Pages - Menu

Friday 30 September 2016

பொதுக்காலம் 29ஆம் வாரம்

பொதுக்காலம் 29ஆம் வாரம்                            16 - 10 - 2016

விப 17 : 8 - 13;   2 திமொ 3 : 14 - 4 : 2;                    லூக் 18 : 1 - 8

செபத்தின் அனுபவத்தை அழகாக சித்தரித்து பாடுகிறார் வள்ளலார். 
நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து 
நெகிழ்ந்து நெகிழ்ந்து - அன்பே 
நிறைந்து நிறைந்து 
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு 
நனைந்து நனைந்து 
அருளமுதே நன்றதியே
 ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து 
ஏத்துதும் நாம் வம்மின் 
உலகியயீர் மரணமில்லாப்; பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் - திரு அருட்பா 5576.

செபம் என்பது ‘ஓர் ஆன்மாவின் உள்ளாந்திர ஏக்கம்’ என்கிறார் மகாத்மா காந்தி. 
உள்ளத்தினை, உறுதிபடுத்தும், உள்ளத்தினை திருத்தியமைக்கும். உள்ளத்திறகு உள்ளொளி கொடுக்கும் உள்ளாந்திர அனுபவம். இயேசுவின் வாழ்வில் இந்த செப அனுபவம் தனி இடம் பெற்றிருக்கிறது. தன் சீடர்களும் இந்த வல்லமையுள்ள அனுபவத்துடன் வாழ அவர்களை பயிற்றுவித்தார்.

முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்னால் இயேசு செபிக்கிறார். ஒவ்வொரு நாளும் பணிகள் முடிந்ததும் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று செபித்திருக்கிறார். இயேசு உருமாற்றம் அடைந்தபோது, அவர் ‘வேண்டிக் கொண்டிருந்த போது, அவரது முகத் தோற்றம் மாறியது’ (லூக் 9 : 29) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், மனந்தளராமல், எப்போதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு ஓர் உவமையைக் கூறுகிறார். அநீதியான நீதிபதி கைம்பெண் ஒருவரின் விடாத வேண்டுதலால்நீதி வழங்கினார். தாம் தேர்ந்து கொண்டவர்களின் கூக்குரலை எவ்வாறு இறைவன் கேடகாமல் விட்டுவிடுவார்? என்று இறைவனுடன் பாசமுடனான உறவு கொண்டு வாழவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

இன்றைய முதல் வாசத்தில், இரண்டு காட்சிகள். ஒன்று அமலேக்கியருடன் இரபிதியில் யோசுவா போர் செய்கிறார். மோசே குன்றின் மேல் கைகளை உயர்த்தி கடவுளிடம் மன்றாடுகிறார். மோசே கையை உயர்த்தும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றி பெற்றனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

‘செபம் என்பது கடவுளை மாற்றும் ஒரு வித்தையல்ல. மாறாக நம்மை மாற்றும் உள்ளாந்திர உறவு’ என்கிறார். கிர்க்கேகார் என்ற தத்துவ அறிஞர்.

‘இறைவன் என் இதயத்தை உடைக்கட்டும். இதனால் உலகம் அனைத்தும் என்னால் நலம் பெறட்டும்’ என்கிறார் அன்னை தெரசா.
‘எளிதான வாழ்விற்காக மன்றாட வேண்டாம். சுமையான வாழ்வை சுமக்கின்ற வலிமைக்காக செபிக்க வேண்டும்’ என்கிறார் புரூஸ்லீ.
செபத்தில், அமர்ந்து விட்டு வெளியே வரும்போது மனதில் ஓர் அமைதியை உணரலாம். ஒரு புதிய ஒளிகிடைப்பதையும் காணமுடியும். சிக்கல்களுக்கு ஒரு விடிவு வழியையும் தெரிந்துக் கொள்ள முடியும். 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
       மனக்கவலை மாற்றல் அரிது (குறள்7).

இறைவனிடம் இணைந்திருக்கும் போதுதான் மனக்கவலைகள் மறையும் என்கிறார் வள்ளுவர். அன்னை தெரசா இல்லங்களில் 24 மணி நேரமும் தொடர் செப நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொலைக்காட்சியின் கற்பனைத் தொடர்களில் நேரங்களை செலவிடும் நம் மக்கள் செபத்தின் பயனை உணராத நிலையினைப் பார்க்கிறோம். திருஅவை பலவகையான செப நிகழ்வுகளை நமக்கு அமைத்துத் தந்திருக்கிறது. செப அனுபவத்தைத் உள்வாங்குவோம், உள் ஒளியில் வளர்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post