Pages - Menu

Saturday 3 September 2016

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்

- அருள்பணி. எஸ்.அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

தீர்த்தம் தெளித்தல் :

மனத்துயர் வழிபாட்டின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தம் மந்திரித்து தெளிக்கும் சடங்கு நடைபெறலாம். இச்சடங்கு இடம்பெறும்போது தண்ணீர், உப்பு இவற்றை மந்திரிக்க அவற்றிற்குரிய செபம் சொல்லப்பட வேண்டும்.

இங்கு சில குறைபாடுகள் இடம்பெற வாய்ப்பு உண்டு. முந்திய ஞாயிறு மந்திரிக்கப்பட்ட உப்பில் மீதம் இருக்கலாம். அடுத்த ஞாயிறு அதே உப்பை மந்திரிக்க கொண்டு வருவதுண்டு. இது பொருளற்றது. இது நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தீர்த்தம் மந்திரிக்க தேவையான தண்ணீர், உப்பு, தீர்த்த செம்பு முதலிவற்றைப் பலி பீடத்தின் மேல் வைக்கக்கூடாது. பீடம் பலியை ஒப்புக் கொடுக்க மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அதை ஒரு சுமைதாங்கியாகப்  பயன்படுத்தக்கூடாது. தண்ணீர், உப்பு, தீர்த்த செம்பு இவற்றை வைக்க ஒரு சிறிய மேசையைப் பயன்படுத்த வேண்டும்.

வானவர் கீதம் :

தூய ஆவியாரால் ஒன்று கூட்டப்பெற்ற திருஅவை வானவர் கீதத்தைப் பாடி இறைத்தந்தையையும், திருச்செம்மறியையும் மாட்சிப்படுத்தி இறைஞ்சி மன்றாடுகிறது. மிகவும் பழைமையானதும், வணக்கத்துக்குரியதுமான இந்தப் பாடலின் பாடத்திற்குப் பதிலாக வேறு எந்த பாடத்தையும் பயன்படுத்தக்கூடாது (பொது படிப்பினை எண் 53).

திருவருகைக்காலம், தவக்காலம் தவிர்த்து ஞாயிற்று கிழமைகள், பெருவிழாக்கள், விழாக்களிலும் இன்னும் சிறப்புக் கொண்டாட்டங்களிலும் இது பாடப்பெறும் அல்லது சொல்லப்படும். ‘சிறப்புக் கொண்டாட்டங்கள்’ பங்கின் பாதுகாவலரின் விழா, துறவற சபையை நிறுவியவரின் விழா போன்றவைகளைக் குறிக்கும். இதிலுள்ள சொற்றொடர்கள் எல்லாம் விவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

இது “வானவர் கீதம்” என்று அழைக்கப்படுகிறது. காரணம், இயேசு பாலன், பெத்லகேமில் பிறந்த இரவில், ஊரை அடுத்துத் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு வானவர் படைத் தோன்றி உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக! உலகில் நன்மனத்தோர்க்கு அமைதியும் ஆகுக என்று பாடின, அதனால் இப்பெயர்.

தந்தைக்கு மகிமை :

“அப்போது ஆவி என்னை உயரே தூக்கியது. ஆண்டவரின் மாட்சி தம் உறைவிடத்திலிருந்து எழுந்தபோது, நான் என் பின்னே மாபெரும் அதிரொலியின் ஓசையைக் கேட்டேன்” (எசே 3 : 12) என எசேக்கியல் இறைவாக்கினர் கூறியுள்ளார். இதேபோன்று “அவருடைய மகிமை வானத்தை மூடியுள்ளது”, (அபாக் 3 : 8) என்றும், “வானங்களையும்விட இம்மகிமை உயர்ந்தது” என்றும் (திபா 112 : 4), “நீர் வாழ்த்தும், மகிமையும் பெறுவீராக” என்றும் தெளிவாக இறைவனின் மகிமையை பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த மகிமையைத்தான் வானவர்கீதம் எதிர் ஒலிக்கின்றது.

நன்மனத்தோர்க்கு அமைதி :

இக்கருத்தையும் விவிலியத்தில் பரவலாகக் காணலாம். “அவருக்கு அஞ்சி நடப்போருக்கு .... நீதியும் அமைதியும் ஒன்றையயான்று அரவணைக்கும்” (தி பா 85 : 9 ‡ 11). “தீயோர்க்கு அமைதி இல்லை என்கிறார் ஆண்டவர்” (எசா 48 : 22). மெசியாவின் வருகையால் இந்த அமைதி பிறக்கிறது. “‘அவர் .... அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படுவார்”  (எசா 9 : 6). “அவரே அமைதியை அருள்வார்” (மீக் 5 : 5). “அவரது காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக .... சமாதானம் நிலவுவதாக” (தி பா 72 : 7). ஆகவே “நன்மை செய்யும் அனைவருக்குமே பெருமையும், மாண்பும், அமைதியும் கிடைக்கும்” (உரோ 2 : 10). எனவே “கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் அçதியும், இரக்கமும் உரித்தாகுக” (கலா 6 : 16) எனப் புனித பவுல் வாழ்த்துகிறார்.

