Pages - Menu

Saturday 29 April 2017

திருப்பலி விளக்கம்

திருப்பலி விளக்கம்


15.- அருள்பணி. எஸ். அருள்சாமி, பெத்தானி இல்லம், கும்பகோணம்

 நற்கருணை வழிபாடு (iii)

முந்தின சிந்தனைகளில் நற்கருணை வழிப்பாட்டின் தொடக்கப் பகுதியாக “காணிக்கை களைத் தயாரித்தல்”  என்பது பற்றிய விளக்கம் இடம் பெற்றது. இப்பொழுது நற்கருணை வழிப்பாட்டின் மையமாகிய “நற்கருணை மன்றாட்டு”  என்பது பற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். இவ்விளக்கம் பலதவனைகளில் இடம் பெறும்.

ஆ.நற்கருணை மன்றாட்டு 

 உரோமை திருப்பலி நூலின் பொது படிப்பினையில் 
நற்கருணை மன்றாட்டு பற்றிய பின்வரும் குறிப்பை வாசிக்கிறோம்:

“திருப்பலி கொண்டாட்டம் முழுவதற்கும்  மையமும் சிகரமுமாய் உள்ள நற்கருனை மன்றாட்டு... நன்றி மன்றாட்டாகவும்   புனிதப்படுத்தும் மன்றாட்டாகவும் உள்ளது. மக்கள் தங்கள் உள்ளங்களை இறை வேண்ட லுடனும், நன்றியுணர்வுடனும் இறைவனை நோக்கி எழுப்பும்படி அருன்பணியாளர் அழைப்பார். அவர்களை தம்முடன் இறைவேண்டலில் இணைத்து திருக்கூட்டம் முழுவதன் பெயரால் இறைதந்தையை நோக்கி இயேசு கிறிஸ்து வழியாக தூய ஆவியாரில் மன்றாடுவார். நம்பிக்கையாளரின் திருக்கூட்டத்தினர் எல்லாரும் கிறிஸ்துவோடு ஒன்றித்து கடவுளின் மாபெறும் செயல்களை அறிக்கையிடுவதிலும், பலி ஒப்புக்கொடுப்பதிலும் இந்த மன்றாட்டின் பொருள் அடங்கியுள்ளது.” ( எண் 78).

இந்த மேற்கோவிலிருந்து நற்கருணை வழிபாட்டில் பயனுள்ள முறையில் பங்கு கொள்வதற்கு நற்கருணை மன்றாட்டுகளைச்  சரியாகப் புரிந்து கொள்வது அவசியமென்பது தெளிவாகிறது. எனவே இப்பொழுது நற்கருணை மன்றாட்டுகளின் பின்னணி, தோற்றம்,  வளர்ச்சி, அமைப்பு, அவற்றில் பொதிந்துள்ள இறையியல் சிந்தனை ஆகியவை பற்றிய விளக்கங்களைக் காண்போம்.
  
1. நற்கருணை மன்றாட்டுகளின் பின்புலம்

 நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள இறுதி இரவு உணவு பகுதியில் பயன்படுத்தபட்டுள்ள “நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து”  எனும் வார்த்தைகள் நற்கருணை மன்றாட்டு தோன்றுவதற்கு மூலமாக இருந்திருக்கலாம் என்றாலும், இப்பகுதி நற்கருணை மன்றாட்டு தோன்றிய விதமனைத்தையும் விளக்குகிறது என்று சொல்ல முடியாது. எனவே இதன் மூலத்தை வேறு இடங்களில் தேட வேண்டும்.     

1.1. யூதர்களின் பெராக்கா (Berakah)

யூதர்களுக்கு ஒவ்வொரு உணவும், குறிப்பாக பாஸ்கா விழாவுக்கு முந்தினநாள் மாலை உணவு திருவழிப்பாட்டுத் தன்மை உடையதாக இருந்தது. அப்பத்தையும், இரசக்கிண்ணத்தையும் ஆசீர்வதித்தல்.  யூதர்களின் அன்றாட செப அமைப்பின் ஒரு கூறாக  இருந்தது. அவர்களுடைய  “யாவே வழிபாட்டில்”  இறை புகழ்ச்சி சிறப்பிடம் பெற்றிருந்தது. மனித வரலாற்றில் விளங்கும் இறைவனின் அன்புக்கு, மனிதர் காட்டும் நன்றியறிதலும், வாழ்த்துரையும் ஒரு பதிலுரையாக அமைந்திருந்தது. தம் வியத்தகு படைப்பு செயலினால் இறைவன் பேச, அவருடைய படைப்பின் கைவன்மைக்குப் புகழ் கூறி மனிதன் பதிலளித்தான் 
(காண் சங் 26:7).  எனவே யூதர்களின் “இறைபுகழ்ச்சி”  இயல்பிலேயே இறை வார்த்தைக்கு அளிக்கும் பதில் மன்றாட்டாக இருந்தது. இறைவன் தங்களுக்குச் செய்தவற்றை வெளிப்படை யாக ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடுவதாகவும், நம்பிக்கையை வெளிப்படுத்து வதாகவும் இருந்தது. இவ்வாறு அது மகிழ்ச்சியும் நன்றியும் கலந்த இறை புகழ்ச்சியாக இருந்தது.

