Pages - Menu

Friday 30 September 2016

பணிவு என்னும் இனிய பாதை 7. இயற்கையாக வரும் ஆணவம்

பணிவு என்னும் இனிய பாதை

7. இயற்கையாக வரும் ஆணவம்

-அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்,

இந்த முறை ஒரு இரகசியத்தோடு கட்டுரையை தொடங்குகிறேன். ஒரு சாமியாரின் (பங்குத்தந்தையின்) நன்மதிப்பை நீங்கள் பெற வேண்டுமா? அதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. “இன்றைக்கு உங்கள் பிரசங்கம் விற்ஸ்ரீer ய்ழிமிஜுer” என்று சொல்லிப் பாருங்கள். அநேகமாக எல்லாக் குருக்களும் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். ஒரு நல்ல, ஞானம் மிக்க, ஆற்றல் வாய்ந்த குருவானவர். அவரிடம் ஒருநாள் பங்கின் உறுப்பினர் ஒருவர் சென்று, “உங்கள் பிரசங்கம் எனக்குப் புரியவில்லை. நான் வேறு ஒரு கோவிலுக்குப் போகிறேன்” என்றார். உடனே அந்த குரு கோபப்படவில்லை. “நண்பரே, நீங்கள் வேறு கோவிலுக்குப் போவதை நான் தடைசெய்யவில்லை. ஆனால் எனக்கு ஓர் உதவி செய்துவிட்டு செல்லுங்கள். ஒரு நான்கு வாரங்கள் தொடர்ந்து கோவிலுக்கு வாருங்கள். நான் ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தை புதன்கிழமையே எழுதி உங்களிடம் தந்துவிடுகிறேன். அதில் உங்களுக்கு எது புரியவில்லையோ அதனை என்னிடம் சொல்லுங்கள். அதை மாற்ற முயற்சி செய்கிறேன். ஏனெனில் உங்களைப் போல என் பிரசங்கம் புரியாவிட்டாலும் என்னிடம் எப்படி சொல்லுவது என தயங்கிக் கொண்டு சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்” என்றார். “அந்த நபர், எனக்கு பேருதவியாக இருந்தார். நான் நல்ல பிரசங்கியராக வருவதற்கு உதவி புரிந்தார்” என்று தாழ்ச்சியோடு அந்த சம்பவத்தைப் பற்றி அந்த குருவானவர் நினைவு கூர்கின்றார்.

நமக்கு மிகவும் இயற்கையாக வருவது ஆணவம்தான். அதனால்தான் பணிவு அல்லது தாழ்ச்சி மிகவும் அரிதாக இருக்கிறது நமக்கு மிகவும் இயற்கையாக வருவது ஆணவம்தான் என்பதற்கு பல உதாரணங்களைச்  சொல்லலாம். நீங்கள் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். (பேச்சுப் போட்டி, நடனப் போட்டி). அந்தப் போட்டியில் வென்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகின்றன. உங்கள் பெயர் வராவிட்டால் ஏன் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றுதான் நினைப்பீர்கள். அதைப் போல ஒரு குரூப் போட்டோ எடுக்கிறீர்கள். அதை பிரிண்ட் எடுத்து பார்க்கும்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்றுதான் தேடுவீர்கள். என் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அன்னையின் அருட்சுடர் வந்தவுடன் என் கட்டுரை எங்கு இருக்கிறது? என்றுதான் தேடுகிறேன். (அடுத்த முறை கொஞ்சம் மாற்ற முயற்சி செய்கிறேன்). எனவே ஆணவம் இயற்கையாக வருகிறது என்பதும், பணிவு அரிதாக இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் உங்களது பெருமைகளுக்கு எந்தவிதமான அடித்தளமும் இல்லை. உதாரணமாக உங்கள் குடும்பப் பெருமைகளை (சாதிப் பெருமைகள்) பற்றி நீங்கள் பேசலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட குடும்பத்தில் (சாதியில்) பிறந்ததைவிட உங்கள் பங்களிப்பு அதில் எதுவும் இல்லை. சிலர் அவர்களின் சாதனைகளைப் பற்றி சொல்வார்கள். நீங்கள் ஓர் அருமையானக் கட்டிடத்தை கட்டியிருக்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு பொறியாளர் இல்லாமல், கொத்தனார் இல்லாமல், சித்தாள் இல்லாமல், தச்சர் இல்லாமல், பெயிண்டர் இல்லாமல் அந்த சிறந்தக் கட்டிடத்தின் நூறில் ஒரு பகுதியைக் கூட உங்களால் இருக்க முடியாது. இன்னும் கட்டி சிலர் சொல்வார்கள். நான் கஷ்டப்பட்டு உழைத்து நல்ல நிலைக்கு வந்துள்ளேன். சார், உங்களுடைய வாழ்வின் முதல் ஆண்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இரண்டாவது ஆண்டைப்பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் பிறந்த போது உங்களுக்கு நடக்கத் தெரியுமா? பேசத் தெரியுமா? இன்று நீங்கள் நன்றாக இருப்பதற்கு உறுதுணையாக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களை மறந்துவிட்டு, நான்தான் என்று சொன்னால் அது உண்மைக்கு எதிரானதாகும்.

ஆணவம் இயற்கையாக நம் வாழ்வில் தவழ்கிறது. அரிதான பணிவை கொஞ்சம் கொஞ்சமாக தவழவிட்டு, பெருமைகளை தவிர்த்து வாழும்போது நம் வாழ்வும் அழகு பெறும். இனிமை பெறும். (தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post