Pages - Menu

Saturday 2 July 2016

15 ஆம் ஞாயிறு (10 - 07 - 2016)

15 ஆம் ஞாயிறு (10 - 07 - 2016) 
                       
இச 30 : 10 - 14, கொலோ 1 : 15 - 20, லூக் 10 : 25 - 37

துளிர்க்கும் மனித நேயம் 

“மனித நேயம், இரக்க குணம், உதவி செய்யும் மனநிலை உடையவர்கள் மட்டும்தான் காயத்திற்கு கட்டு போடுவார்கள்”. நற்செய்தியில் வரும் பல கதாபாத்திரங்களை அலசிப் பார்க்கும்போதுதான் உண்மையான அயலான் யார்? அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற பதில் கிடைக்கிறது.

பயணம் செய்பவர்கள்: எருசலேமிலிருந்து எரிக்கோ வரை பயணிக்க வேண்டும். திருடர்கள் நடமாடும் ஆள் அரவம் இல்லா, நவீன காலத்திலுள்ள சாலைகள் போன்றல்லாமல் கரடு, முரடான பாதை அது. தனி நபர் பயணிப்பது மிகவும் ஆபத்தானது.
பாதையில் பயணித்தவர்கள்

1. கள்வர்கள்:  மற்றவர்களுடைய பொருட்களை சந்தர்ப்பம் பார்த்து கவரக் கூடியவர்கள்; இதற்காக உயிரையும் துட்சம் என கருதி, எதையும் செய்ய துணிந்தவர்கள்; தவறு செய்கிறோம் என உணராதவர்கள்.

2. தெரிந்தோ, தெரியாமலோ பயணம் செய்த எளிய யூதர். கள்வர் கையில் அகப்பட்டு, உடைமைகளை இழந்து, காயப்பட்டு நடக்க முடியாமல் முடங்கியிருப்பவர். மற்றவரின் உதவியை நாடியிருப்பவர்.

3. குரு: உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவனைப் பார்க்கிறார். ஆனால் ஒதுங்கிப் போகிறார். இறந்த உடலை தொட்டுவிட்டால் 7 நாட்களுக்குத் தீட்டுபட்டவனாக இருப்பான் (எண் 19 : 11). இதுவே ஆலயத்தில் வழிபாடு நடத்தத் தடையாகும் என்ற உணர்வு. அவரைத் தடுத்தது இவருக்கு மனிதனை விட ஆலய வழிபாடு முக்கியமாக தெரிந்தது.

4. லேவியர்: துடிதுடிக்கும் வழிபோக்கன் அருகிலே சென்று பார்த்துவிட்டு ஒதுங்கி செல்கிறான். தன்னை தற்காத்துக் கொள்ள அவ்விடத்திலிருந்து சென்றுவிடுகிறான். குருவிற்கு உதவி செய்பவர். இவரும் தீட்டு அடிப்படையில் ஒதுங்கி செல்கிறார்.

5. சமாரியன்: ஒதுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவன். தன்னை ஒதுக்கும் யூதருக்கு உதவ அவன் இதயத்தில் இரக்கம் சுரக்கிறது. மருந்திட்டு, கட்டுப்போட்டு, சாவடிக்கு கொண்டு வந்து, மருத்துவச் செலவு செய்து, மீண்டும் தேவையான பணம் கொடுத்து, தனது பணிக்கு திரும்பும் இந்த மனிதன் ஒரு மாமனிதன். ஒரு மனிதன் மீது உண்மையான அக்கறையும், அவனது துன்பத்தில் பங்கெடுத்தலும், எதையும் எதிர்பாராமல் தன்னிடம் இருப்பதை கொடுத்து உதவி புரிதலும்தான் இந்த மனிதர், சட்டத்தை வாழ்வாக்குபவர் என்று இயேசு விவரிக்கிறார்.

அறிவியல் முன்னேற்றமடைந்த இக்காலத்தில் நகரங்களிலும்,கிராமங்களிலும் வாழக்கூடிய மனிதர்கள் மத்தியில் - “கண்டு கொள்ளாமை”, “இரக்கமற்ற உணர்வு”, “தெரிந்தும் தெரியாதவர்களைப் போல வாழும் மனநிலை” போன்ற மாறுபட்ட குணாதிசயங்கள் அதிகமாக முளைத்துள்ளன. இவைகளை வேறுஅறுத்தால்தான் நல்ல சமாரியர்களை இந்த சமூகத்தில் காண முடியும். மனித நேயம், மனிதாபிமானம் என்ற உணர்வு நிலைக்கு வந்து, வாழ்வில் இவைகளை செயலாக்கத்திற்கு கொண்டு வருவோம். சீனிவாசன் என்பவர் மருத்துவப்படிப்பு படித்துவிடடு, கானகத்தில் வாழும் பழங்குடியினருக்கு அங்கே தங்கி மருத்துவ உதவி செய்கிறார். இவர் இன்றைய நல்ல சமாரியர்  எனலாம். முதல் வாசகத்தில், ‘ஆண்டவரின் குரலுக்கு செவி கொடு, அவர்தம் கட்டளைகளை கடைபிடி’ என்று கூறப்பட்டுள்ளது. இயலாதவற்கு உதவி செய்தல் இறைவனை காண்கின்ற செயலாகும், இறை கட்டளைகளின் நிறைவாகும்.

No comments:

Post a Comment

Ads Inside Post