          இது போன்ற புகழ்ச்சி மன்றாட்டுக்குப் பழைய ஏற்பாட்டில் எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன ( காண் தொ.நூ 24:27; 1அரச 1:48). புதிய ஏற்பாட்டிலும் இறைபுகழ்ச்சிக்குச் சான்றுகளைக் காணலாம்( காண் மத் 11:25‡27;  எபே 1:3‡14) . இப்புகழுரைகள் கடவுளின் வியத்தகுச் செயல்களைப் பிந்திய தலைமுறைகளுக்கு நினைவுறுத்தின. அவர்களும் இச்செயல்களை  நினைவு  கூர்ந்து  இறைவனைப் போற்றி புகழ்ந்தனர். கால போக்கில் இப்புகழுரைகள் மாறாத வாய்ப்பாட்டு செபங்களாக மாறின. (Stereotype formulas). யூதர்களிடையே பழக்கத்திலிருந்த 18 புகழுரைகள் குறிப்பிடத்தக்கவை.

1.2. புதிய ஏற்பாட்டில் பின்னணி 

           புதிய ஏற்பாட்டில் “ நன்றி கூறுதல்”  என்பதற்கு  “யூக்கரிஸ்தேயின்”(Eucharistein)  என்ற கிரேக்கச் சொல்லும்,  “புகழுரைத்தல்” என்பதற்கு “யூலோகேயின்” (Eulogein)  என்ற கிரேக்கச் சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் எபிரேய மொழியில் “நன்றி கூறுதல்” என்பதற்குத் தனிச்சொல் கிடையாது. எனவே இக்கருத்தை வெளிப்படுத்த “பெராக்கா” (Berakah=இறை புகழ்ச்சி) என்றே சொல்லே  பயன்படுத்தப்பட்டது.
         அப்பம் பலுகுதலை விவரிக்கும் பகுதிகள் இறுதி இரவு உணவைப்பற்றி கூறும் பகுதியுடன் நெருங்கியத் தொடர்புக்  கொண்டுள்ளன. ( காண். மாற் 6:35; 8:26). மாற்6:41 இல் நற்செய்தியாளர் “இறை புகழ்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். யோவானோ அதே புதுமையை விவரிக்க “நன்றி கூறுதல்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ( யோவா 6:11). மாற்கு ஏழு அப்பம் பலுகுதலை விவரிக்குமிடத்தில்  ( 8:6) “நன்றி கூறுதலும்” என்ற சொல்லை உபயோகிக்கிறார். இதிலிருந்து“நன்றி கூறுதலும்”, “இறை புகழ்ச்சியும்”  ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என உணர முடிகிறது.

 இது போன்றே மத்தேயும், மாற்கும் அப்பத்தைப்பற்றிக் கூறும்போது “இறைபுகழ்” என்றும், கிண்ணத்தைப்பற்றிக் குறிப்பிடும் போது “நன்றி”  என்றும் சொல்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால் பவுலும், லூக்காவும் இரண்டு செயல்களுக்கும் “நன்றி கூறி”  என்றே குறிப்பிட்டுள்ளார்கள். முதல் கிறிஸ்தவர் களுக்கும் இவ்விரு  சொற்களும் ஒரே பொருளையே உணர்த்தின ( காண் 1 கொரி 14: 16‡17)       இவ்வாறு ( 1 ) இயேசுவின் இறுதி இரா உணவும் (2) யூதர்களின் “பெராக்காவும்” ( 3) புதிய ஏற்பாட்டுக் கால மக்களின் “ இறை புகழுரைதல்” மற்றும் “நன்றி கூறுதலும்” நற்கருணை மன்றாட்டுக்கு   பின்னணியாக அமைந்தன.

2. நற்கருணை மன்றாட்டின்    தோற்றமும் வளர்ச்சியும்

         நமது ஆண்டவர் தமது இறுதி உணவின்போது  தம் சீடர்களுக்கு அப்பத்தையும் கிண்ணத்தையும்  அளித்து,  “இதை  என் நினைவாகச் செய்யுங்கள் ”  என்றார். இது தொடக்கக்கால கிறிஸ்தவர்கள்   நற்கருணை மன்றாட்டைத் தமக்கேற்ப அமைத்துக் கொள்ள வாய்ப்பும், உரிமையும் அளித்தது.

       முதல் கிறிஸ்தவர்கள் காலத்தில்  “ நற்கருணை வழிபாடு”  பொது உணவு வேளையின் முடிவில் கொண்டாடப்பட்டது. அதன் விளைவாக  நம் ஆண்டவருடைய  இறுதி உணவின் இரு “இறைபுகழுரைகளும்”  ( துவக்கத்திலும்  முடிவிலும்)  ஒரே  இறைபுகழ் மன்றாட்டாக இணைக்கப்பட்டன. இதிலிருந்துதான் பிற்கால நற்கருணை மன்றாட்டு செபங்கள் விரிவாக்கப்பட்டன.

