களின் ஒன்றிப்பு நிலையினை வெளிப்படுத்தியது ஆங்கிலிக்கன் திருச்சபை.

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம்:

நிசாயா திருச்சங்க கருத்தின் தொடர்ச்சியை வத்திகான் சங்க கொள்கைத் திரட்டில் காணமுடிகிறது. திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்கம் எண் 109 மற்றும் 110 கீழ்க்கண்டவாறு தவக்காலத்தின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகிறது. 
எண் 109: தவக்காலம் இரு பண்புகளைக் கொண்டது.

- திருமுழுக்கினை நினைவில் கொண்டு செயல்படுதல் அல்லது இதற்கென மக்களைத் தயார் செய்தல்.

- ஒப்புரவாகுதல் - சமூகம் மற்றும் இறைவனுக்கெதிரான பாவநிலையினை உணர்ந்து மனம் வருந்தி மனம்மாறி இறைவனோடும் மனிதரோடும் ஒப்புரவாதல். எண் 110: தவக்கால முயற்சிகள் அகம் மற்றும் தனி, மனிதன் சார்ந்தவையாக மட்டுமல்லாது புறம் சார்ந்தவையாகவும், சமூகப் பண்புடையவையாகவும் இருத்தல் வேண்டும்.

தவக்காலத்தின் இருவகை பண்புகள்: மகிழ்ச்சியுடன் பாவப் பரிகாரங்கள் செய்து, திருமுழுக்கிற்கான தயாரிப்புக் காலமாகவும் இக்காலம் உள்ளது. இதனையே ‘உம்முடைய விசுவாசிகள் மனத்தூய்மை பெற்று ஆண்டுதோறும் பாஸ்கா விழாவின் மறைபொருளை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கச் செய்கின்றீர். இதனால் பக்தி முயற்சிகளிலும் அன்புச் செயல்களிலும் அவர்கள் மென்மேலும் ஈடுபட்டு தங்களுக்குப் புத்துயிர் அளித்த  திருவருட்சாதனங்களில் அடிக்கடி புதுப்பிக்கப் பெற்று இறைமக்களுக்குரிய அருளை நிறைவாகப் பெறச் செய்கின்றீர்’ என்று திருச்சபை மன்றாடுகின்றது. தவக்காலத் தொடக்க உரை திருப்பலி புத்தகம் பக்கம் 270.

 வாழ்வின் சோதனைகளைச் சாதனைகளாக்குவோம்:

மத் 4:1-11, லூக் 4: 1-13 போன்ற பகுதிகள் இயேசுவின் சோதனைகளைத் தெளிவாக விளக்குகின்றன. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே அலகையினால் சோதிக்கப்பட பாலை நிலத்திற்குத் தூய ஆவியாரால் அழைத்துச் செல்லப்படுகின்றார். நாற்பது நாள்கள் இரவும், பகலும் கடும்நோன்பு அனுசரிக்கின்றார். இதன்பின் பசியுறுகின்றார். மூன்று வகையான சோதனைகளை எதிர்கொள்கின்றார்.

மூன்று முழுமையைக் குறிக்கின்றது. நம் தலைமைக்குரு நம்மைப் போல் எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டார். எனினும் பாவம் செய்யாதவர் (எபி 4:15) 

முதல் சோதனை  உணவு. இது உடல் ரீதியானது இறைவார்த்தையே உண்மையான உணவு எனச் சொல்லி இயேசு வெற்றிக் கொள்கின்றார்.  

இரண்டாம் சோதனை   அலகை இயேசுவை எருசலேம் ஆலய உச்சியிலிருந்து கீழே குதிக்கச் சொல்கிறது. இது பிறரின் கவனத்தை ஈர்க்கும் செயல். எல்லோரின் கவனம் என்மீது மட்டுமே இருக்க வேண்டும் என்ற உளவியல் ரீதியான சோதனை 

மூன்றாம் சோதனை  உலக அரசுகள் அனைத்தையும் காட்டி ஆசை, பதவி ஆசையை உண்டாக்குகிறது. நானே உலகின் அதிபதி. ஏகாதிபதி என்ற சர்வாதிகார உணர்வை ஏற்படுத்துகின்றது. ஆனால் மூன்று சோதனைகள் மீதும் வெற்றி கொள்கின்றார்.
சோதனைகளைச் சாதனைகளாக்க சிந்தையில் கொள்ள வேண்டியவை:

1.  பாலை நிலம் - தனிமை - சோதனைக்காலம். கடவுளின் உடனிருப்பையும், இறை பராமரிப்பையும் உணரும் இடம்.

