Pages - Menu

Wednesday 27 July 2016

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம்

- திரு. எம். சி. குமார், எம். ஏ., எம்.பில்., 
விரகாலூர்
மெய்யுணர்ச்சிப் படலம் தொடர்ச்சி:

கிறித்தியான் குடும்பமாகிய தாமும், இங்கு வாழும் இந்த நாட்டு மக்களும் நீதி தவறாத தூய்மையான இறைவனைப் போற்றாமல், அவர் வார்த்தையைக் கேளாமல் தீய செயல்களைத் துணிந்து செய்து வருகின்றோம். அழியும் சாத்தானுக்கு அடிமையாகி, மரணத்திற்கும் துணிந்து அதில் நிலைத்து மிகவும் கொடியவரானோம். உலகில் உள்ள மக்கள் ஏளனம் செய்ய அதனைப் பற்றிய சிந்தனையற்றவர்களானோம். இறைவனின் பெயரை வீணாக வழங்கினோம். வீணர்களுடன் சேர்ந்து வீணர்களானோம். பெருமை மிகுந்த ஓய்வு நாளை உயர்வாக எண்ணி இறைவனை வழிபடாமல் வீண் காலம் கழித்தோம். பெற்றோரைப் பாதுகாக்கத் தவறினோம். நாங்கள் எவர்க்கும் நன்மையைச் செய்யவில்லை. நன்மை செய்வதற்கு ஏற்ற பண்பும் எங்களிடமில்லை. செய்ந்நன்றி மறந்த கொடியவரானோம். இழிவும், களவும், பொய்யும், புரட்டும், வஞ்சனையும், பொறாமையும், தீராப்பகையும் எப்பொழுதும் உடையவராக உள்ளோம். பாவத்தொழிலைப் பயிற்சி செய்து எப்பொழுதும் வாழ்ந்து வருகின்றோம்.

இறைவன் நம்மிடம் ஒப்படைத்த நன்மை தரும் பொருளைப் பாதுகாத்துப் பெருக்கிக் கொள்ளாமல் அதனை மண்ணில் புதைத்து வைத்தோம். இறைவனே வந்து நம்மை கணக்கு கேட்பாரானால், நாம் கொடியவர் என்று முடிவு செய்யப்பட்டுத் தண்டனை பெறுவோம். இறைவன் தந்த உயர் வாழ்வை விரும்பாமல், நாட்டில் வெறுக்கத் தகுந்த வாழ்வையே விரும்பி அலைகின்றோம். நம் மனச்சான்றை மழுங்கச் செய்து நாமே அழித்துவிட்டோம். இது நம்மை நெருங்கி வரும் அழிவையுணராது  உறங்கும் செயலாகும். இவ்வுலகில் பிறந்த நோக்கத்தையும், பயனையும் ஆராய்ந்து பாராமல் வாழும் மனிதர் அவற்றை அடைய முடியாது. ஒருவர் தன்னையும், தன் நிலைமையையும், இறைவனையும், அவருடைய விருப்பத்தையும் அறிந்து வாழ்தல் வேண்டும். பின்னர் அறிவோம் என்பது அறிவீனமாகும். நான் வருந்துகின்ற அளவுக்கு நீங்கள் வருந்தாமல் இருப்பதற்குக் காரணம் தெரியவில்லை. இறைவன் வெளியிட்ட அறிவிப்பைக் கேட்டும், இன்னும் இந்த நாட்டிலிருந்து அழிவது நன்மை தராது என்ற உண்மையை உங்களுக்குச் சொன்னதற்கு என்னைப் பைத்தியம் கொண்டவன் என்று சொல்லுகிறீர்கள், தீமையோடு வாழ்கின்றவர்களே! இப்பொழுதே மனம் திரும்புங்கள், இல்லாவிட்டால் கொடுந்துன்பங்கள் உங்களை வந்து சேரும்.

