Pages - Menu

Saturday 3 September 2016

ஆரோக்கியம் நல்கிடும் அன்னை மரியாவின் பிறப்பு

ஆரோக்கியம் நல்கிடும் அன்னை மரியாவின் பிறப்பு 

“அம்மா என்றழைக்காத  உயிரில்லையே
அம்மாவை வணங்காது  உயர்வில்லையே ....
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது????” 

இந்த வரிகள் ஒவ்வொருவரின் மனதையும் ஆழமாகத் தைக்கக் கூடியவை. அம்மா இன்றேல் அகிலமே இல்லை. 
தாயின் மடிதான் உலகம், அவள் தாளை வணங்கிடுவோம்.

தாய் தமிழில், அம்மா என்ற சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. தமிழகத் திருக்கோயில்களில் முதன்மை இடத்தைப் பிடித்திருப்பவை மாதா கோயில்கள், அம்மன் கோயில்கள். தமிழர்கள் அனைவராலும் சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மாதா ஆரோக்கிய மாதா. அந்த மாதா தான் உலக மீட்பர் இயேசுவை மண்ணிற்குக் கொணர்ந்த மாதா.

செப்டம்பர், 8, திருவழிபாட்டில் புனித கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா. திருவிவிலிய நூல்கள் இவரின் பிறப்பு பற்றி எந்தவொரு பதிவும் செய்யவில்லை. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் புனித யாக்கோபின் நற்செய்தி  (Proto evangelium of James) 5 : 2-ல் மட்டுமே மரியாவின் பிறப்பு பற்றிய குறிப்பினை நாம் காணலாம்.

உலக மீட்பராம் இயேசுவை உதிரத்தில் சுமந்து உலகிற்குக் கொணர்ந்ததன் காரணமாகவே மரியாவின் பிறப்பு மாண்புறுகின்றது. எசாயா 7 : 14, “இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் (கன்னி) ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்”. மத் 1 : 21, “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்” என்னும் விவிலியக் குறிப்புகளே மரியா பற்றிய இயேசு பிறப்பின் குறிப்புகளாகும்.

இயேசு பிறப்பின் ஆதவனாகத்  தோன்றியவர் அன்னை மரியா. எனவே இவரின் பிறப்பு மனுக்குலம் முழுமைக்குமான புனித சமூகத்தின் உதயம். ஏவையின் வழியாக விண்ணக வாயில் அடைபட்டு பாவம், சாவு என்னும் அடிமைச் சங்கிலியால் பூட்டப்பட்டது. மரியாவின் பிறப்பினால் இந்த அடிமைச் சங்கிலி அறுபட்டு விண்ணக வாயில் திறந்தது. இதுவே நோயற்ற வாழ்வுக்கான ஆரோக்கியத்தின் வாயில். நோய், பிணி போக்கும் மருத்துவத் தாயல்லவோ இவர். எனவே தான் அவரின் பிறப்பு விழா ஆரோக்கியம் நல்கிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆரோக்கியம், சுகம், நலன் போன்ற மூன்று வார்த்தைகளும் நோய், நொடி நீங்கிய பிணியில்லா வாழ்வினையே சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய நாட்களில் வாழ்க்கை நலம் என்பது பல்வேறு பரிமானங்களைக் கொண்டது. இவற்றில் ஏழு பண்புக் கூறுகள் முக்கியமானவை.

1. சமூக நலன் : 
மனிதன் ஒரு சமூக உயிரி. தனித்தனியாகப் பிறக்கின்ற மனிதன் சமூகமாகவே வாழத் துடிக்கின்றான். எனவே சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கோ, வீழ்ச்சிக்கோ காரணமாக அமைகின்றது.

2. உணர்வு நலன்:
மனிதன் உணர்வுகளால் ஆளப்படுகின்றான். உள்ளததில் எழும் நற்சிந்தனைககள், நல்லுணர்வுகளின் ஊற்றாகி நற்செயல்களாகப் பிரசவிக்கின்றன. தீய சிந்தனைகளோ தீய உணர்வுகளை உருவாக்கி தீமைகளைப் பெற்றெடுக்கின்றன.

3. ஆன்மீக நலன் : 
உடல் அழிவுக்குரியது; ஆன்மா அழிவில்லாதது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறை உணர்வு (யூeயிஷ்ஆஷ்லிற்வி ளீலிஐவிஉஷ்லிற்விஐeவிவி) ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த ஆன்மீக உணர்விலிருந்துதான் வாழ்க்கை நெறிமுறைகள் உருவாகிச் செயலாக்கம் பெறுகின்றன.

4. சுற்றுச் சூழல் நலன் : 
மனிதர் தான் வாழும் சுற்றுப்புறச் சூழலின் படைப்பு. மனிதர் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர் போன்றவை அவரை வெகுவாகப் பாதிக்கின்றன. மரம், செடி, கொடிகள் போன்ற தாவரங்களும், ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர் நிலைகளும் மனித வாழ்வின் நலனின் ஆதார அமைப்புகளாகும்.

5. கடமை நலன் : 
மனிதர் தனக்கென்றுள்ள கடமையில் கருத்தாய் தன்னலம் மறந்து பொதுநலம் பேணி செயல்படுகின்ற வேளையில் கடமை வீரராகின்றார். சமூகப் பாதுகாவலாகின்றார்.

6. அறிவுசார் நலன்
உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் என்னும் நவீன பொருளாதாரச் சித்தாந்தங்களில் நாம் சிக்கித் தவிக்கின்றோம். எந்தவொரு காரியத்திலும் செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பாக  குறிப்பிட்ட பொருள் அல்லது தொழில் பற்றிய முழுமையான அறிவினைச் சேர்த்து, நன்கு தெரிந்து, தெளிந்த தீர்க்க முடிவோடு செயல்படுதல் பாராட்டினுக்குரியது.

7. உடல் நலன் : 
மேற்கூறப்பட்ட ஆறு வித நலன்களும் சிறப்பு மிக்கதாய் செயல்பட்டால் உடல் நலனும் சிறப்பாகத் திகழும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் நலன் என்பது பல்வேறுபட்ட காரணிகளின் கூடடுத் தொகுப்பே.

முழு ஆரோக்கியம் என்பது இந்த ஏழு வாழ்க்கைப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது. நாம் விரும்பும் சமுதாயம் நோய், பிணியற்ற ஆரோக்கியமிகு சமுதாயமே.

இரக்கம் மிகு தந்தையே, விண்ணிலிருந்து  உமது மக்களுக்கு உதவியையும், வலிமையையும் பொழிந்தருளும். கன்னிமரி மகனின் பிறப்பு எங்களது  மீட்பின் விடிவெள்ளியாய் அமைந்தது. இந்த  விண்ணக தாயின் பிறப்பு விழா முழுமையான ஆரோக்கிய வாழ்வினுக்கு எங்களை இட்டுச் செல்வதாக. ஆமென்.

No comments:

Post a Comment

Ads Inside Post