Pages - Menu

Friday 10 February 2017

அரசின் கொள்கை விளக்கங்கள்

அரசின் கொள்கை விளக்கங்கள்

வழக்குரைஞர். பு.அருள்தாஸ், 
கும்பகோணம்

மத்தியிலாகட்டும், மாநிலத்திலாகட்டும் ஓர் அரசு என்னென்ன கொள்கைகளை தலையாயக் கடமைகளாகக் கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என்பதை இந்தப் பகுதி  சுட்டிக்காண்பிக்கிறது. அனைவருக்கும் நல் ஆட்சி தருவதற்கும் ஏற்றத்தாழ்வற்ற சமூகம் காண்பதற்கும் வித்திடப்பட்டிருக்கிறது. ஆணானாலும், பெண்ணானாலும் வேலைக்கு ஏற்ற ஊதியம் சமமாக வழங்கல், குறிப்பிட்ட நபர்களிடம் செல்வம் தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வது. குழந்தைகள், இளைஞர்கள் நல்ல குடிமக்களாக உருவாகி வாழ வழி வகுத்தல், இலவச சட்ட உதவி, கிராமிய பஞ்சாயத்துக்களை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் கடைக் கோடியிலுள்ள சாமானியர்களுக்கும் நிர்வாகத்தின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இளமையில் கல், கல்லாதவன் முகத்தில் இருப்பது கண்களல்ல இரு புண்கள். கேடில் விழுச்செல்வம் கல்வி, ஏன்றெல்லாம் முழங்கிவிட்டால் போதுமா? அதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற பெரு நோக்கோடு குழந்தைகள் 14 வயது வரை இலவசமாகக் கல்வி கற்கவும், அதைக் கட்டாயமாக்கவும் அரசு முனைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பின்னர் அடிப்படை உரிமையாக்கப்பட்டது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேன்மையடையச் செய்வது அரசின் கடமை, நம் வீட்டாரும் அண்டை அயலாரும் தூய்மையுடன் வாழச் சுற்றுச் சூழல் மற்றும் காடுகள் பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாடு என்பது  உலகின் ஒரு கிராமம் ஆக குறுகி உள்ளது என்பது உண்மை. எனவே, நமது நாடு, பிற நாடுகளிலும் உள்ள மக்களுடன் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதற்குப் பாடுபடவேண்டும் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அண்டை வீடு பற்றி எரியும்பொழுது நாம் வீணை வாசிக்க முடியுமா? சுருங்கச் சொன்னால் நமது ஒட்டுமொத்த கனவுகளின் கூட்டுத்தொகை இந்த கொள்கை விளக்கப்பகுதி என அறியலாம்.

நமது கடமை

அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளில் சிலவற்றைத்தான் சுட்டிக்காட்டி  உள்ளேன். சொல்லப்போனால் நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் உன்னதமான போற்றுதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது. எடுத்துக்காட்டாக எந்தவித குறுக்கீடும் இல்லாமல் அச்சமின்றி நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் செயல்பட பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நமது  உரிமைகளைக் காக்கின்ற அதே நேரத்தில் நமது கடமைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையைச் சரிவர செய்யவேண்டுமெனில் மக்களாகிய நாம் முனைப்புடனும், விழிப்புடனும் நாள்தோறும் செயல்படவேண்டும். ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? ‡ என்ற மனப்போக்கை மாற்றிக்கொள்ள  வேண்டும். இது  நமது நாடு. நாம் அதன் புதல்வர் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கின்ற மக்கள் மன்ற உறுப்பினர்கள் நேர்மை உள்ளவர்களா? நீதியின் மீது பசி, தாகம் உள்ளவர்களா? தன்னலத்தைக் கருத்தில் கொள்ளாது சமூக நலத்தை முன்னிறுத்துபவர்களா? பண்பாளர்களா? பதவி சுகம் கண்டதும் பாதை மாறிப் போவார்களா? தொலை நோக்குள்ளவர்களா? என்பதையயல்லாம் ஆய்ந்தறிய வேண்டும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி  ஜான் எஃப் கென்னடி சொன்னது போல் ‘நாடு எனக்கு என்ன செய்தது?’ என்ற கேள்வியை மாற்றி ‘நான் நாட்டிற்கு என்ன செய்தேன்?’ என்ற கேள்வி நம்முன் எழுந்து நமது செயல்பாடு ஒரு வேள்வியாக அமைந்திடல் வேண்டும். சும்மா பெற்றதா சுதந்திரம்? எத்தனையோ இன்னுயிர்களை இழந்திருக்கின்றோம். பொங்கி எழும் உணர்வுகளுடன் சிறைச்சாலைக்குள் சென்ற இளைஞர்கள் நீண்ட சிறைவாசத்திற்குப் பின் அழகொழிந்த ஓவியங்களாக, பிணிகளின் கூட்டுக் கலவையாக வெளியே வர வேண்டியிருந்தது.  உடைமைகளை, உரிமைகளை, மனைவி மக்களை இழந்தவர்கள் ஏராளம், ஏராளம். அந்தத் தியாகச் சீலர்கள் நமக்குத் தந்த கருணைமிகு காணிக்கையல்லவா இந்த சுதந்திரம். அன்னாரது தியாகம்  வீண்போகலாமா? வாராது போல் வந்த மாமணியைத் தோற்கலாமா? முண்டாசுக் கவி பாரதி  சொன்னது போல் நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ! சிந்திப்போம்! செயல்படுவோம். உயர்வடைவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post