மோசேயின் மூலம் இறைவனுடைய செய்திக்குச் செவி கொடுக்காமல் எகிப்து நாடு பத்து வகையான துன்பங்களால் அவதியுற்றது. இறைமக்களுக்குத் துன்பந்தரத் தொடர்ந்த எகிப்து மன்னன் பாரோனும் அவனுடைய படைவீரரும் செங்கடலால் மூடப்பட்டு அழிந்தனர். எனவே அழிவு வரும் முன்னர் தங்களைக் காத்துக் கொள்ளுவதே அறிவுடைமையாகும்.
“நான் யார்? இம்மண்ணுலகில் ஏன் பிறந்தேன்? இவ்வளவு நன்மையே செய்த இறைவனுக்கு என் கடமை என்ன. அதற்காக நான் என்ன செய்தேன்? எனக்கு வரக்கூடிய பயன் என்ன என்பதைப் பெரிதும் ஆராய்ந்து பார்க்கும் சிந்தனையில்லாமல் திரியும் மக்களின் பிறப்பும் ஒரு பிறப்பாகுமா? உலகமும், உலகிலுள்ள பொருள்களும் யாருடையவை? இறைவனுடைய மாட்சி மிகுந்த பண்புகள் யாவை? அப்பண்புகளை நாம் பெறவழி என்ன? என்று ஆராயாத மனிதர் மண்ணுக்குப் பாரமேயாவர்”.

“நான் கூறிய இந்த வார்த்தைகள் இறையருளால் நான் பெற்று வைத்துள்ள இந்தப் புத்தகத்தில் உள்ளன. உங்களுக்கு விருப்பமானால் தருவேன். வெறுத்திடாமல் கருத்தோடு படித்து வாழ்வு பெறுங்கள். வரும் நிகழ்ச்சிகளைச் சிந்திப்பீர்களானால், சிறிதும் காலம் தாழ்த்தாமல் இந்த நாட்டைவிட்டு இப்பொழுதே விரைந்து ஓட வேண்டும். அழிவதற்குத் துணிவீர்களானால் இங்கேயே தங்கியிருங்கள்” என்று கிறித்தியான் கூறினான். கிறித்தியான் கூறிய கருத்துக்கள் எல்லாம் “பெரிய கல்லில் மோதிய பந்தைப் போல்” ஆனது. அறியாமையாகிய இருளில் மூழ்கிக் கிடக்கின்ற மக்களின் மனதில் நிலைகொள்ளவில்லை. மிகுந்த வெளிச்சம் கொடுக்கும் விளக்கை ஏற்றினாலும் கண் தெரியாத குருடருக்கு அதனால் பயனில்லையன்றோ! மக்கள் அனைவரும் கிறித்தியான் மீது வெகுண்டெழுந்து அவமதித்தனர். “உன்னையே மேலான அறிஞனாக எண்ணும் உன்னைப் போன்ற பித்தன் இவ்வுலகில் இல்லை” என்றனர். “பெண்ணையும், பொன்னையும். மண்ணையும் வெறுத்துவிட்டால் இவ்வுலகில் பெறக்கூடிய இன்பம் வேறு என்ன உண்டு? முன்னர் இவ்வாறு கூறியுள்ளவர்களை அடித்துள்ளோம். பெற்ற பிள்ளைகளையும், வாழ்க்கைத் துணையாகக் கொண்ட மனைவியையும், ஆபத்தில் உதவும் நண்பர்களையும் வெறுக்கின்ற இவன் பேய் ஆவான். பித்தம் மிகுதியால் பிதற்றுகின்றான்” என்றனர். கிறித்தியானுடைய மனைவி, “என் கணவருக்குப் புத்திமாறாட்டம் வந்து விட்டது” என்று மனம் வருந்தினாள். கவலை கொண்டாள், கண்ணீர் வடித்தாள். பிள்ளைகள் ஏளனம் செய்தனர்.

இந்நிலைகளையயல்லாம் கண்டு, கேட்டு அறிந்த  கிறித்தியான், “எல்லா இடங்களிலும் இருக்கின்ற, எல்லாவற்றையும் காண்கின்ற, எல்லாவற்றையும் அறிகின்ற இறைவா! எல்லா உலகங்களையும் ஆட்சி செய்கின்றவர் நீர். என்னை சூழ்ந்திருக்கின்ற, ஆராயும் திறன் இல்லாத இவர்கள் நன்னெறியை அறியாமல் செய்கின்ற குற்றங்களை எல்லாம் பொருத்தருள்வீராக” என வேண்டினான். வீட்டை விட்டு வெளியேறினான். தனிமையான இடத்திற்குச் சென்று திருமறையைத் திறந்து படித்து மனம் மகிழ்ந்தான்.                                                                                                                                 (தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post