Pages - Menu

Tuesday 26 July 2016

திருப்பலி விளக்கம் 7. தொடக்கச் சடங்கு (2)

திருப்பலி விளக்கம்
7. தொடக்கச் சடங்கு (2)

- அருள்பணி. எஸ். அருள்சாமி, 
பெத்தானி இல்லம், கும்பகோணம்

(சென்ற மாத சிந்தனையில் தொடக்கச் சடங்கில் அருள்பணியாளர் திருப்பலிக்கு குழுமியிருக்கும் நம்பிக்கையாளரை வாழ்த்தும் பாடங்களுக்கு விளக்கங்களோடு முடித்துக் கொண்டோம். இந்த சிந்தனையில் எஞ்சியிருக்கும் தொடக்கச் சடங்கில் இடம்பெறும் பகுதிகள் பற்றிய விளக்கம் கொடுக்க முற்படுவோம்).

சுருக்கமான முன்னுரை:

அருள்பணியாளர் மக்களை வாழ்த்திய பின், அவரோ, திருத்தொண்டரோ அல்லது பொதுநிலையினரில் ஒருவரோ மிகச்சுருக்கமான முன்னுரையை வழங்கி அந்நாளின் திருப்பலிக்கு நம்பிக்கையாளரைத் தயார் செய்கிறார்.
(பொது பாடம் 50 : 124)
The Priest (or antother minister) may very briefly introduce the faithful to the mass of the day. (ordo Missae cum Populo, p.3)

குறிப்பு : 
வேண்டுமென்றே மேலே உள்ள மேற்கோல் ஆங்கிலத்தில் கொடுக்கப்படுகிறது. இது நம்பகத்தன்மைக்கு உறுதுணையாக இருக்கும். மொழிபெயர்த்தால் மேலே தமிழில் கொடுத்த திருப்பலி நூலின் பொது படங்களிலிருந்து வேறுபட்டதாகத் தோன்றாது.

விளக்கவுரையாளர்: 

இவர் தேவைக்கு ஏற்ப நம்பிக்கையாளருக்கு விளக்கவுரைகள், அறிவுரைகள் சுருக்கமாக வழங்குவார். இதனால் திருப்பலி கொண்டாட்டத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அதை அவர்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ள உதவுவார். விளக்கவுரையாளரின் குறிப்புகள் நன்றாகவும், சுருக்கமாகவும் தயாரிக்கப்படவேண்டும். விளக்கவுரையாளர் தம் பணியை நிறைவேற்றும்போது மக்கள்முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் அவர் வாசக மேடையைப் பயன்படுத்தக்கூடாது (பொது பாடம் எண் 105 / ஆ).

இன்று நடைமுறைகளில் நடப்பதற்கும், மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்குமிடடையே முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடிகிறது. எனவே திருப்பலியின் முன்னுரையைச் சரியா புரிதல் அவசியமாக இருக்கிறது.

திருப்பலிக்கு முன்னுரை வழங்குவதும், விளக்கவுரை அளிப்பதும் வெவ்வேறு பணிகள். இதனால்தான் இவர்களுக்குரிய தகுந்த இடம் வெவ்வேறானது. திருப்பலிக்கு முன்னுரை கொடுக்கும் அருள்பணியாளர் தமக்கென்று குறிக்கப்பட்ட இருக்கையில் இருப்பார். அவர் பொதுநிலையினராக இருந்தால் பலிபீட முற்றத்திலிருக்கும் அறிக்கை மேடையில் இருப்பார். ஆனால் விளக்கவுரையாளர் இரண்டாவது மாதிரி படிவத்தின் (Second Typical Edition 1975) பொது படிப்பினைப்படி பலீபீட முற்றத்திற்கு (Sanctuary) வெளியே நிற்பார். இந்த குறிப்பு சற்று மாற்றப்பட்டு திருத்தப்பட்ட மூன்றாவது மாதிரி படிவத்தின் (Revised Third Typical Edition 2008) பொது படிப்பினைப்படி “மக்கள் முன் தக்க இடத்தில் நிற்பார். ஆனால் வாசக மேடையைப் பயன்படுத்தக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தக்க இடம் பலிபீட முற்றத்திற்கு வெளியேயும் இருக்கலாம். விளக்கவுரை மேடை என்று நாம் குறிப்பிட்டுள்ள இடமாகவும் இருக்கலாம் என்பது எமது கருத்து. நாம் இங்கு கவனிக்கக் கூடியது திருப்பலிக்கு அளிக்கப்படும் முன்னுரையும், திருப்பலி தொடக்கத்திற்குக் கொடுக்கப்படும் விளக்கவுரையும் வெவ்வேறு பணிகள் ஆகும். குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

