Pages - Menu

Saturday 3 September 2016

இம்மாதத்தின் புனிதர்கள், செப்டம்பர்

இம்மாதத்தின் புனிதர்கள்
- அருட்சகோதரி G. பவுலின் மேரி,FSAJ,  
கும்பகோணம்.
செப்டம்பர்-  3                    புனித பெரிய கிரகோரியார்

இவர் உரோமையில் கி.பி.540ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கல்வியறிவைக் கண்ட ஜஸ்டின் பேரரசர் உரோமை நகரின் பிரதம நீதிபதி ஆக்கினார். இவருடைய தந்தை இறந்தபின் சிசிலி நாட்டில் ஆறு துறவற மடங்களை அமைத்து, உரோமையில் உள்ள தமது வீட்டை ஏழாவது மடமாகக் கட்டி, இவரும் அங்கு துறவியானார். 590ஆம் ஆண்டு செப்டம்பர்‡3 ஆம் நாள் திருத்தந்தையாக உயர்த்தப்பெற்றார். ஏழை எளியவர்களுக்கு உதவினார். திருமறையை பரவச்செய்து அதனை உறுதிப்படுத்தினார். ஒழுக்க நெறி, இறையியல் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். 604‡இல் இறைவனடி சேர்ந்தார்.


செப்டம்பர் - 8               புனித கன்னிமரியின் பிறப்பு

கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் சிற்றூரில் சுவக்கின் ‡ அன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதியருக்கு மரியாள் பிறந்தார். உலகத்தை மீட்டு இரட்சிக்கும்படி குழந்தையாகப் பிறந்த இயேசுவின் தாய் இவளே. மரியன்னைக்கு நாம் செய்யும் சிறந்த அன்பளிப்பு அன்பு, தாழ்ச்சி, பொறுமை, கற்பு, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களை கடைபிடிப்பதே. 7‡ஆம் நூற்றாண்டு முதல் இவ்விழா சிறப்பிக்கப்படுகிறது. இன்று பெண் குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளைகளை வரமாகப் பார்க்காமல், பாரமாக பார்க்கிறார்கள். இந்த தவறான வழக்கு அழியவேண்டும்.

செப்டம்பர் - 13                  புனித கிறிசோஸ்தம் அருளப்பர்        (344 - 407)

அந்தியோக்கியாவில் கி.பி. 349 இல் பிறந்தார். கல்வியை மிகச்சிறப்பாக கற்றுத் தேர்ந்தார். தவ வாழ்வை மேற்கொண்டு, மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். 397‡இல் கொன்ஸ்தாந்தி நோபிளுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று மிகச் சிறப்புடன் பணியாற்றினார். மறைப்பணியாளர்களின் பணிகளை அறநெறிப்படுத்த முயன்றார் அரசர். மற்ற அனைவரின் வெறுப்புக்கு ஆளாகி, செயலாற்ற முடியாதவரானார். இருமுறை நாட்டைவிட்டுச் செல்ல வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்தவ வாழ்வை நெறிப்படுத்த நிறைய மறையுரையாற்றினார், புத்தகங்கள் எழுதினார். எனவே ‘பொன்வாயர்’ என்று அழைக்கப்பெற்றார். 407‡இல் இப்புனிதர் இறந்தார்.

செப்டம்பர் - 14      திருச்சிலுவை மகிமை

640 இல் பாரசீக (தற்போதைய ஈரான்) மன்னன், சிரியா, பாலஸ்தீன் நாட்டின் மீது படையயடுத்தான். வெற்றி பெற்ற அவன் விலையுயர்ந்த பொருட்களோடு திருச்சிலுவையையும் எடுத்துச் சென்றான். இதனால் கான்ஸ்தாந்திநோபிள் பேரரசரான எராக்ளியுஸ் பெரிய இராணுவத்துடன் பாரசீகத்தின் மீது படையயடுத்தார். 629‡இல் அரசர் கான்ஸ்தாந்திநோபிள் அரசர் வெற்றி பெற்று பக்தியுடன் திருச்சிலுவையை தோளில் சுமந்து எருசலேமுக்கு சென்றார். விலையுயர்ந்த அரச ஆடைகள், கற்கள் பதித்த ஆபரணங்கள் அணிந்திருந்தார். அப்போது கல்வாரி மலையில் நுழைய முயன்று முடியவில்லை. எருசலேம் ஆயரான சக்கரியாஸ் “பேரரசே இயேசு சிலுவை சுமந்து செல்லும்போது இவ்வித ஆடை, ஆபரணங்களை அணிந்திருக்கவில்லையே” என்றார். உடனே அரசர் தவ உடைகளை அணிந்துக் கொண்டு கல்வாரியில் ஏறி திருச்சிலுவையை கல்லறையில் வைத்தார். இவ்விழாவை இன்று நாமும் சிறப்பிக்கிறோம்.

