Pages - Menu

Friday 30 September 2016

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

ஞாயிறு தரும் இறைவார்த்தை

பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

அப 1 : 2 - 3; 2 - 4; 2 திமொ 1 : 6 - 8, 13 - 14; லூக் 17 : 5 - 10

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை  (குறள் 439)

தற்புகழ்ச்சி தேவையற்றது என்கிறார் வள்ளுவர் ;ஆனால் தற்புகழ்ச்சி, மனிதரிடத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பசியை போன்றது. தன்னால் ஆனது, என்னால் மட்டும் ஆனது. எனவே நான் மற்றவரைவிட சிறப்புக்குரியவர். மற்றவரை தன் ஆட்சியில் வைத்திருக்கும் வல்லமை உடையவன் என்ற எண்ணம் நம்மில் ஒவ்வொருவரிடமும் புதைந்திருக்கிறது.  இதனை மாற்றி, இறைதுணையாலும், மற்றவர் துணையாலும் தான் எதனையும் சாதிக்க முடிகிறது என்பது தெய்வீகப்பண்பு, இயேசு, இறைவனாயிருந்தும் அடிமையின் உருவெடுத்து நமக்கு மீட்பு அளித்தார் என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

ஓர் ஆயர் கூறுவார், குருத்துவம், ஆயர்பணி கடவுள் எனக்குப் போட்ட பிச்சை என்பார். நம் ஆற்றலுக்கு உயிர் கொடுப்பவர் இறைவன். இதனை உணர்ந்தால் நம் ஆற்றல் இரட்டிப்பாகும்.
இன்றைய நற்செய்திப் பகுதி, இயேசு எருசலேமை நோக்கி செல்கின்ற பயணத்தின் போது நடைபெறும் நிகழ்ச்சியை குறிப்பிடுகிறது. இப்பயணத்தில் இயேசுவுக்கு அதிகமாக எதிர்ப்புக்கள் தோன்றுகின்றன. லூக் 17 : 1 ‡ 4இல் இயேசு மற்றவர்களுக்கு இடறல் தருவதைப் பற்றி பேசுகிறார். அப்போது சீடர்கள், எங்களின் நம்பிக்கையை உறுதியாக்கும் என்று வேண்டுகோள் வைக்கின்றனர். அச்சூழலில்தான், நம்பிக்கையின் வல்லமை பற்றியும், பணியாளர்கள் நன்றி எதிர்பார்க்காமல் தொடர்ந்து பணி செய்ய வேண்டுமென்று இயேசு அறிவுறுத்துகிறார். அரசு அலுவலர்களுக்கு அரசு ஓரளவிற்கு நல்ல ஊதியத்தைத் தருகிறது. ஆனால் அவர்களின் பணிகளை செய்த பிறகு இன்னும் அதிகமாக பரிசுகளை எதிர்பார்க்கிறார்கள்.  கடமை என்னும் செடியில் மலர்வதுதான் மகிழ்வு என்ற பூ என்கிறார் பிலிப்ஸ் புருக்ஸ். கடமையை செய்தால் தோல்வி வருவதில்லை. கடமைகளை செய்யாத போதுதான் தோல்விகள் நம்மை சந்திக்கின்றன என்கிறார் இராபர்ட் பாடன் பவல். உன் கடமையை சற்று கவனமாக செய்தால் எதிர்காலம் உன்னை கைபிடித்து நடத்தும் என்கிறார் ஆன்று கமேஜி.

வல்லபாய் படேல், ஒரு வழக்கறிஞர். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் ஒருதுண்டு கடிதத்தை அவரிடம் கொடுத்தார். படேல் கடிதத்தை படித்துவிட்டு வழக்கில் தொடர்ந்து வாதாடினார். நீதிமன்றம் முடிந்ததும், நீதிபதி படேலைக் கேட்டார். அந்த துண்டு கடிதம் என்ன? என்றார். என் மனைவி இறந்துவிட்டார் என்று தான் அந்த கடிதம் தெரிவித்தது. எனது கடமையை செய்வது முதல் வேலை என்று தான் வழக்கில் தொடர்ந்து வாதாடினேன் என்றார்.

கடமையை மடமையாகவே நம்நாட்டில் பலர் கருதுகின்றார். எனவேதான் பல விபத்துக்கள் நடக்கின்றன. நம் நாட்டின் வளர்ச்சி தடை பெறுகிறது. சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் அதன் உறுப்பினர்கள் பங்குக் கொள்வதில்லை. அரசு அலுவலகங்கள், அரசு தொழிலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள், தங்களின் கடமைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதே இல்லை. ஓர் அலுவலகத்தில் பணியாளர் ஒருமாதம் விடுப்பு எடுத்திருந்தார். ஆனால் பத்து நாட்களில் அலுவலகத்திற்கு வந்துவிட்டார். ஏன் விடுப்பினை முழுமையாக பயன்படுத்த வில்லை என்றதற்கு, வீட்டில் தூக்கமே வரமாட்டேங்குது. அலுவலகத்தில் தான் நல்ல தூக்கம் வருகிறது என்றார். இயேசு தன் தந்தை அவருக்குக் கொடுத்தப் பணியை முழுமையாக செய்ததாகக் கூறுகிறார். நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன் (யோவா 17 : 4).. யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று ஒன்று உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று (யோவா 5 : 36) கடமை உயர்வின் ஆளுமை!


No comments:

Post a Comment

Ads Inside Post