Pages - Menu

Showing posts with label Mass. Show all posts
Showing posts with label Mass. Show all posts

Monday, 4 December 2017

திருப்பலி விளக்கம், 22. சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

திருப்பலி விளக்கம்

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

22.  சில சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்

முந்திய சிந்தனையில் பொது நற்கருணை மன்றாட்டுகள் நான்கும் தோன்றிய விதம், அவற்றின் அமைப்பு கூறுகள் அவற்றிக்குரித்தான சிறப்பு அம்சங்கள், காணும் சில குறைபாடுகள் பற்றி விளக்கம் கண்டோம்.  இப்பொழுது மற்றும் சில  சிறப்பு,  அதாவது குறிப்பிட்ட காலத்திற்கும், குறிப்பிட்ட நபர்களுக்கும், தேவைகளுக்கும் பயன்படுத்த உருவாக்கப்பட்டுள்ள நற்கருணை மன்றாட்டுகள் பற்றிய விளக்கம் காண்போம்.

பின்புலம்:

மூன்று புதிய நற்கருணை மன்றாட்டுகளை உருவாக்கி கொடுத்தபின் வேறு நற்கருணை மன்றாட்டுகளை வேறு யாரும் உருவாக்கக் கூடாது என்று திருவழிபாட்டு பேராயம் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி ஒரு சுற்று மடலை அகில உலக ஆயர்களுக்கு அனுப்பியது.  ஆனால் பல ஆயர்களின் பேரவையும், தனிப்பட்ட ஆயர்களும் கேட்டுக் கொண்டதின் பெரில் ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவர்களுக்கான திருப்பலியில் பயன்படுத்த நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும் அமைக்கப்பட்டு திருத்தந்தை ஆறாம் பாலினுடைய ஒப்புதல் பெற்று மூன்று ஆண்டுகளுக்குச் சோதனைக்காக  1974 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26 ஆம் நாள் வெளியிடப்பட்டன. இவை 1977 ஆம் ஆண்டோடு முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஆயர்களின் பேரவைகள் பல கேட்டுக்கொண்டதின் பேரில் இவற்றை தொடர்ந்துப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. இவற்றை குறிப்பிட்ட காலத்திற்கும்,  நபர்களுக்குமன்றி மற்றநேரங்களிலும் பொது நற்கருணை மன்றாட்டுகள் போல் விரும்பும் போதெல்லாம் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இவற்றைப் பயன்படுத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது. என்றாலும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த உரோமை திருப்பலி நூலின் மூன்றாவது மாதிரி படிவத்திலும், 2008 ஆம் ஆண்டு வெளி வந்த திருத்தப்பட்ட மறுபதிப்பிலும்  இந்த ஐந்து நற்கருணை மன்றாட்டுகளும் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தேவைகளுக்கென்று புதிதாக  நான்கு  நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. ஆக இன்று சிறப்பு நற்கருணை மன்றாட்டுகளாக ஒன்பதை  நாம் பெற்றுள்ளோம்.

அ.ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுக்களை ஒப்புரவின் மறைபொருளை நம்பிக்கையாளர்களுக்குச் சிறப்பான விதத்தில் எடுத்துரைக்கப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக மானிடரிடையே நல்லிணக்கத்தை உருவாக்க, ஒப்புரவுக்காக, அமைதியையும் நீதியையும் நிலைநாட்ட, போர் கலகம் போன்ற காலங்களில் மன்னிப்புக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, திருச் சிலுவையின் மறைபொருள், தூய்மைமிகு நற்கருணை,  நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத திரு இரத்தம் ஆகிய திருப்பலிகளிலும், தவக்காலத் திருப்பலிகளிலும் பயன்படுத்தலாம். இந்த இரு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பும் பண்பு கூறுகளும் பொது நற்கருணை மன்றாட்டுகள் 2,3,4 இல் காணப்படுவது போலவே இருக்கின்றன.

 1. ஒப்புரவு ஒன்று

ஒப்புரவுக்கான முதல்  நற்கருணை மன்றாட்டு கடவுளோடு ஒப்புரவு ஆவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. நாம் மனந்திரும்பி அவரிடம் வர அழைக்கப்பட்டாலும், அதற்குரிய முயற்சியை எடுப்பவர் கடவுளே. இதற்காக அவர் புனித ஆண்டையும், வருகை, தவக் காலங்களையும் வாய்ப்பாக அமைத்து அளிக்கிறார். இம்மன்றாட்டின் சிறப்பு அம்சமாக பின்வருவதைக் கூறலாம். உடன்படிக்கையின் வழியாக புதியதொரு உறவால் மக்களைத்  தம்மோடு கடவுள் இறுக்கமாக பிணைத்துக் கொள்கிறார். அருள்மிகு காலத்தை வகுத்துக் கொடுத்து மக்கள் தம்மிடம் மனந்திரும்பி வரச் செய்கிறார். இத்தகைய சிறப்புரிமையை நமக்கு மட்டும்  அருளாமல் மாந்தர் அனைவருக்கும் நம் வழியாக அருளுகின்றார்.

நான்காவது நற்கருணை மன்றாட்டில் இருப்பது போல், ஆண்டவர் இயேசு கிறிஸ்து நற்கருணையை நிறுவியதை விவரிக்கும் பகுதிக்கு முன் இந்த நற்கருணை மன்றாட்டும், ஆண்டவர் தம்மை கடவுளுக்குக் கையளித்ததின் வழியாக இறைதந்தையின் அன்பு விளக்கமாகத் தெரியும்படி அமைந்துள்ளது. மேலும் இரசக்கிண்ணம் வசீகரத்துக்கு முன், “அவ்வண்ணமே, சிலுவையில் சிந்தப்படவிருந்த தமது இரத்தத்தால் அனைத்தும் தம்மில் ஒப்புரவாக்கப்படும் என்பதை அறிந்த அவர்” என்ற வார்த்தைகள்  புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே போல் வசீகரங்களுக்கு அடுத்து வரும் நினைவாக்கத்தில் “எங்கள் பாஸ்காவும் உண்மையான அமைதியுமாகிய உம் திருமகன் இயேசுகிறிஸ்துவை நாங்கள் நினைவுகூர்ந்து” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 2. ஒப்புரவு இரண்டு

இந்த நற்கருணை மன்றாட்டு மனிதன் தம்மோடு ஒப்புரவாக கடவுள் எடுக்கும் முதல் முயற்சிக்கும் பாவ மன்னிப்புக்கும் இடம் கொடுப்பதோடு மனிதர் ஒருவர் ஒருவரோடு ஒப்புரவு ஆவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.  

“பகைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வந்து உரையாடவும், எதிரிகள் கைகோர்த்து ஒன்று சேரவும், மக்களினங்கள் ஒருவர் மற்றவரைச் சந்திக்க தேடவும்... தூண்டுகின்றீர்” என தொடக்கவுரையில் வருவது இதை உறுதிப்படுத்துகிறது. இது மத்தேயு நற்செய்தி 6: 14 - 15 இன் அறிவுரையின் அடிப்படையில் அமைந்துள்ளது. 

மனிதர் ஒருவர் மற் றொருவருடன் ஒப்புரவாவது  தூய ஆவியாரின் செயலாகத் தொடக்கவுரையில் காட்டப்பட்டுள்ளது. கடவுள் மக்களைத்  தம்மோடு ஒப்புரவாக்கும் செயல்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவின் செயல்களால் நிறைவேறுவதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 

வசீகரங்களுக்குப் பின்வரும் நினைவாக்கம், தூய ஆவியாரால் வரும் ஒருமைப்பாடு, பரிந்துரை மன்றாட்டுக்கள் அனைத்திலும் ஒப்புரவு பன்முகத்தில் அழுத்தம் பெறுகிறது. தூய ஆவியார் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்துவதை அகற்றுவதின் வழியாக ஒப்புரவையும், ஒருமைபாட்டையும் செயலாக்கம் செய்கிறார்.

ஆ. சிறுவர் திருப்பலிகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

திருஅவை அன்புள்ள ஓர் அன்னையாகச் செயலாற்றுவதைச் சிறுவர்களுக்கான திருப்பலியில் சிறப்பாக நாம் காணலாம். புகுமுக அருள் அடையாளங்களால் கிறிஸ்தவ வாழ்வில் புகுத்தப்பட்ட சிறுவர் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவராக மாறுவதற்கு மறைக்கல்வியுடன் வழிபாடு துணைபுரிய வேண்டும். பல்வேறு குழுவினரின் மனநிலைக்கு ஏற்றாற்போல் முறையான  வேறுபாடுகளைப் புகுத்தவும் தழுவி யமைக்கவும் கவனம் செலுத்த வேண்டுமென இரண்டாவது வத்திக்கான் சங்கம் தனது விதிமுறையில் குறிப்பிட்டுள்ளது (காண் தி.வ. 38,50)
.     
இதைத் தொடர் ந்து சிறுவர்களுக்கான திருப்பலி வழிகாட்டி என்ற ஆவணத்தைத் திருவழிபாட்டு பேராயத்தால் 1973 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி வெளியிடப்பட்டது. அடுத்து பல ஆயர்கள் பேரவையின் விண்ணப்பத்திற்கேற்ப சிறுவர்களுக்கான திருப்பலியில்  பயன்படுத்த மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்டு 1975 இல் வெளியிடப்பட்டன.

1. இம்மன்றாட்டுகளின் நோக்கம்

இம்மன்றாட்டுகள் மிக எளிய நடையில் அமைக்கப்பட்டிருப்பதால், அதில் ஆக்கபூர்வமாக பங்குபெற்று  பயனடையப் பழகிக் கொண்டவர்கள், பிற்காலத்தில் பெரியோர்க்காக கொண்டாடப்படும் திருப்பலியில் பயனுள்ள முறையில் சுலபமாக பங்கு பெறும் தகுதியைப் பெற்றிருப்பார்கள் என்ற எதிர்நோக்கே இவற்றின் நோக்கமாகும்.

 2. இம்மன்றாட்டுகளின் சிறப்பியல்புகள்

சிறுவர்கள் வளர்ச்சியடைந்தபோது பங்கு பெறப்  போகும் திருப்பலியின் அமைப்பு அவர்களுக்கு வினோதமாகத் தோன்றக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான திருப்பலியின் நற்கருணை மன்றாட்டுக்களில் பெரும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏனெனில் இந்த நற்கருணை மன்றாட்டுகள் இவர்களைப் பொறுத்த மட்டில் தற்காலிகமானவை. எனவே பொது நற்கருணை மன்றாட்டுகளின் அடிப்படை அமைப்பு இவற்றிலும் பாதுக்காப்பட்டுள்ளது. வசீகரத்தில் அப்பத்தின் மீதும், இரசத்தின் மீதும் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதையும், கொண்டா ட்டத்தின் தொடர்ச்சியைத் தெளிவாகச் சிறுவர்களுக்கு எடுத்துரைக்கவும் “இதை என் நினைவாகச் செய்யுங்கள் ” என்ற வார்த்தைகளுக்கு முன், “பின் இயேசு அவர்களிடம் கூறியதாவது” என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. 

நற்கருணை மன்றாட் டுகளின் மொழி எளிய நடையில் உள்ளது. அதனால் சிறுவர்கள் என்ன நடக்கிறது என்பதைச் சுலபமாகப் புரிந்து  கொள்வார்கள். இருந்தாலும் திருப்பலியின் மாண்பு சிதைந்திடா வண்ணம் சிறுப்பிள்ளைத்தனமான மொழியும் வார்த்தைகளும் (Childish Language) தவிர்க்கப்பட்டுள்ளன. 

சிறுவர்கள் செயல்முறையிலும் பொருளுள்ள விதத்திலும் பங்கு பெறும் விதமாக ‘ஆர்ப்பரிப்புகள்’ இந்த நற்கருணை மன்றாட்டுகளில்  அதிகமாக்க ப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நற்கருணை மன்றாட்டும் அதற்குரிய தனிப்பட்ட அமைப்பும் இயல்பும் உடையதாய் இருப்பதாலும், தொடக்கவுரையைக் கொண்டிருப்பதாலும் மற்றொரு தொடக்கவுரையோடு மாற்றிக் கொள்ள முடியாது. 
முதல் நற்கருணை மன்றாட்டில் வசீகரத்தின் இறுதியில் உள்ள நம்பிக்கையாளரின் ஆர்ப்பரிப்பு வழக்கத்தைவிடச் சில வரிகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. பயிற்றுவிக்கும் காரணங் களுக்காக  இது இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற  ஆண்டவரின் வார்த்தைகளுக்கும், அருள் பணியாளரால் சொல்லப் படும் நினைவுகூர்தல், அதன் பின்வரும் நினைவு ஆர்ப்பரிப்பு அல்லது மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு ஆகியவற்றிக்கும் இடையே உள்ளத்தொடர்பை சிறுவர் தெளிவாகப் புரிந்து கொள்வர். 

இந்த மன்றாட்டுகளில் நினைவு ஆர்ப் பரிப்பின் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது இது நினைவுகூர்தல் மன்றாட்டுக்குப் பின் (புதுழிதுஐeவிஷ்வி) வருகிறது. “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்ற ஆண்டவரின் கட்டளைக்கும் அருள்பணியாளர் அதற்கு அடிபணிந்து சொல்லும் நினைவுகூர்தல் மன்றாட்டுக்குமிடையே உள்ள நெருக்கமானத் தொடர்பை சிறுவர் புரிந்துக்கொள்ள இம்மாற்றம் உதவுகிறது. சிறுவர்களுக்கான மூன்று நற்கருணை மன்றாட்டு களுக்குள் ஒவ்வொன்றுக்கும்  ஒரு சில சிறப்பியல்பு உண்டு. அவையாவன:

  முதல் நற்கருணை மன்றாட்டு எளிமையான நடையுடையது. ‘தூயவர்’ பகுதியில் சிறுவரைப் பழக்கப்படுத்தும் பொருட்டு இம்மன்றாட்டு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உன்னதங்களில் ஓசான்னா ஒரு பாடகரால் அல்லது சிறுவரை வழிநடத்தும் ஒருவரால் பாடப்படலாம். அல்லது சொல்லப்படலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டு சிறுவர்களின் ஈடுபாட்டிற்கு அதிக வாய்ப்பளித்துள்ளது. இதில் ‘தூயவர்’ பகுதியும் நினைவு ஆர்ப்பரிப்புகளும் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அப்பத்தின் மீதும் இரசத்தின் மீதும் சொல்லப்படும் ஆண்டவரின் வார்த்தைக்குப் பிறகு சேர்க்கப்பட்டுள்ள ஆர்ப்பரிப்புகள் நற்கருணை மறைபொருள் எனும் அடிப்படையில் பாடப்படலாம்.

மூன்றாவது நற்கருணை மன்றாட்டு   பாஸ்கா காலத்திற்குப் புறம்பே பயன்படுத்தத் தனியாகவும், பாஸ்கா காலத்தில் பயன்படுத்தத் தனியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வசீகரத்திற்குப் பிறகு அதே ஆர்ப்பரிப்பு மூன்று முறையும் நடைபெறுகின்றது. இதனால் முழுமையான மன்றாட்டின் புகழ், நன்றி இவற்றின் இயல்பு சிறுவருக்கு வெளிப்படுத்தப்படும்.

