Pages - Menu

Friday 30 September 2016

ஆன்ம ஆரோக்கியம் நல்கிடும் அக்டோபர் மாதம்

ஆன்ம ஆரோக்கியம் நல்கிடும் அக்டோபர் மாதம்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அக்டோபர் மாதம் கோடையின் வெப்பம் தணிந்து இளங்குளிர் பொழிந்து உடலையும், மனதையும் உவப்புள்ளதாக்கும் மாதமாகும். நலம் தானா? நலம் தானா? உடலும், உள்ளமும் நலம் தானா? இந்த வரிகள் நலம் என்பது உடல், மனம் இரண்டையும் ஒன்றாக இணைக்கின்றன. நலம் என்பது தீமை கலவாத அல்லது நோய், நொடியில்லாத நிலை. இந்நிலையே ஆரோக்கியம் எனப்படுகின்றது.

ஆரோக்கியம், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதன் முழு அர்த்தத்தினை வெளிப்படுத்தும் வார்த்தை. ஆராக்கியம் அல்லது நலம் நிறை வாழ்வு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பன்முக பரிமாணங்களைக் கொண்டு விளங்குகின்றது. அவை முறையே :

1.சமூக நலன்
2.உணர்வு நலன்
3.ஆன்மீக நலன்
4.சுற்றுச்சூழல் நலன்
5.தொழில் அல்லது கடமை நலன்
6.அறிவுசார் நலன்
7.உடல் நலன்

மேற்கூறப்பட்ட ஏழு பரிமாணங்களும் ஒன்றாக இணைந்து எவ்வித தொய்வுமின்றி செயல்படுகின்ற சமூகத்தில் வாழும் மனிதரே முழுமையாக ஆரோக்கிய வாழ்வு வாழ்பவராவார். எதிர்வரும் மாதங்களில் மேற்கூறப்பட்ட நலன்களை விளக்கியே எனது கட்டுரைகள் வெளியாகும். இந்த அக்டோபர் மாதத்தில் ஆன்ம நலன் பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறேன்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவர் சார்ந்திருக்கும் சமயம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அவரின் சமயக் கொள்கைகள், பழக்கங்கள் அவரின் ஆன்மீக வாழ்வுக்கு அடித்தளமாயமைகின்றன. எனவே உடல் நோயினால் நலிவுற்றிருக்கும் வேளையில் நோயாளியின் ஆன்மீகப் பயிற்சிகள் இறை நம்பிக்கையினையும் குணப்படுத்தும் ஆற்றலையும் வழங்குகின்றன.

புகழ்பெற்ற உளவியலார் விக்டர் ப்ராங்கிள், ‘மனிதர் துன்பத்தினால் அழிக்கப் படுவதில்லை. மாறாக, துன்பத்தின் அர்த்தம் புரியாததனாலேயே அழிகின்றார்’ என்கின்றார். இந்த நிலையில் நோயாளியின் சமய நம்பிக்கை அவரின் துன்பத்திற்கு அர்த்தத்தை மட்டுமல்ல, இது பற்றிய கவலையையும் குறைக்கின்றது. துன்பத்தினை தாங்கும் மனப் பலத்தையும், நேர்மறையான சிந்தனையினையும் வளர்த்து இறை நம்பிக்கை மூலம் முழு சுகத்தையும் அளிக்கின்றது.

உடல் அழிவுக்குட்பட்டது. ஆன்மா அழிவில்லாதது. அழிவற்ற ஆன்மா தூய்மையில் நிலைத்திருக்கும்போது முழு ஆன்மீக நலன் பெற்றதாகத் திகழ்கின்றது.

அன்னை தெரசாவின் ஆன்மீகநலன் : 

நாம் வாழும் நாட்களில் வாழ்வது இயேசுவான இயேசுவின் அன்புக்குச் சான்று பகர்ந்து மரித்திட்ட அன்னை தெரசா ஆன்மீக வளமையோடு வாழ்த்திட்டார். எனவேதான் இவரது வாழ்க்கையில் எதிர்பட்ட துன்பங்கள், வேதனைகள் அனைத்தும் இவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 
‘அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே’
என்ற தாயுமானவரின் வாக்கு அன்னை தெரசாவின் வாழ்வானது. எனவேதான் இந்த அன்னை 
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்’ 
என்ற திருக்குறளின் வைர வரிகளுக்கு அர்த்தம் தந்து விட்டார்.

சொக்கத் தங்கம் : 

ஆன்மீக நலன் மிகுந்தோர் புடம்போட்ட சொக்கத் தங்கத்தைப் போன்றவர்களாயிருப்பர்.
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிழும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
என்னும் பொய்யாமொழிப் புலவரின் அருளாயுதம் ஆன்மீக நலன் மிகுந்தோரிடம் நிதர்சனமாகிடும்.

ஆன்மீக நலன் நிறைந்திட :

நிகழாண்டு செப்டம்பர் 04ஆம் நாள் புனிதர் நிலையினுக்கு உயர்த்தப் பெற்ற அன்னை தெரசாவின் நற்செய்தி வாழ்வே நமது மேல்வரிச் சட்டமாகட்டும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”....
என்ற வள்ளுவர் வாய்மொழி காட்டும் வழிகாட்டு நெறியில் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி அனைத்தையும் விட்டு விட்டு (லூக் 5 : 28) இயேசுவின் பின்சென்றது போல் நாமும் அனைத்தையும் விட்டுவிடல் வேண்டும். எதற்காக? கடவுளின் வார்த்தையைக் கற்பிப்பதை விட்டு விடாது (தி ப 6 : 2) இருப்பதற்காக.
ஆன்மீக நலனிற்கு செல்லும் வழி எது தெரியுமா? இயேசுகிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகின்றேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் (பிலி 3 : 8) என்ற பவுல் அடிகளாரைப் போன்றே ஆன்மீக நலனில் சிறக்க விரும்புவோர் செயல்பட வேண்டும்.

தனி மனித வாழ்வினுக்கு ஆதாயமாய் இருப்பவையனைத்தும் இழப்பே (பிலி 3 : 7). ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16 : 26).

இந்த அக்டோபர் மாதம் புனித டோமினிக் வழியாக அன்னை மரியா தந்திட்ட இறையருள் பொழியும் செபமாலையின் மறையுண்மைகளை அதிகம் செபிக்கும் நாட்களாகும். செபமாலை இறைவனின் அருளினை நிறைவாகப் பெற்று ஆன்மீக நலனில் நிறைந்திடச் செய்யும் ஓர் உன்னத அருள்மாலை. இயேசுவின் வாழ்வோடு நமது வாழ்வுப் பயணத்தின் தடுமாற்றங்களையும், தடைகளையும் ஒன்றிணைத்து இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்போம்.

இறுதியாக ....

ஆன்மீக நலனுக்கு வலுவூட்டிட
அ. பாவம் செய்து கடவுளின் மேன்மையினை இழந்து விடக்கூடாது. (உரோ 3 : 23).
ஆ. இறைவனை அறிந்து கொள்ளும் தகுதியை இழந்து விடக்கூடாது (உரோ 1 : 28).
இ. எதிர் நோக்கினை இழந்து விடக்கூடாது (கொலோ 1 : 23).
ஈ. கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும், தூய்மையையும் இழந்து விடக்கூடாது (2 கொரி 11 : 3)
உ. எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவுடன் உறவையும், அருளையும் இழந்து விடக்கூடாது (கலா 5 : 9).

No comments:

Post a Comment

Ads Inside Post