பரம தந்தைக்கு மகிமை :

வானத்தூதர் சொற்களைக் கொண்ட இம்முன்னுரைக்குப்பின், இப்பாடல் இருபெரும் பகுதிகளாகத் தொடர்கிறது. முதல் பகுதி பரமதந்தையைப் போற்றி புகழ்கின்றது. இந்த சொற்களை திருபாடல்களில் காணலாம்.
உம்மை புகழ்கிறோம் - 148, 150
உம்மை வாழ்த்துகிறோம் - 103, 104
உம்மை ஆராதிக்கின்றோம் - 3 : 7
உம்மை மகிமைப்படுத்துகின்றோம் - 29 : 2
உமது மேலான மாட்சியின் பொருட்டு 72 : 19

கடவுள் ‘ஆண்டவர்’ என்றும், ‘தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு நன்றி செலுத்தப்படுகிறது. அவர் எல்லா வல்லமையும் உடையவர் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறார்.

இயேசுவுக்குப் புகழ் :

வானவர்கீதத்தின் மறுபகுதியில் இயேசு கிறிஸ்துவின் புகழுரைகள் தொடர்கின்றன. இவற்றிக்கு புதிய ஏற்பாட்டில் ஆதாரம் காணலாம்.

ஏக மகனாகச் செனித்தவர் :

மூவொரு கடவுளின் இரண்டாவது ஆளாகிய மகன் ‘வாக்கு’ என யோவான் நற்செய்தியில் அழைக்கப்படுகிறார். தொடக்கத்திலேயே கடவுளோடு, கடவுளாக இருந்த இந்த வாக்கு மனிதராகி நம்மிடையே குடிகொண்டார். தந்தையிடமிருந்து அவர் பெற்ற மாட்சிமை ஒரே பேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே (யோவா 1 :1, 14, 17, 18 காண்க).

ஆண்டவர், இயேசு கிறிஸ்து :

விவிலியம் கடவுளை ‘ஆண்டவர்’ என்று குறிப்பிடுகிறது. புதிய ஏற்பாட்டில் இயேசுவையும் ‘ஆண்டவர்’ என்று அழைத்து அவருடைய இறை இயல்பை
வலியுறுத்துகிறது இப்பாடல். உயிர்த்த இயேசுவை “என் ஆண்டவரே, என் கடவுளே” என்று விளித்த புனித தோமா தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார். “இவரே அனைவருக்கும் ஆண்டவர்” (திபா 10 : 36) என்று பேதுருவும், “ஆண்டவர் ஒருவர்தான்; அவர் இயேசுகிறிஸ்துவே” (1 கொரி 8 : 6) என்று பவுலும் கூறுகின்றனர். “ஆண்டவராகிய இயேசு” என்னும் சொற்றொடர் பவுலின் திருமடல்களில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்டவராகிய இறைவா :

அனைத்திலும் தந்தைக்குச் சரிசமமான இறைவனாக இருக்கிறார் இயேசு. அவர் மனிதனாயினும், இறைவனாக இருக்கிறார் என இச்சொற்றொடரில் அறிக்கையிடுகிறோம்.  ஏனெனில் “கடவுள் வடிவில் விளங்கிய அவர் .... தம்மையே வெறுமையாக்கி ... மனித  உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு ... தம்மையே தாழ்த்திக் கொண்டார். எனவே ... அனைவரும் மண்டியிட தந்தையாம் கடவுளின் மாட்சிமைக்காக ‘இயேசு ஆண்டவர்’ என எல்லா நாவும் அறிக்கையிடும்” (பிலி 2 : 5 -11).

உலகின் பாவங்களைப் போக்குபவர் : 

“இதோ, இறைவனின் செம்மறி! இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்” என்று இயேசுவைச் சுட்டிக் காட்டினார் திருமுழுக்கு யோவான். “மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார். நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்” (எசா 53 : 4 ‡ 5) என்று எசாயா இறைவாக்கினர் இவருடைய பாவம் போக்கும் வல்லமையைச் சுட்டிக் காட்டினார்.

தந்தையின் வலபக்கம் வீற்றிருப்பவர் :

இறைவனும் மனிதனுமாகிய இயேசு கடவுளுக்குச் சரிநிகராக இருப்பதை இச்சொற்றொடர் குறிக்கிறது. “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலதுப்புறத்தில் வீற்றிருப்பதை ... காண்பீர்கள்” (மத் 26 : 64) என்று இயேசு கூறியுள்ளார், “உயிருடன் எழுப்பப்பட்டுக் கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிறார் அன்றோ!” (உரோ 8 : 34) என்று புனித பவுலும் குறிப்பிடுகிறார். ஆகவே நமது மன்றாட்டை ஏற்றருள வேண்டுகிறோம்.

