Pages - Menu

Wednesday 27 July 2016

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

-அருள்சகோ. றூ. பவுலின் மேரி FSAG, கும்பகோணம்

ஆகஸ்ட்- 4, தூய மரிய வியான்னி (மறைப்பணியாளர்)

இப்புனிதர் பிரான்சு நாட்டில் லயன்ஸ்  நகருக்கருகில் கிபி 1786இல் பிறந்தார். இவர் கல்வி கற்பதில் திறமையற்றிருந்தார்.  ஆனால்  இவரின் ஆழ்ந்த பக்தி வாழ்வினால் குருவாகி பிறகு ஆர்ஸ் நகரின் பங்குதந்தையானார். மக்களை ஒப்புரவு  அருட்சாதனத்தின் வழியாக  ஆற்றுபடுத்தினார். ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம்  பாவசங்கீர்த்தனம் கேட்பார். ஏழைகள் மீது இரக்கம்  உள்ளவர். தேவபராமரிப்பு என்ற விடுதியை தொடங்கி  80 பேருக்கு ஒவ்வொரு நாளும்  உணவு  கொடுத்து வந்தார். வெகு குறைவாக உணவு அருந்தி, குறைந்த நேரமே உறங்குவார். இவர் 1859இல் ஆகஸ்ட் 14ஆம் நாள் இறந்தார். இவர் பங்கு குருக்களின் பாதுகாவலராகத் திகழ்கிறார்.

ஆகஸ்ட்- 6  ஆண்டவரின் உருமாற்றம்

இயேசு பாடுபடுவதற்கு முன் கலிலேயாவிலிருந்து இராயப்பர், யாகப்பர், அருளப்பர் மூவரையும் அழைத்துக் கொண்டு தாபோர் மலைக்குச் சென்று உருமாறினார். இயேசுவின் முகம் சூரியனைப் போல் பிரகாசமாகவும், உடைகள் பனிக்கட்டியைப் போல் வெண்மையாயும் இருந்தன. மோயீசனும், எலியாசும் இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தபோது இராயப்பர் மூன்று கூடாரங்கள் அமைக்கலாம் என்றார். அப்போது ‘இவரே நம் அன்புக்குமாரன், இவருக்கு செவிசாயுங்கள்’ என்ற குரல் ஒலித்தது. தாபோர் மலையில் ஆண்டவரின்  மகிமையைக் கண்ட இவர்கள், ஒலிவ தோட்டத்தில் ஆண்டவர் பட்ட ஆன்மீக போராட்டத்திலும் உடனிருந்தார்கள். துன்பத்தை இவற்றை பொறுமையுடன் சகித்தால் பின்னர் நித்திய காலத்துக்கும் இயேசுவின் அழகைப் பார்த்து மகிழலாம் என்ற நினைவு அவர்களுக்கு துன்பத்தைச் சகிக்க திடன் அளித்தது. இவ்விழா 11ஆம் நூற்றாண்டில் மேற்றிசை நாடுகளில் பரவத் தொடங்கி கிபி 1457இல் உரோமை விழா பட்டியலில் இடம் பெற்றது.

ஆகஸ்ட் - 8,  தூய தோமினிக் - மறைப்பணியாளர்

ஸ்பெயின் ஓஸ்மா மறைமாவட்டத்தில் இலரூகாவில் கிபி 1170இல் பிறந்தார். பலேன்சியாவில் இறையியல் கற்றார். ஓஸ்மா நகரத் திருக்கோவிலில் பணிபுரிந்த மறைப்பணியாளர்களில் இவரும் ஒருவரானார். ஆல்பி ஜென்சியருக்கு எதிராகப் போராடினார். தம் மறையுரைகளாலும், வாழ்க்கைச் சான்றாலும் நற்பெயர் பெற்றார். இப்பணியைத் தொடர்ந்து செய்ய தம்மோடு தோழர்களை இணைத்து போதகர்களின் சபையை நிறுவினார். இத்தாலியில் பொலோஞ்ஞோ என்ற இடத்தில் 1221இல் ஆகஸ்ட் 8ஆம் நாள் இறந்தார்.