2. சோதனை வருவது பாவமல்ல. உணர்வு கொண்ட ஒவ்வொருவருக்கும் சோதனை நிச்சயம் உண்டு. விசுவாச உறுதிப்பாடு, பலமான பிரமாணிக்கமிக்க மனம் தேவை.

3. சோதிப்பவன் நம்மீது அக்கறை கொண்டவனாகவே காட்டிக் கொள்வான். இயேசு பசியோடிருப்பதைக் கண்டு 
உண்ணத் தூண்டுகிறது.

4. ‘நீர் இறைமகன் என்றால்’ என்று இயேசுவுக்குச் சவால் விடுகிறது. இயேசுவின் வல்லமையைச் சுட்டிக்காட்டித் தனது சுய நலத்திற்காகப் பயன்படுத்த அழைக்கின்றது. 
5.விவிலிய மேற்கோள்களை சாத்தான் சுட்டிக்காட்டுகிறது. விவிலியத்தை தனது தேவைக்காக யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சோதனை களை எவராலும் தவிர்க்க முடியாது. ஆனால் சோதனைகளுக்கான சூழல்களைத் தவிர்க்க முடியும்.

‘உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாம் எனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள்’ ( 1 பேதுரு 5: 8-9).

‘உங்கள் மனம் ஆர்வமுடையதுதான். ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுங்கள்’ (மத் 26: 31).

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
      25-02-18
தொநுV 22,1-2,9-13,15-18; உரோ 8,31-34; மாற் 9,2-10  
             
Fr.M. A. சூசைமாணிக்கம், திருஇருதய குருமடம்‡குடந்தை.

இயேசுவின் உருமாற்றம்:

இன்றைய உலகில் மனிதன் மகிழ்ச்சியைத் தேடி, மாற்றத்தை நாடி தன் வாழ்க்கையை ஒரு பயணமாக்குகிறான். இவற்றை அடைய பெருமுயற்சி செய்கிறான். இவைகளை அடைய முடியாதபோது குழப்பமும், துன்பமும், கண்ணீரும், வேதனையும் அடைகிறான். மாற்றம் என்பது வெளி அடையாளங்களில் அன்று, மாறாக நமது உள் உணர்வுகளில்தான் உள்ளது. உண்மையான மாற்றங்கள்

-  தீய குணங்களை நல்ல குணங்களாக மாற்றுவது.
-  மமதையாக இருப்போர் சமத்துவ குணாதிசயத்தை பெறுவது
-  பழிவாங்கும் குணம் விட்டுக்கொடுக்கும் குணமாக மாறுவது
-  காம உணர்வு கற்புநெறியாக மாறுவது
-  தீமைகளை நன்மைகளால் வெல்வது

இப்படிப்பட்ட நமது உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் நிலையான மகிழ்ச்சியை நாம் நம்மில் அனுபவிக்க இயலும்.

அன்று அப்போஸ்தலர்கள் அடைந்த தாபோர் மலை அனுபவம் மகிழ்ச்சியின் இரகசியம். இறைவனின் பிரசன்னத்தை நேரடியாக அவர்கள் உள்உணர்ந்து, மகிழ்ச்சியடைந்ததுபோல, நாமும் அந்த அனுபவத்தை பெற முயல வேண்டும். இயேசுவின் உருமாற்றத்தில் அவருடைய போதனையின் தொடர்ச்சியும், புதுமையின் தொடர்ச்சியும் கொடுமுடியாய் இருந்தது. இயேசுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியன் என்பது எலியா‡ மோசேயின் உரையாடலின் வழியாக உறுதி செய்யப்படுகிறது. யோர்தான் நதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயேசு, இங்கே, “இவர்தான் நம்மை மீட்க வந்த இறைவன்” என உறுதி செய்யப்படுகிறார். வானத்திலிருந்து வந்த குரலொலி, இறைமகன் இயேசு, தமது தந்தை இறைவனால் மாட்சியும், மதிப்பும் பெறுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. ( 2 பேது 1: 17-18). அதோடு இயேசுவிற்கு தமது தந்தை கடவுளின் அளவற்ற அன்பும் முத்திரையிடப்படுகிறது (லூக் 9:35).

