Pages - Menu

Friday 30 September 2016

உடைபடும், நடமாடும் காவிரி

உடைபடும், நடமாடும் காவிரி

காவிரி பிரச்சனை இப்போது தமிழ்நாட்டில் தலைவிரிந்தாடுகிறது. வானம் பொய்த்தது. ஆறு வரண்டது. நீரின் பயன்பாடு வளர்ந்தது. இப்போது கர்நாடகா, தமிழ்நாடு மோதலில் விடிந்திருக்கிறது. சிறுவானி ஆற்றில் கேரளாவின் புதிய அணை, முல்லைப் பெரியார் அணை ஆகியவற்றில் தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வருகிறது. மூன்றாம் உலகப்போர் தண்ணீர் பகிர்வு அடிப்படையில்தான் உண்டாகும் என்று சாமுவேல் ஹன்டிங்கடன் என்பவர் கூறினார். நீர் பகிர்வு சிக்கல் உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அது இந்தியாவிலும் உள்ளது. சீனாவின் யாங்ட்ஸ் என்ற ஆற்றின் நீரை பகிர்வதிலும், நைஜர் என்ற நதி நீரைப் பகிர்வதில், கினியா நைஜிரியா நாடுகளுக்கிடையிலும், தைகிரிஸ் நதி நீரை பகிர்வதில் ஈராக், சிரியா, துருக்கி நாடுகளுக்கிடையிலும் ரியோ கிரான்தே, ரியோ பிராவோ, ரியோ கோன்ச் சோஸ் ஆகிய நதிகளின் நீர்களை பகிர்வதில் அமெரிக்காவிற்கும், மெக்சிக்கோ நாட்டிற்கும், தபா என்ற நதி நீரை பகிர்வதில் ஸ்லவோக்கியாவிற்கும் ஹங்கேரிக்கும் சிக்கல்கள், மோதல்கள் இருந்து வருகின்றன. ஸ்லவோக்கியா ‡ ஹங்கேரி நாட்டிற்கு இடையேயான நதிநீர் பகிர்வு சிக்கல் அகில உலக நீதிமன்றத்திற்கே சென்றது.

இந்தியாவிலும் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் நீர் பகிர்வு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களுக்கிடையில் சிக்கல்களாகவே இருந்து வருகிறது. அதே போல ரவி ‡ பியாஸ் நதிகளின் நீர் பகிர்வு பஞ்சாப் ஹரியான மாநிலங்களுக்கிடையில் சிக்கலாக உள்ளது. மழை பொய்க்கும்போது நதி நீர் பகிர்வு சிக்கல் பூதாகரமாக ஆகிவிடுகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தமிழ்நாட்ற்கு 15000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்து விடவேண்டும் என்ற உத்தரவிற்கு கண்டன எதிர்ப்பு தெரிவித்ததுடன் கர்நாடகாவில் தமிழர்களையும் ,தமிழர்களின் சொத்துக்களையும் ,தமிழ்நாட்டு வாகனங்களையும் சேதபடுத்தியுள்ளார்கள். 15 நாள்களாக கர்நாடகா ‡ தமிழ்நாடு எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கர்நாடகா அரசே இவ்வித வன்முறைகளை தூண்டிவிடுவதாக செய்திகள் கூறுகின்றன. உள்நாட்டு போரைப் போல உருவேடுத்துவிட்டது. மத்திய ‡ மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. பாமர மக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். கடைசியாக உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உத்தரவு கொடுத்துள்ளது. இந்த வாரியம் அமைத்தால் நீதியான முறையில் நதி நீர் பங்கிட முடியும். 1972இல் ஐரோப்பாவில் மழையில்லாமல் வறட்சி ஏற்பட்டது. சுற்றுபுற சீரழிவால்தான் மழை குறைந்துவிட்டது. அதனால்தான் நீர் பற்றாக்குறை, நீர் பகிர்வு சிக்கல்கள் உண்டாகியுள்ளன. நீரை கவனமாக, சிக்கனமாக பயன்படுத்துதல், தண்ணீர் வீணாகாமல் தடுப்பு அணை கட்டுதல், குளம், குட்டைகளை தூர்வாரி மழைநீரை சேகரித்தல், மரம் வளர்த்தல் போன்ற செயல்களால் நீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நம் பாகமாக செய்யலாம்.

இம்மாதம் செபமாலை மாதா மாதம். செபத்தினால் மனிதம் உறுதியாகிறது, உயர்கிறது. இதனைப் பற்றி பல கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. இவ்விதழில் அருட்சுடரின் அமைப்பும், தாளின் தன்மையும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. பல ஆர்வலர்கள், அருட்சுடருக்கு புதிய சந்தாதாரர்களை சேர்ப்பித்தும், விளம்பரங்களை வாங்கிக் கொடுத்தும் உதவுகின்றார்கள். 2017இல் ஜனவரி முதல் சந்தா தொகையை ஏற்றவேண்டிய கட்டாயம் ஏறபடும் சூழ்நிலை இருக்கிறது. உங்களின் எழுத்து படைப்புகளை வரவேற்கிறோம். உறவுகளில் வளர இந்த ஊடகம் மிக உதவி என்பதில் ஐயமில்லை.

ச.இ.அருள்சாமி, ஆசிரியர்

No comments:

Post a Comment

Ads Inside Post