Pages - Menu

Sunday 26 February 2017

பெண்கள் சாதனையின் கண்கள்

பெண்கள் சாதனையின் கண்கள்

அருட்சகோ. முனைவர். விமலி. FIHM
தமிழ்த்துறைப் பேராசிரியர், இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்

“நிலவினில் இருக்கின்ற
களங்கத்தை அவளது
பெருவிரல் துடைத்துவிடும்
புதுயுக மகள் இவள்
அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்துவிடும்”

என்ற வைரமுத்துவின் கவிதை வரிகளுக்குகொப்ப பெண்ணுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னால் கல்வி வாய்ப்பு அத்தனை எளிதல்ல. “பேதமை” அறிவின்மை பெண்ணுக்கு அழகு என கருதப்பட்டது. மெல்ல மெல்ல, ‘பால் கணக்கு கடிதம் எழுதத் தெரிந்தால் நல்லது’ என்று ஆரம்பக் கல்வி, பின்பு பதின்பருவம் அடையும்வரை படிக்க அனுப்புவது, பின்பு உள்ளூரில் உள்ள பள்ளியில் எந்த வகுப்பு வரை உள்ளதோ அதுவரை படிக்க அனுப்புவது என்ற நிலைகள் மாறி, பிறகு சில சேவைத் துறைசார் படிப்புகளுக்கு அனுப்பப்பட்டனர். தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பாதுகாப்புத் துறைகள் அவர்களுக்கு மிக அன்னியமான துறைகளாயின. ஆணுக்கு நிகரான சமூக அந்தஸ்து  போன்றவற்றிற்காகப். பெண்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர், வரதட்சணை, பெண் சிசுக்கொலை, பாலியல் பலாத்காரம், கடத்துதல் போன்ற கொடூரத்திற்கு ஆளாகி  உடலாலும், உள்ளத்தாலும் பாதிப்படைந்து அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பதாக அமைந்தது. இருப்பினும் பெண்கள் என்றுமே வாழ்க்கைக் கூறில் ஒரு பாதியாக விளங்குபவர்கள். காலத்தாலும், சூழ்நிலையாலும் அன்றும்,  இன்றும் ஒரு சில தடைகள் வந்தாலும், அவர்கள் வளர்ச்சி படிகளில் முன்னேறியே வருகின்றனர். குடும்பத்திலும், சமுதாயத்திலும் பெண்கள் இன்றி முன்னேற்றம் காண முடியாது என்பதுதான் எதார்த்தம். இத்தகு நனி சிறந்த ஆற்றல் சால் மகளிரை மாண்புறச் செய்வதையே இக்கட்டுரை ஆய்ந்துள்ளது.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 
என்று பாடினார் பாரதி.

‘உரிமைகள் மறுக்கப்படும்போது, உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாத போது, சுதந்திரம் மதிக்கப்படாத போது, நீதி நிராகரிக்கப்படும்போது, வெற்றியின் அனுபவங்கள் ஏராளம் என்று இயல்பாக்கிக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கான  உலகத்தை  உரிமையாக்கி  உயரலாம்’ என்ற ஸ்பார்டகஸ் என்பவரின் வீரவாக்கிற்கேற்ப கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. அதில் சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரப் பெண்களின் சில ஆளுமையை இவ்வண் நோக்குவோம்.
இலட்சியத்தை அடைய தோல்வியும் வெற்றியே!

படிக்க வசதியில்லை என்பதால், பள்ளி, கல்லூரிகளுக்குப் போக முடியாமல் தவிக்கிற பெண்களுக்கு மத்தியில் நம்பிக்கை தருகிறார் பாண்டீஸ்வரி. மதுரை, வில்லாபும் பராசக்தி நகரைச் சேர்ந்தவர். தன்னை மிரட்டிய குடும்ப வறுமையை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார். மாலை நேரங்களில் மதுரை கீழ மாசி வீதிக்குச் சென்றால் அவரை பஜ்ஜியும் கையுமாகப் பிடித்துவிடலாம். தள்ளுவண்டி கடையில் பலகார வியாபாரத்தை நடத்தி, அதன் மூலம் வருமானத்தில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆவதே எனது கனவு என்கிறார். 

தினம் பத்துப் பக்கம் வாசிப்பதற்கே யோசிக்கிறவர்களுக்கு மத்தியில், தனித்த கவனம் ஈர்க்கிறார் லோகாம்மாள். இவர் மாதம் ஒரு புத்தகம் எழுதுவது என்ற கொள்கையுடன் செயல்Vபட்டு வருகிறார். கடந்த 29 மாதங்களில் 23 புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

தேசிய சாதனை படைத்த பூங்கோதை :

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பான கிராமங்களின் ஆதாரத் தொழிலான விவசாயம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளும் இதைத்தான் நிரூபிக்கின்றன. இப்படியயாரு கசப்பான சூழலில் பெரம்பலூரைச் சேர்ந்த 60 வயது பூங்கோதை, தானியங்கள் உற்பத்தியில் தேசிய சாதனை புரிந்து, வயல்தான் வாழ்க்கை என்ற நம்பிக்கை அளித்துவருகிறார்.