இவை ஒருபுறமிருக்க இயேசுவின் இந்த நிலைப்பாட்டை (நிகழ்வை) சீடர்களால் புரிந்து  கொள்ள முடியவில்லை. ஆண்டவர் இயேசு எருசலேம் சென்று சிலுவையில் அறையுண்டு இறக்கப்போகிறார். தனது தந்தையின் விருப்பத்தை ஏற்று தன்னையே முழுமையாக கையளிக்கப் போகிறார். அதற்கான வெள்ளோட்டம்தான் இந்த தாபோர் மலை அனுபவம் என்பதை சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஆண்டவரின் மகிமையில் பங்குபெற துடிக்கிறார்கள். ஆனால் பாடுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகுதான் துன்பங்களின் வழியாக மீட்பு உண்டு என்பதை உணர்கிறார்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியும், துன்பமும் நிறைந்தது என்பதை கற்றுக்கொள்கிறார்கள்.

மனிதன் தன்னைத்தானே மகிழ்ச்சியற்ற வனாக மாற்றிக் கொள்கிறான். பாவத்தைப் போல் துன்பத்தையும், மரணத்தையும் தேடிக்கொள்கிறான். கடவுளால் நமது துன்பத்தை மகிழ்ச்சியானதாக மாற்ற முடியும். அத்துன்பத்தைக் கண்டு துவண்டுவிடக் கூடாது என்ற செய்தியைத் தான் இயேசுவின் உருமாற்றம் என்ற மகிழ்ச்சியான செய்தி நமக்கு இறை செய்தியாக இன்று கொடுக்கப்படுகிறது.

எனவே இத்தவக்காலத்தில் நம்முடைய துன்ப சிலுவைகளை ஏற்று, மகிமை என்னும் மகிழ்ச்சியின் உருமாற்றத்தைப் பெற செபிப்போம்.

“சிலுவைகளின்றி சிம்மாசனம் இல்லை”.

Monday 12 February 2018

தவக்காலம் முதல் ஞாயிறு

தவக்காலம் முதல் ஞாயிறு
18-2-18

நல்லவர்களையும் இறைவன் சோதிப்பர்
தொநூ 9: 8-15; 1 பேதுரு 3 : 18-22;  மாற் 1 : 12-15

அருட்திரு.I. மரிய அந்தோணி ஜேம்ஸ், குடந்தை.

அழகான ஆறு. ஆற்றோரத்தில் ஒரு குரு குடிசைப் போட்டு வாழ்ந்து வந்தார். அருகே ஓர் இளைஞன். அவனும் குடிசை போட்டு வாழ்ந்து வந்தான். நல்லதை மட்டுமே செய்பவர் குரு. கெட்டத்தை மட்டும் செய்பவன் இளைஞர். ஆனாலும் இருவரும் நண்பர்கள். ஒரு நாள் நள்ளிரவிலே, அடித்த பெரும் புயல் காற்றால், அவர்களின் குடிசைகள் வீசி எறியப்பட்டன. அடுத்த நாள், அந்த இளைஞன், அந்தக் குருவைப் பார்த்து ஏளனமாக, ‘என் குடிசை அழிய என்ன காரணம் என்னவென்று உங்களைக் கேட்டால், நான் செய்கின்ற தீமையே காரணம் என்பீர்கள். ஆனால் நல்லதே செய்கின்ற உங்களது குடிசையும் அழிந்துவிட்டதே’ என்று ஏளனப் புன்னகை செய்தான் அந்த இளைஞன்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, சோதனைகளின் போதும் கடவுள் நம்மை வழிநடத்துகிறார் என்ற சிந்தனை நமக்குத் தரப்படுகிறது. சோதனைகளுக்கு அனைவருமே உள்ளாக்கப்படுவது உண்மைதான். ஆனால் அந்த சோதனை தீய வழிகளுக்கே நம்மை அழைத்துச் செல்வதை உணர்ந்திருக்கலாம். சோதனைகள் என்றாலே அது சாத்தானிடமிருந்து வருகின்றன என்ற போதிலும், அச்சோதனைகளின் வழி, கடவுள் நம் வாழ்க்கையைப் புடமிடுகிறார் என்பதே  உண்மையாகும். அதனைத்தான் யோபு புத்தகத்தில், அவரது வாழ்விலிருந்து நாம் தெரிந்துக் கொள்கிறோம். சாத்தான், கடவுளின் அனுமதி பெற்று  யோபுவை சோதிக்கிறான். நமது வாழ்விலும் புனித நிலைப்பாட்டை உறுதி செய்ய, நம் வாழ்வின் பயணங்களில் பல்வேறு சோதனைகளை அனுபவிக்கலாம்.