 இ. பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்

2002 ஆம் ஆண்டு வெளி வந்த உரோமை திருப்பலி நூலில் மூன்றாம் மாதிரி படிவத்தில் பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள் நான்கு வெளியிடப்பட்டன. அவை 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த திருத்தியமைக்கப்பட்ட உரோமை திருப்பலி நூலிலும் இடம் பெற்றுள்ளன. இவை  தமிழ்த்  திருப்பலி நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் நாம் இப்பொழுது பயன்படுத்தலாம்.

1. முதல் நற்கருணை மன்றாட்டு

“இது ஒற்றுமையை நோக்கி பயணிக்கும் திருஅவை” என்ற கருத்து கோள் கொண்டுள்ளது. இந்த நற்கருணை மன்றாட்டைத் திருஅவைக்காக, திருத்தந்தைக்காக, ஆயருக்காக, திருத்தந்தை ஆயர் தேர்வுக்காக, திருச்சங்கம், ஆயர் மாமன்றம் ஆகியவற்றிக்காக, அருள்பணியாளர்களுக்காக, அருள்பணியாளர் தமக்காக, திருஅவையின் பணியாளர் களுக்காக, ஆன்மீக அருள்பணிக் கூடுகை போன்ற வற்றிற்காக ஒப்புக் கொடுக்கப்படும் பலியில் பயன் படுத்தலாம்.

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு

இது “மீட்பின் வழியில் கடவுள் தமது திரு அவையை வழிநடத்துகின்றார்” என்ற கருத்துக்கோளைக் கொண்டுள்ளது. இதை திருஅவைக்காக, திருப்பட்டங்களுக்கான இறை அழைத்தலுக்காக, பொது நிலையினருக்காக, குடும்பங்களுக்காக, துறவுநிலை இறையழைத்தலுக்காக, அன்பின் வளர்ச்சிக்காக, உறவினர், நண்பர்களுக்காக, கடவுளுக்கு நன்றி செலுத்த ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு

இது “தந்தையை அடையும் வழி இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை நற்செய்தி அறிவிக்க, நம்பிக்கையை முன்னிட்டு துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, நாடுக்களுக்காக, நாட்டை ஆள்வோருக்காக, புத்தாண்டு நாளில், மக்களின் முன்னேற்றத்துக்காக ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

4. நான்காவது நற்கருணை மன்றாட்டு

இது “நன்மை செய்யும் இயேசு” என்ற கருத்துக்கோள் கொண்டுள்ளது. இதை அகதிகள் மற்றும் நாடு கடத்தப்பட்டோருக்காக, பஞ்சம் பசியால் வாடுவோருக்காக, நம்மை துன்புறுத்துவோர், கைது செய்யப்பட்டோர், சிறையில் இருப்போர், நோயுற்றோர், இறக்கும் நிலையில் இருப்போர் ஆகியோருக்காகவும், நல்மரண அருளுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் பயன்படுத்தலாம்.

இந்த நான்கு நற்கருணை மன்றாட்டுகளுக்கும் தனித்தனி சிறப்பு தொடக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சிப்புக்குப் பின் வாழ்வோருக்காக சொல்லப்படும் மன்றாட்டு அந்தந்த கருத்துக்கோளுக்கு ஏற்றவாறு வெவ்வேறாக உள்ளது. இவைத்தவிர மற்ற எல்லா மன்றாட்டுகளும் ஒரே மாதிரியானவை.
( முற்றும்)

திருப்பலியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கங்களை வாசகர்களுக்கு அழகாகத் தந்த அருட்பணி. முனைவர் றீ.அருள்சாமி அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. தொடர்ந்து மற்ற திருவருட் சாதனங்களின்  விளக்கங்களைப்  பற்றியும் எழத இசைந்துள்ளார்.

Thursday, 2 November 2017

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

21. பலவகை நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும் ( 2 )

2. இரண்டாவது நற்கருணை மன்றாட்டு 

இந்த நற்கருணை மன்றாட்டு மிகவும் தொன்மையான ஹிப்போலிட்ஸின் ‘அனாபோரா’ (Anaphora) வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து சில காரியங்களில் இது வேறுபட்டுள்ளது.  எடுத்துக்காட்டாக ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’வில் இல்லாத தொடக்கவுரையை இந்த இரண்டாவது நற்கருணை மன்றாட்டில் காணமுடிகிறது. இந்த தொடக்கவுரை கடவுளின் மீட்பு செயல்களை முன்வைத்து புகழுரைக்கிறது.
           அடுத்து ஒரு சுருக்கமான இடமாற்ற (Transition) செபம் காணிக்கைகளை அர்ப்பணிக்கும் செயலை  நோக்கி (Consecratory Epiclesis) நகர்கிறது. பின் நற்கருணையை ஏற்படுத்திய விரிவுரை இடம் பெறுகிறது. இந்த விரிவுரை மற்ற நற்கருணை மன்றாட்டுகளில் இருக்கும் விரிவுரையைப் பின்பற்றுகிறது. நினைவு ஆர்ப்பரிப்பு மற்ற நற்கருணை மன்றாட்டுகளுடன் ஒத்துப்போகிறது.

அப்ப - இரச வசீகரங்களுக்குப் பின் முதல் நற்கருணை மன்றாட்டில் காணப்படுவது போல், ஒப்புக்கொடுக்கும் செபம், தூய ஆவியார் திருகுழுமத்தின் மீது இறங்கி வந்து ஒருங்கிணைக்கும் செபம் (Communion Epiclesis), திரு அவைக்கும், திருதந்தைக்கும், இறந்த ஆன்மாக்களுக்கும், திருப்பலிக்கு வந்திருக்கும்  அனைவருக்கும் பரிந்துரை செபங்கள் இடம் பெறுகின்றன. புனிதர்களில் அன்னை மரியாவும், யோசேப்பும் திருத்தூதர்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர். அடுத்து இறுதி புகழுரையுடன் முடிவடைகிறது.

ஹிப்போலிட்டஸின் ‘அனாபோரா’ தந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் ஓரளவு மட்டும் இதில் வெற்றி பெறுகிறது.  இரண்டாவது நற்கருணை மன்றாட்டில்  கொடுக்கப்பட்டுள்ள தொடக்கவுரை படைப்பில் தொடங்கி மீட்பின் வரலாற்று நிகழ்வுகளை சுருக்கமாக குறிப்பிட்டு நன்றி செலுத்துகிறது. ஆனால் பழைய ஏற்பாட்டு மக்களை யாவே கடவுள் வழிநடத்தியமுறை இதில் இடம்பெறவில்லை. இந்த தொடக்கவுரை புதிய ஏற்பாட்டின் விசுவாச அறிக்கை போல் உள்ளது. இதனால்தான் இது ஞாயிற்று  திருப்பலிக்கு உகந்ததன்று என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஞாயிற்று கிழமை திருப்பலியில் வார்த்தை வழிபாட்டின் இறுதியில் விசுவாச அறிக்கை வருகிறது. ஆதலால்  இந்த நற்கருணை மன்றாட்டை வார நாள்களிலும் அல்லது தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கும் பயன்படுத்தலாம். இம்மன்றாட்டுக்கு உரிய தனிப்பட்ட தொடக்கவுரை இருந்தாலும். மற்ற தொடக்கவுரைகளைச்  சிறப்பாக அவை  மீட்புத் திட்டத்தை  எடுத்துரைக்கும்போது அவற்றைப்  பயன்படுத்தலாம்.

இரண்டாவது நற்கருணை மன்றாட்டின் மையம் கிறிஸ்து. தொடக்கவுரை கூட கிறிஸ்துவை மீட்பராக அனுப்பியதற்காக  இறைதந்தைக்கு நன்றி நவில்கின்றது.  மக்களை தந்தையிடம் கொண்டு சேர்க்க அவர் மனமுவந்து பாடுகளை ஏற்று தம்மை பலியாக்கினார். இவ்வாறாக கிறிஸ்து முக்கியத்துவம் பெறுகிறார்.

 3. மூன்றாவது நற்கருணை மன்றாட்டு

இந்த நற்கருணை மன்றாட்டு தொன்மையான எந்தவொரு நற்கருணை மன்றாட்டையும் தழுவி அமைக்கப்பட்டதன்று . இது ஒரு புதிய படைப்பு. இருந்தாலும் உரோமை நற்கருணை மன்றாட்டின் கூர்மதியை  உடைத்ததாக உள்ளது;  அதனுடைய அமைப்பு முறையையும் கொண்டுள்ளது. கல்லிக்கன் வழிபாட்டு முறையின் சில தனிமத்தை இதில் காணலாம்.

முதல் நற்கருணை மன்றாட்டைப்போல், இதற்கும் உரித்தான தொடக்கவுரை கிடையாது. எனவே இதை எந்த தொடக்கவுரையுடனும் பயன்படுத்தலாம். ஞாயிற்றுக் கிழமைகளிலும் விழாக்களிலும் பயன்படுத்த  இது மிகப் பொருத்தமானது. தொடக்கவுரையிலிருந்து ஒரு இணக்கமான நிலைபெயர்பை இதில் காணலாம். “ ஆண்டவரே நீர் மெய்யாகவே தூயவர்”  என்று தொடங்கும் மன்றாட்டு தொடக்கவுரையில் குறிப்பிப்பட்ட ஆண்டவரின் மீட்புச் செயல்களின் சுருக்கமான  தொகுப்பாக அமைந்துள்ளது.  
இந்த நற்கருணை மன்றாட்டின் சிறப்பு அம்சம் தூய ஆவியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவமாகும். இதே  தூய ஆவியார் தான் மக்கள் கொண்டு வந்த  காணிக்கைகளை புனிதபடுத்தி பலிபொருளாகும் தகுதியை அளிக்கின்றார். கிறிஸ்துவ சமூகத்தை இறைவனுக்கு ‘தூய காணிக்கையை ஒப்புக்கொடுக்குமாறு’  ஒன்று  கூட்டுகிறார். மேலும் இந்த பலியில் பங்கு பெறு வோரையும் புனிதப்படுத்துகிறார். நற்கருணையில் பங்கு பெறுவதின் வழியாக கிறிஸ்துவின் மறையுடலாக மாறும் ஆற்றலை அளிக்கின்றார்; அவர்கள் தூய ஆவியின் ஆலயமாகின்றார்கள்.

இதில் இறந்தோருக்கான மன்றாட்டை அதற்குரிய இடத்தில், அதாவது “இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைக் கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்” எனும் சொற்களுக்குப் பின் பயன் படுத்தலாம்.

 4. நான்காவது  நற்கருணை மன்றாட்டு

புதிய  நற்கருணை மன்றாட்டுகளில் இது மிகவும் பாராட்டுக்குரியது என்றால் அது மிகையாகாது. உரோமை மரபிலிருந்து விலகி அந்தியோக்கியன் மரபை நெருங்கியுள்ளது. அதாவது அந்தியோக்கியன் “திருத்தூதர்களின் விதி தொகுப்பின்”  (Constitutiones Apostolorum) சாராம்சத்தைச் சார்ந்துள்ளது.

இந்த நற்கருணை மன்றாட்டின் முதல் பாதிபகுதி தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக அமைந்துள்ளது. அதாவது (1) அவருடைய கடவுள் தன்மைக்கும் (2) படைப்புக்கும், சிறப்பாக மனிதனின் படைப்புக்கும், அவன் தவறினாலும் அவனை மீட்க வகுத்தத் திட்டத்திற்கும் (3 ) மனிதராகி, மெசியாவை அவர் வெளிப்படுத்தவும், பாடுகளை அனுபவித்து மரித்து உயிர்த்தெழவும்  அவரை இவ்வுலகிற்கு அனுப்பியதற்கும், மற்றும் கிறிஸ்துவின் பாஸ்கா மறை பொருளில் பங்கு பெற்று அருள் அடையாள வாழ்வை வாழ்வதற்கு வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி கூறப்படுகிறது. இந்நற்கருணை மன்றாட்டின் இரண்டாவது  பகுதி மற்ற இரு புதிய நற்கருணை மன்றாட்டுகளோடு அமைப்பில் ஒத்துப்போகிறது. இருந்தாலும் பரிந்துரை மன்றாட்டுகளின் வரிசைக் கிரமத்தில் சிறிது வேறுபடுகிறது.

இந்த நற்கருணை மன்றாட்டில் தூய ஆவியார் காணிக்கைகளை அர்ச்சிக்கவும் (Consecretory Epiclesis)  (“அதே தூய ஆவியார் இக்காணிக் கைகளை புனிதப்படுத்தியருள... ” ),  மக்களை ஒன்று  சேர்க்கவும் (Communion Epiclesis) - (“இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறும் அனைவரும்  தூய ஆவியாரால் ஒரே உடலாக கூட்டிச் சேர்க்கப்பட்டு....”) வேண்டிய  மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்த வகையில் மற்ற இரு (2+3) நற்கருணை மன்றாட்டுகளோடு ஒத்துப் போகிறது. இந்த ஒன்றிப்பு மன்றாட்டு இயல்பாக பரிந்துரைகளுக்கு நகர்வதைப் பார்க்கிறோம். அதாவது திருத்தந்தை, ஆயர்கள், திருநிலையினர் (Clergy), இறைமக்கள், நேர்மை உள்ளத்தோடு இறைவனை தேடுவோர் ஆகியவர்களின் ஒன்றிப்புக்காக பரிந்துரை மன்றாட்டுகள் இடம் பெற்றுள்ளன. மீட்பின் செயல் முழுவதிலும்  தந்தையாம் கடவுள் செயல் முதல்வராகக் (Main Agent of Actor) காட்டப்பட்டுள்ளார். அதாவது தந்தையாகிய கடவுள் முக்கிய, மையமான இடம் வகிக்கிறார்.

இந்த நான்காவது  நற்கருணை மன்றாட்டு  மாற்ற முடியாத   தொடக்கவுரையைக் கொண்டுள்ளது. திருப்பலிக்கென்று தனிப்பட்ட தொடக்கவுரை இல்லாத போதும், ஆண்டின் பொதுக்கால ஞாயிற்று கிழமைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். இதன் அமைப்பின் காரணத்தால் இதில் இறந்தோருக்கான சிறப்பு மன்றாட்டை இடையில் சேர்க்க முடியாது. ( காண் GIRM 365 ஈ).                                         (தொடரும்...)

Friday, 29 September 2017

19. நற்கருணை விளக்கம் (VII), S- அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானியா இல்லம், கும்பகோணம்

19. நற்கருணை விளக்கம் (VII)
S- அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

2. நற்கருணை விருந்து


நற்கருணை விருந்தில் பின்வரும் பகுதிகள் இடம் பெறுகின்றன:
1. அருள்பணியாளர் தம்மை தயாரிக்கும் செபம்.
2.. நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணையைக்காட்டி அவர்களை திருவிருந்துக்கு அழைத்தல். 
3. திருவிருந்து பாடல்.
4. நற்கருணையை உட்கொள்ளுதலும் வழங்குதலும்.

2.1. அருள்பணியாளர் தம்மைத் தயாரிக்கும் செபம்

அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இரு செபங்களில் ஒன்றைச் சொல்லி தம்மைத் தயாரிக்கிறார். அவர் சொல்லும் செபமாவது:
“ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் உம் உடலும் இரத்தமும் என்னை நீதித் தீர்ப்புக்கும் தண்டணைக்கு உள்ளாக்காமல் உமது இரக்கத்தினால் என் உள்ளத்துக்கும் உடலுக்கும் பாதுகாப்பாகவும் நலம் அளிக்கும் அருமருந்தாகவும் இருப்பதாக.”

