Pages - Menu

Friday 1 July 2016

ஒற்றுமை உயர்வின் ஏணிப்படி

ஒற்றுமை உயர்வின் ஏணிப்படி

மனிதரின் உடல் வலிமை, மனித உறுப்புகளின் ஒன்றித்த நிலையால் வருகிறது. மனிதரின் மனவலிமை, மனம் சிதறாமல் ஒன்றித்த நிலையால் தோன்றுகிறது. உலகம் வளர்வது மனிதரின் ஒன்றிப்பினால்தான். மனிதர் பிரிவினையை மேற்கொண்டால் அழிவின் சுழற்சியில் அகப்பட்டுக் கொள்வர். இரண்டு உலகப் போர்களால், ஐரோப்பிய நாடுகள் அழிவுகளை சந்தித்தன. ஐரோப்பாவில், உலகப் போர் நடந்தபோது வாழ்ந்த மக்கள், அவர்கள் சந்தித்த அவலங்களை கண்ணீர் மல்க கூறுவார்கள். ஆனால் இப்போது ஐரோப்பிய நாடுகள் ஒன்றியமாக இணைந்திருக்கின்றன. இந்த நாடுகளில் ஈரோ என்ற ஒரே நாணயம், எளிதான வர்த்தகம், அறிவியல், விவசாயம், தொழில் துறைகளில் கூட்டு முயற்சி என்று வளர்ச்சியின் கருவிகளை கையில் எடுத்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவில் வளர்கின்றன.

1947இல் இந்தியா சுதந்திரம் அடையும்முன் 565 சிற்றரசுகள் இருந்தன. அவைகளையயல்லாம் ஒன்றிணைத்து உலகின் பெரிய மக்களாட்சியை நம் தலைவர்கள் உருவாக்கினார்கள். இந்தியாவில் 179 மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன. சென்ற 60 ஆண்டுகளில் 29 மாநிலங்களும், 7 மத்திய அரசின் ஒன்றிப்புகளும் இணைந்து நிற்பது ஒரு புதுமையாகும். மொழிகளிலும், கலாச்சாரங்களிலும் வேறுபட்டவர்கள், ஒன்றிணைந்து நிற்பதால் இந்தியா ஒரு வல்லரசாக வளரும் நாடாக உள்ளது.

ஒன்றிப்பு, நாட்டில் மட்டுமல்ல, அது வீட்டில் துவங்குகிறது. ஒற்றுமையின் அடிப்படை தத்துவத்தை அலெக்சாண்டர் டுமஸ் என்பவர் கீழ்கண்டவாறு விளக்குகிறார். ‘எல்லா மனிதரும் ஒரு மனிதருக்காக வாழவேண்டும், ஒரு மனிதர் எல்லோருக்குமாக வாழவேண்டும்’ என்கிறார்.

ஒற்றுமை மனித வாழ்வில் அடிப்படை நாதம். அமிர்ராய் என்பவர், ‘யாரும் தனியாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர் மற்ற எல்லோரோடும் ஏதாவது ஒருவிதத்தில் பிரிக்க முடியாத முறையில் இணைந்திருக்கிறார்’ என்கிறார். இந்த ஒன்றிணைப்பால்தான் மனிதர் வல்லமையுடையவனாகிறார். அஸ்காரி ஜான்சன் ஹோடேர் என்பவர் கூறுவார், ’வானத்தை எல்லோரும் தாங்கி பிடித்தால், தனிபட்ட ஒருவருக்கு எந்த வித சோர்வும், பாரமும் உண்டாகாது’ என்கிறார்.

ஒற்றுமை, நம் கிராமங்களிலும், குடும்பங்களிலும் துளிர்க்க வேண்டும். மாதம் ஒருமுறை கிராம மக்கள் ஒன்றுகூடி, அரசு, அவர்கள் கிராமத்திற்கு செய்ய போகும் திட்டங்கள் யாவை? அத்திட்டங்கள் சரியான முறையில் நடைபெறுகின்றனவா? கிராமத்திற்கு அவசியமான திட்டங்கள் யாவை? என்று விவாதிக்க வேண்டும். அரசாங்கத்தில் போடும் சாலைகள், கட்டும் கட்டிடங்கள், சாலைகள் அனைத்தும் அவலங்களாக செய்யப்படுகின்றன. மக்களின் ஒற்றுமையின்மையும், விழிப்புணர்வு இல்லாமையில்தான் அரசியல் தலைவர்கள், அலுவலர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒற்றுமை  உருவாக நல்ல ஒருங்கிணைப்பாளர்கள் தோன்ற வேண்டும். எனக்குத் தெரிந்த ஓர் ஆசிரியர், மக்களை ஒன்றிணைக்க பைத்தியம் பிடித்தவர் போல் செயல்படுவார். ஒற்றுமையால் தீமைகளை, தீய சக்திகளை விரட்டியடிக்கலாம். சுசிகாசம் என்பவர் கூறுவார், ‘ஒரு காட்டில் இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அதே காட்டில் மற்றொரு பக்கத்தில் முரட்டு ஆள் ஒருவர் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். ஓநாய் ஒன்று இச்சூழ்நிலையில் நுழைகிறது  என்றால், அது தனித்து நிற்கும் முரடரைத்தான் சென்று தாக்கும். இரண்டு பேராக நிற்கும் சிறுவர்களிடம் அது செல்லாது’ என்று கூறுவார். ஆக ஒற்றுமையினால் தீமைகள் நம்மை அணுகத் தயங்கும்.

ஊர் திருவிழாவிற்காக மக்கள் ஒன்றுபடுகிறார்கள். ஆனால் ஊர் முன்னேற்றத்திற்காக மக்கள் ஒன்றுபடுவதில்லை. குஜராத் மாநிலத்தில் பன்சாரி என்ற கிராமத்தை, சர்பன்ச் என்ற இளைஞர் உருமாற்றியிருக்கிறார். அவர் பி. ஏ. பட்டதாரி. வயது 31, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்களை ஒன்றிணைத்து அரசு தருகின்ற உதவிகளை மட்டும் வைத்து, ஏ.சி. வைக்கப்பட்ட பள்ளி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஊரெங்கும் கண்காணிப்பு கேமராக்கள், இன்டர்நெட் வசதிகள் என்று ஊரை உருமாற்றியிருக்கிறார். தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு மின்சாரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை இவைகளை அரசு உதவியுடன் செய்திருக்கிறார்.

விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. நல்ல தலைவர்களை அடையாளம் காண்போம். ஒன்றிணைவோம். எல்லோரும் ஒருவரின் நலனுக்காக, ஒருவர் எல்லோரின் நலனுக்காக என்ற முறையில் ஒன்றுபடுவோம். ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ்வதை பாரதியார் இப்படி பாடுகிறார்:
எப்பதம் வாய்த்திடு மேனும் ‡ நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்
முப்படி கோடி முழுமையும் வீழ்வோம்

இம்மாத இதழின் மையக் கருத்தாக, ஒற்றுமை என்பது அமைந்திருக்கிறது. சில கட்டுரைகளும், கதைகளும் ஒற்றுமை என்ற கருத்தை மையமாக கொண்டு அமைந்திருக்கின்றன. வீட்டிலும், நாட்டிலும் ஒற்றுமை என்ற பயிர் வளர்த்து பயன்பெறுவோம்.   
- அருள்பணி. ச. இ. அருள்சாமி, ஆசிரியர்

No comments:

Post a Comment

Ads Inside Post