Pages - Menu

Monday 30 November 2015

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
அருள்தந்தை. சி. குழந்தை, காணியிருப்பு
 06/12/2015
பாரூக் 5 : 1 - 9
பிலிப் 1 : 4 - 6, 8 -11
லூக் 3 : 1 - 6
மனமாற்றம்

சீசர் பேரரசரின் பேராட்சியில், பிலாத்து, ஏரோது பிலிப்பு, அன்னா, கயபா போன்றவர்கள் வரலாற்றில் வைக்கப்பட்டனர். தடம் பதித்தார்கள் என்பதை விட தடம் புரண்டார்கள் என்பதாலேயே வரலாற்றில் செருகப் பெற்றனர். இந்தப் பின்னணியில்தான் பாலைவனக்குரல் திருமுழுக்கு யோவானைப் பதிவு செய்து பெருமிதம் கொண்டார் புனித லூக்கா. முன்னவர்களின் ஆட்சி ஆடம்பரத்திலும், அதிகாரத்திலும், புற அழகிலும் அகந்தையிலும் வேரூன்றியது. எனவேதான் அவர்களின் குரல் ஒலிக்கவில்லை. பதிவு செய்யப்படவில்லை. எடுபடவில்லை. ஏற்கப்படவில்லை. மாறாக யோவானின் வாழ்வு எளிமையிலும் ஏழ்மையிலும் ஊறிப்போனது. வலிமையும் வல்லமையும் படைத்தது. எனவேதான் இவருடைய  குரல் ஓங்கி ஒலித்தது என்று லூக்கா யோவானை உயரத்தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார். இது லூக்காவின் இணையயாப்பு முறை ஆகும். யோவானுடன் இயேசுவை ஒப்பிடும்போது இயேசுவை வானுயரத் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார்.

பாலைவனக் குரலை, எசாயா, வரலாற்றில் முன்மொழிந்தும் பேசியிருக்கிறார். (எசாயா 40 : 3 - 5). அந்தக்குரல் ஒலித்தது என்ன? பாவ மன்னிப்பு பெற மனமாறித் திருமுழுக்குப் பெறுங்கள் (லூக் 3 : 3) என்பதாகும்.திருமுழுக்குப் பெற்றவர்கள் இயேசுவின் இரண்டாவது வருகைக்குத் தயாராக அறிவிலும், அன்பிலும், நீதியிலும், நேர்மையிலும் வாழ்ந்து வளரக் கடமைப்பட்டவர்கள் என்று இரண்டாவது வாசகத்தில் பவுலடியார் உணர்த்துகிறார்.(பிலிப் 1 : 8 - 11).

ஓர் அரசனுக்கு இரு புதல்வர்கள். மூத்தவன் ஆடம்பரப் பிரியன். அதிகார யோகினி. பிறரை அடக்கி ஆளுவதிலே அலாதி இன்பம் அடைபவன். இளையவன் மூத்தவனின் குணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவன். நல்லவன். நிதானம் கொண்டவன். அரசன் இருவரையும் அழைத்து என் ஆட்சி உங்களில் யாருக்கு உரியது? என்று வினவினான். முதலவன், செல்வேன் எத்திக்கும், செவ்வானம் வரை வெல்வேன், வேறு பல நாடுகளை சமர்ப்பிப்பேன் வெற்றிகளை உம் பாதம். நிலைக்கும் உம் புகழ். மலைக்கும் வரலாறு. வல்லவன் நான். எனவே ஆட்சி எனக்கே உரியது என்று சூளுரைத்தான். இளையவன், பிறரைக் கொல்ல என்னால் இயலாது. ஆனால் பிறர் மனங்களை வெல்ல இயலும். நல்லவன் நான். ஆனால் நாடு எனக்கு வேண்டாம். அண்ணனுக்கே அளியுங்கள் என்று அடக்கமாகப் பேசி, அவர் முதுகிலே தட்டிக் கொடுத்து அமர்ந்தான்.

அடுத்த நாள் எனது முடிவை அறிவிப்பேன் என்று இயம்பி அரசர் ஆலயம் நுழைந்தார், ஆண்டவரின் குரல் கேட்க, மறுநாள் இருவரையும் அழைத்து வல்லவர்கள் நாடு பிடிப்பார்கள். நல்லவர்கள் நாடு படைப்பார்கள் என்று சொல்லி ஆட்சியுரிமை இளையவனுக்கே. அண்ணன் அருகிலிருந்து தம்பிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது அரசாணை என்று அறிவித்தார்.



இன்றைய நற்செய்தியின் படிப்பினையும் இதுதான். சமத்துவ சமூகம் சமைத்திட வேண்டும். ஆணவமும் அகந்தையும் அழிந்திட வேண்டும். வானவன் வருகை ஒளிர்ந்திட வேண்டும். அது நம்வாழ்வில் இணைந்திட வேண்டும். இத்தகைய வாழ்வில் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாடுவோமா? முதல் வருகையின் போதனைகளை வாழ்ந்து காட்டி இயேசுவின் இரண்டாவது வருகையை எதிர்கொள்வோமா?

No comments:

Post a Comment

Ads Inside Post