Pages - Menu

Monday 25 July 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

5. அன்பின் வடிவம் பணிவு
 அருள்பணி. மகுழன்
பூண்டி மாதா தியான மையம்

அரசர் ஒருவர் இருந்தார். அவர் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தார். மக்களை வீணாக சிறையில் அடைப்பதும் அவர்களை துன்புறுத்துவதும் அவர் பொழுதுபோக்கு. ஒருமுறை அவர் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். ஒரு புள்ளிமானைக் கண்ட அவர் அதனைத்  துரத்திச் சென்றார். ஆனால் அந்த மான் அவரைவிட வேகமாக ஓடிவிட்டது. வழிதவறிய அவர் காடடுவாசிகளிடம் மாட்டிக்கொண்டார். காட்டுவாசிகளின் மொழி அவருக்குப் புரியவில்லை. தான் அரசர், அதிகாரம் மிகுந்தவர் என்பதைச் சுட்டிக் காட்ட அவர்களிடம் கோபமாகப் பேசினார். அவர்களை அடிக்க முற்பட்டார். காட்டுவாசிகளுக்கு கோபம் வந்துவிட்டது. அவரை அடித்துத் துவைத்தனர். ஒருவாரம் அவருக்கு உணவு கொடுக்கவில்லை. பசியால் வாடிய அவர் குரலைத் தாழ்த்தினார். அன்பாகப் பேச ஆரம்பித்தார். காட்டுவாசிகளின் கோபம் தணிந்தது. அவருக்கு வேண்டிய உணவைக் கொடுத்தனர்.

ஒரு முறை காட்டுவாசிகள் மத்தியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. தன் ஆடையில் இருந்த விலை உயர்ந்த மாணிக்கக் கற்களை மாலையாகக் கோர்த்து அந்த தம்பதியினருக்கு அணிவித்தார். அதைக் கண்ட காட்டுவாசிகளின் மனம் மாறியது. காட்டுக்குதிரை ஒன்றை பிடித்து நன்கு பழக்கப்படுத்தி அரசரிடம் கொடுத்தனர். அவரும் மனமாற அவர்களை வாழ்த்திவிட்டு அரண்மனைக்குச் சென்றார்.

அரசரிடம் இருந்த ஆணவம் மறைந்ததால் மக்களைக் கொடுமைப்படுத்துவதற்குப் பதிலாக மக்களுக்கு நற்பண்புகளால் பணியாற்றினார். அரசரின் மனமாற்றத்தைக் கண்ட மக்களும் அரசரை அன்பு செய்ய ஆரம்பித்தனர்.

பணிவு என்பது ஓர் அன்பின் பண்பு. அன்பு செய்வதில் பல வடிவங்கள் இருக்கின்றன. நாம் ஒருவரை அன்பு செய்யும் போது அவருக்கு நன்மை செய்கிறோம். அவரைப் பாராட்டுகிறோம். அவரிடம் பொறுமை காக்கிறோம். அவரை மன்னிக்கிறோம். அவருக்கு ஆறுதல் கூறுகிறோம். அதைவிட அவரிடம் பணிவாக நடந்து கொள்கிறோம். நாம் எல்லாரிடமும் பணிவையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தி பிறரை அன்பு செய்கிறோம் என்பதை தெளிவுபடுத்துவோம்.

அன்பைப் பற்றிய சில சிந்தனைகள் :

1. உலகில் சிலர் பணத்தைத் தேடுகிறார்கள்.
சிலர் நேரத்தைத் தேடுகிறார்கள்
சிலர் அமைதியைத் தேடுகிறார்கள்
சிலர் இன்பத்தைத் தேடுகிறார்கள்
சிலர் நண்பர்களைத் தேடுகிறார்கள்
சிலர் உறவுகளைத் தேடுகிறார்கள்
ஆனால் உண்மை என்னவென்றால் அடிப்படையில் அனைவரும் அன்பைத் தேடுகிறார்கள்.

2. நாம் சில நேரங்களில் அன்பு செய்வதை அன்பு செய்கிறோம். சில நேரங்களில் அன்பு செய்யப்படுவதை அன்பு செய்கிறோம். எல்லாரும் உங்களை அன்பு செய்ய வேண்டுமா? அதற்கு ஒரே வழிதான் இருக்கு. பிறரை அன்பு செய்யுங்கள்.

3. எப்போதும் அன்பு செய்யுங்கள். எல்லாரையும் அன்பு செய்யுங்கள். காரணம், அவர்கள் நல்லவர்கள் என்பதற்காக அல்ல, நீங்கள் நல்லவர்கள் என்பதற்காக.

4. கவலையைக் கைவிடுங்கள். புன்னகையை அதிகரியுங்கள். விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறருக்கு செவி கொடுங்கள். மன்னிப்பை வழங்குங்கள். சுருக்கமாகச் சொன்னால் வெறுப்பை அகற்றுங்கள். அன்பை அணிந்து  கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சியைக் கைகொள்வீர்கள்.

5. நீங்கள் ஒரு மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உறங்கச் செல்லுங்கள். நீங்கள் ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? உல்லாசப்பயணம் செல்லுங்கள். நீங்கள் ஒரு மாதம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? திருமணம் செய்யுங்கள். நீங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? பிறரை அன்பு செய்யுங்கள்.

6. சில அழகான விட யங்கள் :

பூக்கள் : குழந்தையின் சிரிப்பு.
வானவில் : மழையின் போது மண் வாசனை
காலைப்பனி : அருவி
இனியச் சொற்கள்: இவை எல்லாவற்றையும்விட மிகவும் அழகானது எல்லோரிடத்திலும் அன்பு.அன்பு செய்ய எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் அன்பு செய்யுங்கள். ஆனால் அன்பு செய்ய எப்பொழுதும் முடியும் என்பதையும் மனதில் வையுங்கள் - தலாய் லாமா. (தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post