Pages - Menu

Wednesday 11 November 2015

புனித அவிலா தெரசம்மாள்

    3 ஆண்டுகளுக்குப் பின் நம் அன்னை தெரசாள் மீண்டும் மடம் நிறுவ செகோவியாவிற்கு அருள்திரு ஜீலியன் சுவாமிகளுடனும், புனித சிலுவை அருளப்பருடனும் ஒரே ஒரு சகோதரியை மட்டும் அழைத்துச் சென்றாள். அவர்களுடன் அன்டோனியோ கேடன் என்பவரும் சென்றார். இவர் தன் மனைவி இறந்த பிறகு பிள்ளைகளை செவிலித்தாயிடம் ஒப்படைத்துவிட்டு நம் அன்னை தெரசாளின் புதிய மடங்களை நிறுவும் பணியில், தான் அவர்களுக்கு உதவி செய்வதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டி நிற்க, அன்னையும் அவரை ஒரு முக்கிய காரணத்திற்காக செகோவியா மடத்தை நிறுவ அழைத்துச் சென்றாள். பாஸ்ட்ரானா மடத்தில் இளவரசி ஆண்மென்டோன்ஸாவின் கொடுமைகளுக்கும், சீற்றத்திற்கும் பலியாகி தவித்த மாசற்ற தன் வெண் புறாக்களை செகோவியா மடத்திற்குக் கடத்தி வருவதே அன்டோனியோ கேடனுக்கிடப்பட்ட வேலை.
    பாஸ்ட்ரானாவில் இளவரசன் இறந்ததும், இளவரசி தன் பரிவாரங்களோடு மடத்திற்கு வந்து, தானே சபையுடை அணிந்து கொண்டு ஒழுங்குக்கு விரோதமாக உல்லாச வாழ்க்கை வாழ விரும்பினாள். ஏனெனில் இவள் தரும் நன்கொடைகளைக் கொண்டு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அடைப்பு ஒழுங்கை மீறி வெளியே செல்வது. தன் விருப்பம்போல் வெளிமனிதரோடு தொடர்பு கொள்வது போன்ற அத்துமீறிய செயல்களால் தன் ஊழியக்காரிகளை நவகன்னிகைகளாக ஏற்றுக் கொள்ள இல்லத் தலைவி அவளிடம், இந்த எளிய மடம் உம்மைக் கொண்டிருப்பது மதிப்புக்குரிய ஒன்று என்பது உண்மைதான். ஆயினும் இளவரசி தன் மாளிகையில் வாழ்வதே சிறந்ததாகும் என்று சாதுரியமாகவும், அதே சமயத்தில் உறுதியாகவும் கூறினாள். அரசன் 2ஆம் பிலிப்பும் அவளைத் தன் மாளிகைக்குச் செல்லுமாறு கட்டளையிட, சீற்றத்துடன் அவள் அரண்மனைக்குத் திரும்பி வந்தாள். மடத்திலுள்ள 14 கன்னியர்களையும் துன்பத்திற்கு உள்ளாக்குவேன் என்று சபதம் கூறி, அவர்களுக்குத் தான் கொடுத்த பண உதவியை நிறுத்திவிடவே, சகோதரிகள் மிகவும் துன்புற்றனர். பாச உணர்வும், இரக்கமும் நம் அன்னையைத் தூண்ட, அருள்திரு ஜீலியன் சுவாமிகளையும், அன்டோனியோ கேடன் என்பவரையும் அங்கு உடனே அனுப்பி வைத்தாள். அவர்களிருவரும் சகோதரிகளை இரவோடு இரவாக கிராமத்திற்கு வெளியே அழைத்து வந்து, முன்கூட்டியே தாங்கள் ஏற்பாடு செய்திருந்த வண்டிகளில் நீண்ட பிரயாணத்திற்குப் பின் அவர்கள் 7 நாட்கள் கடந்து செகோவியாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.
    தன் மக்களைக் கண்டதும் நம் அன்னை தெரசாள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அறிவுத் திறமையும், விவேகமும், மிகுந்த துணிவும் கொண்ட பாஸ்டரானா மடத்து தலைவியான இஸபெல்லா சகோதரியை அன்னை செகோவியா மடத்திற்கு தலைவியாக நியமித்தாள். நம் அன்னையை எப்படி பழிவாங்கலாம் என்று பாஸ்ட்ரானாவில் இளவரசி சதித்திட்டம் தீட்டியபொழுது, அன்னை செகோவியாவில் தே தேயும் பாடி ஒவ்வொரு அறையாகச் சென்று கதவைத் திறந்து புதுமடத் திறப்பு விழா நடத்தி, தன் வெண் புறாக்களோடு மகிழ்ந்திருந்தாள். இனி கிறிஸ்துவைத் தவிர இம்மடத்தை வேறெதுவும் ஆட்சி செய்யக்கூடாது என்று சொல்லி அதன் நினைவாக ஓர் சிறு பீடத்தையும் அமைத்து அலங்கரித்தாள்.