2.2. திருவிருந்துக்கு அழைப்பு

அருள்பணியாளர் நற்கருணை அப்பத்தை திருத்தட்டின் மேல் அல்லது திருக்கிண்ணத்தில் மேல் பிடித்துக் கொண்டு நம்பிக்கையாளர்களுக்குக் காண்பித்து அவர்களைக் கிறிஸ்துவின் திருவிருந்தில் பங்கு கொள்ள பின்வரும் வார்த்தைகளில் அழைக்கிறார். “இதோ, இறைவனின் செம்மறி, இதோ உலகின் பாவங்களைப் போக்குகிறவர்; செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.”  பழைய ஏற்பாட்டு பாஸ்காவில் உண்ணப்பட்டது ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டி. ஆனால் புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவே உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறி ஆடு ஆகிறார். எனவேதான் இவ்விருந்து “செம்மறியின் விருந்து” என்று அழைக்கிறோம்.

  அருள்பணியாளரின் அழைப்பிற்குப் பதிலாக நம்பிக்கையாளர் “ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலமடையும்” எனச் சொல்கின்றனர்.
இங்கு ஒரு கேள்வி எழுப்பலாம் எனத் தோன்றுகிறது. திருப்பலியின் தொடக்கத்தில் மனத்துயர் செபம் “எல்லாம் வல்ல இறைவனிடமும்.....”என்று சொல்லப்பட்டபின், ஏன் மறுபடியும் அது போன்ற ஒரு செபத்தைச் சொல்ல வேண்டும்?
வரலாற்றை சற்று நோக்கினால் விடை கிடைக்கும். அதாவது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடையே நற்கருணை உட்கொள்ளும் பழக்கம் மிகமிக அரிதாகியது. நோயாளிகள் மட்டுமே நற்கருணையை உட்கொள்ளும் பழக்கம் வழக்கில் இருந்தது. எனவே இச்சடங்கில் நோயாளிகளை நற்கருணை உட்கொள்ள ஆயத்தம் செய்யும் வகையில் இச்செபம் சொல்லப்பட்டது. இதுவே பிற்காலத்தில் நற்கருணையை உட்கொள்ள அனைவரையும் தயார் செய்யும் ஒரு செபமாக திருப்பலியிலும் அறிமுகப் படுத்தப்பட்டது. ஏற்கனவே நம்பிக்கையாளர் மனத்துயர் சடங்கில் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டிருந்தாலும் நற்கருணையை உட்கொள்ளும் மீண்டும் ஒருமுறை கேட்பதில் தவறில்லை.

2.3. திருவிருந்து பாடல்

அருள்பணியாளர் நற்கருணையை உட்கொள்ளும் போது திருவிருந்துப் பாடல் தொடங்கும். ஒரே குரலாக எழும் இப்பாடல் நற்கருணை உட்கொள்பவரின் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது; உள்ளத்து மகிழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது; நற்கருணை உட்கொள்வதற்காகப் பவனியாகச் செல்பவரின் குழும இயல்பையும் தெளிவாகக் காட்டுகின்றது.  நம்பிக்கையாளர்களுக்கு நற்கருணை வழங்கப்படும் போது பாடல் தொடரும் (GIRM 86). இந்த பாடலை எங்கிருந்து தேர்வு செய்வது? இது உரோமை படிகீத ஏட்டிலிருந்து எடுக்கப்படலாம். அதில் பல்லவியும் அதற்குரிய திருப்பாடலும் இருக்கும். அல்லது ஆயர் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட பாடல் நூலிலிருந்து ஒரு பாடலைப் பாடலாம். ஆனால் இப்பாடல் நற்கருணையின் பொருளையும் அதுக்குறித்துக் காட்டும் உண்மையையும் கொண்டதாக அமைய வேண்டும். நற்கருணையோடு எந்த முறையிலும் தொடர்பற்ற, வெறும் சமூக, விடுதலை சிந்தனையுடைய பாடல்கள் இங்கு ஏற்புடையவை அன்று. இத்தகைய பாடல் எல்லாராலும் சுலபமாகப் புரிந்துக் கொள்ள கூடியதாகவும் இருக்க வேண்டும்.
திருவிருந்துபாடல் இடபெறவில்லை என்றால் திருப்பலில் நூலில் உள்ள பல்லவியை வாசிக்க வேண்டும். இது நம்பிக்கையாளர்களாலும், அல்லது அவர்களில் ஒருவராலும் வாசிக்கப்படலாம். யாரும் இதைச் செய்யாவிட்டால் அருள்பணியாளரே தான் நற்கருணையை உட்கொண்டபின், மக்களுக்கு நற்கருணை வழங்கும் முன் வாசிக்க வேண்டும்.

2.4. நற்கருணை வழங்குதல்

அருள்பணியாளர் நற்கருணையை உட்கொண்டபின் பீடபணியாளர்களுக்கும், நம்பிக்கை யாளர்களுக்கும்  நற்கருணையை வழங்குவார். அவ்வாறு வழங்கும் போது, நற்கருணைத் துண்டை கையில் எடுத்துக் காட்டி “கிறிஸ்துவின் திருவுடல்” என்று  நம்பிக்கையாள் கேட்கக் கூடிய அளவில் சப்தமாகச் சொல்வார். நம்பிக்கையாளரோ அதே தொனியில் “ஆமென்”  என்று சொல்லி விட்டு நாக்கை நீட்டி நற்கருணையை வாங்குவார் இந்த ஆமனுக்கு ‘ஆம், நான் கிறிஸ்துவின் உடல் என்று நம்புகிறேன்’ என்று பொருள். 

அதே திருப்பலியில் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை அருள்பணியாளர் உட்கொள்வது மிக அவசியமானது. அப்பொழுதுதான் அவர் ஒப்புக்கொடுத்த திருப்பலியை நிறைவு செய்கிறார். அதேபோல் அவர் அப்ப  இரசகுணங்களில் நற்கருணை உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சில அருள்பணியாளர் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தை மட்டும் உட்கொண்டு நற்கருணையை மக்களுக்கு வழங்கச் செல்வதைப் பார்க்கிறோம். இது சரியல்ல.

கூடிய வரையில் நம்பிக்கையாளர்களுக்கும் அதே திருப்பலியில் வசீகரம் செய்ய அப்பங்களை வழங்குவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. 

அடுத்து யார் யார் நற்கருணையை வழங்கலாம்? கைகளில் நற்கருணையை வாங்கலாமா? அப்படி யானால் அதை  எப்படி வாங்கி உட்கொள்வது? போன்ற கேள்விகள் எழுகின்றன. 

சாதாரணமாக திருப்பலியை நிறைவேற்றும் அருள்பணியாளரும், மற்ற அருள்பணியாளர்களும், திருத்தொண்டரும்(களும்) திவ்விய நற்கருணையை மக்களுக்கு வழங்குவார்கள். மற்ற அருள்பணியாளர் களோ, திருத்தொண்டரோ இல்லாதபோது இதற்காக நியமிக்கப்பட்ட அருள்சகோதரிகளும், இருபால் பொது நிலையினரும் நற்கருணையை மக்களுக்கு வழங்கலாம். இவர்கள் (அசாதாரன) சிறப்பு பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர் (Extra - Ordinary Ministers of Holy Communion). மறைமாவட்ட  ஆயர் மட்டுமே (பங்கு பணியாளர் அல்ல) ஒரு குறிப்பிட்ட தருணத்திற்குத் தனித்தனியாக இவர்களுக்கு அங்கிகாரம் கொடுப்பார். அவசியமானபோது நிரந்தரமாகவும் நற்கருணை  வழங்க அனுமதிக்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து பங்கு அருள்பணியாளர் இவர்களின் பெயருடைய பட்டியலை ஆயரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு  அனுமதிக்கப்பட்டவர்கள் திருப்பலியில் மட்டுமல்ல, நோயாளிகளுக்கும் நற்கருணையை எடுத்துச் சென்று வழங்கலாம். ஆனால் இவர்களைத் தேர்வு செய்து அனுமதிக்க சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். அவையாவன :

1. வேறு அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ, பீடத்துணைவரோ (ழிஉலியிதீமிe)  இல்லாத சூழ்நிலை,
2. இவர்கள் மற்றொரு மேய்ப்பு பணியின் காரணத்தால் அல்ல உடல் நலக்குறைவு காரணத்தினால் திருப்பலி
யில் நற்கருணை வழங்க முடியாத நிலை.
3. நற்கருணையை உட்கொள்வோரின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் திருப்பலியை நிறைவேற்றும்
அருள்பணியாளர் நற்கருணை வழங்கினால் நீண்ட நேரம் கெடுக்கும் என்ற நிலை.
  சில சமயங்களில் மறைமாவட்ட ஆயர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டும் நற்கருணை வழங்க மற்றவர்களைத்  தேர்வு செய்து அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தனிப்பட்ட அருள்பணியாளருக்கு வழங்கலாம். மற்றவர்கள் நற்கருணையை வழங்க அனுமதியளிக்கும் போது பின்வரும் வரிசைக் கிரமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வாசகர் (Lector), பெரிய குருமட மாணவர், ஆண்பால் துறவி, பெண்பால் துறவி, வேதியர், இருபால் பொது நிலையினர். மறைமாவட்ட ஆயர் சூழ்நிலைக்கேற்ப இந்த வரிசைக் கிரமத்தை மாற்றலாம்.

இவ்வாறு நற்கருணை வழங்கும் அசாதாரண பணியாளர்களுக்குத் தகுந்த பயிற்சியும், நற்கருணை பற்றிய அறிவுரையும் வழங்க வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட விதிவிலக்கு நம்பிக்கையாளர்களுடைய ஆன்ம நலன்களுக்காகவும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவும் மட்டுமே வழங்கப்படுகிறது. (காண் Immensae Caritatis ஜனவரி 25, 1973).
இந்த அசாதாரண நற்கருணை பணியாளர் தங்களுக்குத் தாங்களே நற்கருணையை வழங்கக் கூடாது. அருள்பணியாளரிடமிருந்து நற்கருணையை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

உரோமை திருவழிபாட்டு பேராலயத்தினால் அனுமதிக்கப்பட்ட மறைமாவட்டங்களில் நம்பிக்கையாளர் கைகளில் நற்கருணையை வாங்கி உட்கொள்ளலாம். அவர் தமது வலது கையால் தாங்கி பிடிக்கப்பட்டுள்ள தமது  இடது கையின் மேல் நற்கருணையை வாங்க வேண்டும்.  பிறகு தமக்கு அடுத்து வருகிறவருக்கு இடம் கொடுத்து சற்று விலகி அங்கேயே தமது வலது கையால் எடுத்து உட்கொள்ள வேண்டும். எக்காரணத்திற்கும் நற்கருணையை தம் அமரும் இடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

நற்கருணையை நாக்கில் வாங்கும்போது ஒருவர் நின்று கொண்டோ முழங்காலிலிருந்தோ வாங்கலாம். நின்று கொண்டு வாங்குவோர் அதற்குமுன் தலைவணங்கி வாங்க வேண்டும். முழங்காலில் இருந்துக்கொண்டு நாக்கில் நற்கருணை வாங்குவோர் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் முழங்காலில் இருப்பதே வணக்கத்தின் அடையாள மாகிறது.

 2.5. திருவிருந்துக்குப் பின் அமைதி

மக்கள் அனைவரும் நற்கருணை உட்கொண்ட பின் திருபாத்திரங்களை அருள்பணியாளரோ, திருத்தொண்டரோ சுத்தம் செய்யும் போது, திருவிருந்து பாடல், நிறுத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து  மக்கள் அமைதியான முறையில் தங்கள் உள்ளத்தில் உரையாடுவர். இந்த அமைதி, வழிபாட்டைத் தன்மயமாக்க அவசியம்.

 3. இறுதி  நன்றி கூறுதல்

திருவிருந்து பாடலையும், அதன் முடிவில் இடம் பெறும் அமைதியான தனிச் செபத்தையும் தொடர்வது
‘திருவிருந்துக்குப் பின் மன்றாட்டு.’ இந்த மன்றாட்டை ‘மன்றாடுவோமாக’ என்று அருள்பணியாளர் கூறிவிட்டு தந்தையாகிய இறைவனுக்கு நன்றி கூறிச் செபிக்கிறார். அதாவது வாழ்வளிக்கும் இறைவார்த்தைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் கிறிஸ்துவின் திரு உடலுக்கும், திரு இரத்தத்திற்கும் நன்றி கூறி செபிக்கிறார். மேலும் திருப்பலிக்காகவும், அதன் வழியாகக் கிடைக்கும் அருள் அடையாளக் கொடைகளுக்காகவும் நன்றி கூறுகின்றார். இதன் பயனாகக் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழத் தேவையான வரங்களுக்காகவும் செபிக்கிறார். இதன் முடிவில் மக்கள் ‘ஆமென்’ என்று சொல்லி நன்றி மன்றாட்டை நிறைவு செய்கின்றனர்.

இறுதி சடங்குகள்

திருப்பலிக்குத் தொடக்கச் சடங்குகள் போல் இறுதிசடங்குகளும் உண்டு. ஆனால் இவை மிகச் சுருக்கமாக அமைகிறது. இதில் அறிவிப்புகள், வாழ்த்தும் ஆசியும் அனுப்பி வைத்தலும் ஆகிய கூறுகள் அமைந்துள்ளன.     
1.அறிவிப்புகள்
இறுதி நன்றி மன்றாட்டுக்கு பின் அருள்பணியாளரோ அல்லது வேறோருவரோ முக்கியமான தகவல்களை மக்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தால் அவற்றை சுருக்கமாக அறிவிப்பார். திருமண அறிவிப்புகளும் இங்கு இடபெறும்.
இந்த அறிவிப்புகளை திருபீடத்திலிருந்தோ, வாசக மேடையில் இருந்தோ கொடுக்கக் கூடாது.  மாறாக “திருபீடமுற்றமும் அதன் அமைப்பும்” என்ற தலைப்பில் நாம் குறிப்பிட்டது போல் ‘அறிக்கை மேடையில்’ இருந்து அல்லது வேறோரு ஏற்புடைய இடத்திலிருந்து கொடுக்க வேண்டும். வெள்ளி பொன்விழா கொண்டாடும் அருள்பணியாளர்களுக்கும் அருள்சகோதரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கும் நேரம் இதுவல்ல. திருப்பலி முடிந்தபின் இதை செய்ய வேண்டும்.

 2. இறுதி வாழ்த்தும் ஆசியும்
இறைவாழ்த்தோடு திருப்பலியைத் தொடங்கியது போல் திருப்பலியின் முடிவிலும் “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக”  என்று சொல்லி மக்களை வாழ்த்துகிறார். அவர்களுடைய பதிலுக்குப் பின் அருள்பணியாளர் தமது இறுதி ஆசிரை “எல்லா வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவராக”  என்று சொல்லி வழங்குகிறார். மக்கள் பதிலாக “ஆமென்”  என்று சொல்லி ஏற்றுக்கொள்கிறார்கள். பற்பல ஆண்டின் சிறப்புக்காலாம் விழாக்களுக்கு ஏற்றாற்போல் சிறப்பு ஆசீரும் இங்கு வழங்கலாம்.