நாம் மேலே கொடுத்த மேற்கோள்களிலிருந்து புலப்படும் உண்மை என்னவென்றால், திருப்பலிக்கு முன்னுரையாக இருந்தாலும் சரி, அன்றைய திருப்பலிக்க விளக்கவுரையாக இருந்தாலும் சரி அவை மிகச்சுருக்கமானதாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும். மறையுரையாக மாறிவிடக்கூடாது. பல சமயங்களில் மக்களையும், அருள்பணியாளர்களையும் அமரச்செய்துவிட்டு எழுதிவைத்திருக்கும் பல பக்கங்கள் அடங்கி அடுக்கு மொழி உரையை வாசிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மூன்றாவதாக இந்த முன்னுரை அன்றைய விழாவில் மையமாக இழையோடிக் கொண்டிருக்கும் மையக்கருத்தை (நன்றி, துக்கம், மகிழ்ச்சி, மனத்துயர்) துல்லியமாகச் சுட்டிக்காட்டி குழுமியிருக்கும் நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை உசிப்பிவிட்டு உணர்வோடும் (உலிஐவிஉஷ்லிற்வி), செயல்முறையிலும் (ழிஉமிஷ்ஸe) பங்குபெற உதவும் விதமாக அமைய வேண்டும். வெள்ளி, பொன் விழாவாகக் கொண்டாடும் நாயகர்களையோ, வார்த்தைப்பாடு புதிப்பித்தபின் நன்றி செலுத்தும், இருபால் துறவிகளையோ அடக்கத் திருப்பலியில் இறந்தவரைப் பற்றியோ புகழாரம் சூட்டும் நேரமல்ல இது. இத்தகைய செயல் அறவே அகற்றப்பட வேண்டும். இது திருப்பலிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

மனத்துயர்ச் சடங்கு :

தொடக்ககால திருஅவையில் கொண்டாடப்பட்ட வழிபாடு பற்றிய தகவல்களை நமக்குத் தொகுத்துக் கொடுப்பது “திதாக்கே” (ம்ஷ்dழிஉஜுe) என்னும் நூலாகும். இதில் மனத்துயர் சடங்கு பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆண்டவர் நாளில் ஒன்றுகூடி அப்பத்தைப் பகிர்ந்து நன்றி கூறுங்கள். ஆனால் முதலில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்; இவ்வாறு உங்கள் பலி தூய்மையானதாகும்” (14 : 1)

எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டுமானாலும் ‘தயாரிப்பு’ தேவை. திருப்பலியில் பங்குபெற தயாரிப்பு தேவைப்படுகிறது. ஆண்டவரோடு உறவுக்கொள்ள மனத்தூய்மை வேண்டும். மக்கள் தங்கள் பாவங்களுக்காக வருந்தி அழுது, தீய வழியை விட்டகல அழைக்கப்படுவதும், அதற்கேற்ப அவர்கள் மனம்மாறி இறைவன் பக்கம் திரும்புவதும் விவிலியத்தில் பரவலாகக் காண்கின்ற நிகழ்வாகும். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இதற்கு நிறைய சான்றுகள் உள்ளன (காண் யோவே 1 : 13 ‡ 15; நீதி 10 : 10 - 15).

இறைவனோடு ஒப்புரவாக இது இன்றியமையாதத் தேவை. எனவே பலி தொடங்குமுன் சிறிது மெளனமாகயிருந்து நாம் பாவிகள் என அவர் திருமுன் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறோம். இதுவே மனமாற்றத்துக்கு முதற்படி; மன்னிப்பு கோருவதற்கும் அடிப்படை; நட்புறவை உருவாக்கி வளர்ப்பதற்கு அடித்தளம்.

எப்பொழுது இம்மனத்துயர் சடங்கு நடைபெறவேண்டும் என்பதைப் பற்பல வழக்கங்களையும், கருத்துக்களையும் ஆராய்ந்து, திருப்பலியின் தொடக்கத்திலேயே இடம் பெறுவது நல்லது என முடிவு செய்யப்பட்டது. பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவன்பால் உள்ளத்தைத் திருப்பி, அவரோடும், அயலாரோடும் ஒப்புரவான நிலையில் இறைவார்த்தையைக் கேட்கவும், காணிக்கை செலத்தவும், திருவிருந்து அருந்தவும் இது நம்மை தகுதியுடையவராக்குகிறது.

நம்பிக்கையாளர்களை பாவங்களுக்கு மனம் வருந்த அழைத்து சிறிது மெளனத்திற்குப் பின் பாவ அறிக்கைக்க மூன்று வித பாடங்களை பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வகை “எல்லாம் வல்ல இறைவனிடமும்” என்று தொடங்கும் பாவ அறிக்கையாகும். இது முடிந்தது அருள்பணியாளர் எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக என்று சொல்கிறார். இது “ஒப்புரவு அருள் அடையாளத்தில் சொல்லப்படும் வாய்ப்பாட்டுக்கு சமமானதல்ல; இந்த செபத்திற்கு ஒப்புரவு அருளடையாளத்தின் ஆற்றல் கிடையாது” (எண் 51) என்று திருப்பலி நூலின் பொது படிப்பினையில் கூறப்பட்டிருப்பது கவனிக்க வேண்டியது. எனவே மக்கள்மீது கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு இதை சொல்வது நல்லதல்ல. இது எதிர்விளைவை நாளடைவில் கொண்டுவரும். இந்த செபம் மூன்று வகை பாவ அறிக்கைக்குப் பின்னும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வகை பாவ அறிக்கை மிகச் சுருக்கமானது.

