Pages - Menu

Wednesday 27 July 2016

தூய்மையைப் போற்றுவோம்

அமெரிக்கக் கடிதம்

தூய்மையைப் போற்றுவோம்

ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல, நண்பர்களுடன் ஐரோப்பிய நாடுகளின் தனி சிறப்புகளைப் பற்றிப் பேசிக் கொணடிருந்தோம். பிரான்சு நாட்டில் பலவிதமான ஒயினை சுவைத்துப் பார்க்கலாம். பெல்ஜியம், சாக்லெட்டிற்கு பெயர் போனது. இத்தாலி நாடு நூடுல்சுகளில் செய்யப்படுகின்ற ‘ஸ்பெகெட்டி’ என்ற உணவு பெயர் போனது என்று கூறியபோது, ஜெர்மனி நாடு எதற்கு பெயர் போனது? என்ற கேள்வி எழுந்தது. ஜெர்மனி சுத்தத்திற்கு பெயர் போனது என்றனர். (ஜெர்மனி மொழியில் சுத்தத்திற்கு ‘செளபர்’ என்பர்). சென்னை எதற்கு பெயர் போனது என்றார். ‘கூவமும், கூவ நாற்றமும்’ என்று சொல்லலாம். வீட்டினுள் சுத்தத்தைப் பேணும் நம் மக்கள் பொதுவிடங்களில் அசுத்தத்தால் அசிங்கமாக்குகிறார்கள்.

கழிவறைகள் இல்லாத நிலையில் வெளியிடங்களில் மலம் கழிக்கின்ற சூழ்நிலை மாறிவருகிறது. கேரளாவில் மலையாளிகள், கோவை வழியாக இரயிலில் பயணம் செய்யும் போது, கோவையில் இரயில் பாதை இருபக்கங்களிலும், காலை காட்சி என்றும், மாலை காட்சி என்றும் மக்கள் அமர்ந்திருப்பதை சொல்லி சிரிப்பதை கேட்டிருக்கிறேன்.

நமது அரசு மருத்துவமனைகளை சொல்ல தேவையில்லை. அவ்வளவு அசுத்தமாக வைத்திருப்பர். நோய்களின் பரப்பு நிலையம், அரசு மருத்துவமனை என்று சொல்ல முடியும். சென்னையில் சங்கரா நேத்ராலயா என்ற மருத்துவமனையில் தூய்மையாக வைப்பதற்கு பெரும் முயற்சி செய்து, தூய்மையை பாதுகாக்கின்றனர். மேல்நாடுகளில் சுத்தத்தை பேணி காப்பதில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். சுகாதாரமின்மையால் நோய்கள் எளிதாக பரவுகின்றன. மருத்துவத்திற்கு பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் சுகாதாரத்தை எவ்வளவு கவனமாக பாதுகாக்கின்றனர் என்று இக்கட்டுரையாளர் விவரிக்கிறார்.
காலரா நோய் இன்று வரை பல கோடி உயிர்களைப் பறித்துச் சென்றுள்ளது. இதற்கு மூலகாரணம் சுத்தமற்ற தண்ணீரும், சுகாதாரமின்மையும்தான் என்பதை ஆய்ந்து, அறிந்து, எல்லா ஊர்களிலும் தண்ணீரை சுத்தப்படுத்தி வடிகட்டி பாக்டீரியா இல்லாத தூய்மையான தண்ணீரை இலவசமாக அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர்.

மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க தண்ணீர் ஓடுவதற்கு திட்டமிட்டு வடிகால்களை அமைக்கின்றனர். மழைநீர் தேங்காததால் துர்நாற்றத்தையும், கொசு தொல்லையையும் கட்டுப்படுத்துகிறார்கள். கொசு இல்லாத நிலை உண்டாக்கி கொசுவினால் வரும் நோய்கள் வராமல் தடுக்கின்றனர். கழிவுகளையும், குப்பைகளையும் அகற்ற என்று தனி ஒரு துறையை அமைத்து, அதில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளனர். முதலில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வண்ணமாக தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உதாரணமாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால், பிளாஸ்டிக் பை குப்பைக்கு செல்லும் போது, இது மண்ணில் மக்க பல வருடங்கள் ஆகும். அதனால் கடைகளுக்குச் செல்லும் போது சொந்த பைகளை எடுத்து வந்தால் மக்களுக்கு வாங்கும் பொருள்களின் விலைகளில் தள்ளுபடி கொடுக்கிறார்கள். இதனால் மக்கள் கடைகளுக்குச் செல்லும் போது மறக்காமல் பெரிய துணிப் பைகளை கையுடன் எடுத்துச் செல்கின்றனர்,

பொருள்களை மறுசுழற்சி செய்து, வீணாக குப்பைக்குச் சென்று சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தாமல், மீண்டும் அதை பயன்படுத்துமாறு செய்கிறார்கள். உதாரணமாக மக்காத காலியான தண்ணீர் பாட்டில்கள், சோடா டின் போன்றவற்றை மண்ணில் குப்பைகளாக கொட்டாமல் இவைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இப்படி பல முயற்சிகள் எடுத்து வீதிகளில் குப்பைகள் சேராமல் சுற்றுப்புறத்தை தூய்மையாக காக்கின்றனர்.

ஒரு காலத்தில் லண்டன் நகரத்தில் ஓடும் தேம்ஸ் நதியும் நமது சென்னை நகரின் கூவம் போன்று தான் இருந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு மக்கள் தேம்ஸ் நதியை சுத்தம் செய்து அதில் படகுகளை விட்டு போக்குவரத்துக்கும், நகரை சுற்றிப் பார்க்க சுற்றுலா ஊர்தியாகவும் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் நம்மாலும் முடியும், முயல்வோம், நம் சுற்றுப்புறத்தை காப்போம். நமது ஊரையும், நாட்டையும் பூங்காக்களாக மாற்றுவோம்.
சுத்தம் காத்தால், நோய்கள் வராமல் காக்கலாம்

தூய்மை உடல் நலத்தின் மூன்றில் இரண்டு பகுதியாகும் - லபரைன் பழமொழி

நமது நம்பிக்கை இருளை போன்றது. 
சுகாதார சூழல்தான் இருளிற்கு ஒளியைத் தருகிறது.
தூய்மையான சுற்றுச்சூழல்தான்
இறைவனை வெளிப்படுத்தும் வெளிச்சங்கள்                                     - - ----லைலா கிப்டி அகிடா.

No comments:

Post a Comment

Ads Inside Post