 3. அனுப்புதல்

திருப்பலி முடிந்ததும் தங்கள் பணிவாழ்வுக்குத் திரும்பி செல்லுமுன்“சென்று வாருங்கள் (வாழுங்கள்) திருப்பலி நிறைவேறிற்று”  என்றோ  “ஆண்டவருடைய நற்செய்தியை அறிவிக்க சென்று வாருங்கள்”  என்றோ,
“ உங்களது வாழ்வால் ஆண்டவரை மாட்சிப்படுத்த அமைதியுடன் சென்று வாருங்கள்”  என்றோ சொல்லி அனுப்பிவைக்கிறார். மக்கள் “இறைவனுக்கு நன்றி”  என்று சொல்லி பதில் கூறுகிறார்கள்.

 முடிவுரை

திருப்பலி வேறு, வாழ்க்கை வேறு அன்று. இரண்டுக்குமிடையே நெருங்கியத் தொடர்புண்டு. வாழ்வில் எதை நாம் விசுவசிக்கிறோமோ, எதை அனுபவிக்கிறோமோ அதையே திருப்பலியில் கொண்டாடுகிறோம். எனவே நாம் வாழ்விலிருந்து வளர்வதே வழிபாடு என உணர்வோமாக.

குறிப்பு : திருப்பலியில் மூன்று இடங்களில் ஆர்ப்பரிப்புகள் (Proclamations)  உண்டு.  இவை பாடபட வேண்டுமே தவிர, வாசிக்கப்படக் கூடாது.

அவையாவன.
1. நற்செய்தி பறைசாற்றும் முன் “அல்லேலூயாவும்”,
2.  வசீகரத்துக்குப் பின் “நம்பிக்கையின் மறைபொருள்” என்பதும்
3. “இவர் வழியாக, இவரோடு, இவரில்..... ”என்ற இறுதி புகழுரையும்.




Thursday, 22 June 2017

திருப்பலி விளக்கம் நற்கருணை மன்றாட்டு

திருப்பலி விளக்கம்
நற்கருணை மன்றாட்டு
- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானியா இல்லம், கும்பகோணம்

இதுவரை நற்கருணை மன்றாட்டுகளுக்கு பின்புலமாக இருப்பவைப் பற்றியும், அவற்றின் தோற்றம், வளர்ச்சியைப் பற்றி விளக்கினோம். இங்கு நற்கருணை மன்றாட்டுகளின் அமைப்பு, அவற்றின் பொருள் போன்றவைப் பற்றிய விளக்கம் கொடுக்க முயற்சிப்போம்.
        நற்கருணை மன்றாட்டு “ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்ற தொடக்க உரையாடலில் ஆரம்பித்து இறுதி புகழுரைக்குப் (Doxology) பின் நம்பிக்கையாளர்களால் சொல்லப்படும் “ஆமென்”  என்ற பதிலோடு நிறைவடைகிறது.

3.  நற்கருணை மன்றாட்டின் அமைப்பும் பொருளும்

3.1  தொடக்க உரையாடல்

தொடக்கவுரை (Preface) திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர், திருப்பலிக்குக்  குழுமி வந்திருக்கும் நம்பிக்கையாளர்களிடையே இடம் பெறும் உரையாடலோடு தொடங்குகிறது. “நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்” என்று அருள்பணியாளர்  விடும் அழைப்பு அவர் தொடங்கியிருக்கும் இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறும் தொடர் செயலில் திருக்குழுமத்தையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. இந்த அழைப்பு அருள்பணியாளரும் நம்பிக்கையாளரும் சேர்ந்துதான் இறைவனுக்கு நன்றி கூறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

3.2  தொடக்கவுரை ( Preface)

  “ பிரிப்பேஸ் ” என்பது “ப்ரேபாசியும் ”
(Prefatium) என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வருகிறது. இது ஒரு நூலுக்கு முன்னுரை போல் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் இருக்கிறது என்று பொருளல்ல. மாறாக இந்த இலத்தீன் சொல்லுக்கு “முன்மொழிதல், பறைசாற்றுதல், எடுத்துரைத்தல்” போன்ற பொருள் உண்டு.

இத்தொடக்கவுரை கடவுளை போற்றுவது ஏன் “தகுதியும் நீதியும் ஆகும்”  என விளக்குகிறது. இது யூதர்களின் பெராக்கா (இறை புகழ்ச்சிப்) பாணியில் தொடங்குகிறது. இறைவனின் திருப்பெயரைக் கூவியழைத்து, மீட்பின் வரலாற்றில் படைப்பு, மனுவுருவாதல், மீட்பு ஆகிய மாபெறும் செயல்களுக்காக வாழ்த்தும், நன்றியும் கூறப்படுகிறது. இறைவன் புரிந்த அருஞ்செயலுக்காக இறைபுகழ் கூறுவதே  யூதர்களின் இறைபுகழ்ச்சியிலும், கிறிஸ்தவர்களின்  இறைபுகழ்ச்சியிலும் காணப்படும் சிறப்புமிக்க ஓர் அம்சமாகும். விண்ணக தந்தை தம் மக்கள் மீது பொழிந்திருக்கும் அன்பிற்கு, அவர்களின் பதில் அன்பும், நன்றியுணர்வும் நிறைந்த ‘பதிலாகவும்’ இது அமைகிறது. இறைபுகழும், நன்றியும் நிறைந்த இவ்வழிபாடு இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒன்றிப்பை ஏற்படுத்துகிறது. எனவேதான் எல்லா கிறிஸ்தவர்களும் இடைவிடாது செபிக்க வேண்டுமென புனித பவுல் அழைக்கின்றார்.

        இரண்டாவது நான்காவது நற்கருணை மன்றாட்டுகளுக்குச் சிறப்பான தொடக்கவுரைகள் உள்ளன. இரண்டாவதுக்கான தொடக்கவுரையில் முக்கிய நிகழ்ச்சிகளான படைப்பு, மனிதராதல், மீட்பு ஆகியவற்றின் வழியாக மீட்பின் வரலாறு  சுருக்கமாக நினைவு கூறப்படுகிறது. நான்காவது நற்கருணை மன்றாட்டு  தொடக்கவுரையிலிருந்து தூய ஆவியாருக்குரிய முதல் மன்றாட்டு   (First Epiclesis) வரையில் நீண்டதொரு வாழ்த்துரையைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு வழிபாட்டு வல்லுநர் ஜேலினோ கருத்துப்படி இதன் முதல் பகுதி விண்ணகத் தந்தைக்குரிய  நன்றி மன்றாட்டாகும். இது அவருடைய உள்ளியல்புகளை நினைத்து வாழ்த்துவதாகவும் அவருடைய படைப்புக்காக குறிப்பாக, மனிதரின் படைப்புக்காகவும் வீழ்ச்சிக்காகவும் அவர் தொடங்கிய மீட்புசெயலுக்காகவும், மெசியாவாகிய இறைமகன் மனிதராகி, பாடுபட்டு, இறந்து உயிர்த்து ஆற்றிய மீட்பு  பணிகளுக்காகவும், திருஅவையின் அருள்அடையாள வாழ்விலே  தூய ஆவியார் புரியும் திருப்பணிக்காகவும் நன்றியறிதலாக அமைந்துள்ளது.

முதலாவது நற்கருணை மன்றாட்டுக்கும் மூன்றாவது நற்கருணை மன்றாட்டுக்கும் தொடக்கவுரை கொண்டாடப்படுகிற ஒவ்வொரு மறைபொருளுக்கும், விழாவிற்கும் ஏற்றாற்போல் மாறுபடலாம். இன்று திருப்பலி நூலில் திருவழிபாட்டுக் காலங்களுக்கும், பெருவிழாக்கள், விழாக்களுக்கும், புனிதர் விழாக்களுக்கும், பல்வேறு தேவைகளுக்கும் ஏற்ப நூற்றுக்கு மேற்பட்ட  தொடக்கவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 3.3  புகழ்பாடல் ( Sanctus)     
         
        இது வானதூதர் எழுப்பிய வாழ்த்தொலி  ( எசா 6:3) நமதாண்டவர் எருசலேமுக்கு நுழைந்த போது மக்கள் கூட்டம் அவரை வரவேற்று எழுப்பிய ஆர்ப்பரிப்பு ( மத் 23: 1 ;  21:9) ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.  சேராபீன்கள்  என எபிரேயத்தில் அழைக்கப்படும் பக்தி சுவாலகர் என்னும்  வானதூதர்கள் விண்ணகக் கோயிலைத் தம் பிரசன்னத்தால் நிறைத்தெழுந்து இறைவனுக்கு இப்பாடலைப் பாடியதாக வாசிக்கிறோம். அவர் அனைத்து உலகிற்கும் ‘ஆண்டவர்’ ஆவார். அவர் வானகச் சேனைகளுக்கும் வானின் வல்லமைகளுக்கும், அதாவது தேவதூதர் அணிகளுக்கும், விண்மீன்களின் கூட்டங்களுக்கும் ஆண்டவராகப் புகழ்ந்தேத்தினர் இஸ்ரேயல் மக்கள் ( திப 103; 148:1‡4; 1 அரச 22:19 காண்க.) திருவெளிப்பாட்டிலும் புனித யோவான் கண்ட காட்சியில் “தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்” என்று  இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகிறதைக் குறிப்பிடுகிறார்.  மூன்று முறை ‘தூயவர்’  என்பது மூவொரு கடவுளைக் குறிக்கிறது என்கின்றனர் விவிலிய அறிஞர்.

இவ்வார்ப்பரிப்பின் இறுதிபகுதி நம் ஆண்டவர் மகிமையோடு எருசலேம் நுழைந்த குருத்தோலை விழாவை நினைவு கூறுகிறது. இச்சொற்களை திருப்பாடல்கள் 118:26 இல் காண்கிறோம்.          இவ்வார்ப்பரிப்பு இரண்டும் தொடக்கவுரையில் கூறப்பட்ட அனைத்திற்கும் இறைமக்கள் இயல்பாகவே கொடுக்கின்ற ஒரு பதிலாகவும் அமைந்துள்ளன.

3.4   ‘நீர் மெய்யாகவே  தூயவர்’  ( Vere Sanctus) 

இது புகழ்பாடலின் விரிவாகவும், அதனை பின் பகுதியோடு இணைப்பதாகவும் அமைந்துள்ளது. இது புகழ்பாடலோடு இணைந்து நன்றி மன்றாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இதை  ‘நிலைமாற்றச் செபம்’  
(Transition Prayer) என்று கூட சொல்லலாம். இந்த மன்றாட்டு வேறு முறையில் விரிவாகலாம் என்பதற்கு முதல் நற்கருணை மன்றாட்டும், நான்காவது நற்கருணை மன்றாட்டும் தெளிவான எடுத்துக்காட்டுகளாக உள்ளன. ஒன்றில் பரிந்துரை மன்றாட்டுகளும், புனிதர்களை நினைவு கூறும் செபமும், மன்றொன்றில் மீட்பு வரலாற்றின்  விரிவுரையும் இருக்கின்றன.

3.5  காணிக்கைகளை புனிதபடுத்த மன்றாட்டு

மக்களால் ஒப்புக்கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அர்ச்சிக்கப்படவும், அவை கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறவும் தூய ஆவியாரை அனுப்பும்படி இங்கு  மன்றாடப்படுகிறது. இம்மன்றாட்டு (Epiclesis) தொன்றுத்தொட்டு நற்கருணை மன்றாட்டின் வழக்கில் உள்ளது.  முதல் நற்கருணை மன்றாட்டில் இது நீண்ட காலமாக இல்லாமல் இருந்தது. “இரக்கம் மிகுந்த தந்தையே இக்கொடைகளையும், காணிக்கைகளையும்” ( ஞற்ழிது நுணுயிழிமிஷ்லிஐeது) என்று தொடங்கும் மன்றாட்டு பின்பு சேர்க்கப்பட்டது. ஆனால் தூய ஆவியாரைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. இப்போது இருக்கும் எல்லா புதிய  நற்கருணை மன்றாட்டுகளில் தூய ஆவியாருக்குரிய மன்றாட்டைத் தெளிவாகக் காணலாம். நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதிக்குமுன் இம்மன்றாட்டை அமைத்திருப்பதால், மேற்கு திருஅவை மரபின் நற்கருணை வழிபாட்டு இயலுக்கு மதிப்புக் கொடுக்கிறது.

3.6  நற்கருணை ஏற்படுத்தியதை விவரிக்கும் பகுதி

          நற்கருணையை ஏற்படுத்துதலை விவரிக்கும் இப்பகுதியில் விசுவாசமும் பக்தியும் நிறைந்த சூழ்நிலையில் அருள்பணியாளர் அப்பத்தையும் இரசத்தையும் கைகளிலேந்தி அர்ச்சிக்கும் வார்த்தைகளை, அதாவது கிறிஸ்து சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் கூறி இயேசுகிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்றுகின்றார். படைப்பிலும், மீட்பின் வரலாற்றிலும் மனிதரின் நலன்கருதி இறைவன் செய்த அனைத்தும் இதில் மீண்டும் நினைவுகூறப்படுகின்றன, உடனிருக்கச் செய்யப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன.

3.7  எழுந்தேற்றம்

     வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கி மக்களுக்குக் காட்டுதல் தொடக்கத்திலிருந்து வந்த ஒரு மரபு அன்று. திருப்பலியில் இது முக்கியமானதோ, உச்சக்கட்டமான செயலோ அன்று . இரண்டாம் வத்திக்காம் சங்கம் வரை பலிபீடம் திருப்பலி பீட முற்றத்தில் பின்புறம் சுவரோடு ஒட்டியதாக இருந்தது. சுவற்றின் மேல் பகுதியில் பாடுபட்ட சுருபமுடைய சிலுவைத் தொங்கியது. அருள் பணியாளர் தமது முதுகை மக்கள் பக்கம் காட்டிச் சுவரை நோக்கிய வண்ணமாக பலியை ஒப்புக் கொடுத்தார். வழிபாடும் இலத்தீன் மொழியில் இருந்தது.

மக்களுக்கு வழிபாட்டு மொழி புரியாததாலும், எப்பொழுது இயேசுகிறிஸ்து அப்பத்தையும் இரசத்தையும் தம் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றி பலிபீடத்தில் பிரசன்னமாகிறார் என்று தெரியாததாலும் அப்பமும் இரசமும் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் ஆனதும் தங்களுக்குத் தூக்கி காட்ட வருந்திக் கேட்டதால் உண்டான பழக்கம் எழுந்தேற்றம். இது 9‡ஆம் நூற்றாண்டில்  உண்டான ஒரு பழக்கம். அருள்பணியாளர் தொடர்ந்து சுவரைப் பார்த்து நின்றதால், தமது தலைக்குமேல் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும், இரசக் கிண்ணத்தையும் தூக்கிப் பிடிக்க வேண்டியிருந்தது. இயல்பாக மக்கள் தலைவணங்கி ஆராதிக்கத் தொடங்கினார்கள். இது திருப்பலியில் இயேசு கிறிஸ்துவை ஆராதிப்பது விதிவிலக்காக வந்த ஒரு தவிர்க்க முடியாத வழக்கம் என்று சொல்ல வேண்டும்.

         இப்பொழுது மக்களைப் பார்த்து திருப்பலி நிகழ்த்தும் முறை கையாளப்பட்டாலும், வழிபாடு  அவரவர் தாய் மொழியில் நிகழ்ந்த போதிலும் வசீகரம் செய்யப்பட்ட அப்பத்தையும் இரசக்கிண்ணத்தையும் மக்களுக்கு தூக்கிக் காட்டும் நீண்டநாள் மரபு நிறுத்தப்படவில்லை.