செப்டம்பர் - 15           புனித வியாகுல அன்னை

மரியாளின் ஏழு வியாகுலங்கள் : 1. சிமியோனின் இறைவாக்கு, 2. எகிப்துக்கு ஓடிப்போனது, 3. காணாமற் போன இயேசுவை மூன்று நாட்களாய் தேடியது, 4. கல்வாரிக்கு சிலுவை சுமந்து போன இயேசுவை வழியில் சந்தித்தது, 5. மரியாள் சிலுவையடியில் நின்றது, 6. இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி மடியில் வைத்திருந்தது, 7. இயேசுவை அடக்கம் செய்தது

இத்திருவிழா 1814, செப்டம்பர் 3ஆம் ஞாயிறு கொண்டாடப்பட வேண்டும் என உரோமைப் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால், 1913ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 15ஆம் நாளுக்கென்று குறிக்கப்பட்டு அதனை சிறப்பித்து வருகிறோம்.

செப்டம்பர் - 17                        புனித இராபர்ட் பெல்லார்மின்  (1542 - 1621)

இவர் தஸ்கனி பகுதியில் மோன்தே புல்சியானோ நகரில் கி.பி.1542‡இல் பிறந்தார். உரோமையில் இயேசு சபையில் சேர்ந்து மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க மறையைப் பாதுகாக்கும் வகையில் எதிர்ப்பாளர்களுடன் விவாதங்கள் நடத்தினார். உரோமைக் கல்லூரியில் இறையியல் கற்றுத்தந்து, கர்தினாலாக உயர்வு பெற்று, காப்புவா மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார். அக்காலத்தில் எழுந்த ஐயப்பாடுகள் பலவற்றையும் தெளிவுபடுத்த துணையாயிருந்தார். புனித கொன்சாகா ஞானப்பிரகாசியார் இவரின் ஆன்ம குரு. இவர் துறவிகளுக்கு பெரும் முன்மாதிரிகை. தூய்மை, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளின் முன்னோடியாக விளங்கினார். ஆயரான இவர் தம் மந்தையை எல்லையற்ற அன்புடன் பராமரித்தார். 1621, செப்டம்பர் 17‡இல் உரோமையில் இறந்தார்.

செப்டம்பர் - 21                     புனித மத்தேயு

முதல் நற்செய்தி நூலை எழுதிய பன்னிரெண்டு திருத்தூதர்களில் ஒருவர். இவர் பாலஸ்தீனாவில் உள்ள கப்பர்நாகூமில் பிறந்தார். இயேசுவால் அழைக்கப்பெற்ற காலத்தில் சுங்கத் துறை பணியில் இருந்தார். எபிரேய மொழியில் நற்செய்தி நூலை எழுதினார் என்றும் இவர் கீழைநாடுகளில் திருமறையைப் போதித்தார் என்றும் பாரம்பரியம் கூறுகிறது. புனித மத்தேயு கல்லால் எறியப்பட்டு இறந்ததாகவும் பாரம்பரியம் கூறுகிறது. யூப்ரட்டிஸ் நதியின் அருகில் மரபுக் என்னுமிடத்தில் இவர் இறந்தார்.

செப்டம்பர் - 27                     புனித வின்சென்ட் தெ பால் (1581 - 1660)

இவர் பிரான்சில் லாந்த் பகுதியில் பூயி என்னும் கிராமத்தில் கி.பி. 1581இல் பிறந்தார். பிரான்சிஸ்கன் குருக்களிடம் கல்வி பயின்று மறைப்பணியாளர் பட்டம் பெற்று பாரீஸ் நகரில் பணியாற்றினார். மறைப்பணியாளர்களைப் புனிதராக உருவாக்குவதற்கும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு மறைபோதகச் சபையையும், பிறரன்புச் செவிலியர் என்னும் மகளிர் துறவற சபையையும் ஏற்படுத்தினார். இளம் பெண்களை கெடுக்கத் தேடிய இராணுவத்தினர் கையிலிருந்து காக்கும்படி பல நூறு பெண்களுக்கு கன்னியர் மடங்களில் உறைவிடம் பெற்றுக் கொடுத்தார். 1660 செப்டம்பர் 27இல் பாரீஸ் நகரில் இவர் இறந்தார்.

செப்டம்பர் - 30                            புனித எரோணிமுஸ்

இவர் கி.பி. 340‡இல் தால்மேசியாப் பகுதியில் ஸ்திரிதோ என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையில் இலக்கியக் கலைகள் கற்றுத் தேர்ந்தார். அங்கேயே திருமுழுக்கும் பெற்றார். தவ வாழ்வை மேற்கொண்டு கீழைநாடுகளுக்கு வந்து மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். உரோமைக்குத் திரும்பி வந்து தமாசுஸ் என்னும் திருத்தந்தைக்குச் செயலராகப் பணியாற்றினார். அப்போது திருவிவிலிய நூல்களை இலத்தினீல் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். துறவு வாழ்வை ஊக்குவித்து வளர்த்தார். பின்பு பெத்லகேமில் வாழ்ந்து கொண்டு, திருச்சபையின் தேவைகளில் வியப்புக்குரிய முறையில் உதவிடலானார். பல நூல்கள், முக்கியமாக திருவிவிலிய விளக்கவுரை நூல்கள் எழுதினார். பெத்லகேமில் 420‡இல் செப்டம்பர் 30ஆம் நாள் இறந்தார்.


No comments:

Post a Comment

Ads Inside Post