Pages - Menu

Sunday 26 February 2017

ஞாயிறு தரும் இறைவார்த்தை, தவக்காலம் முதல் ஞாயிறு 05-03-2017

ஞாயிறு தரும் இறைவார்த்தை

- அருள்பணி.. ச. இ. அருள்சாமி,  கும்பகோணம்

தவக்காலம் முதல் ஞாயிறு    05-03-2017

தொ நூ 2 : 7 - 9, 3 : 1 - 7;   உரோ 5 : 12 - 19;    மத் 4 : 1 - 11

ஒருவரின் உடல்பலம் குறைந்தால் நோய்கள் வரும். ஒருவரின் அன்பின் பலம் குறைந்தால் தீமைகள் அங்கு தலையயடுக்கும். ஜார்ஜ் எலியட் கூறுவார், ‘சாத்தான் நம்மை சோதிப்பதில்லை. நாம்தான், சாத்தானின் திறமையை நம்மிடம் காட்ட, அதனை அழைக்கிறோம்’ என்கிறார். நம்மில் பலகீனம் என்கிறோம், பலம் என்கிறோம். பலகீனத்திற்கு வரவேற்பு தந்தால், அங்கு தீமையின் பள்ளத்தில் வீழ்கிறோம். பலத்தோடு நின்றால் தீமைகளை பள்ளத்தில் வீழச் செய்கிறோம்.

தவக்காலத் தொடக்கத்தில் இயேசுவிற்கு சாத்தான் கொடுத்த சோதனைகளை நற்செய்தி நம்முன் வைக்கிறது. உணவு, பெருமை, அதிகாரம் ஆகியவைகளில் சாத்தான் சோதனைத் தருகிறது. இச்சோதனைகளை இணைச்சட்ட நூலில் 6 - 8 இயலிலுள்ள வார்த்தைகளைக் கொண்டு இயேசு சோதனைகளை வெல்கின்றார். சாத்தான் இந்தவழி என்கிறது, இயேசு அதுவல்ல இதுதான்  உண்மையான வழி என்கிறார்.

இணைச்சட்ட நூலில் வரும் 6 - 8 இயல்கள், மோசே இஸ்ரயேல் மக்களுக்கு ஆற்றிய இரண்டாவது சொற்பொழிவில் இடம்பெறுகிறது. இச்சொற்பொழிவில் இச 6 : 4 - 25 என்ற பகுதியில், கடவுள் தரபோகின்ற நாட்டில் அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச 8 : 1- 10 என்ற பகுதியில், ‘கடவுள் பாலை நிலத்தில் கொடுத்த மன்னாவை நினைவு கூறுங்கள். எனவே உணவிற்கான கவலை உங்களுக்கு வேண்டாம். இறைவனின் வார்த்தைகளை உணவாக உண்ணுங்கள்’ என்கிறார்.

இச 6 : 5இல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு எதிராக செயல்பட அழைப்பதுதான் இயேசுவின் முன் வைக்கப்பட்ட சோதனைகள்.

‘ஆண்டவர் ஒருவரே ஆண்டவர், உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும்  உன் கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்வாயாக’.  இதயம் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இழுத்து செல்லும் உள்ளுணர்வு. உள்ளம் என்பது வாழ்வு. வாழ்வையே தியாகம் செய்யும் செயலும் இதில் அடங்கும். ஆற்றல் என்பது  உலக செல்வங்கள், முழு இதயம், முழு உள்ளம், முழு ஆற்றல் என்பவை முழு அன்பைத்தான் குறிக்கின்றன. முழு அன்பின் நிலையிலிருந்து குறைந்து செல்ல அழைப்பதுதான் சோதனை. பால்பர் என்பவர் கூறுவார், ‘வாழ்வு என்பது தொடர்ந்த பயணம். நம் பயணத்தில் நன்மை. தீமை ஆகியவைகளுக்கிடையில் ஒரு சுவர் உள்ளது. அச்சுவரில் உட்காருவது நம் பயணம் அல்ல. ஏதாவது ஒரு வழியில் சென்றுதான் ஆகவேண்டும். அந்த வழியில் செல்ல அதனுள் சென்றால் அதுவும் முடியும்’ என்பார்.



No comments:

Post a Comment

Ads Inside Post