Pages - Menu

Wednesday 11 November 2015

இறை இரக்கத்தின் ஆண்டில்

திருத்தந்தை அவர்கள் இறை இரக்கத்தின் ஆண்டில் கடைபிடிக்கூடிய செயல்பாடுகளாகக் கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் குறித்து காட்டுகிறார்.

1. மன்னிப்பின் மாண்பாளராக வாழ்தல் :
    விண்ணகத் தந்தையின் மன்னிக்கும் பண்பினை கத்தோலிக்கச் சமூகம் தனதாக்கிக் கொண்டு மன்னிப்பினை வழங்கி மன்னிப்பினைப் பெற்று வாழ்தல் வேண்டும்.

2. கருக்கலைப்பு புரிந்தோருக்கான பாவ மன்னிப்பு :
    கருக்கலைப்பு செய்திட்ட பெண்கள் மனதுருகிக் கண்ணீரோடு பாவ அறிக்கை செய்திட்டால் இவர்களுக்கு அருள் பணியாளர்களே பாவ மன்னிப்பு வழங்கலாம். முன்பு இப்படிப்பட்டவருக்கு மன்னிப்பினை அளிக்கும் உரிமை மறைமாவட்ட ஆயர்களுக்கே உரியதாயிருந்தது.

3. புனித பத்தாம் பத்திநாதர் சபைக் குருக்களுக்கான அங்கீகாரம் :
    இரண்டாம் வத்திக்கான் சங்கம் கொணர்ந்த மறுமலர்ச்சிக் கொள்ளைகளை ஏற்றுக் கொள்ளாது பழைமைவாதிகளாகப் பேராயர் லெபேபர் அவர்களின் தலைமையில் திருத்தந்தை  புனித பத்தாம் பத்திநாதரின் துறவற சபை செயல்பட்டு வருகிறது. இதில்; இணைந்து செயல்படும் அருள்பணியாளர்கள் மன்னிக்கப்பட்டு தாய் திருச்சபையில் இணைந்ததாகக் கொள்ளப்படுவர்.

4. இறை இரக்கத்தின் திருத்தூதர்கள் :
    நற்செய்திப் பணியினுக்கு மன்னிக்கும் பண்பே திறவுகோல். எனவே மன்னிக்கும் பண்பு கொண்டோரை உள்ளடக்கிய இறை இரக்கத்தின் திருத்தூதர்கள் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும். இந்தக் குழுவில் இணைந்து செயல்படும் அருள் பணியாளர்களுக்கு கருக்கலைப்பு புரிந்தோர் மற்றும் பாவ வாழ்வில் உழல்வோரின் பாவங்களை மன்னிக்கும் சிறப்பு அதிகாரம் மறைமாவட்ட ஆயரால் அளிக்கப்படும்.

5. உடல் சார்ந்த இரக்கச் செயல்கள் :
    பசியோடிருப்போருக்கு உணவளித்தல், தாகமுற்றோரின் தாகம் தணித்தல், ஆடையற்றோருக்கு ஆடை வழங்குதல், அந்நியரை வரவேற்றல், நோயுற்றோரை நலம் பெற செய்தல், சிறையிலிருப்போரைச் சந்தித்தல் மற்றும் இறந்தோரை அடக்கம் செய்தல்.

6. ஆன்மீக இரக்கச் செயல்கள் :
    சந்தேகமுற்றோருக்கு ஆலோசனை வழங்குதல், அறியாமையில் இருப்போருக்கு கற்பித்தல், பாவிகள் மனந்திரும்ப ஊக்குவித்தல், துன்பத்தில் உழல்வோருக்கு உதவுதல், தவறிழைப்போரின் பாவங்களை மன்னித்தல், தீமை புரிவோருக்காகப் பொறுமையுடன் செபித்தல், வாழ்வோர் மற்றும் இறந்தோருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுதல்.

7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு :
    சுற்றுச்சூழல் பாதுகாப்பினால் ஏற்படும் தீமைகளை களைந்திட முயற்சிகளை மேற்கொள்ளுதல், சாத்தானின் எச்சம் தான் முதலாளித்துவக் கோட்பாடு. இதனால் விளையும் புவி வெப்ப மயமாதல் அறவே தவிர்க்கப்படல் வேண்டும்.