யாக் 1:12-15இல் வாசிக்கின்ற போது, ‘மனித தீயநாட்டங்களிலிருந்தே சோதனைக்குட்படுத்தப் படுகிறோம்’ என்பது வெளிப்படுகிறது. ஒவ்வொரு சோதனையிலும் நமது தெளிவான தீர்மானத்தை எழுப்புவதற்கு நமக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. நமது ஆதிப்பெற்றோர்களின் பாவப் பின்னணியிலும் இத்தகைய நிலைப்பாடு இருந்ததை நாம் அறியலாம். அனைத்து சோதனைகளுக்கும் நான்கு அடிப்படை காரணிகள் உள்ளன எல்லாம். அனைத்திற்கும் ஊற்றாக முதற்காரணியாக இருப்பது ஆசை. ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று புத்தர் கூறுகின்றார். அதுபோல ஆதிப்பெற்றோரை ஆசையே பாவ வலைக்குள் இழுக்கிறது. இந்த கனியை உண்டால் கடவுளாக மாறிவிடலாம் என்ற ஆசை அவர்களை சோதனைக்குட்படுத்துகிறது. இரண்டாவதாக அசட்டுத் துணிச்சல், என்ற துணைக்காரணி நுழைந்து ‘அதனை உண்டால்தான் என்ன?’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி பாவச் செயலுக்குத்  தூண்டுகிறது.

மூன்றாவதாக ஏமாற்ற அனுபவம். மற்றவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் இனி ஏன் நல்வழியில் செல்ல வேண்டும் என்ற தவறான முடிவுக்கும் வரலாம். நான்காவதாக, கீழ்படியாமை என்ற திமிர் எண்ணம், இதனால் நன்மைகளை விட்டு தங்களை ஒதுக்கிக் கொள்கிறார்கள். முடிவு இறை நல் உறவிலிருந்து அவர்கள் தங்களை துண்டித்துக் கொள்கிறார்கள். இந்த நான்கு காரணிகளின் தலைவனாக இருந்து நம்மை சோதிப்பது சாத்தான். ஆனால் சாத்தானுடன் நெருங்கிப் பார்ப்பதற்கும் நமக்கும் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் போது நாம் தெரிந்தே பாவத்தை செய்கிறோம்.

இன்றைய நற்செய்திப் பகுதயில் இறைமகன் இயேசுவும் சோதனைக்குட்படுத்தப்பட்டார் என்பதை படிக்கிறோம். ஆனால் தகுந்த, தெளிவான தீர்மானத்தால், மனஉறுதியால், இறைவார்த்தை துணைக் கொண்டு, சாத்தானின் சோதனைகளை இயேசு முறியடித்தார். அதே வேளையில் தனது நற்செய்திப் பணியின் மையமாக ‘மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள், காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது’, என்று பறைசாற்றுகிறது.

தவக்காலத்தின் முதல் ஞாயிற்றில், இறைவன் நமக்குக் கூறுவது இச்சோதனைகளின் வழியாக வெற்றியும் பெறலாம் என்பதாகும். செக் 13:9  மற்றும் 1 பேதுரு 1:7 இல் ‘பொன் நெருப்பினால் புடமிடப்படுகின்றது’ என்று கூறப்பட்டுள்ளது. தூய பவுலடிகளார் கூறுவதும் இதுவே 1கொரி 10:13 ‘நமது வலிமைக்கு மேல் கடவுள் நம்மை சோதிக்கப் போவதில்லை’. ஆகவேதான் இயேசு கெஸ்தமணி தோட்டத்தில் திருத்தூதர்களைப்  போல, ‘சோதனைக்குட்படாதவாறு மன்றாடுங்கள்’ (லூக் 22:40) என நம்மையும் கேட்கின்றார். அவ்வாறே முதல் வாசகத்திலும் கடவுள் தனது உடனிருப்பை எப்போதும் நமக்குத் தருகிறார் என்பதை, மேகத்தின் மேல் தோன்றும் வானவில்லின் அடையாளம் கொண்டு எடுத்துக் கூறுகின்றார். நாம் சோதனைக்குட்படுகின்ற போதும் நம்மோடு இருந்து வழிநடத்துகிறவர் நம் இறைவன். மேலும் சோதனையின் போது தீயநாட்டத்தோடு செயல்படாமல் நல்ல தீர்மானத்தை தேர்ந்தெடுப்பதன் வழியாக சோதனைகளை வென்று கடவுளின் வழியில் உறுதி பெறுகிறோம். இதனை இன்றைய இரண்டாம் வாசகம் (1 பேதுரு 3:17) நமக்கு தெளிவுப்படுத்துகிறது. ஆக சோதனை என்பது அனைவருக்கும் உண்டு. அது மதில்மேல் பூனைப்போல் நாம் உறுதியாயிருந்தால் சோதனைகளின் நேரத்திலும் இறைவன் நம் உடனிருந்து வழிநடத்துகிறார். இத்தவக்காலத்தில் நமக்கு வரும் சோதனைகளை இயேசுவைப் போல சந்தித்து, வெற்றியும் உறுதியும் பெறுவோம்.

பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு
11 - 02 - 2018
லேவி 13: 1-2, 44-46; 1 கொரி 10 : 31 - 11 : 1; மாற் 1: 40 - 45;

அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்த ஒரு பெண்ணை ஒருவர் காதலித்தார். அந்த பெண் மிக அழகானவள். அவளையே திருமணம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இருப்பினும்  அவன் மிகவும் வற்புறுத்திக் கொண்டிருந்தான். எனவே அவள் அவனிடம், ‘ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள். பிறகு முடிவு செய்யுங்கள்’ என்றாள். எனவே ஆவலோடு அவள் வீட்டிற்குச் சென்றான்.  அங்கு சென்றதும் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவளது தந்தை தொழுநோய் பிடித்தவர். அவளின் தாய் காப்பி கலக்கிக் கொண்டு வந்தார். அதை குடிக்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது. சீக்கிரமாக வீடு திரும்பி விட்டான். அவனுடைய காதலும் மறைந்து விட்டது.

தொழுநோய் மிகவும் கொடூரமான நோய். ஐரோப்பிய நாடுகளில் தொழுநோய் கண்டவர்களை தனியான தீவிற்கு அனுப்பி வைத்தார்கள். நம் நாட்டிலும் தொழுநோய் கண்டவர்களை வீட்டிலிருந்து துரத்தி விடுவதைப் பார்க்கிறோம். இப்போது நம் நாட்டில் தொழுநோய் இல்லை என்று அரசு தெரிவிக்கிறது.
 
இன்றைய நற்செய்திப் பகுதியில் தொழுநோய் பிடித்தவரை இயேசு தொட்டு குணமாக்கிய நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்கிறோம். அக்காலத்தில் சாதாரண சொரி சிரங்குக் கூட தொழுநோய் என்று கருதப்பட்டது. லேவியர் ஆகமம்,  தொழுநோய் கொண்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம்  13 ‡ 14 ஆம் இயலில் விளக்குகிறது. தொழுநோய் கொண்டவர் ஊருக்கு வெளியே வாழ வேண்டும். அவர் தீட்டுடையவர். மக்கள் அருகில் வந்தால், ‘தீட்டு, தீட்டு என்று கத்த வேண்டும் (லேவி 13: 45‡46). இத்தகையவர், இயேசுவின் அருகில் வந்து  நீர் விரும்பினால் எனது நோயை உம்மால் குணமாக்க முடியும் என்று  வேண்டுகிறான். அவன்மீது பரிவு கொண்டு, ‘விரும்புகிறேன்’  என்று தொட்டு குணமாக்குகிறார். குருக்களிடம் முறைப்படி காட்டி, அதற்குரிய காணிக்கையை செலுத்தி மக்களோடு இணைந்து கொள் என்கிறார். ‘மற்றவர்களுக்கு இதைப்பற்றி சொல்லாதே’ என்றும் கட்டளைக் கொடுக்கிறார். கண்டிப்பாகக் கூறி அனுப்பி விடுகிறார் என்பதில் கண்டிப்பாக என்பதற்கு கிரேக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை  (எம்பிரிமாவோமாய்) (சிதுணுrஷ்துழிலிதுழிஷ்) என்ற  வார்த்தை யாகும். இதனின் நேரடிபொருள் ‘எச்சரித்தல்’ அல்லது ‘உணர்வுபொங்க’ கோபத்துடன் என்பதாகும். 