நற்கருணை மன்றாட்டைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துத் தொகுக்கக்கூடிய  வாய்ப்பு அதன் பொது  அமைப்பிலே இருந்தது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் வரையறுக்கப்பட்ட அதிகாரபூர்வமான வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் ஏதுவும் இல்லை. இதை மறைசாட்சியான புனித ஜஸ்டின் என்பவருடைய “ சமயதற்காப்பு” (Apology of Justin) உரையிலும், அதன் உட்கூறுகளின் சுருக்கத்தை ஹிப்போலிட்டஸ் (Hypolitus) என்பவரின் “திருத்தூதர்களின் மரபு” (Apostolic Tradition)   என்ற நூலிலும் இருந்து அறிகிறோம்.

நான்காம் நூற்றாண்டிற்கு முன் ஒரே ஒரு நற்கருணை மன்றாட்டு இருந்ததாக புனித ஜஸ்டின் குறிப்பிடுகிறார்.  மேலும்  அது திருப்பலிக்குத் தலைமை ஏற்பவரின் திறமைக்கு ஏற்பச் சொல்லப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார்.  எனினும் 4‡ஆம் நூற்றாண்டி லிருந்து, வரையறுக்கப்பட்ட  வாய்ப்பாட்டு மன்றாட்டுகள் தேவையயனும் ஒரு  பொதுவான மனப்பாங்கு நிலவி வந்தது. இத்தகைய எண்ணம் முதலில் கீழக்குத் திருஅவையில் தான் தோன்றியது. ஏனெனில் இது “ஆரியனிஸம்” (Arianism) போன்ற தப்பறையான கொள்கைகளுக்கு எதிராகக் கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தவும் பாதுக்காகவும்  அவசியம் என உணரப்பட்டது.

        இதன் விளைவாக கால போக்கில் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நற்கருணை மன்றாட்டுகள் தோன்றின. இவை ஐந்து வகைகளாகப் பகுக்கப்பட்டன.

     1. எகிப்திய அல்லது அலெக்சாந்திரிய வழிபாடு
    2. அந்தியோக்கியா அல்லது மேற்குசீரியா வழிபாடு  
    3. கிழக்கு சீரிய வழிபாடு
    4. உரோமைய வழிபாடு
    5. கல்லிக்கன்  மற்றும் ஸ்பெயின் சார்ந்த வழிபாடு

இவற்றுள்  உரோமை வழிபாட்டு முறையைச் சார்ந்த  நற்கருணை மன்றாட்டு (உரோமைத் திருமுறை-Roman Canon)  காலபோக்கில் மேற்குதிரு அவையில் 11-ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப் பட்டது. 16-ஆம்  நூற்றாண்டில் இது மட்டுமே உலகெங்கும் இலத்தின் திருஅவையில் பரவி நிலைத்து  1970 வரை நின்றது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு உரோமை வழிபாட்டில் மற்றும்  மூன்று நற்கருணை மன்றாட்டுகள் உருவாக்கப்பட்ட பின் இந்த உரோமன் திருமுறை சிலசிறு மாற்றங்களுடன் முதல் நற்கருணை மன்றாட்டு என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.     இப்பொழுது இலத்தீன் திருஅவையில் நான்கு நற்கருணை மன்றாட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றோடு ஒப்புரவுக்கான நற்கருணை மன்றாட்டுகள் இரண்டும், சிறுவரோடு நிகழ்த்தும்  திருப்பலிக்கான நற்கருணை மன்றாட்டுகள் மூன்றும், பல்வேறு தேவைகளுக்கான நற்கருணை மன்றாட்டுகள்  நான்கும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.  சிறுவர்களுக்கான திருப்பலியின் மூன்றாவது  நற்கருணை மன்றாட்டு இருபாகமாகப் பிரிக்கப் பட்டுள்ளது.  

          பல்வேறு நற்கருணை மன்றாட்டுகளின் கருப்பொருள் ஒன்றே. அதாவது இறைவன் புரிந்த அரும்பெரும் செயல்களுக்குப் புகழ்பாடி, நன்றிகூறி மன்றாடுவதாகும். திருப்பலியில் கிறிஸ்துவின் மீட்புச்செயல் நினைவு கூறப்படுகிறது.  இதற்கு மூலக்காரணராகிய இறைவனுக்குப் புகழுரைத்து நன்றி கூறப்படுகிறது. மீட்பின் பலனை நம்பிக்கையாளர் அடையும்படி மன்றாட்டுகள்  இடம் பெறுகின்றன. அவை பயனை விளைவிக்கும்படி காணிக்கைகள், அதாவது பலிபொருள் ( கிறிஸ்துவே ) ஒப்புக் கொடுக்கப்படுகிறது.
                                                                                                                                                                                தொடரும்...
                                                                                                                                                                                                                                                                 

No comments:

Post a Comment

Ads Inside Post