8. ஏழையர் மற்றும் உதவியற்றோருக்குத் தஞ்சம் :
    சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட ஏழையர், அனாதைகள் மற்றும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்து இறைவனின் இரக்கத்தினையும், கருணையினையும் உணர்ந்திடச் செய்தல் வேண்டும்.

இறை இரக்கத்தின் திருத்தூதர்
புனித பாஸ்டினா கோவல்ஸ்கா
(25, ஆகஸ்ட் 1905 ‡ 5 அக் 1938)
    போலந்து நாட்டின் குளோகோலிக் என்னும் கிராமத்தில் தனது பெற்றோரின் 10 குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் யஹலினா கோவல்ஸ்கா. இவர் வார்சா நகரில் உள்ள இரக்கத்தின் அன்னை துறவற சபையில் தன்னை இணைத்து, இறைவனின் இரக்கத்தில் நம்பிக்கை கொண்டு துறவு வாழ்வு வாழ்ந்தார். யஹலினா என்னும் இவரின் இயற்பெயர், பேறுபெற்றவர் என்னும் பொருள் கொண்ட பாஸ்டினா என்ற பெயரோடு 30.04.1926 அன்று துறவற ஆடை பெற்றார்.
    தனது கடின செப, தப வாழ்வினால் இயேசுவின் இரக்கப்பெருக்கினை பலமுறை காட்சிகளில் கண்டார். அக்காட்சிகளில் இறைவன் தந்த செய்திகளைத் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். இவரின் ஆன்மீக குரு அருள்திரு. மைக்கின் சொபோக்கோ என்பவரின் ஆலோசனைப்படி அருள்சகோதரி பாஸ்டினா காட்சியில் கண்ட இயேசுவின் திருஉருவம் வரையப்பட்டது. நமதாண்டவரின் திரு இதயத்திலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிப்பட்ட அந்த ஓவியத்தின் கீழ் இறைக்கட்டளைப்படி இயேசுவே உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன் என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
    1937ஆம் ஆண்டு கிராக்கோ நகரில் இறை இரக்கத்தின் ஆண்டவர் ஆலயம் எழுப்பப்பட்டு இதே திருத்தலத்தில் அருள் சகோதரி பாஸ்டினாவின் உடல் 1955ஆம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்தத் திருத்தலப் பேராலயத்திலிருந்துதான் இறை இரக்கத்தின் ஊற்று வழிந்தோடி உலகெங்கும் பாய்ந்தோடி இறைமக்களின் வாழ்வினை வளப்படுத்தி வருகின்றது.
    திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உயிர்ப்புக் காலத்தின் இரண்டாம் ஞாயிற்றக் கிழமையினை இறை இரக்க ஞாயிறு எனப் பறைசாற்றினார். இறைவனின் இரக்கத்தினை உலகிற்கு அருள்சகோதரி பாஸ்டினா அவர்களால் இறை இரக்கத்தின் திருத்தூதர் எனப் பெயரிட்டு 18.04.1993 அன்று இவரை அருளாளர் நிலையினுக்கு உயர்த்தினார். மூவாயிரமாண்டின் முதல் புனிதையாக 30.04.2000 அன்று திருத்தந்தை ஜான்பால் இந்த அருள்சகோதரியைப் புனிதை என்னும் பட்டமளித்து பெருமைப்படுத்தினார்.
    1978லிருந்து 2005 வரை 27 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை ஜான்பால் இறை இரக்கப் பக்தியை உலகெங்கும் பரப்பினார்கள். இன்றைய உலகுக்குத் தேவை இரக்கம் நிறைந்த மனங்கள். இறை இரக்கத்தின் ஆற்றல் உலகை நிரப்பி மக்கள் மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் வாழ்ந்திட எதிர்வரும் இறை இரக்கத்தின் ஆண்டு அருள்புரியட்டும்.

- அருள்பணி.அ. பிரான்சிஸ்,  பாபநாசம்

No comments:

Post a Comment

Ads Inside Post