இயேசுவின் ‘பரிவு’, ‘நோயாளரைத் தொடுதல்’, ‘உணர்வு பொங்க’ என்பவை இயேசுவின் மனிதநேய பாசப்பண்பை முன் நிறுத்துகின்றன. குணமடைந்த தொழுநோயாளர் இயேசு கொடுத்த கட்டளைக்கு எதிராக, ‘எங்கும் அறிவித்து பரப்பி வந்தார்’ என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கேட்டுக் கொண்டதற்கு எதிராக செயல்பட்டதாகத்  தெரிகிறது.
இரண்டாம் வாசகத்தில் ‘எதை செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள்’ என்கிறார். ‘எனக்கு பயன் தருவதை  நாடாமல் பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்’ என்கிறார் பவுல், மற்றவர்களுக்காக வாழ்வதே இறைவனுக்கு மகிமை.

மற்றவர்களுக்காக வாழும் எண்ணம் நமக்கு எளிதாக வருவதில்லை. அவ்வாறு அந்த எண்ணம் நம்மில் எழுந்துவிட்டால் நம் வாழ்வு புதுமைகளின் கைகளாக  மாறும். அண்மையில் விழுப்புரம் அருகில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால்  அவ்வூரின் ஏரி உடைந்து விடும் ஆபத்து இருந்தது. ஒருவர் ஏரியின் கரைகளை பலப்படுத்த மற்றவர்களை அழைத்தார். யாரும் வரவில்லை. தானே மண்வெட்டியை எடுத்துச் சென்று மண்வெட்டி கரையை பலப்படுத்த  ஆரம்பித்தார். இதைப் பார்த்த மற்றவர்களும், ஊர் முழுவதும் சேர்ந்து கரையைப் பலப்படுத்தி, நீரை தேக்கினார்கள். இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீர் பாயும் வழி ஏற்பட்டது. மற்றவர்மீது கொள்ளும் பரிவு, ஆர்வம், புதுமைகளை செய்து தரும்.

பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு 
04 - 02 - 2018
யோபு 7: 1-4, 6-7; 1 கொரி 9: 22-23; மாற் 1: 29 - 39   

உலகில் பிறந்த நாம், நம் சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும். ஏனோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்றல்லாமல் உலகினை உயர்த்தக் கூடிய எதையாவது செய்ய வேண்டும் என்றே அறிஞர் கூறுவர். பியூஸ் மனுஷ் என்பவர், சேலம் வட்டாரத்தில், நீர் நிலைகளைக் காப்பாற்றி, ஏரி குளங்களை தூர்வாரி, அழகான நீர்நிலைகளை உண்டாக்கி வருகிறார். நீரின்றி மனிதரால் வாழமுடியாது, காற்றின்றி ஒரு நிமிடம் கூட வாழமுடியாது, பழைய நீர்நிலைகளை தூர்த்து விட்டு, வீடுகளைக் கட்டி, நீர் ஆதராங்களை அழித்துவிட்டார்கள். அதற்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பெரும் பணியாற்றி வருகிறார்.

