Pages - Menu

Saturday 2 July 2016

மகளின் ஆசை - சிறுகதை

மகளின் ஆசை - சிறுகதை

மகிழம்பாடி. அந்தோணிசாமி

“ஜெயராணி! இங்க வா! வந்து உட்கார்!”

“ஏம்ப்பா?”

“ஒண்ணுமில்லேம்மா! எல்லாம் உன் சமாச்சாரமாத்தான்!”

“அதென்னப்பா என் சமாச்சாரம்?”

“வேற ஒண்ணுமில்லேம்மா! உன்ன ரெண்டு எடத்துலேயிருந்து பொண்ணு பாத்திட்டுப் போனாங்க. பொண்ணு எங்களுக்குப் புடிச்சிப் போயிருக்கு. ஒங்க அபிப்ராயம் என்னான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.

நம்பளும் கலந்து பேசி முடிவை அவுங்க கிட்ட சொன்னா தானே நல்லாயிருக்கும்” என்று கணவனின் கருத்தை ஆமோதித்துப் பேசினாள் ஜெயராணியின் தாயார்.

“கல்லூர்லேயிருந்து வந்தவங்களுக்கு ஒரே பையன். அரசாங்க வேலை. ஆளும் கதிராட்டம் செவத்த பையனா இருக்கான். சொத்து சுகம் நிறைய. வேற பிக்கல் பிடுங்கள், நாத்தி, நங்கைன்னு யாருமில்ல. வீடும் சொந்த வீடு. நல்லூர்லேயிருந்தும் வந்தாங்க. அவுங்களுக்கு ஆணொன்னு, பொண்னொன்னு. பையன் மாநிறம். பிரைவேட் கம்பெனியில வேலை செய்யிறான். ஆன்..னா.. மாமனார் இல்ல. மாமியார் மட்டும் இருக்காங்க. சுமாரான வீடு என்று இடையிடையே அடியயடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாயார்.

“உன் முடிவுன்னு ஒண்ணு இருக்குல்ல. அத மீறி நாங்க செய்திட முடியுமா? அதா..ன்” என்று இழுத்தார் தந்தை.
“அப்பா! உங்க மனசு கோணுற மாதிரி நான் என்னைக்கும் நடக்க மாட்டேன். ஆனா.. என் மனசுல இருக்குறத நான் சொல்லிடுறேம்ப்பா”.

“சொல்லும்மா! அதானே கேக்குறோம். உன் முடிவு எதுவா இருந்தாலும் அத நாங்க நிறைவேத்தி வைக்கிறோம்”.

“பொறந்த பொண்ணுங்க புகுந்த வீட்ல வாழ்றதுதானேப்பா பெருமை. அம்மா இத எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்க. எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எனக்கு வரப்போற புரு­ன் நல்ல குடும்பத்துக்காரனா, கைநிறைய சம்பாதிக்கிறவனா எதிர்ப்பாக்குறது நல்லதுதான்”. 

“ஆனா... அதவிட நான் போற இடத்துல கோயில் இருக்குமாப்பா... நம்ப ஊருல மாதிரி நான் தினந்தோறும் கோயிலுக்குப் போயி... திருப்பலி கண்டு தினந்தோறும் கடவுளை என் உள்ளத்துல வாங்குனும்ப்பா. நான் புகுந்த எடத்துல சொத்து சுகம் இருக்கிறதவிட வசதிக்கார குடும்பமா இருக்கிறதவிட, நான் அன்னாடம் கோயில் முகத்துல விழிக்க எனக்கு உதவி செஞ்சா போதும். மீதி வசதி வாய்ப்பெல்லாம் எனக்குத் தன்னால வந்துடும்”.

“நீங்க என்னை கேணியில தள்ளிவிட மாட்டீங்க. அம்மா, அப்பா பாத்து நீங்க யாரை கட்டிக்கச் சொன்னாலும் கட்டிக்குவேன். ஆனா .... எனக்குள்ள இந்த ஒரு ஆசையை மட்டும் எனக்கு நிறைவேத்தி வைங்க”. அழாக்குறையாகக் கேட்டாள் அந்த மகள்.

“முடிவை நான் சொல்றேம்மா! உனக்கேத்த புரு­ன் நல்லூர்லதான் இருக்கான். நானும், உங்களுக்குத் தெரியாம அங்க போயி எல்லாம் விசாரிச்சிட்டு வந்துட்டேன்”.  “அங்கதான் நம்ப ஊருமாதிரி கோயில் குளமெல்லாம் இருக்கு. உன் மனசுக்கேத்த இடம் அதுதாம்மா! உடனே நல்லூர்ல இருக்குறவங்களுக்கு நல்ல முடிவா சொல்லி அனுப்புங்க. இதான் தங்கச்சிக்கேத்த முடிவு” என்று தீர்க்கமாய்ச் சொன்னான் ஜெயராணியின் மூத்த சகோதரன் ராஜ்குமார்.

No comments:

Post a Comment

Ads Inside Post