ஜெயிக்க  வைத்த  சணல் :

‘பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்’ என்ற சிந்தனை தற்போது அதிகரித்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த ஜெசி தனது கடின உழைப்பால் தமிழகத்தில் சணல் பொருட்கள் உற்பத்தியாளர்களில் குறிப்பிடத் தக்கவராக மாறியிருக்கிறார்.

இளம் வயதில் கணவரை இழந்தவர் திருமதி. பாரதி, 32, கணவரால் கைவிடப்பட்டவர் திருமதி. யஹலன்மேரி, 45. இருவரும் தனது கடின உழைப்பால் உயர்ந்து, இன்று ஆட்டோ வாங்கி ஓட்டுநர்களாக அவர்களே சுய தொழில் செய்து, தமது வாழ்வில் உயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு  சாதனையாளர்களின் பட்டியல் இன்று எல்லாத் துறைகளிலும் கனிசமான தளத்தை அடைந்துள்ளது. இன்றைய பெண்கள் மிகவும் திறமைசாலிகள். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் திறமைப் படைத்தவர்கள். புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களின் ஆற்றல் அளப்பரியது  என்பதை  நம்புவோம்.

விண்ணைத் தொட்ட கனவு : 

தென்னாப்பிரிக்காவில் சராசரிக் குடும்பத்தின் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தவர் ´போங்கீலி சம்போ, விமானப் பணிப் பெண்ணாக ஆக வேண்டும் என்று விரும்பியவர். உயரம் போதாது என்று ஒதுக்கப்பட்டார். அந்த நிராகரிப்பை அவர் தோல்வியாகக் கருதவில்லை. மகத்தான மற்றொரு வாய்ப்பு தனக்குக் காத்திருப்பதாகவே அவர் நம்பினார். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சிகளும் அவரைத் தொடர்ந்து வழிநடத்தின. விமானப் பணி பெண்ணாகத் தேர்வாகாதவர், சில ஆண்டுகளிலேயே, விமான சேவையை ஆரம்பித்த முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

ஹாரிபாட்டர் பல புத்தகங்களை எழுதியவர், ஜே.கே.ரவுலிங் JK Rowling) என்னும் ஒரு பெண்மணி. அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், “ The Frimge Benefits of Failure”  என்ற தலைப்பில் பேசிய உரை மிகவும் பிரபலமானது. அது புத்தகமாகவும் வெளியானது. ‘நீங்கள் உங்களது மனவலிமை பற்றியும், மனவுறுதி பற்றியும் அறியத், தோல்வியை விட சரியான சோதனை வேறென்ன இருக்க முடியும்? நீங்கள் எப்போது பின்னடைவுகளிலிருந்து மேலும் வலிமையுடனும், திறமையுடனும் எழுதுகிறீர்களோ, அப்போது  உங்களின் வாழ்க்கை தானாக வெற்றியடையும். எனவே தோல்விகளுக்குப் பிறகு கிடைக்கும் வலி மிகுந்த வெற்றியே,  உண்மையான வெற்றி. நாம் எங்கும் கற்க முடியாததை, தோல்வியே நமக்குக் கற்றுத் தரும். ஆகவே தோல்வியை பலவீனமாக கருதாமல், பலமாய் கருதினால், நமக்கு நன்மைகளே கிட்டும்’ என்கிறார்.

கனவுகள் மெய்ப்படும் காலம் :

திருமணம் என்ற இலக்கைக் கடந்து பெண்கள் தங்களுக்கான கனவுகளைக் காண வேண்டும். அதை நோக்கிய திட்டமிடலும் தொடர் பயணமும் வேண்டும். சாதனை பெண்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். தன்னை அலங்கரித்து, தொலைக்காட்சியில் தொலைத்து, இலட்சியமின்றி வாழும் வாழ்வுக்கு முடிவு காண வேண்டும். நாட்டில் சரிப்பாதி பெண்ணினம்  முடங்கிக் கிடந்தால், நாட்டின் முன்னேற்றம், பெண்ணை உயர்த்துவதோடு, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை நிச்சயம் உயர்த்தும். பெண்களே! உங்களுக்கான கனவுகளை நீங்களே காணுங்கள். அது மெய்ப்படப் பயணம் செய்யுங்கள்.

(இக்கட்டுரை எழுதும் ஆசிரியர் மேற்கண்ட தகவல்கள், தகவலாளரிடம் பேட்டி மற்றும் தொலைப்பேசி வழி சேகரிக்கப்பட்டது).

No comments:

Post a Comment

Ads Inside Post