இயேசு, பேதுருவின் மாமியரை அவரின் காய்ச்சல் நோயிலிருந்து விடுதலைத் தருகிறார். பேதுருவின் மாமியரை குணமாக்கும் நிகழ்ச்சியை விளக்கும் வார்த்தைகளில் இரண்டு வார்த்தைகள் தனிப்பட்ட கருத்தினைத் தெரிவிப்பதாக அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘கையைப் பிடித்து அவரைத் தூக்கினார்’ என்பதில் உள்ள, ‘தூக்கினார்’ என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, எகைரோ (சிஆeஷ்rலி) என்பதாகும். இவ்வார்த்தை இயேசுவின் உயிர்ப்பை குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையால் (மத் 28:7; மாற் 16:6; லூக் 24:6‡34). இதனால் இயேசு செய்த புதுமையில் இயேசுவின் உயிர்ப்பு முன் கூட்டியே        காட்டப்படுகிறது எனலாம். அடுத்து பேதுருவின் மாமியார் குணமடைந்த பிறகு, அவர், அவர்களுக்குப் பணிவிடை செய்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள  கிரேக்க வார்த்தை தியாகோனேயோ என்ற வார்த்தையாகும். இதில் இரண்டு குறிப்புகளைக் காணலாம். ஒன்று, பேதுருவின் மாமியார் முழுமையான உடல்நலம் பெற்றார். அதனால்தான் அவர் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய முடிந்தது என்பது. மற்றொன்று ‘தியாகோனேயா’ என்ற வார்த்தை, இயேசுவின் தாரக மந்திரமான பணி செய்தலை குறிக்கும் (மத் 20: 26‡28). ‘மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல தொண்டு ஆற்றுவதற்கும் ...’ (மத் 20:28). தியாகோனேயோ என்ற வார்த்தையை ‘தொண்டு’ என்று  மொழி பெயர்த்துள்ளார்கள். எனவே பேதுருவின் மாமியார் குணம் பெற்ற பிறகு இயேசுவின் பணியாளராக அவர் வழி செல்கிறார் என்ற கருத்தையும் இங்கு நினைத்து பார்க்கலாம்.
முதல்வாசகத்தில் யோபு, மனிதரின் வாழ்நாள் தறியின் ஓடுகட்டைப் போல வேகமாக ஓடி விடுகின்றன என்கிறார். இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், ‘நற்செய்தி அறிவிப்புப் பணி, அடிப்படையான பணி, அப்பணியை செய்யாவிடில் ஐயோ எனக்குக் கேடு’ என்கிறார்.
இயேசுவைப் போல நாமும்  மனிதருக்கு குணமளிக்கலாம்.  ஒரு  மருத்து வர் இராசியான மருத்துவர் என்பார்கள். அவரிடமுள்ள இரகசியம் என்னவென்றால் ஒவ்வொரு நோயாளியிடமும், அன்புடன் பேசி, நோயைப் பற்றி விளக்கி அவருக்கு நிச்சயம் குணமாகும் என்ற நம்பிக்கையைக் கொடுப்பார்.
பேதுருவின் மாமியாரை குணமாக்கியப் பிறகு, மற்ற நோயாளிகளும் அவரிடம் வருகின்றனர். மாலை நேரமானாலும் மக்களை சந்தித்து அவர்களின் நோய்களை இயேசு குணமாக்குகிறார். இரவில் தனியாக சென்று செபிக்கிறார். விடியற் காலையில் கூட அவரை மக்கள் தேடி செல்கிறார்கள்.
ஆற்றுபடுத்துதல் மருத்துவம் அதிகமாகப் பரவி வருகிறது. ஆற்றுப்படுத்தலில் முக்கியமான பண்பு, மற்றவர்களுக்கு செவிமடுத்தல். அவர்களின் உள்ளொளியை அவர்களே காணச் செய்தலாகும்.

இலக்கை விளக்கும் இலக்கியம்

இலக்கை விளக்கும் இலக்கியம்
அருட்பணி. ச.இ. அருள்சாமி

வாழ்வு ஒரு கலை. பிள்ளைகள் ஒரு நடனத்தை அரங்கேற்றும் முன் சுமார் ஐம்பது முறையாவது பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன். பயிற்சிகள் நடனத்தின் கவர்ச்சியை மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்வின் நுணுக்கங்களை நாம் சிறிதளவே புரிந்துக் கொள்கிறோம். ஆனால் அறிஞர்கள், வாழ்வை ஆழமாக புரிந்து கொண்டு,  மற்றவரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். வாழ்வின் இலக்கினை குறித்துக்காட்டுவதுதான் இலக்கியம். இயல், இசை, நாடகம் என்பவை இலக்கியத்தின் மூன்று முகங்களாகும்.
வாழ்வின் நிறைவு வழிகளை மற்றவர்களின் ஞானத்திலிருந்தும் பெற்றுக் கொள்கிறோம். பள்ளிகளில், உலகில் வளர்ந்த ஞானத்தை படிப்படியாக பெற்றுக் கொள்கிறோம். அதற்கு மேலாக அறிஞர்களின்  நூல்களை படிப்பதன் வாயிலாகவும், அறிவில் உயர்கிறோம், ‘உலகை உதிர்த்து பார்க்கவும், அதன் நண்பராக விளங்கவும் உதவுவது இலக்கியம்’ என்கிறார் நிகோலாஸ் கிறிஸ்டோப் . தமிழ் நாட்டின் முன்னால் முதலமைச்சர் உயர்திரு அண்ணாதுரை அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. அறுவை சிகிச்சைக்காக செவிலியர் அழைத்து செல்ல வந்தனர். அண்ணாதுரை அவர்கள், ‘ஒரு புத்தகத்தைப் படித்தேன். சில பக்கங்கள்தான் இன்னும் படிக்காமல் உள்ளன. எனவே அதனைப் படித்து முடித்ததும் அழைத்து செல்லுங்கள்’  என்றாராம். மறைந்த முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் நூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்றும், மற்றவர்கள் நல்ல புத்தகங்களை பரிசளித்தால் மிக்க மகிழ்ச்சியடைவார் என்றும் குறிப்பிடுகிறார்கள். 
தற்போது புத்தகங்களை வாசிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது என்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் என்று இணையதள பதிப்புகளால் புத்தகங்களுக்கு மதிப்பு குறைந்து விட்டது என்பார்கள். ஆனால் ஆங்காங்கு நடக்கும் புத்தக கண்காட்சிகளில் ஏராளமான மக்கள் புத்தகம் வாங்கி செல்வதைப் பார்க்கிறோம். 