ஆர்ப்பரிப்புகள் :

இவ்வாறாக இயேசுகிறிஸ்துவைப் போற்றி புகழ்ந்தபின் சில வாழ்த்துரைகள் இடம் பெறுகின்றன. ‘நீர் ஒருவரே தூயவர், நீர் ஒருவரே ஆண்டவர், நீர் ஒருவரே உன்னதர்’.

மனித தன்மையில் தூயவர் எனப் போற்றுதற்குரியவர் இயேசு ஒருவரே. “பிறக்கும் குழந்தை தூயவர், கடவுளுடைய மகன் எனப்படும்” (லூக் 1 : 35) என வானதூதர் அறிவித்தார். அசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவன் “நீர் கடவுளின் தூயவர்”, என அறிக்கையிடுகிறான். “நமக்கு ஏற்ற .... இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர்” (எபி 7 : 26) என்று குறிப்பிடப்பட்டுள்ளதை வாசிக்கிறோம்.

இயேசு “உன்னதரின் மகன் எனப்படுவார்” என கபிரியேல் வானத்தூதர் இவரைப் பற்றி குறிப்பிட்டார். “இயேசுவே உன்னத கடவுளின் மகனே உமக்கு இங்கு என்ன வேலை” என்று பேய் பிடித்தவன் கத்தினான் (மாற் 5 : 7).

இறுதியில் மூவொரு கடவுளின் புகழுரையோடு இப்பாடல் முடிகிறது. “தூய ஆவியாரோடு தந்தையாகிய இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே”. முதல் மறைசாட்சியாகிய ஸ்தேவான் “கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டார்” (தி ப 7 : 55). “அவருக்கே இன்றும் என்றென்றும் மாட்சி உரித்தாகுக, ஆமென்” (2 பேதுரு 3 : 18).

திருக்குழும மன்றாட்டு :

வானவர்கீதம் முடிந்தவுடன் அருள்பணியாளர், மன்றாட, நம்பிக்கையாளர்களை அழைக்கிறார். அதன்பின் அருள்பணியாளரோடு சேர்ந்து இறைவன் திருமுன் தாங்கள் இருப்பதை உணரவும், தங்கள் கருத்துக்களை மனதில் நினைவு கூரவும் சிறிது நேரம் அமைதியாக இருப்பார். இந்த  மெளனம் கட்டாயமானது  என பீட்டர் கைளப்ளன் (Peter Coughlan) என்னும் திருவழிபாட்டு வல்லுநர் கூறுகிறார்.

சிறிது நேர மெளத்திற்குப்பின் அருள்பணியாளர் மன்றாட்டைச் சொல்கிறார். இதுவரை இந்த மன்றாட்டு ‘சபை செபம்’ என்று அழைக்கப்பட்டது. புதிய திருப்பலி நூல் தமிழாக்கத்தில் இது “திருக்குழும மன்றாட்டு” என அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இது ‘கலெக்ட்’  (Collect) என்று அழைக்கப்படுகிறது. அதாவது திருப்பலிக்காக குழுமி இருக்கும் நம்பிக்கையாளர்களின் கருத்துக்களையும், செபங்களையும் ஒன்றாகத் திரட்டி அருள்பணியாளர் மன்றாடுகிறார் எனப் பொருள்படுகிறது. இந்த மன்றாட்டில் கொண்டாட்டத்தின் பண்பு வெளிப்படுத்தப்படுகிறது. இது இறைதந்தையை நோக்கி,  கிறிஸ்து வழியாக, தூய ஆவியாரின் ஒன்றிப்பில் என்று வழக்கமாக சொல்லப்படுகிறது. திருப்பலியில் ஒரே ஒரு மன்றாட்டு மட்டுமே சொல்லப்படுகிறது. இந்த ஒழுங்கு முறைக்கு எந்த விதிவிலக்கும் கிடையாது (பொது படிப்பினை எண் 54).

இம்மான்றாட்டு மூவொரு கடவுளைக் குறிப்பிடும் நீண்ட முடிவுரையைக் கொண்டிருக்கும். அவை பின்வருமாறு :

அதாவது இம்மான்றாட்டு தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டால் “உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்” என முடியும்.

தந்தையை நோக்கிச் சொல்லப்பட்டாலும் முடிவில் திருமகனைக் குறிப்பிட்டிருந்தால் “உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம்” என முடியும்.

திருமகனை நோக்கி சொல்லப்பட்டால், “தந்தையாகிய இறைவனோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற உம்மை மன்றாடுகிறோம்” என முடிவுறும்.
மக்கள் இம்மன்றாட்டோடு தங்களை ஒன்றுபடுத்தி, ‘ஆமென்’ எனும் ஆர்ப்பரிப்பு வழியாக அதைத் தமதாக்கிக் கொள்வார்.
(தொடரும்

No comments:

Post a Comment

Ads Inside Post