Pages - Menu

Saturday 3 September 2016

ஆலோசனை நேரம் வேதியரிடம் கேளுங்கள் - 12

ஆலோசனை நேரம்
வேதியரிடம் கேளுங்கள் - 12
- நல்லை.இ. ஆனந்தன்


1. வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன வித்தியாசம்?
- திருமதி. கலாவதி, கம்பம்

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது. தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது. அதுசரி, நீங்கள் 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மனதில் வைத்துத்தானே இந்த கேள்வியைக் கேட்டீர்கள். சிலர் ஆள்வதற்கும், நாம் வாழ்வதற்கும் தேர்தல் அவசியம். அதில் வெற்றியும் தோல்வியும் மிகவும் ரகசியம்.

2. மார்த்தா, நீ பல காரியங்களைக் குறித்துக் கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றே என்றார் இயேசு. அந்த ஒன்று எது?
- செல்வி. ராணி மேரி, காரைக்குடி

இறை உறவு (இறைவனுக்குச் செவிமடுத்தல்). மார்த்தா பிறரன்புக்கும், மரியா இறையன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பகுதி இதுதான். பிறரன்பு பணி செய்ய சக்தி தேவை. அந்த சக்தி இறைவேண்டலில்தான் நிறைவாக நமக்குக் கிடைக்கும் என்று சொன்ன புனித அன்னை தெரசாவுக்கு என் மனமார்ந்த நன்றி.

3. அங்கிள், என்னை ஒரு பெண் ரொம்ப இம்ப்ரஸ் செய்கிறாள். நான் அவளைக் காதலிக்கலாமா? வேண்டாமா?
- திரு. பவுல்தாஸ், மதுரை

பன்னிரண்டு வயது வரையிலும் ஒருவர் குழந்தைதான் என்கிறது உளவியல். பதிமூன்று வயதிலே டீன்ஏஜ் ஆரம்பிக்கிறது. இப்போது வருவது காதல் அல்ல. பாலினக் கவர்ச்சி. மணமுடித்தபின் மனைவிமேல் வருவதற்குப் பெயர் காதல் எனலாம். ஐம்பதிலும் சிலருக்கு ஆசை வரும். அது காதலல்ல, காமம். உனது கையயழுத்தைப் பார்க்கும்போது நீ மேனிலைப்பள்ளி படிக்கும் பையனாகத் தெரிகிறது. மருமகனே, வாழ்க்கைப் புத்தகத்திலே காதல் ஒரு சிறு பக்கம்தான். காதலே வாழ்க்கைப் புத்தகம் என நீ வாழ்ந்தாய் என்றால் சில காலம் கடந்தபின் திரும்பிப் பார்த்தால், நீ இழந்தவை ஏராளமானவை என்பதை உணர்வாய். எனவே படிப்பிலே தீவிர கவனம் செலுத்தவும். ஏனெனில் உன் எதிர்கால வாழ்வு உன் கையில்தான் உள்ளது.


4. உனக்கு இருப்பதை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்செல் என்கிறார் இயேசு. எனக்கு இருப்பதை எவ்வளவு காலம் நான் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்?
- திரு. பிரான்சிஸ், கொடைரோடு

இறைவன் உங்களுக்கு கொடுக்கும் வரை நீங்கள் அதை பிறருக்குக் கொடுத்தல் வேண்டும். இறைவன் உங்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களிடம் இருப்பதை (பணம் மட்டுமல்ல, நேரம், ஆற்றல், சக்தி, அன்பு, சேவை) ஏழைகளுக்கு (அதாவது இல்லாதவர்களுக்கு) நீங்கள் கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் கொடுப்பதால் குறைவுபடமாட்டீர்கள். மாறாக அபரிமிதமாக ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். பதுக்கல் செய்தவர்கள் உலகில் படும்பாடுகளை உற்றுப் பார்த்தாலே உணர்ந்து கொள்ளமுடியும்.

5. உங்கள் வயது என்ன? ஆலோசனை நேரம் நிறுத்தப்பட்டால் பல புதிய தொடர்கள், புதுச் சிந்தனைகள் அன்னையின் அருட்சுடரில் வரலாம். ஏனெனில் இக்காலத்து மக்கள் பிறர் அட்வைஸ் பண்ணுவதை விரும்புவதில்லை. அதனால்தான் நிறைவு செய்யக் கேட்கிறேன்.
- திரு. ஜான் ராபர்ட், திருப்பூர்

தங்களுக்கும், தங்களைப் போல மனதில் இதே கருத்தை வைத்திருக்கும் பலருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாசித்த, நேசித்த, பதில்களை ஆசித்த, அனைவருக்கும், அனைத்திற்கும் நன்றிகூறி நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம். வாழ்க வளமுடன்.
(நிறைவு பெற்றது

No comments:

Post a Comment

Ads Inside Post