         அருள்பணியாளர்கள் இப்பொழுது தலைக்கும் மேல் தூக்கிக் காட்ட வேண்டியதில்லை. தங்கள் முகத்துக்கு முன்வரை தூக்கி காட்டினால் போதும். மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தூக்கிபிடிப்பது சரியல்ல. மேலும் மிகைப்படுத்தப்பட்ட கால அளவுக்குத் தலை வணங்குவது தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்களுடைய பக்திக்கும், கவனத்திற்கும் ஊறு விளைவிக்கும். மற்றும் புதியதோர் தவறுதலான கேட்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.
                - தொடரும்... 

Saturday, 29 April 2017

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்


15.- அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

 நற்கருணை வழிபாடு (iii)

முந்தின சிந்தனைகளில் நற்கருணை வழிப்பாட்டின் தொடக்கப் பகுதியாக “காணிக்கை களைத் தயாரித்தல்”  என்பது பற்றிய விளக்கம் இடம் பெற்றது. இப்பொழுது நற்கருணை வழிப்பாட்டின் மையமாகிய “நற்கருணை மன்றாட்டு”  என்பது பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். இவ்விளக்கம் பலதவனைகளில் இடம் பெறும்.

ஆ.நற்கருணை மன்றாட்டு 

 உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் 
நற்கருணை மன்றாட்டு பற்றிய பின்வரும் குறிப்பை வாசிக்கிறோம்:

“திருப்பலி கொண்டாட்டம் முழுவதற்கும்  மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருனை மன்றாட்டு... நன்றி மன்றாட்டாகவும்   புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறை வேண்ட லுடனும், நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருன்பணியாளர் அழைப்பார். அவர்களை தம்முடன் இறைவேண்டலில் இணைத்து திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைதந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெறும் செயல்களை அறிக்கையிடுவதிலும், பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது.” ( எண் 78).

இந்த மேற்கோவிலிருந்து நற்கருணை வழிபாட்டில் பயனுள்ள முறையில் பங்கு கொள்வதற்கு நற்கருணை மன்றாட்டுகளைச்  சரியாகப் புரிந்து கொள்வது அவசியமென்பது தெளிவாகிறது. எனவே இப்பொழுது நற்கருணை மன்றாட்டுகளின் பின்னணி, தோற்றம்,  வளர்ச்சி, அமைப்பு, அவற்றில் பொதிந்துள்ள இறையியல் சிந்தனை ஆகியவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.
  
1. நற்கருணை மன்றாட்டுகளின் பின்புலம்

 நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இறுதி இரவு உணவு பகுதியில் பயன்படுத்தபட்டுள்ள “நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து”  எனும் வார்த்தைகள் நற்கருணை மன்றாட்டு தோன்றுவதற்கு மூலமாக இருந்திருக்கலாம் என்றாலும், இப்பகுதி நற்கருணை மன்றாட்டு தோன்றிய விதமனைத்தையும் விளக்குகிறது என்று சொல்ல முடியாது. எனவே இதன் மூலத்தை வேறு இடங்களில் தேட வேண்டும்.     

1.1. யூதர்களின் பெராக்கா (Berakah)

யூதர்களுக்கு ஒவ்வொரு உணவும், குறிப்பாக பாஸ்கா விழாவுக்கு முந்தினநாள் மாலை உணவு திருவழிப்பாட்டுத் தன்மை உடையதாக இருந்தது. அப்பத்தையும், இரசக்கிண்ணத்தையும் ஆசீர்வதித்தல்.  யூதர்களின் அன்றாட செப அமைப்பின் ஒரு கூறாக  இருந்தது. அவர்களுடைய  “யாவே வழிபாட்டில்”  இறை புகழ்ச்சி சிறப்பிடம் பெற்றிருந்தது. மனித வரலாற்றில் விளங்கும் இறைவனின் அன்புக்கு, மனிதர் காட்டும் நன்றியறிதலும், வாழ்த்துரையும் ஒரு பதிலுரையாக அமைந்திருந்தது. தம் வியத்தகு படைப்பு செயலினால் இறைவன் பேச, அவருடைய படைப்பின் கைவன்மைக்குப் புகழ் கூறி மனிதன் பதிலளித்தான் 
(காண் சங் 26:7).  எனவே யூதர்களின் “இறைபுகழ்ச்சி”  இயல்பிலேயே இறை வார்த்தைக்கு அளிக்கும் பதில் மன்றாட்டாக இருந்தது. இறைவன் தங்களுக்குச் செய்தவற்றை வெளிப்படை யாக ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவதாகவும், நம்பிக்கையை வெளிப்படுத்து வதாகவும் இருந்தது. இவ்வாறு அது மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த இறை புகழ்ச்சியாக இருந்தது.

          இது போன்ற புகழ்ச்சி மன்றாட்டுக்குப் பழைய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன ( காண் தொ.நூ 24:27; 1அரச 1:48). புதிய ஏற்பாட்டிலும் இறைபுகழ்ச்சிக்குச் சான்றுகளைக் காணலாம்( காண் மத் 11:25‡27;  எபே 1:3‡14) . இப்புகழுரைகள் கடவுளின் வியத்தகுச் செயல்களைப் பிந்திய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தின. அவர்களும் இச்செயல்களை  நினைவு  கூர்ந்து  இறைவனைப் போற்றி புகழ்ந்தனர். கால போக்கில் இப்புகழுரைகள் மாறாத வாய்ப்பாட்டு செபங்களாக மாறின. (Stereotype formulas). யூதர்களிடையே பழக்கத்திலிருந்த 18 புகழுரைகள் குறிப்பிடத்தக்கவை.

1.2. புதிய ஏற்பாட்டில் பின்னணி 

           புதிய ஏற்பாட்டில் “ நன்றி கூறுதல்”  என்பதற்கு  “யூக்கரிஸ்தேயின்”(Eucharistein)  என்ற கிரேக்கச் சொல்லும்,  “புகழுரைத்தல்” என்பதற்கு “யூலோகேயின்” (Eulogein)  என்ற கிரேக்கச் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் எபிரேய மொழியில் “நன்றி கூறுதல்” என்பதற்குத் தனிச்சொல் கிடையாது. எனவே இக்கருத்தை வெளிப்படுத்த “பெராக்கா” (Berakah=இறை புகழ்ச்சி) என்றே சொல்லே  பயன்படுத்தப்பட்டது.
         அப்பம் பலுகுதலை விவரிக்கும் பகுதிகள் இறுதி இரவு உணவைப்பற்றி கூறும் பகுதியுடன் நெருங்கியத் தொடர்புக்  கொண்டுள்ளன. ( காண். மாற் 6:35; 8:26). மாற்6:41 இல் நற்செய்தியாளர் “இறை புகழ்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். யோவானோ அதே புதுமையை விவரிக்க “நன்றி கூறுதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ( யோவா 6:11). மாற்கு ஏழு அப்பம் பலுகுதலை விவரிக்குமிடத்தில்  ( 8:6) “நன்றி கூறுதலும்” என்ற சொல்லை உபயோகிக்கிறார். இதிலிருந்து“நன்றி கூறுதலும்”, “இறை புகழ்ச்சியும்”  ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என உணர முடிகிறது.

 இது போன்றே மத்தேயும், மாற்கும் அப்பத்தைப்பற்றிக் கூறும்போது “இறைபுகழ்” என்றும், கிண்ணத்தைப்பற்றிக் குறிப்பிடும் போது “நன்றி”  என்றும் சொல்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் பவுலும், லூக்காவும் இரண்டு செயல்களுக்கும் “நன்றி கூறி”  என்றே குறிப்பிட்டுள்ளார்கள். முதல் கிறிஸ்தவர் களுக்கும் இவ்விரு  சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தின ( காண் 1 கொரி 14: 16‡17)       இவ்வாறு ( 1 ) இயேசுவின் இறுதி இரா உணவும் (2) யூதர்களின் “பெராக்காவும்” ( 3) புதிய ஏற்பாட்டுக் கால மக்களின் “ இறை புகழுரைதல்” மற்றும் “நன்றி கூறுதலும்” நற்கருணை மன்றாட்டுக்கு   பின்னணியாக அமைந்தன.

2. நற்கருணை மன்றாட்டின்    தோற்றமும் வளர்ச்சியும்

         நமது ஆண்டவர் தமது இறுதி உணவின்போது  தம் சீடர்களுக்கு அப்பத்தையும் கிண்ணத்தையும்  அளித்து,  “இதை  என் நினைவாகச் செய்யுங்கள் ”  என்றார். இது தொடக்கக்கால கிறிஸ்தவர்கள்   நற்கருணை மன்றாட்டைத் தமக்கேற்ப அமைத்துக் கொள்ள வாய்ப்பும், உரிமையும் அளித்தது.

       முதல் கிறிஸ்தவர்கள் காலத்தில்  “ நற்கருணை வழிபாடு”  பொது உணவு வேளையின் முடிவில் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக  நம் ஆண்டவருடைய  இறுதி உணவின் இரு “இறைபுகழுரைகளும்”  ( துவக்கத்திலும்  முடிவிலும்)  ஒரே  இறைபுகழ் மன்றாட்டாக இணைக்கப்பட்டன. இதிலிருந்துதான் பிற்கால நற்கருணை மன்றாட்டு செபங்கள் விரிவாக்கப்பட்டன.

நற்கருணை மன்றாட்டைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துத் தொகுக்கக்கூடிய  வாய்ப்பு அதன் பொது  அமைப்பிலே இருந்தது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் வரையறுக்கப்பட்ட அதிகாரபூர்வமான வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் ஏதுவும் இல்லை. இதை மறைசாட்சியான புனித ஜஸ்டின் என்பவருடைய “ சமயதற்காப்பு” (Apology of Justin) உரையிலும், அதன் உட்கூறுகளின் சுருக்கத்தை ஹிப்போலிட்டஸ் (Hypolitus) என்பவரின் “திருத்தூதர்களின் மரபு” (Apostolic Tradition)   என்ற நூலிலும் இருந்து அறிகிறோம்.

நான்காம் நூற்றாண்டிற்கு முன் ஒரே ஒரு நற்கருணை மன்றாட்டு இருந்ததாக புனித ஜஸ்டின் குறிப்பிடுகிறார்.  மேலும்  அது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.  எனினும் 4‡ஆம் நூற்றாண்டி லிருந்து, வரையறுக்கப்பட்ட  வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் தேவையயனும் ஒரு  பொதுவான மனப்பாங்கு நிலவி வந்தது. இத்தகைய எண்ணம் முதலில் கீழக்குத் திருஅவையில் தான் தோன்றியது. ஏனெனில் இது “ஆரியனிஸம்” (Arianism) போன்ற தப்பறையான கொள்கைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தவும் பாதுக்காகவும்  அவசியம் என உணரப்பட்டது.

        இதன் விளைவாக கால போக்கில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நற்கருணை மன்றாட்டுகள் தோன்றின. இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன.

     1. எகிப்திய அல்லது அலெக்சாந்திரிய வழிபாடு
    2. அந்தியோக்கியா அல்லது மேற்குசீரியா வழிபாடு  
    3. கிழக்கு சீரிய வழிபாடு
    4. உரோமைய வழிபாடு
    5. கல்லிக்கன்  மற்றும் ஸ்பெயின் சார்ந்த வழிபாடு

இவற்றுள்  உரோமை வழிபாட்டு முறையைச் சார்ந்த  நற்கருணை மன்றாட்டு (உரோமைத் திருமுறை-Roman Canon)  காலபோக்கில் மேற்குதிரு அவையில் 11-ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப் பட்டது. 16-ஆம்  நூற்றாண்டில் இது மட்டுமே உலகெங்கும் இலத்தின் திருஅவையில் பரவி நிலைத்து  1970 வரை நின்றது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு உரோமை வழிபாட்டில் மற்றும்  மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்ட பின் இந்த உரோமன் திருமுறை சிலசிறு மாற்றங்களுடன் முதல் நற்கருணை மன்றாட்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.     இப்பொழுது இலத்தீன் திருஅவையில் நான்கு நற்கருணை மன்றாட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றோடு ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவரோடு நிகழ்த்தும்  திருப்பலிக்கான நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும், பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்  நான்கும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.  சிறுவர்களுக்கான திருப்பலியின் மூன்றாவது  நற்கருணை மன்றாட்டு இருபாகமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.  

          பல்வேறு நற்கருணை மன்றாட்டுகளின் கருப்பொருள் ஒன்றே. அதாவது இறைவன் புரிந்த அரும்பெரும் செயல்களுக்குப் புகழ்பாடி, நன்றிகூறி மன்றாடுவதாகும். திருப்பலியில் கிறிஸ்துவின் மீட்புச்செயல் நினைவு கூறப்படுகிறது.  இதற்கு மூலக்காரணராகிய இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறப்படுகிறது. மீட்பின் பலனை நம்பிக்கையாளர் அடையும்படி மன்றாட்டுகள்  இடம் பெறுகின்றன. அவை பயனை விளைவிக்கும்படி காணிக்கைகள், அதாவது பலிபொருள் ( கிறிஸ்துவே ) ஒப்புக் கொடுக்கப்படுகிறது.
                                                                                                                                                                                தொடரும்...
                                                                                                                                                                                                                                                                 

Tuesday, 29 November 2016

திருப்பலி விளக்கம் 11. வார்த்தை வழிபாடு (3)

திருப்பலி விளக்கம்

11. வார்த்தை வழிபாடு (3)

அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

இதுவரை ஞாயிற்றுகிழமை வாசகங்கள் அமைப்புப் பற்றி விளக்கினோம். இப்பொழுது வார நாள் வாசகங்கள் பற்றியும், பெருவிழாக்கள், விழா நாள் வாசகங்கள் பற்றியும் மற்றும் புனிதர்களுடைய நினைவு நாள் வாசகங்கள் பற்றியும் விளக்குவோம்.

வார நாள் வாசகங்கள் :

வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒற்றைபடை ஆண்டை முதல் ஆண்டு என்றும், இரட்டைப்படை ஆண்டை இரண்டாவது ஆண்டு என்றும் கணித்து அதற்கு ஏற்றார் போல் முதலாவது அல்லது இரண்டாவது ஆண்டு வாசகங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஏன் வார நாள் வாசகங்கள் இரண்டு ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டு கால வட்டத்தில் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். காரணம், வார நாள்கள் ஞாயிற்றுக்கிழமைகளை விட எண்ணிக்கையில் அதிகமுள்ளன. அவை 7:1 என்ற விகிதத்தில் இருக்கின்றன. எனவே இரண்டு ஆண்டு கால வட்டத்திலேயே எண்ணிக்கையில் அதிகமான வாசகங்கள் பெற வாய்ப்பு உள்ளது. வார நாள்களில் இரு வாசகங்கள் மட்டுமே (முதல் வாசகம் + நற்செய்தி வாசகம்) இடம் பெறுவது கவனிக்க வேண்டியது. தவறாமல் தினமும் திருப்பலியில் பங்கு பெற்றால் ஒருமுறை விவிலியம் முழுவதையும் கேட்க முடியும் என்பது திருஅவையின் கருத்து.