வழிகாட்டும் விண்மீன்கள் :
    அன்னை அவிலாவிற்குத் திரும்பியதும் பீஸ் என்னுமிடத்தில் மடம் நிறுவ வழக்கம்போல் அருள்திரு ஜீலியன் சுவாமிகளையும், 8 சகோதரிகளையும் அழைத்துச் சென்றாள். மலைத்தொடர்கள், செங்குத்தான பள்ளத்தாக்குகள் நிரம்பிய பகுதிகளிலும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. வண்டியோட்டிகள் பாதை தெரியாமல் தவிப்பதைப் பார்த்த அன்னை தன் மக்களிடம் நம் ஆண்டவரையும், புனித சூசையப்பரையும் நமக்கு வழிகாட்டும்படி செபியுங்கள் என்றாள். உடனே வெகு ஆழமான பள்ளத்தாக்கினின்று “நீங்கள் இந்த வழியாக வந்தால் செங்குத்தான பாறைகளிலும், மலைகளிலும் மோதி சாக நேரிடும். வண்டி கவிழ்ந்து விடும். ஆகவே முன்னேறி வரவேண்டாம்” என்று ஒரு குரல் சொன்னது. இதைக் கேட்ட வண்டியோட்டிகள் பின் எப்படிச் செல்வது? எனக் கேட்க அதற்கு அக்குரல், பின்னால் மெதுவாக போய் 100 சக்கர சுழற்சிக்குப் பின் சரியான பாதையைக் கண்டுபிடித்தனர். ஒரு வேலைக்காரப் பையன் குரல் வந்த திசை நோக்கி நீண்டதூரம் சென்றும் யாரையும் காணவில்லை என்றான். உடனே அன்னை தன் மக்களிடம் இது புனித வளனார் நம் மன்றாட்டுகளுக்கு அளித்த பதிலே என்றாள். குவாடல்குவீர் என்ற நதியைக் கடந்து சென்று அக்கரை சேர்ந்தார்களாம். அங்கு பீஸ் குடிமக்களும், சிறியோரும், பெரியோரும் கைகளில் சிலுவையேந்தி பவனியாக சகோதரிகளை அழைத்துச் சென்றார்கள். பீஸில் தான் நம் அன்னை சங்.எரோணிமூஸ் கிராசியன் சுவாமிகளை முதன்முதல் சந்தித்தார்கள். அவரும் சீர்த்திருத்தப்பட்ட சபையில் சேர்ந்து கடின செப தவ வாழ்வைப் பின்பற்ற விரும்பினார். அன்னையும் அவர்மீது நல்லெண்ணம் கொண்டு சீர்த்திருத்தப்பட்ட சபை முழுவதற்கும் தலைவராக ஏற்படுத்த பெருமுயற்சி செய்தாள். இந்நிலையில், தளர்த்தப்பட்ட சபையினர் புனித சிலுவை அருளப்பரை பலாத்காரமாக கடத்திச் சென்று பல துன்பங்களுக்கு உள்ளாக்கினர். எரோணிமூஸ் கிராசியனும் பல இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகினார். நாட்டுத் தலைவர்கள் இதற்கெல்லாம் காரணமான அன்னையை நாடு கடத்தவும் முயற்சி செய்தனர். இதையயல்லாம் கேள்வியுற்ற அன்னை மனவேதனையால் நொறுங்குண்டவளாய் ஒருநாள் சாப்பிடவும் மறுத்து அமர்ந்திருக்கும்பொழுது, நம் ஆண்டவர் அங்குத் தோன்றி அவளது கைத்துண்டை தாமே விரித்து ரொட்டியைப்பிட்டு அவளது வாயில் ஊட்டினாராம். மேலும், இதோ  மகளே அஞ்சாதே, நீ படும் துன்பங்களை நான் அறிவேன். தைரியமாயிரு. இதெல்லாம் ஒன்றுமில்லாமல் மறைந்து போகும் என ஆறுதல் கூறினார். இதை நம் சகோதரி அன்னா பர்த்தலோமேயு அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்களாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post