Pages - Menu

Friday 10 February 2017

அமெரிக்கக் கடிதம், வாசிப்பு, வளர்ச்சியின் நேசிப்பு

அமெரிக்கக் கடிதம்

வாசிப்பு, வளர்ச்சியின் நேசிப்பு
- சவரி, கேரி

அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த மாதம் உங்களுடன் இங்குள்ள மக்களின் படிக்கும் பழக்கத்தைப் பற்றி பேச ஆசைப்படுகிறேன். இங்குள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை வளர்க்கிறார்கள். முக்கியமாக தொடக்கப் பள்ளிகளில் பாடத்தை தவிர குழந்தைகளுக்கு ஏற்ற கதை புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள், வரலாற்றுப் புத்தகங்களை படிக்க வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். உதாரணமாக வருடம் தொடங்கும் போது மாணவர்கள் எந்த புத்தகங்களைப் படித்தாலும் படித்து முடித்தவுடன் பள்ளியில்  உள்ள கணிணியில் தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் அந்த புத்தகத்தை முறையாக படித்திருக்கிறார்களா? என்று அறிய, அந்த புத்தகத்தைப் பற்றி பத்து கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். கடினமான புத்தகத்திற்கு அதிக புள்ளிகளும், எளிமையான புத்தகங்களுக்கு குறைந்த புள்ளிகளும் வழங்கப்படும். வருட முடிவில் மாணவர்கள் எடுத்த புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகள் வழங்கப்படும். மூன்றாம் வகுப்பு மாணவர்கள் சராசரியாக ஒரு வருடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து விடுகிறார்கள்.

சிறு வயதில் அவர்களுக்கு படிப்பதில் ஏற்பட்ட ஆர்வம் அவர்களது வாழ்க்கையில் தொடர்கிறது. தங்கள் ஓய்வு நேரங்களையும், விடுமுறை நாள்களையும் அவர்களுக்கு பிடித்த கதை புத்தகங்களையோ, வரலாற்று புத்தகங்களையோ, அறிவியல் புத்தகங்களையோ படிப்பதில் நேரத்தை  செலவளிக்கின்றனர். எனவேதான் பயணம் செய்யும்போது கிடைக்கும் சிறிய இடைவெளிகளில்கூட அவர்கள் புத்தகம் வாசிப்பதைக் காணலாம்.

இங்குள்ள அரசாங்கமும் இலவச நூல் நிலையங்களை நிறுவி மக்களுக்கு நற்பணியாற்றி வருகிறது. எல்லா பள்ளிகளிலும் நூலகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த நூலகங்கள் அரிய புத்தகங்களை உள்ளடக்கியதோடு, வலைத்தளம் பொருத்தப்பட்ட கணிணிகளையும் கொண்டுள்ளன. பொது நூலகங்கள் அரிய நூல்களையும், இசை தட்டுகளையும் (Music CD),, டிஜிட்டல் நூல்களையும், நூல்களை கார்களில் செல்லும் போது கேட்க வசதியாக ஒலி தகடுகளையும் (Audio CD)  கொடுத்து மக்களை படிக்கத் தூண்டுகின்றனர். ஒருவர் ஒரு சமயத்தில் 100க்கும் மேற்பட்ட நூல்களை நூலகத்திலிருந்து இலவசமாக எடுக்க முடியும். இந்த நூலக வசதி நம் நாட்டிலும் வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

உன் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்.
உன் அறிவு சிறக்க படிப்பது அவசியம்.

இன்றைய வாசகர் நாளைய தலைவர் - மார்கிரேட் புல்லர்
Today a reader, tomorrow a leader.

No comments:

Post a Comment

Ads Inside Post