வாரநாள் வாசகங்களும் திருவழிபாட்டு ஆண்டின் கணிப்பையே பின்பற்றும். உதாரணமாக 2016ஆம் ஆண்டின் வாரநாள் வாசகம் இரட்டைப்படை ஆண்டுக்குரியவையாகும். இது 2015 நவம்பர் இறுதியில் திருவருகை காலத்தின் முதல் வாரம்  திங்கள் கிழமையே தொடங்கிவிட்டது. இவ்வாண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு பின்வரும் சனிக்கிழமை வரை இது நீடித்தது.

பெருவிழாவுக்கான வாசகங்கள் :

ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற வாரநாள்களில் பெருவிழாக்கள் வர நேரிட்டால் அன்று ஞாயிற்றுக்கிழமை போல் மூன்று வாசகங்கள் இடம்பெறும். ஞாயிற்றுக்கிழமைக்குரிய வாசகங்களின் விதிமுறையே இந்நாளில் பின்பற்றப்படும். அதாவது முதல் வாசகம் பழைய ஏற்Vட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டு மடல்களில் இருந்தும், மூன்றாவது வாசகம் தகுதியான நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்படும். புனித வாரம் தவிர்த்து மற்ற தவக்கால வார நாள்களில் இப்பெருவிழா வர நேரிட்டாலும் அன்று இரண்டாவது வாசகத்திற்குப் பின் அல்லேலூயாவும், அதனுடைய வசனமும் ஆர்ப்பரிக்கப்படும். எடுத்துக்காட்டாக மார்ச் 19 புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் அல்லது மார்ச் 25 ஆண்டவர் பிறப்பின் அறிவிப்பு.

ஞாயிற்றுக் கிழமையில்லாமல் மற்ற நாள்களில் நேரிடக்கூடிய பெருவிழாக்கள் : ஜுன் 24 - புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படுவதால் அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் திரு இருதய ஆண்டவரின் பெருவிழா, புனிதர்கள் பேதுரு, பவுல் - திருத்தூதர்கள் பெருவிழா, ஜுலை 3 புனித தோமா - திருத்தூதர் (இந்தியா) பெருவிழா, ஆகஸ்ட் 15 புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா, நவம்பர் 1 புனிதர் அனைவர் பெருவிழா, டிசம்பர் 3 புனித ஃப்ரான்சிஸ் சவேரியார் (இந்தியா) பெருவிழா டிசம்பர் 8 புனித கன்னி மரியாவின் அமல உற்பவம் பெருவிழா ஆகியவை.

விழாக்களுக்கான வாசகங்கள் :

இயேசு ஆண்டவர், கன்னி மரியா, புனித திருத்தூதர்கள் மற்றும் சில புனிதர்கள் இவர்களுடைய திருநாள் விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இவற்றிக்கெல்லாம் முதல் வாசகம், நற்செய்தி வாசகம் என இரண்டு வாசகங்கள் மட்டும் உள்ளன. இதற்கு விதிவிலக்காக பின்வரும் நான்கு விழாக்களுக்கு மூன்று வாசகங்கள் வாசிக்கப்படும். அவை: ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ருவரி 2), ஆண்டவரின் தோற்ற மாற்றம் விழா (ஆகஸ்ட் 6), திருச்சிலுவை மகிமை விழா (செப்டம்பர் 14), இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு (நவம்பர் 9).

மற்ற புனிதர்களின் நினைவு நாள் வாசகங்கள் :

பொதுவாக புனிதர்களின் நினைவு திருப்பலியில் கொண்டாடப்படும்போது ஆண்டின் வார நாள்களின் வாசகமே வாசிக்கப்பட வேண்டும். அவற்றை மாற்றக்கூடாது. இந்த ஒழுங்குமுறைக்கு விதிவிலக்குகள் உண்டு. ஒன்று ஒரு சிலர் முக்கிய நினைவு நாள்களில், எடுத்துக்காட்டாக புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு (ஆகஸ்ட் 29), தொழிலாளர் புனித யோசேப்பு நினைவு (மே 1), கன்னிமரியின் துயரங்கள் (செப்டம்பர் 25), மற்றொன்று ஒரு புனிதருடைய விழா நினைவு நாளாக இருந்தாலும், அவர் ஒரு பங்கின் அல்லது நிறுவனத்தின் பாதுகாவலராக இருந்தாலும் அல்லது ஒரு துறவற சபையை நிறுவியவராக இருந்தாலும் அன்று அவருக்கான சிறப்பு வாசகத்தை வாசிக்கலாம். இந்த நினைவு நாள்களை விழாவாகக் கூட கொண்டாடலாம்.

வாசகங்களை எதிலிருந்து வாசிப்பது?

நாம் மேலே குறிப்பிட்ட மூன்றாண்டு கால வட்டம் இரண்டு ஆண்டு கால வட்டங்களுக்கான வாசகங்கள் பலவிதங்களில் மக்கள் கைவசம் வந்து சேர்கின்றன. ஞாயிறு வழிபாடு கையேடு  என்று சுமார் நான்கு பக்கங்களில் வெளியிடப்படும் துண்டு பிரசுரங்கள் (Leaflets) ஒருபக்கம்; விவிலிய நாள்குறிப்பேடு (Bible Diary) என்று பல பதிப்பகங்களில் (வைகறை, கிளாரட், நல்லாயன்) ஆகியவற்றிலிருந்து வரும் நாள்குறிப்பேடுகள் மற்றொரு பக்கம். இவற்றையன்றி விவிலிய நூலை கையிலேந்தி வரும் நம்பிக்கையாளர், அருள்பணியாளர் மற்றும் பங்கு ஆலயங்களில் கிடைக்ககூடிய வாசகநூல்.

இவை அனைத்தும் இறைவார்த்தைப் பகுதிகளை முழுமையாகவும், பகுதியாகவும் கொண்டுள்ளன. இவற்றில் வழிபாட்டு கையேடு எனும் துண்டு பிரசுரமும், விவிலிய நாள் குறிப்பேடும் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வெளியிடப்படுவன. அதாவது வழிபாட்டை வாழ்வாக்கிட இவற்றை வாசித்து தியானித்தல், வழிபாட்டிற்கு தயாரித்தல் போன்ற நோக்கங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவை வழிபாட்டு நூல்வகையைச் (யிஷ்மிற்rஆஷ்உழியி ணுலிலிவவி) சாராதவை. எனவே வார்த்தை வழிபாட்டில் இறை வார்த்தையைப் பறைசாற்ற உகந்தனவல்ல. ஆதலால் இவற்றிலிருந்து இறைவார்த்தையைப் பறைசாற்றுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். வழிபாட்டில் இவற்றிலிருந்து நற்செய்தியைப் பறைசாற்றும் போது தூபம் காட்டப்படுகிறது. இவை வழிபாடு சாராத காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு இறைவார்த்தைக்கு பங்கம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக ஞாயிறு வழிபாட்டு கையேடு துண்டு பிரசுரத்தில், அடுத்து வரும் ஞாயிறு வழிபாட்டின் போது அதில்  உப்பு  வைக்கப்படுகிறது. மற்றும் கசக்கி குப்பைத் தொட்டியில் போடப்பட்டதையும் பார்க்க நேரிடுகிறது. அதேபோல் விவிலிய நாள் குறிப்பேடு மக்களை சந்திக்க நிர்ணயிக்கப்படும் நேரத்தைக் குறிக்கவும் (Appointments) மற்றும் சில தகவல்களைக் குறித்து வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவை யாவும் இறைவார்த்தையின் மாண்புக்கு உகந்தவை அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது.

அருள்பணிக்கு உதவும் சிற்றேடுகளை  எ.கா ., இறைமக்கள் வாசகத்தைத்  தயார் செய்யவோ, தனியாகத் தியானிக்கவோ வெளியிடப்படும் கையேடுகளை வாசகப்புத்தகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடாது. இது இறைவாக்கின் மாண்புக்குப் பொருந்துவதாக இல்லை - வாசக நூல் முன்னுரை எண் 37இல் குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும்.

அடுத்து விவிலியத்தை வார்த்தை வழிபாட்டில் வரும் வாசகங்களைப் பறைசாற்றப் பயன்படுத்தலாமா? என்ற ஒரு கேள்வியும் வைக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக நான் சொல்ல விரும்புவது பின்வருபவை: விவிலியத்தை வழிபாட்டு வாசகங்களைப் பறைசாற்றக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு என்றும் சொல்லக்கூடாது. தவிர்க்க முடியாத இடத்திலும், நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் விவிலியம் வழிபாட்டு நூல் அன்று. வழிபாட்டிற்கெனத் தயார் செய்யப்பட்டுள்ள வாசக நூலே வழிபாட்டு நூல் ஆகும். எனவே வார்த்தை வழிபாட்டில் வாசகங்களைப் பறைசாற்ற வாசக நூலைப்  பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

விவிலியத்தின் பகுதிகள் வாசக நூலில் இருந்தாலும், அவை வழிபாட்டிற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்படுகின்றன. உதாரணமாக பவுலின் மடல்களில் இருந்து வாசகம் இருக்கும்போது தொடக்கத்தில் சகோதர, சகோதரிகளே என்று கூடி வந்திருக்கும் மக்களை விளித்து வாசிக்கப்படுகிறது. விவிலிய நூலைப் பயன்படுத்தும்போது எல்லாராலும் இது சரியாக செய்யப்பட வாய்ப்பு மிகக் குறையும்.

இதே போன்று நற்செய்தி வாசகத்தின்போது ‘அக்காலத்தில்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு அதற்கேற்றவாறு நற்செய்தி வாசகத்தின் தொடக்கச் சொற்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. விவிலியத்தில் இருந்து நேராக நற்செய்திப்  பகுதி வாசிக்கப்படும் போது முன் தயாரிப்பில்லாமல் எல்லா அருள்பணியாளர்களாலும் இதை சரியாகச் செய்யமுடியாது.

மூன்றாவதாக வார்த்தை வழிபாட்டின் மையக் கருப்பொருளுக்கேற்றவாறு இறை வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாமல், இடை இடையே சொற்றொடர்களும், வாக்கியங்களும் விடுபட்டு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விவிலியத்திலிருந்து வாசிக்கும் போது எல்லாராலும் தடுமாற்றமும் தாமதமும் இன்றி செய்ய இயலாது.

வாசக நூலின் முன்னுரைப் பகுதியின் பின்வரும் குறிப்புகளைக் காண முடிகிறது :

வாசகத்தின் தொடக்கமாக வழக்கமான முன்மொழிச் சொற்கள் இருக்கும்; இவையாவன : அக்காலத்தில், அந்நாள்களில், சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, ஆண்டவர் கூறுவது. இந்த முன்மொழிச் சொல்லுக்குப் பின் வாசகம் தொடர்கிறது. பாடம் தனது பின்னணிச் சூழலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருப்பதால், அதை புரிந்துக் கொள்ளத் தேவையான சில சொற்களைச் சேர்க்கலாம் அல்லது விட்டு விடலாம். பாடம் தொடர்ச்சியான வசனங்களைக் கொண்டிருக்கவில்லை என்றால் அதில் மாற்றங்கள் செய்யத் தேவைப்படலாம் (எண் 124, காண் எண் 77). இந்த காரணங்களுக்காக வார்த்தை வழிபாட்டில் வரும் விவிலியப் பகுதிகளை வாசக நூலில் இருந்தே வாசிப்பது சிறந்தது. 

இறுதியாக மற்றும் ஒரு கேள்வி எழுகிறது. வார்த்தை வழிபாட்டில் இறைவார்த்தை வாசகம் பறைசாற்றப்படும் போது, நம்பிக்கையாளர்களும், அருள்பணியாளரும் விவிலியத்தை கையில் வைத்துக் கொண்டு வாசிக்கலாமா? என்பது.  இத்தகைய பழக்கம் அருங்கொடை இயக்கத்திலிருந்து வந்ததொன்று. இதற்கு ஆதரவு ஒருசில விவிலிய வல்லுநர்களிடமிருந்து வந்துள்ளது. அருளாளர் ஆறாம் சின்னப்பர் ‘நற்செய்தியறிவிப்பு’ (Evangelium Nuntiandi) என்ற ஆவணத்தில் சான்று பகர்தலை வலியுறுத்தும்போது இன்றைய உலகம் கேட்கும் நாகரீகத்தில் இருந்து (Civilization of Hearing) பார்க்கும் நாகரீகத்திற்கு (Civilization of Seeing) கடந்து வந்துள்ளது என்பதைக் காரணம் காட்டுகிறார்கள். மேலும் கத்தோலிக்க மக்களிடையே விவிலிய அறிவு மிக சொற்பமாக இருப்பதால் வார்த்தை வழிபாட்டின் நேரத்திலும் அன்றைய வாசகங்களை விவிலியத்தை வைத்துக் கொண்டு பறைசாற்றப்படும்போது பின்பற்றுவது பயனளிக்கும் எனக் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் சரியல்ல. இறைவார்த்தை வழிபாட்டில் விவிலியப் பகுதிகள் வாசிக்கப்படுகின்றன என்று சொல்வதை விட பறைசாற்றப்படுகின்றன (Proclaimed) என்று சொல்வதே சரியானது. பறைசாற்றப்படுவதை கேட்க வேண்டும் என்பதுதான் சரி. வாசக நூலின் பொது முன்னுரை விளக்கங்களை துருவி ஆராய்வோமானால், அங்கு பறைசாற்றப்படுவது கேட்கப்பட வேண்டும் என்றுதான் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது (எண்கள் 6, 8, 45, 47, 48, 55, 62 மற்றும் காண்க). “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10 : 17). என்று புனித பவுல் கூறுவது கவனிக்கத்தக்கது. இறைவார்த்தை பறைசாற்றப்படும்போது இறைவன் (இயேசு) பேசுகிறார். இறைவெளிப்பாடு இங்கு, இப்பொழுது இடம் பெறுகிறது. அதைக் கேட்கத்தான் வேண்டும். வழிபாட்டு வல்லுநர்களும், பல புகழ்பெற்ற விவிலிய வல்லுநர்களும், மக்களோ, அருள்பணியாளர்களோ பறைசாற்றும் வார்த்தையைக் கேட்க வேண்டுமேயயாழிய வாசிக்கக்கூடாது என்றுதான் சொல்லுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதைத் தடை செய்ய ஆயருக்குரிய அதிகாரம் (Episcopal Authority) என்னிடமில்லை; ஆனால் இது சரியல்ல என்று சொல்ல வழிபாட்டியியலில் நம்பக நிலை (Liturgical Authority) என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியும்.
வார்த்தை வழிபாட்டில் மற்றுமொரு பழக்கம் நுழைந்துள்ளது. இது மேலே நாம் குறிப்பிட்ட பழக்கத்தோடு நெருங்கியத் தொடர்புடையது. அதாவது இறைவார்த்தையை வாசிக்கும் போது அது எந்த அத்தியாயத்தில் இருக்கிறது. எத்தனை வாக்கியங்களைக் கொண்டது போன்ற தகவல்களைக் கொடுக்கின்ற பழக்கம். திருப்பலிக்கு வரும் மக்கள் விவிலியத்தைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியதால் இறைவார்த்தையைப் பறைசாற்றுபவர், கையில் விவிலியத்தை வைத்திருப்பவர்கள் திறந்து பின்பற்றுவதற்கு உதவியாக இருக்கும் விதத்தில் பறைசாற்றப்படும் பகுதியின் அத்தியாயம், வாக்கியங்கள் எல்லாம் பற்றி சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தேவையற்றது. வழிபாட்டு மரபில் இத்தகைய பழக்கம் என்றுமே இருந்ததில்லை.

