பொதுக்காலம் 7ஆம்ஞாயிறு   19-02-2017
லேவி 19 : 1 ‡ 2, 17 - 18;   1 கொரி 3 : 16 - 23,  மத் 5 : 38 - 48
 1994 இல் ரூவாண்டா நாட்டில், அந்நாட்டு ஜனாதிபதி சென்ற விமானம், எதிர் குழுவினரால் ராக்கட் வீசி வீழ்த்தப்பட்டது. இதனால் ஜனாதிபதியின் இனத்தவர் எதிர் இனத்தவரான டுட்சி இனத்தவர் 10 லட்சம் பேரை கொன்றனர். சுமார் 2.5 லட்சம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
பழிக்குப்பழி வாங்கும் விலங்கியல் குணம் நம் எல்லோரிடமே  உள்ளது.
 மற்றவரை அழிக்கும் இயல்புக்கள் நம்மிடம் உள்ளது. அதிலிருந்து எழுந்ததுதான் பழிக்குப்பழி செய்யும் சட்டமும், திட்டமும். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்கின்ற யூத சட்டம் பழைய ஏற்பாட்டிலே மூன்று இடங்களில் குறிப்பிடப்படுகின்றது (வி ப 21 : 24, லேவி 24 : 20, 19 : 21). சிலர் இந்த சட்டத்தை இரத்ததாகம் கொண்ட சட்டம் என்றும் ஈவு இரக்கமற்ற சட்டம் என்றும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இரக்கத்தின் துவக்கமே இந்த சட்டங்களில் இருந்துதான் துவங்குகிறது எனலாம். பழிக்குப்பழி என்கின்ற இந்த சட்டம் வரைமுறையின்றி சில இடங்களில் நிறைவேற்றப்பட்டது. ஒருவர் தவறு செய்தால், அவர்களுடைய இனமே, கிராமமே அழிக்கப்பட்டது. இந்த கொடூர செயல்பாடு நாளடைவில் மாற்றப்பட்டது.
 ஒருவர் மற்றவரின் கண்ணை காயப்படுத்தினால் அடுத்தவர் கண் மட்டுமே எடக்கப்படவேண்டும். அது மட்டுமல்லாமல், தண்டனைக்குரியவர் மட்டுமே பாதிக்கப்படுவர். குற்றம் செய்தவர் குடும்பத்தினருக்கு தண்டனை கொடுக்கப்படவில்லை. ஆனால் இயேசு இச்சட்டத்தையும் தாண்டி செயல்படுவதுதான் இரக்கத்தின் செயல் என்று 5 : 39இல் குறிப்பிடுகின்றார். இங்கு இயேசு நான்கு வகையான செயல்பாடுகளை முன் வைக்கின்றார்.
ஒன்று : ஒருவர் உன் வலக்கன்னத்தில் அறைந்தால்....
 பொதுவாக உலகில் உள்ள மனிதர்களில் 90% பேர் வலக்கை பழக்கம் உடையவர்கள். ஒரு மனிதரை எதிரே நிற்க வைத்து அறைந்தால்கூட அவரது இடக்கன்னத்தில்தான் அறைய முடியும். வலக்கன்னத்தில் அறைய வேண்டும் எனில் ஒரு மனிதர் தனது கரத்தின் புறப்பகுதியைப் பயன்படுத்த வேண்டும். யூத சமுதாயத்தில் அறை கொடுப்பது  என்பது இழிவான, ஏற்றுக்கொள்ள முடியாத, அவமானமிக்க செயல். அதுவும் புறம் கையால் என்றால் வெகு அவமானமிக்க செயல். இயேசு சொல்வது பழிவாங்கும் வழக்கை விட்டொழிக்க வேண்டும் என்பதே. அளவு இல்லாமல் அன்பு செய்வது என்பது, தான் காயப்பட்டாலும், பிறர் காயம் அடைய கூடாது என்கின்ற மனநிலையாகும். இரண்டாவது : ஒருவர் சட்டையை கேட்டால், மேல் அங்கியையும் சேர்த்து.... ஒருவர் பந்தயத்தில் தன்னுடைய சட்டையை இழந்தால், அவனுடைய மேலாடையையும் எதிராளி கேட்பான் எனில், அன்று இரவு இழந்தவர் தூங்குவதற்கு போர்த்திக் கொள்ள வென்றவர் அந்த மேலங்கியை கொடுக்க வேண்டும் என்பது யூத சட்டம். அதாவது வென்றவரக்கு மேலங்கி மேல் முழு உரிமை இல்லை என்பதுதான். ஆனால் இய¼சுவின் எதிர்பார்ப்பு இதையும் மிஞ்சுகிறது. இயேசுவின் பொருட்டு துன்பத்தை அனுபவிப்பவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற சூழ்நிலையிலும் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்.
மூன்றாவதாக : ஒரு மைல் தூரம் நடக்கச் சொன்னால், அவருடன் இரண்டு ....
 யூதர்களை உரோமையர்கள் ஆட்சி செய்த காலத்தில், உரோமையர்கள் யூதர்களை ஒரு மைல் தூரம் சுமைகளை தூக்க செய்வதற்கு அதிகாரம் பெற்றிருந்தனர். ஒருவர் கேட்டதற்கு மேலாகவும் செய்ய தயாராக இரு;க்க வேண்டும் என்பது இயேசுவின் சீடத்துவத்தின் முக்கிய பாடம். ஒரு தாழ்ச்சி நிறைந்த சேவகனை போல் பிறருக்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவும் கரங்கள் கொண்டவர்களாக இருங்கள் என்பதே அழைப்பு.
நான்காவது : உங்களிடம் கேட்பவருக்கு கொடுங்கள், கடன் கேட்பவருக்கு முகம் கோணாதீர்கள் .... 5 : 42
 ஏழு வருடத்திற்கு ஒருமுறை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது (இச 15 : 7 ‡ 11). கடன் வாங்குபவர்கள் இதை மிகவும் விரும்பினார்கள். கடன் கொடுப்பவர்களுக்கு இது லாபகரமான சட்டம் இல்லை. கடன் கொடுப்பதற்கு பெரும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் எப்போது ஒருவர் தேவையில் உழல்கிறாரோ அவருக்கு பெருந்தன்மையோடு உதவி செய்ய வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசுவின் நாட்களில் பணம் பெற விரும்பும் கடனாளிகள் தங்கள் உணவிற்காக, பிழைப்பிற்காக பணத்தை கடன் பெற்றனர். இத்தகையோரிடத்தில் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார்.
 பாராபட்சம் இல்லாமல் இருக்கும் தந்தையை போல் பாரபட்சம் காட்டாத சீடர்களால் மட்டுமே, எதிரிகளையும் அன்பு செய்யக்கூடிய ஆற்றலும் அன்பும் கிடைக்கும்.
 பழிவாங்க துடிக்கும் போது, இரண்டு கல்லறை குழிகளை தோண்டிவிடு. ஒன்று உன் எதிரிக்கு. மற்றொன்று உனக்கு
- டக்லஸ் ஹோர்ட்டன்.
- டக்லஸ் ஹோர்ட்டன்.
கண்ணுக்கு கண் என்ற சட்டம் உயிர்பெற்றால்  உலகில் எல்லோருமே கண் இழந்தவராய் நிற்பர் - காந்தி.
 
No comments:
Post a Comment