‘வாசிப்பது, நாம் வாழ்வதற்கு காற்றை சுவாசிப்பதை போல்’ என்கிறார் அன்னி திலார் என்பவர். வாசிப்பதற்கு ஆவல் கொள்வோம். வாசிப்பதால் அறிவு வளரும், அறியாமை இருள் விளங்கும். 

அண்மையில் கலீல் ஜிப்ரான் அவர்களின், ‘ஞான களஞ்சியம்’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.  அதில் முழுமை என்ற கவிதையின் வரிகள் என் மனதைத் தொட்டன.
‘என்றும் எரிந்துக் கொண்டிருக்கும் தீயாகவும்
என்றும் அணையாத விளக்காகவும் 
உலவும் இளந்தென்றலாகவும், 
சீறியடிக்கும் சூறாவளியாகவும், 
இடிகள் முழங்கும் வானமாகவும், 
மழைபொழியும் விண்ணாகவும்,
எப்போது ஒருவர் உணர்கின்றாறோ...
அப்பொழுது அவர் பூரணத்தின் பாதிவழியைக் கடந்தவராகிறார்.’ என்று நமது விழிப்புணர்வே வாழ்வின் நிறைவு என்று அழகாக வடித்துக் காண்பித்திருக்கிறார் கலீல் ஜிப்ரான்.

பிப்ரவரி மாதம் இலக்கிய மாதம் என்று அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தைப் பற்றி சகோ.விமலி அவர்களும் திரு. பெஞ்சமின் இளங்கோ அவரகளும் எழுதியுள்ள கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. பலர், துணுக்குகள் சுருக்கமாக படிக்க நன்றாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர். அன்னையின் அருட்சுடரில் தேர்ந்தெடுத்த கட்டுரைகளை வெளியிட முயற்சிக்கிறோம். உங்களின் கருத்துகளை எழுதியனுப்புங்கள். 
தமிழ்நாட்டில் நடந்த R.K. நகர் இடைத்தேர்தல், நம் மக்கள் இன்னும் நிறைய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதையே நிரூபித்திருக்கிறது. ‘கொடுப்பதை வாங்கிக் கொண்டால் என்ன தவறு? நம்மிடம் பெற்றதை தானே தருகிறார்கள்’ என்ற தவறான கருத்திற்கு நம் மக்கள் அடிமையாயிருக்கிறார்கள். 6000 ரூபாய், பெற்றுக் கொண்டதால் வாழ்வின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டதா? ஆனால் ஒப்புயவர்வற்ற நமது ஓட்டு உரிமையை விற்றிருக்கிறோம் என்பதை நினைத்து நாம் தலை குனிய வேண்டும். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போட்ட நம் மக்களைப் பார்த்து மற்ற மாநிலத்தார் சிரிக்கிறார்கள் என்று சில குறிப்பிட்டுள்ளார்கள். 
தவக்காலம் துவங்கியிருக்கிறது.  நம்மில் மாற்றங்களும் திருத்தங்களும் இந்நாள்களில் ஏற்பட முயற்சிப்போம். விவிலியம் இலக்கியங்களிலெல்லாம் பெரிய இலக்கியம். வாழ்க்கையைத் தொடுகின்ற இலக்கியம்  அது. இறைவார்த்தைத் துணைகொண்டு தவக்காலத்தில் மேன்மைப் பெறுவோம்.

Ads Inside Post