அப்படி சொன்னாலும் அது பாதகமில்லை என்பது எமது தனிக்கருத்து. ஆனால் அக்குறிப்பு சரியான முறையில் இருக்க வேண்டும். ‘பிரிவு’, ‘சொற்றொடர்கள்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். இச்சொற்களின் உண்மைப் பொருளை அறியாமையால் வந்த பழக்கம். ‘பிரிவு’ என்றால் ‘செக்­ன்’ (Section) என்றும், ‘சொற்றொடர்கள்’ என்றால் ‘ப்ரேஸ்’ (sentences) என்றும் பொருள். ஆங்கில-தமிழ் அகராதியை எடுத்து செக்­ன், ப்ரேஸ் என்பவற்றின் பொருள் காணவும். இயல் அல்லது அத்தியாயம் என்று சேப்டருக்கும் (உஜுழிஸ்ரீமிer) இறை வசனங்கள் அல்லது வாக்கியங்கள் (விeஐமிeஐஉeவி) என்று சொல்வதே சரியானது.

வாசக நூலில் ஒவ்வொரு வாசகப் பகுதிக்கும் மேல் ஒரு தலைப்பு மிக கவனமாகத் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கும். இது அந்த வாசகத்தின் முக்கியமானக் கருத்தை சுட்டிகாட்டுவதாக அமைந்திருக்கும். வாசகங்களைப் பறைசாற்றுபவர் இந்த தலைப்பையும் வாசிக்கக் கூடாது. இது விளக்கவுரையாளருக்கும், மறையுரைக்கும் பயன்படுவதாக கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவுரை :

இதுவரை மூன்று நிலைகளில் இறைவார்த்தை வழிபாடு பற்றி நாம் விளக்கியவற்றை சரியாக பொருள் உணர்ந்து செய்வதாலும், மேலே நாம் சுட்டிக்காட்டிய சில குறைகளையும் தேவையற்ற பழக்கங்களையும் சரிசெய்வதினாலும் வார்த்தை வழிபாடு அழகுள்ளதாக அமையும். அனைவரும் இறைவார்த்தை விருந்தில் நல்லமுறையில் பங்கு பெற்று, தங்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டு நற்கருணை விருந்திலும் பங்கு பெற தங்களைத் தகுதியாக்கிக் கொள்ள முடியும். 

Friday, 28 October 2016

திருப்பலி விளக்கம் 10. வார்த்தை வழிபாடு -2

திருப்பலி விளக்கம்

10. வார்த்தை வழிபாடு -2

-அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்


முன்னுரை

திருவழிபாட்டில் கொண்டாடப்படுவது திருப்பலியாக இருந்தாலும் சரி, வேறு அருள் அடையாளங்களாக இருந்தாலும் சரி, முதலில் வார்த்தை வழிபாடு நடைபெற வேண்டும் என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அழுத்தமான போதனையாகும். ‘இறைவார்த்தை வழிபாடும்’, ‘அருள் அடையாள வழிபாடும்’ (நற்கருணை வழிபாடும்) இணைபிரியாத வகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது ‘இறைவார்த்தை வழிபாடே’ அருள் அடையாள கொண்டாட்டத்தைப் பொருள் உள்ளதாக மாற்றுகிறது. “திருஅவை நம் ஆண்டவரின் திருவுடலுக்கு வணக்கம் செலுத்துவது போலவே விவிலியத்திற்கும் என்றும் வணக்கம் செலுத்தி வந்துள்ளது. சிறப்பாக, திருவழிபாட்டில் இறைவார்த்தையையும், கிறிஸ்துவின் உடலையும் பரிமாறும் பந்தியிலிருந்து வாழ்வின் அப்பத்தைப் பெற்று கிறிஸ்தவர்களுக்கு அளிக்க  தவறுவதில்லை” என்று இறைவெளிப்பாடு கோட்பாட்டு விளக்கத்தில் (இ.வெ.21) கூறப்பட்டுள்ளது. இறைவார்த்தைக்கும் அருள் அடையாளத்திற்கும் (இங்கு நற்கருணை வழிபாட்டிற்கும்) இடையே உள்ள ஒருங்கிணைப்பை அழகாகச் சித்தரிக்கிறது.
இனி இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு முறையைப் பற்றி விளக்குவோம்.

இறைவார்த்தை வழிபாட்டின் நோக்கம்

இறைமக்கள் அனைவரும் விவிலியத்தை முழுமையாகவும் நன்றாகவும் அறிந்திருக்க வேண்டும் என்பது முதல் நோக்கமாகும். இதற்கு ஏதுவாக திருப்பலியில் பங்கெடுக்க வரும் மக்களுக்கு விவிலியத்தின் முக்கியமான பகுதிகள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டு பறைசாற்றப்படுகிறது. அதனால் இறைமக்கள் விவிலியத்தை அறியமுடிகிறது.

அடுத்து பறைசாற்றப்பட்ட இறைவார்த்தை மறையுரையில் விளக்கப்படுவதால் அதை புரிந்து கொள்ளவும் அதனால் அவர்களின் விசுவாசம் ஆழப்படுத்தப்படவும் முடிகிறது. இத்தகைய பின்புலத்தில் அவர்கள் நற்கருணை விருந்தில் பங்குபெறத் தகுதியாக்கப்படுகிறார்கள். இது இரண்டாவது நோக்கமாகும்.

இறைவார்த்தை வழிபாட்டின் அமைப்பு

விவிலியத்தின் கருவூலங்கள் திறந்துவிடப்பட்டு அதிகமான வாசகங்கள் வேறுபட்டதாகவும், கொண்டாடப்படும் மறைநிகழ்வு அல்லது விழாவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கும்படி இவ்வார்த்தை வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களுக்கும் வார நாள்களின் கொண்டாட்டத்திற்கும் வேறுபட்ட இருவித கால சக்கரங்கள் அமைக்கப்பட்டு பொருத்தமானதும், கோர்வையானதுமான வாசகங்கள் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றன.

1. ஞாயிறு வாசகங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாசகங்கள் மூன்று ஆண்டு காலவட்டத்தில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வழிபாட்டு ஆண்டும் நடப்பு ஆண்டுக்கு முன்வரும் திருவருகைக்காலத்திலிருந்து தொடங்குகிறது. எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டாகிய 2016, சென்ற ஆண்டின் இறுதியில் வந்த வருகைக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையே தொடங்கிவிட்டது. இது இவ்வாண்டின் கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை மாலையோடு முடிந்துவிடும்.

நடப்பு ஆண்டு எந்த கால வட்டத்தைச் சார்ந்தது எனத் தெரிந்து கொள்ள பின்வரும் முறையைக் கையாளலாம். அதாவது நடைபெறும் ஆண்டை (2016) 3ஆல் வகுத்தால் மீதம் 1 வந்தால் அது முதல் ஆண்டு என்றும், மீதம் 2 வந்தால் அது இரண்டாவது ஆண்டு என்றும், மீதம் 0 வந்தால் அது மூன்றாவது ஆண்டு என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதன்படி வாசகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். 2016இல் 3ஆல் வகுக்கும்போது மீதம் 0 வருவதால் இந்த நடப்பு ஆண்டில் மூன்றாவது வழிபாட்டு ஆண்டுக்குரிய வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன.

ஏன் மூன்று ஆண்டுகால வட்டம் என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலான மக்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு மட்டும் செல்வதால், அவர்களுக்கு முழு விவிலியத்தின் விருந்து அளிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இவர்கள் தவறாமல் மூன்று ஆண்டுகளும் ஞாயிறு திருப்பலியில் பங்குபெற்று வாசகங்களைக் கேட்டால் முழு விவிலியத்தையும் வாசிக்கக் கேட்டதற்கு சமமாகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று வாசகங்கள் இடம் பெறுகின்றன. முதல் வாசகம் பழைய ஏற்பாட்டிலிருந்தும், இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டில் திருத்தூதர்களின், சிறப்பாக புனித பவுலின் மடல்களில் இருந்தும், நற்செய்தி வாசகம் நான்கு நற்செய்திகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டிருக்கும். முதல் ஆண்டில் மத்தேயு நற்செய்தியும், இரண்டாவது ஆண்டில் மாற்கு நற்செய்தியும், அதோடு (அது சுருக்கமான நற்செய்தியாக இருப்பதால்) யோவான் நற்செய்தியின் ஒரு பகுதியும், அதாவது யோவான் நற்செய்தியின் 6வது அத்தியாயம் 17, 18, 19, 20, 21 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் வாசிக்கப்படும். மூன்றாவது ஆண்டு லூக்கா நற்செய்தியும் வாசிக்கப்படும். யோவான் நற்செய்தியில் எஞ்சியிருக்கும் பகுதி தவக்காலத்தின் பிற்பகுதியிலும் பாஸ்காகால ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாசிக்கப்படுகிறது.

பதிலுரைப் பாடல்:

முதல் வாசகம் முடிந்ததும் பதிலுரையாகத் திருப்பாடல் தொடரும். தொடக்க திருஅவையில் திருவழிபாட்டு கொண்டாட்டங்களில் திருப்பாடல்கள் ஏராளமாகப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. நாளடைவில் அவற்றிலிருந்து ஒரு சில வசனங்கள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன. இது படிகீதம் என்று அழைக்கப்பட்டு முதல் வாசகத்திற்குப் பின் மிகக் குறுகியிருந்ததை அறிவோம்.

ஆனால் இப்பொழுது பழைய நடைமுறைக்குத் திரும்பியுள்ளோம். முதல் வாசகத்தின் கருபொருளுக்கு ஏற்றவாறு திருப்பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பலபத்திகளைத் தொடுத்து, பொருத்தமான பல்லவியுடன் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வாசகத்திற்கு நாம் கொடுக்கும் பதிலுரையாகவும், அவ்வாசகத்தின்மீது நமது சிந்தனையைக் கிளறிவிடும் தியானப் பாடலாகவும் அமைந்திருக்கிறது. “இது இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதியாகும்” என்று உரோமை திருப்பலி நூலின் பொதுப்படிப்பினை கூறுவது கவனிக்கத்தக்கது (றூணூயூனி 61). மேலும் அதே படிப்பினை கூறுவதை நோக்க வேண்டும். “வாசகங்களும், பதிலுரைப்பாடலும் இறைவார்த்தையைக் கொண்டிருப்பதால், அவற்றிற்குப் பதிலாக விவிலியம் அல்லாத வேறு பாடங்களைப் பயன்படுத்தலாகாது” (GIRM 57).

பதிலுரைப் பாடல் ‘இறைவார்த்தை வழிபாட்டின் முழுமையான பகுதி’ என்பதாலும், ‘இறைவார்த்தையைக் கொண்டிருப்பதாலும்’, இதை விட்டுவிட்டு வேறு பாடல்களைப் பாடுவது சரியல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள  வேண்டும்.

காலம் சென்ற அருள்பணியாளர் வில்லவராயர் சொல்வது எல்லோராலும் சிந்திக்க வேண்டியதொன்றாக உள்ளது. “இத்துணை சிறப்பு வாய்ந்த திருப்பாடல்களைப் பதிலுரைப் பாடலாக பாடுவதில் அல்லது படிப்பதில் ஏற்படும் தளர்வு நம் அறியாமையையே காட்டுகிறது. தரப்பட்ட திருப்பாடல்களைவிட அதிக பொருத்தமானப் பாடல்களைக் காண்பது அரிது. மேலும் இறைவாக்கிற்கு ஈடேது? பதிலுரைப் பாடல்களை நன்கு பயன்படுத்த கருத்துக் கொள்வோம், கற்றுக் கொள்வோம்”.

இரண்டாவது வாசகம் புதிய ஏற்பாட்டின் திருமடல்களில் இருந்து தேர்வுசெய்யப்படுகிறது. இந்த வாசகங்கள் இறைமக்களை ஒழுக்க நெறிகளில் பயிற்றுவிக்கவும், நடைமுறை வாழ்வுக்கு உகந்தனவாகவும் இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

அல்லேலூயா

இந்த இரண்டாவது வாசகத்திற்குப் பின் பொதுவாக வருவது அல்லேலூயா ஆர்ப்பரிப்பாகும். இதற்கு “ஆண்டவரைப் போற்றுங்கள்” என்பது பொருள். எனவே இது ஓர் ஆர்ப்பரிப்புச் சொல். ஆதலால் இது எப்பொழுதும் பாடப்பட  வேண்டும். பாடாவிட்டால் விட்டுவிடுவது நல்லது. “அல்லேலூயா அல்லது நற்செய்திக்கு முன்வரும் வசனம் பாடப்பெறவில்லையயன்றால் அவற்றை விட்டு விடலாம்” (றூணூயூனி 63/இ) என்று திருப்பலி நூல் பொதுப் படிப்பினையில் கூறப்பட்டுள்ளது. அல்லேலூயாவுக்கு பல்லவி வாசக நூலிலிருந்து அல்லது படிக்கீத நூலிலிருந்து எடுக்கப்பெறும்.

இந்த ஆர்ப்பரிப்பின் வழியாக நம்பிக்கையாளரின் திருக்கூட்டம் நற்செய்தியில் தங்களோடு பேசவிருக்கும் ஆண்டவரை வாழ்த்தி வரவேற்கின்றது. இந்த அல்லேலூயா ஆர்ப்பரிப்பு நற்செய்திக்கு முன்னோடியாக வந்து, நற்செய்தியின் சாராம்சத்தை, மையக்கருத்தை, உட்பொருளை சுருக்கமாக எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும். இது தகுந்த முறையில் நற்செய்திக்குச் செவிமடுக்க நம்மைத் தயாரிக்கிறது.

இதற்கு மாறாக நம் விருப்பம்போல் அல்லேலூயா வசனத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது. அல்லது மனப்பாடமாகத் தெரிந்த “ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று நினைத்தபோதெல்லாம் பாடக்கூடாது. சில நேரங்களில் எந்த வசனமுமின்றி நான்குமுறை தொடர்ந்து “அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ, அல்லேலூ” என்று பாடிவிட்டு, அடுத்து “அல்லேலூயா, இயேசுவைப் போற்றுங்கள்” என்று பாடுவதைப் பார்க்கிறோம். இது சரியானதன்று. ஏனெனில் இதில் அன்றைய நற்செய்தியின் சுருக்கம் இல்லை. மேலும் அல்லேலூயா என்பதற்கு “போற்றுங்கள்” என்பதுதான் பொருள் என்பது புரியாமல் பாடுவதாக உள்ளது.

தவக்காலத்தில் அல்லேலூயா பாடுவது விடப்படும். இதற்குப் பதிலாக வாசக நூலில் குறிப்பிட்டுள்ளபடி நற்செய்திக்கு முன் வசனம் பாடப்பெறும்.