அ. ப : ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
பதில் : ஏனெனில் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
அ. ப : ஆண்டவரே எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டியருளும்.
பதில் : உமது மீட்பை எங்களுக்குத் தந்தருளும்.
பலருக்கு இது புதிதாகத் தோன்றலாம். ஏனெனில் இதுபற்றி கேள்விப்படவில்லை. திருப்பலியில் பயன்படுத்தியதுமில்லை. அவ்வப்போது இந்த முறையையும் அருள்பணியாளர் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
மூன்றாவது வகை பாவ அறிக்கை பின்வருவாறு :
அ. ப : உள்ளம் நொருங்கி வருந்துவோரை நலமாக்க அனுப்பப்பெற்ற ஆண்டவரே இரக்கமாயிரும்.
பதில் :  ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அ. ப : பாவிகளை தேடிவந்த கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
பதில் :  கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
அ. ப : தந்தையின் வலப்பக்கம் வீற்றிருந்து, எங்களுக்காகப் பரிந்து பேசுகின்ற ஆண்டவரே, இரக்கமாயிரும்.
பதில் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

குறிப்பு: இதே போன்று மற்றும் நான்கு வகை பாவ அறிக்கைகள் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கலாம். இவை இலத்தீன் மாதிரி படிவத்தில் காணப்படவில்லை. எனவே புதிதாக வெளிவர இருக்கும் திருப்பலி நூலிலும் இவை விடப்பட்டிருக்கும்.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ (Kyrie):

“பாவத்துயர்ச் சடங்கில் ஏற்கனவே இடம் பெறாவிடில், “ஆண்டவரே, இரக்கமாயிரும்” என்னும் இறைவேண்டல் இப்பொழுது சொல்லப்படும்” (திருப்பலி நூல் எண் 7).

‘ஏற்கனவே இடம் பெறாவிடில்’ என்பது முதல், இரண்டாவது வகை பாவ அறிக்கைகளைக் குறிக்கின்றது. எனவே அருள்பணியாளர் பாவ மன்னிப்பு செபத்தைச் சொல்லிய பின் இதைச் சொல்ல வேண்டும்.

ஒருசில அருள்பணியாளர் பாவ அறிக்கைக்குப் பின் மன்னிப்பு மன்றாட்டு சொன்னபின் ஏன் மீண்டும் ஆண்டவரின் இரக்கத்தை கேட்கவேண்டும் என்று கேட்பதோடில்லாமல் இதைவிட்டு விடவும் செய்கிறார்கள். இது சரியல்ல.

‘ஆண்டவரே இரக்கமாயிரும்’ என்னும் பாடல் இரு வகையாக திருப்பலியில் இடம் பெறுகிறது. ஒன்று மனம் மாற்ற முயற்சியின் இறுதியில் அதன் மலர்ச்சியாக இப்பாடல் எழலாம்; அல்லது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே அதை அமைத்துக் கொள்ளலாம். இங்கு இது மனமாற்ற முயற்சிக்குள்ளேயே இடம் பெறுகிறது.

மேலும் இது இறைவனின் இரக்கத்தைக் கோரும் மன்றாட்டு மட்டுமல்ல, அவரைப் போற்றலும் ஆர்ப்பரித்தலுமாகும். முற்காலத்தில் திருப்பலியின் தொடக்கத்திலிருந்த  தொடர் பிரார்த்தனையின் தொடக்கமே இது. இதுபற்றி திருப்பலி நூலின் பொது படிப்பினை சொல்வது இங்கு கவனிக்கத்தக்கது. “இப்பாடல் இறைவனைப் புகழ்வதாகவும் அவருடைய இரக்கத்தை இறைஞ்சி மன்றாடுவதாகவும் இருப்பதால், இது வழக்கமாக எல்லாராலும் பாடப்படும்” (எண் 52). இறைவனைப் புகழ்வது என்றமுறையில் இது வானவர் கீதத்துக்கு முன்னோடியாகவும் அமைந்திருக்கிறது எனலாம்.

முடிவுரை:

மனத்துயர் முயற்சியின் பயனாக அற்ப பாவங்கள் மற்றும் குறைபாடுகள் (imperfections) நீங்குகின்றன;  உள்ளம் இறைவழிபாட்டிற்குப் பக்குவமடைகிறது. கூடியிருக்கும் நம்பிக்கையாளர் அனைவரோடும் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றித்து திருப்பலியை ஒப்புக் கொடுக்க தயாராகிறார்கள். 
(தொடரும்).

No comments:

Post a Comment

Ads Inside Post