ஆகஸ்ட் - 10    புனித லாரன்ஸ்       - திருத்தொண்டர், மறைசாட்சி - 258.

இவர் உரோமைத் திருச்சபையின் திருத்தொண்டர். மன்னன் வலேரியன் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய காலத்தில் திருத்தந்தையை பிடித்து கொலைகளத்திற்கு கொண்டு போகும் போது, லாரன்சும் அழுது கொண்டு பின்சென்றார். அக்காலத்தில் உரோமை அரசன் ‘திருச்சபையின் திரவியங்களையயல்லாம் எனக்கு காட்டு’ என்றான். ‘மூன்று நாட்களுக்குள்ளாக காட்டுகிறேன்’ என்று  ஏழைகளைத்  திருச்சபையின் திரவியங்களாகக் காட்டினார். உடனே அதிகாரி கடும் கோபத்துடன் அவரை இரும்பு அடுப்பில் வைத்து எரித்துக் கொல்லும்படி உத்தரவிட்டான். இறையருளால் இவர் வேதனையை வீரத்தோடு சகித்து மகிழ்ச்சியுடன் இருந்தார். மக்கள் மனத்திரும்பவும் கிறிஸ்தவ விசுவாசம் உலகமெங்கும் பரவவும், கடைசி மூச்சு விடும்வரை ஜெபித்து 258இல் உயிர் துறந்தார். இவரது சாவைக் கண்ட பல அதிகாரிகள் திருமறையை ஏற்றுக் கொண்டனர்.

ஆகஸ்ட் - 11          புனித கிளாரா - 1194 - 1253

புனித கிளாரா இத்தாலியில் அசிசி நகரில் கிபி 1193இல் பிறந்தார். 1212இல் தவக்காலத்தில் புனித அசிசி பிரான்சிஸ் இவரது ஊர்க்கோவிலில் மறையுரைகள் நிகழ்த்தினார். துறவியாக வேண்டுமென்று தீர்மானித்து, குருத்து ஞாயிறன்று இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் புனித பிரான்ஸிசிடம் அடைக்கலம் புகுந்தாள். அவர் இவருக்குத் துறவற உடை அளித்தார். பெற்றோர் தேடி வருகையில் (பல போராட்டத்தின் மத்தியில்) ‘என்னை கடவுள் தமது சேவைக்கு அழைத்திருக்கிறார். இயேசுவைத் தவிர வேறு எவரும் வேண்டாம்’ என்று கூறிவிட்டாள். இவரைக் கொண்டு புனித பிரான்சிஸ் ஒரு புதிய கன்னியர் சபையைத் தொடங்கினார். மிக எளிமை வாழ்வு நடத்தினார். எனினும் பிறரன்பு பணிகளிலும், இறையன்பு செயல்களிலும் சிறந்து விளங்கினார். 1253இல் ஆகஸ்ட் 11ஆம் நாள் இத்தாலியில் அசிசி நகரிலேயே இவர் இறந்தார்.

ஆகஸ்ட் - 15          தூய கன்னி மரியின் விண்ணேற்பு

1954ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர், கன்னி மரியாள் விண்ணகத்திற்கு ஆன்மாவோடும், உடலோடும் எடுத்து செல்லப்பட்டார் என்ற உண்மையை விசுவாச சத்தியமாக அறிவித்தார். இவ்விழா ஆரம்பத்திலிருந்து பலவித பெயர்களைக் கொண்டிருந்திருக்கின்றது. ‘விண்ணக பிறந்த நாள்’, ‘துயில் கொள்ளல்’, ‘சென்று விட்டார்’, ‘விண்ணேற்பு’ என்று பலநாடுகளில் கொண்டாடப்பட்டு கிபி 690இல் இங்கிலாந்து நாட்டில் அன்னையின் விண்ணகப்பிறப்பு விழா என்று கொண்டாடப்பட்டதாக ஆல்டெம் என்பவர் கூறுகிறார். ‘படைத்தவரைக் குழந்தை வடிவில் தம் உடலில் தாங்கிக் கொண்டவர், உடலோடு கூட இறைவனின் வீட்டில் இடம் பெறுவதும் பொருத்தமானதே’ என்று விளக்குகிறார் புனித ஜான் தமசீன்.

