Pages - Menu

Saturday 25 February 2017

நல்ல மனிதர்களும் உண்டு

நல்ல மனிதர்களும் உண்டு

பாபநாசம், கோடுகிளி என்ற கிராமத்திற்கு கார் ஒன்றில் சென்றேன். அதன் ஓட்டுநர் ஓர் இளைஞர். அவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். யாரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால் பணத்தை பற்றி கேட்பதில்லை. முதலில் நோயாளியை மருத்துவ மனையில் சேர்த்திட எந்த மருத்துவமனை என்று கேட்டு அங்கு அழைத்துச் செல்வேன். பிறகு அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்வேன் என்றார், இந்த மனநிலை எப்படி தனக்கு வந்தது என்றும் விளக்கினார்.

அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. சாகும் நிலையில் இருந்தார். அவரை தஞ்சாவூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல டாக்சி வாகனங்களை கேட்டிருக்கிறார். வழியில் அவர் இறந்துவிடுவார் என்று டாக்சி ஓட்டுநர் அனைவரும் அவர் தந்தையை எடுத்து செல்ல மறுத்துவிட்டனர். பிறகு ஆட்டோ பிடித்து அழைத்து சென்றார். பிறகு இவர் டாக்சி ஓட்டுநராக ஆனபிறகு தான் சந்தித்த அனுப வம் முள்ளாக குத்தியிருக்க, மருத்துவத்திற்காக யார் டாக்சி கேட்டாலும் உடனடியாக வண்டி எடுத்துக் கொண்டு செல்வேன் என்றார். மற்றொரு அனுபவத்தை யும் கூறினார். அவரின் 2 வயது பையனுக்கு கிட்னியில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு நண்பர் ஒருவர் இரண்டு  லட்ச ரூபாய் கொடுத்து  உதவினார். பிள்ளைக்கு இந்த கிட்னி பிரச்சனை அவரின் மனைவியிடமிருந்த தைராய்டு காரணமாகத் தான் ஏற்பட்டது என்று கூறினர்.

ஆனால், தன் மனைவிக்கு தைராய்டு நோய் இருப்பது திருமணத்திற்கு முன் தெரியும். தைராய்டு நோயினால் குழந்தை பிறப்பில் சிக்கல் உண்டாகும் என்றும் தெரியும். இருப்பினும் ஒரு பெண்ணுக்கு நாம் வாழ்வளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அவர்களுடன் உறவு உண்டாகிறது. ஏழைகளின் உறவு உருக்கமானது, நெருக்கமானது என்றார்.

No comments:

Post a Comment

Ads Inside Post