தொடர்பாடல்

பாஸ்கா ஞாயிறு, பெந்தகோஸ்து, இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் ஆகிய மூன்று பெருவிழா நாள்களிலும், கன்னி மரியாவின் துயரங்கள் அதாவது வியாகுல அன்னை நினைவு நாளிலும் (செப்டம்பர் 15) முதல் வாசகம், அதற்குரிய பதிலுரைப் பாடலுக்குப் பின், அல்லேலூயாவுக்கு முன் தொடர்பாடல் பாட அல்லது வாசிக்க வேண்டும். என்று குறிப்பு இருக்கிறது. இந்த தொடர்பாடல் அன்றைய விழாவின் மகிழ்ச்சி அல்லது துயர உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

பாஸ்கா ஞாயிறு அன்றும், பெந்தகோஸ்து நாளன்றும் இரண்டாவது வாசகத்திற்குப் பின் இத்தொடர்பாடல் கட்டாயமாகப் பாடவோ, வாசிக்கவோ வேண்டும். பாஸ்கா ஞாயிறு எண் கிழமைகளிலும் விரும்பினால் தொடர்பாடலைப் பாடலாம் அல்லது வாசிக்கலாம். ஆனால் மற்ற இருநாள்களிலும் தொடர்பாடலை விரும்பினால் பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது (GIRM 64).
இயேசுவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவன்று முழுமையாக அல்லது சுருக்கமாக இத்தொடர்பாடலை பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்று கூறுவதோடு, சுருக்கமாக எந்த பத்தியில் (விமிழிஐகுழி) இருந்து எடுக்கலாம் என்றும் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இத்தொடர் பாடல் புனித அக்குவினா நகர் தோமாவால் அமைக்கப்பட்டது. இது “சீயோனே உன் மீட்பரைப் புகழ்வாய்” என்று தொடங்குகிறப் பாடலாகும். இது நற்கருணையின் மகத்துவத்தைப் பற்றிய பாடலாகும்.

கன்னி மரியாவின் துயரங்கள் நினைவுநாளில் ஒரு வாசகமும், நற்செய்தி வாசகமும் மட்டுமே உண்டு. எனவே முதல் வாசகத்திற்குப் பின் பதிலுரைப் பாடலுக்கு அடுத்து இத்தொடர்பாடல் இடம்பெறுகிறது. இதுவும் முழுமையாகவோ அல்லது அடையாளக் குறியிலிருந்து சுருக்கமாகவோ பாடலாம் அல்லது வாசிக்கலாம் என்றுள்ளது. இப்பாடல் சிலுவையடியில் நின்று துயருற்ற அன்னை மரியாவின் வியாகுலங்களைச் சித்தரிப்பதாக உள்ள ஓர் அழகான பாடலாகும்.

Tuesday, 26 July 2016

திருப்பலி விளக்கம் 7. தொடக்கச் சடங்கு (2)

திருப்பலி விளக்கம்
7. தொடக்கச் சடங்கு (2)

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

(சென்ற மாத சிந்தனையில் தொடக்கச் சடங்கில் அருள்பணியாளர் திருப்பலிக்கு குழுமியிருக்கும் நம்பிக்கையாளரை வாழ்த்தும் பாடங்களுக்கு விளக்கங்களோடு முடித்துக் கொண்டோம். இந்த சிந்தனையில் எஞ்சியிருக்கும் தொடக்கச் சடங்கில் இடம்பெறும் பகுதிகள் பற்றிய விளக்கம் கொடுக்க முற்படுவோம்).

சுருக்கமான முன்னுரை:

அருள்பணியாளர் மக்களை வாழ்த்திய பின், அவரோ, திருத்தொண்டரோ அல்லது பொதுநிலையினரில் ஒருவரோ மிகச்சுருக்கமான முன்னுரையை வழங்கி அந்நாளின் திருப்பலிக்கு நம்பிக்கையாளரைத் தயார் செய்கிறார்.
(பொது பாடம் 50 : 124)
The Priest (or antother minister) may very briefly introduce the faithful to the mass of the day. (ordo Missae cum Populo, p.3)

குறிப்பு : 
வேண்டுமென்றே மேலே உள்ள மேற்கோல் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுகிறது. இது நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கும். மொழிபெயர்த்தால் மேலே தமிழில் கொடுத்த திருப்பலி நூலின் பொது படங்களிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றாது.

விளக்கவுரையாளர்: 

இவர் தேவைக்கு ஏற்ப நம்பிக்கையாளருக்கு விளக்கவுரைகள், அறிவுரைகள் சுருக்கமாக வழங்குவார். இதனால் திருப்பலி கொண்டாட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவர்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுவார். விளக்கவுரையாளரின் குறிப்புகள் நன்றாகவும், சுருக்கமாகவும் தயாரிக்கப்படவேண்டும். விளக்கவுரையாளர் தம் பணியை நிறைவேற்றும்போது மக்கள்முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் அவர் வாசக மேடையைப் பயன்படுத்தக்கூடாது (பொது பாடம் எண் 105 / ஆ).

இன்று நடைமுறைகளில் நடப்பதற்கும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்குமிடடையே முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே திருப்பலியின் முன்னுரையைச் சரியா புரிதல் அவசியமாக இருக்கிறது.

திருப்பலிக்கு முன்னுரை வழங்குவதும், விளக்கவுரை அளிப்பதும் வெவ்வேறு பணிகள். இதனால்தான் இவர்களுக்குரிய தகுந்த இடம் வெவ்வேறானது. திருப்பலிக்கு முன்னுரை கொடுக்கும் அருள்பணியாளர் தமக்கென்று குறிக்கப்பட்ட இருக்கையில் இருப்பார். அவர் பொதுநிலையினராக இருந்தால் பலிபீட முற்றத்திலிருக்கும் அறிக்கை மேடையில் இருப்பார். ஆனால் விளக்கவுரையாளர் இரண்டாவது மாதிரி படிவத்தின் (Second Typical Edition 1975) பொது படிப்பினைப்படி பலீபீட முற்றத்திற்கு (Sanctuary) வெளியே நிற்பார். இந்த குறிப்பு சற்று மாற்றப்பட்டு திருத்தப்பட்ட மூன்றாவது மாதிரி படிவத்தின் (Revised Third Typical Edition 2008) பொது படிப்பினைப்படி “மக்கள் முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் வாசக மேடையைப் பயன்படுத்தக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தக்க இடம் பலிபீட முற்றத்திற்கு வெளியேயும் இருக்கலாம். விளக்கவுரை மேடை என்று நாம் குறிப்பிட்டுள்ள இடமாகவும் இருக்கலாம் என்பது எமது கருத்து. நாம் இங்கு கவனிக்கக் கூடியது திருப்பலிக்கு அளிக்கப்படும் முன்னுரையும், திருப்பலி தொடக்கத்திற்குக் கொடுக்கப்படும் விளக்கவுரையும் வெவ்வேறு பணிகள் ஆகும். குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

நாம் மேலே கொடுத்த மேற்கோள்களிலிருந்து புலப்படும் உண்மை என்னவென்றால், திருப்பலிக்கு முன்னுரையாக இருந்தாலும் சரி, அன்றைய திருப்பலிக்க விளக்கவுரையாக இருந்தாலும் சரி அவை மிகச்சுருக்கமானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். மறையுரையாக மாறிவிடக்கூடாது. பல சமயங்களில் மக்களையும், அருள்பணியாளர்களையும் அமரச்செய்துவிட்டு எழுதிவைத்திருக்கும் பல பக்கங்கள் அடங்கி அடுக்கு மொழி உரையை வாசிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மூன்றாவதாக இந்த முன்னுரை அன்றைய விழாவில் மையமாக இழையோடிக் கொண்டிருக்கும் மையக்கருத்தை (நன்றி, துக்கம், மகிழ்ச்சி, மனத்துயர்) துல்லியமாகச் சுட்டிக்காட்டி குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை உசிப்பிவிட்டு உணர்வோடும் (உலிஐவிஉஷ்லிற்வி), செயல்முறையிலும் (ழிஉமிஷ்ஸe) பங்குபெற உதவும் விதமாக அமைய வேண்டும். வெள்ளி, பொன் விழாவாகக் கொண்டாடும் நாயகர்களையோ, வார்த்தைப்பாடு புதிப்பித்தபின் நன்றி செலுத்தும், இருபால் துறவிகளையோ அடக்கத் திருப்பலியில் இறந்தவரைப் பற்றியோ புகழாரம் சூட்டும் நேரமல்ல இது. இத்தகைய செயல் அறவே அகற்றப்பட வேண்டும். இது திருப்பலிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

மனத்துயர்ச் சடங்கு :

தொடக்ககால திருஅவையில் கொண்டாடப்பட்ட வழிபாடு பற்றிய தகவல்களை நமக்குத் தொகுத்துக் கொடுப்பது “திதாக்கே” (ம்ஷ்dழிஉஜுe) என்னும் நூலாகும். இதில் மனத்துயர் சடங்கு பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆண்டவர் நாளில் ஒன்றுகூடி அப்பத்தைப் பகிர்ந்து நன்றி கூறுங்கள். ஆனால் முதலில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்; இவ்வாறு உங்கள் பலி தூய்மையானதாகும்” (14 : 1)

எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டுமானாலும் ‘தயாரிப்பு’ தேவை. திருப்பலியில் பங்குபெற தயாரிப்பு தேவைப்படுகிறது. ஆண்டவரோடு உறவுக்கொள்ள மனத்தூய்மை வேண்டும். மக்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தி அழுது, தீய வழியை விட்டகல அழைக்கப்படுவதும், அதற்கேற்ப அவர்கள் மனம்மாறி இறைவன் பக்கம் திரும்புவதும் விவிலியத்தில் பரவலாகக் காண்கின்ற நிகழ்வாகும். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன (காண் யோவே 1 : 13 ‡ 15; நீதி 10 : 10 - 15).

இறைவனோடு ஒப்புரவாக இது இன்றியமையாதத் தேவை. எனவே பலி தொடங்குமுன் சிறிது மெளனமாகயிருந்து நாம் பாவிகள் என அவர் திருமுன் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். இதுவே மனமாற்றத்துக்கு முதற்படி; மன்னிப்பு கோருவதற்கும் அடிப்படை; நட்புறவை உருவாக்கி வளர்ப்பதற்கு அடித்தளம்.

எப்பொழுது இம்மனத்துயர் சடங்கு நடைபெறவேண்டும் என்பதைப் பற்பல வழக்கங்களையும், கருத்துக்களையும் ஆராய்ந்து, திருப்பலியின் தொடக்கத்திலேயே இடம் பெறுவது நல்லது என முடிவு செய்யப்பட்டது. பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவன்பால் உள்ளத்தைத் திருப்பி, அவரோடும், அயலாரோடும் ஒப்புரவான நிலையில் இறைவார்த்தையைக் கேட்கவும், காணிக்கை செலத்தவும், திருவிருந்து அருந்தவும் இது நம்மை தகுதியுடையவராக்குகிறது.

நம்பிக்கையாளர்களை பாவங்களுக்கு மனம் வருந்த அழைத்து சிறிது மெளனத்திற்குப் பின் பாவ அறிக்கைக்க மூன்று வித பாடங்களை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வகை “எல்லாம் வல்ல இறைவனிடமும்” என்று தொடங்கும் பாவ அறிக்கையாகும். இது முடிந்தது அருள்பணியாளர் எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக என்று சொல்கிறார். இது “ஒப்புரவு அருள் அடையாளத்தில் சொல்லப்படும் வாய்ப்பாட்டுக்கு சமமானதல்ல; இந்த செபத்திற்கு ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றல் கிடையாது” (எண் 51) என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் கூறப்பட்டிருப்பது கவனிக்க வேண்டியது. எனவே மக்கள்மீது கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு இதை சொல்வது நல்லதல்ல. இது எதிர்விளைவை நாளடைவில் கொண்டுவரும். இந்த செபம் மூன்று வகை பாவ அறிக்கைக்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வகை பாவ அறிக்கை மிகச் சுருக்கமானது.

அ. ப : ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பதில் : ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ. ப : ஆண்டவரே எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில் : உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும்.
பலருக்கு இது புதிதாகத் தோன்றலாம். ஏனெனில் இதுபற்றி கேள்விப்படவில்லை. திருப்பலியில் பயன்படுத்தியதுமில்லை. அவ்வப்போது இந்த முறையையும் அருள்பணியாளர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாவது வகை பாவ அறிக்கை பின்வருவாறு :
அ. ப : உள்ளம் நொருங்கி வருந்துவோரை நலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே இரக்கமாயிரும்.
பதில் :  ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ. ப : பாவிகளை தேடிவந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் :  கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அ. ப : தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து, எங்களுக்காகப் பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

குறிப்பு: இதே போன்று மற்றும் நான்கு வகை பாவ அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கலாம். இவை இலத்தீன் மாதிரி படிவத்தில் காணப்படவில்லை. எனவே புதிதாக வெளிவர இருக்கும் திருப்பலி நூலிலும் இவை விடப்பட்டிருக்கும்.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ (Kyrie):

“பாவத்துயர்ச் சடங்கில் ஏற்கனவே இடம் பெறாவிடில், “ஆண்டவரே, இரக்கமாயிரும்” என்னும் இறைவேண்டல் இப்பொழுது சொல்லப்படும்” (திருப்பலி நூல் எண் 7).

‘ஏற்கனவே இடம் பெறாவிடில்’ என்பது முதல், இரண்டாவது வகை பாவ அறிக்கைகளைக் குறிக்கின்றது. எனவே அருள்பணியாளர் பாவ மன்னிப்பு செபத்தைச் சொல்லிய பின் இதைச் சொல்ல வேண்டும்.

ஒருசில அருள்பணியாளர் பாவ அறிக்கைக்குப் பின் மன்னிப்பு மன்றாட்டு சொன்னபின் ஏன் மீண்டும் ஆண்டவரின் இரக்கத்தை கேட்கவேண்டும் என்று கேட்பதோடில்லாமல் இதைவிட்டு விடவும் செய்கிறார்கள். இது சரியல்ல.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ என்னும் பாடல் இரு வகையாக திருப்பலியில் இடம் பெறுகிறது. ஒன்று மனம் மாற்ற முயற்சியின் இறுதியில் அதன் மலர்ச்சியாக இப்பாடல் எழலாம்; அல்லது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே அதை அமைத்துக் கொள்ளலாம். இங்கு இது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே இடம் பெறுகிறது.

மேலும் இது இறைவனின் இரக்கத்தைக் கோரும் மன்றாட்டு மட்டுமல்ல, அவரைப் போற்றலும் ஆர்ப்பரித்தலுமாகும். முற்காலத்தில் திருப்பலியின் தொடக்கத்திலிருந்த  தொடர் பிரார்த்தனையின் தொடக்கமே இது. இதுபற்றி திருப்பலி நூலின் பொது படிப்பினை சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. “இப்பாடல் இறைவனைப் புகழ்வதாகவும் அவருடைய இரக்கத்தை இறைஞ்சி மன்றாடுவதாகவும் இருப்பதால், இது வழக்கமாக எல்லாராலும் பாடப்படும்” (எண் 52). இறைவனைப் புகழ்வது என்றமுறையில் இது வானவர் கீதத்துக்கு முன்னோடியாகவும் அமைந்திருக்கிறது எனலாம்.

முடிவுரை:

மனத்துயர் முயற்சியின் பயனாக அற்ப பாவங்கள் மற்றும் குறைபாடுகள் (imperfections) நீங்குகின்றன;  உள்ளம் இறைவழிபாட்டிற்குப் பக்குவமடைகிறது. கூடியிருக்கும் நம்பிக்கையாளர் அனைவரோடும் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றித்து திருப்பலியை ஒப்புக் கொடுக்க தயாராகிறார்கள். 
(தொடரும்).

Ads Inside Post