ஆகஸ்ட் - 20     தூய பெர்நார்து - 1093 -1153

பிரான்ஸ் நாட்டில் திஜோன் நகருக்கருகில் கிபி 1090இல் பிறந்தார். கடவுள் பற்றோடு கல்வி கற்றார். உலகிலிருந்தால் ஆன்மாவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சி துறவியானார். சிறிது காலத்திற்குள் ஒரு மடத்தை நிறுவி தலைவராக இருந்தார். 30 பேர் இவரைப் பின்பற்றி துறவியானார்கள். உடன் துறவிகளை போதனையாலும், மாதிரியாலும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் தோன்றியதால் அமைதியையும், ஒற்றுமையையும், நிலைநாட்டுவதற்காக ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார். இறையியல், தவவாழ்வு பற்றிய நூல்கள் பல எழுதினார். அவர் க்ளேர்வோ ஆதினத்தில் 1153இல் ஆகஸ்ட் ‡ 20ஆம் நாள் இறந்தார்.

ஆகஸ்ட் - 25          தூய லூயிஸ் - 1215 - 1270

கிபி 1214இல் பிறந்தார். தம் 22ஆம் வயதில் பிரான்ஸ் நாட்டின் மன்னரானார். தன் திருமண வாழ்வில் 11 குழந்தைகளுக்குத் தந்தையாகி, தாமே சிறந்த முறçயில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவத்திலும், ஜெபத்திலும், ஏரழ, எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். மக்களிடையே அமைதியை உருவாக்குவதிலும், ஆன்மீடீக நலத்திலும் அக்கறைக் கொண்டு தம் ஆட்சிப் பொறுப்பை நிறைவேற்றினார். கிறிஸ்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர்களை மேற்கொண்டார். 1270இல் ஆகஸ்ட் 25ஆம் நாள் வட ஆப்பிரிக்காவில் இறுதி திரு அருட்சாதனங்களைப் பெற்று இறந்தார்.

ஆகஸ்ட் - 28       தூய அகுஸ்தீன் - 354 - 430

இவர் வடஆப்பிரிக்காவில் தகாஸ்தே என்னுமிடத்தில் கிபி 354இல் புனித மோனிக்கம்மாளிக் மகனாகப் பிறந்தார். இளமைப் பருவத்தைத் தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றிக் கழித்தார். பின்பு மிலானில் ஆயர் அம்புரோசின் மறையுரைக் கேட்டு 387இல் ஆயர் அம்புரோசியாரிடம் திருமுழுக்குப் பெற்றார். 390இல் குருப்பட்டம் பெற்று ஹிப்போவுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று 34 ஆண்டுகள் குருத்துவ வாழ்வு வாழ்ந்து தம் மந்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். சிறந்த இறையியலார் இவர் மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களைப் பயிற்றுவித்தார். அவர் காலத்தில் நிலவிய தவறான கருத்துகளுக்கு எதிராகப் போராடி திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார். இன்றும் இவருடைய இறையியல் விளக்கங்கள் வியப்புடன் படிக்கப்படுகின்றன. 430இல் ஆகஸ்ட் 28 ஆம் இறந்தார்.

ஆகஸ்ட் - 29            தூய திருமுழுக்கு யோவான்

இவர்  தம் 30ஆம் வயதில் யோர்தான் நதிக்கரைக்கு வந்து மக்களை மனம்மாற அழைத்தார். இவர் கிறிஸ்துவின் முன்னோடி. கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் அளிக்கும் பேறுபெற்றவர். இவரே இறைவனின் செம்மறி என மக்களுக்குச் சுட்க்காட்டியவர். மாசில்லா குழந்தைகளைக் கொன்ற ஏரோது இறந்ததும் அவரின் மகன் ஏரோது அந்திபாஸ் நாட்டை ஆண்டு வந்தான். தன் சகோதரன் மனைவி ஏரோதியாளை தன் மனைவி ஆக்கிக் கொண்டதை யோவான் அச்சமின்றி கண்டித்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். ஏரோதியாளின் வேண்டுகோளின்படி தலையை வெட்டி யோவான் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment

Ads Inside Post