Pages - Menu

Saturday 4 February 2017

பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு 5 - 2 - 2017,

ஞாயிறு தரும் இறைவார்த்தை

பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு      5 - 2 - 2017

எசா 58 : 7 - 10, 1 கொரி 2 : 1 - 5, மத் 5 : 13 - 16

மலைப்பொழிவில் இயேசு பேறுகளுக்கு அடுத்தாற்போல் தன் சீடர்களை உப்பு, ஒளி ஆகியவைகளுக்கு ஒப்பிட்டு பேசுகிறார். 

கிறிஸ்துவ வாழ்வு, தனக்காக மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கு பயனளிப்பதற்காகவும் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கூறுவதற்காகத்தான், இயேசு, தன் சீடர்களை உப்பு, ஒளி என்ற பொருள்களுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.
உப்பு : 
இயேசு கிறிஸ்து  உப்பையும், ஒளியையும் தன் சீடர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகளாக பல்வேறு இடங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் சொல்லியிருந்தாலும்கூட மத் 5 : 13 கூறுவதன் நோக்கம், சீடத்துவத்தில் உப்புதன்மை இன்றியமையாத் தன்மையாக இருப்பது தான். மத்திய கிழக்கு பகுதியில் முதல் நூற்றாண்டில் உப்பை இரண்டு காரணங்களுக்காக பயன்படுத்தினர்.

1. பதப்படுத்தும் வசதிகள் இல்லாத காரணத்தால் உப்பை உணவை வீணாகாமல் பாதுகாக்க பயன்படுத்தினர். குறிப்பாக இறைச்சி பண்டங்கள் பாலைவனப்பகுதியில் எளிதில் வீணாகிவிடும் என்பதால் உப்பை பயன்படுத்தினர். இயேசுவில் நம்பிக்கை கொண்டோரும் ஏறக்குறைய உப்பின் பாதுகாப்பு தன்மையைப் போல, தீமையிலிருந்து உலகையும், உலகம் சார்ந்த மனிதர்களையும் பாதுகாக்கும் காரணிகளாக இருக்க வேண்டும்                                                                     (தி. பா 14 : 3; உரோ 8 : 8).
இரண்டாவதாக  உப்பு : 

தான் இருக்கின்ற உணவிற்கு சுவையை ஊட்டக்கூடியதாக இருக்கின்றது. இதைப் போலவே இயேசுவின் சீடராக வாழ விரும்பும் எவரும், தான் இருக்கும் சமுதாயத்தை சுவைமிக்கதாகவும், ஆவியாரின் வழிகாட்டுதலில் செயல்படும் குழுமமாகவும் மாற்ற வேண்டும். பகைமை உள்ள இடத்தில் சமாதானத்தைக் கொடுக்கவும், சோகம் உள்ள இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், வெறுப்பு உள்ள இடத்தில் கடவுளை நிலைநாட்டவும், தீயவற்றை நன்மையால் நிரப்பவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒளி :

கிறிஸ்துவோடு இணைந்து பயணிப்பவர்களின் நற்செயல்கள் அனைத்தும் ஒளியைப் போல பிறர் கண்ணுக்கு பிரகாசமாக ஒளிரவேண்டும் என்பதுதான் ஒளியின் உவமை கூற்று. தன் கடமையை செய்பவரின் பலன், மலைமேல் இருக்கும் நகராகவும், மரக்காலின் மேல் வைக்கப்பட்ட விளக்கு போலும், அனைவருக்கும் வெளிச்சம் தரும். இருளில் படர்கின்ற ஒளி, இருள் தன்மையை போக்குவதுபோல, பாவம் நிறைந்த மனிதர் வாழ்வில், நம்பிக்கையாளர்களின் நட்பு இருளில் ஒளியை போன்றதாக அமையும்.

உங்களில் நற்செயல்களை பிறர் காண்பாரானால், கண்டிப்பாக விண்ணகத்தில் உள்ள தந்தையை அவர்கள் போற்றிப் புரிந்துகொள்வார்கள். கனியை கொண்டு மரத்தை அறிவது போல, கிறிஸ்தவனின் செயலைக் கொண்டு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்.


மாற்கு 9 : 50இல் உப்பின் தன்மை மறைந்து போவது குறிப்பிடப்படுகிறது. இது சமாதானத்தில் குறைபாட்டால்தான் ஏற்படுகிறது. உப்பு தன்மையை தன்னகத்தே கொண்டு, ஒருவரோடு ஒருவர் சமாதானத்தோடு வாழும்போது சுவையான வாழ்வு நம்மால் வாழ முடியும். லூக் 14 : 34 ‡ 35. உப்பின் மறுமுனை செய்தியாக கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிய மறுக்கின்ற போதும், சிலுவையை சுமந்து,  இயேசுவை முழுமனத்தோடு பின்தொடர மறுக்கின்ற போதும் உப்பு தன்மை தோல்வியை சந்திக்கின்றது எனலாம்.

கிறிஸ்தவ வாழ்வு, சிறிய காரியங்களை பெரிய அளவில் செய்வதுதான் என்பதை இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. நம் ஒளியான வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வுக்கும், வெளி உலக வாழ்விற்கும் நடக்கின்ற மாபெரும் போராட்டம். இழப்பை எண்ணாமல் ஒளியை காக்க முயற்சித்தால் பிறருக்கு பயனுள்ள எளிமையான, கீழ்ப்படிதலுள்ள, ஒழுக்கமான கிறிஸ்தவ வாழ்வை உப்பாகவும், ஒளியாகவும் நம்மாலும் வாழ்ந்துக் காட்ட இயலும். பெற்றோர், ஆசிரியரின் முன்மாதிரிகையான செயல்பாடுகள்தான் மாணவர்களின் மனதில் நிலைத்திருக்கின்றன. நம் நற்செயல்களால் மற்றவர்களுக்கு நல்வழி காட்டுவோம். 

உங்கள் ஒளியை மற்றவர்கள் பார்க்க மறுத்தாலும் 
ஒளியின் வெப்பத்தையாவது அவர்கள் உணர செய்யுங்கள் 
- ரொனால் ரீகன்.

நல்லமுன்மாதிரிகை, நல்ல அறிவுரையை விட இரண்டு மடங்கு வல்லமைவாய்ந்தது - சிசரோ.



No comments:

Post a Comment

Ads Inside Post