Pages - Menu

Sunday 2 April 2017

குருத்து ஞாயிறு 9 - 4 -2017

குருத்து ஞாயிறு 

        9 - 4 -2017                                                                                             

 அருள்பணி.சிரில் ரிச்சர்ட் கிருபாகரன்

 எசா 50 : 4 -7;    பிலி 2: 6 -11     மத் 26:14 - 27
   
தவக்காலத்தின் இறுதியில் வரும் இஞ்ஞாயிறு, இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் உயிர்ப்புக்கு முன்னதாக இயேசு எருசலேம் நகரத்தில் நுழையும் நிகழ்வை முன்வைக்கிறது. உயரிய அந்தஸ்தை கொண்ட  (அல்லது)  உயரிய அதிகாரத்தை,  பதவியை பெற்ற ஒருவருக்கு  குருத்தோலைகளை விரித்து வரவேற்பு அளிப்பார்கள். ஆனால் இயேசுவை அவரை பின்பற்றியவர்கள் ஏன் இத்தகையை உயரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இஞ்ஞாயிறு  பாடுகளின் ஞாயிறு  என்றும் அழைக்கப்படுகிறது. அதனால்தான் மத்தேயு நற்செய்தியிலிருந்து  இயேசுவின் பாடுகள்  இன்று வாசிக்கப்படுகின்றன. 

குருத்தோலை: 

                குருத்தோலை  ஏந்தும் பவனியானது  ஒரு குறிப்பிட்ட சிறப்பான வெற்றியை கொண்டாடுவதன் வெளிப்பாடு ஆகும்.                    வெற்றியை ஆர்ப்பரிக்கும் விதமாக குருத்தோலை  ஏந்தி அசைத்து கொண்டாடுவது  கிரேக்க ரோமானிய காலகட்டத்தின் பாரம்பரியம்  ஆகும். இயேசு ஒரு குறிக்கப்பட்ட மனிதனாக,  பகிரங்கமாக ஜெருசலேம் நகரத்தில் நுழையும் இந்த நாள், மக்களுக்கு சுதந்தர உணர்வை மேலும் அதிகப்படுத்தியது. மக்களின் நுகங்களை அகற்ற ஒரு அரசன் தங்களுக்கு கிடைத்துவிட்டார் என்கின்ற  உணர்வே அவர்களிடம் மேலோங்கி இருந்தது. அவர்கள்   உரைத்த  “ஓசான்னா ”, “ காப்பாற்று ”, “உதவு”  என்கின்ற கருத்துகளை வெளிப்படுத்தும்  எபிரேய வார்த்தையின் விளக்கமாக இருந்தது. ஆக,  இயேசு அவர்களின் சுமைகளை  போக்க வாக்களிக்கப்பட்ட மெசியா  (அல்லது) அரசராக உயர்த்தப்பட்Vர்.


கழுதை : 

          ஒரு கழுதையின் மீது சுமர்ந்து  ஊர்வலம் வந்தது , இந்நிகழ்வின் சாரத்தை திசை திருப்புகிறது. அரசர் என்பவர் குதிரையின் மீது வருவார். இவ்வாறு குதிரையில் வரும் போது  அது  போரின்  அறிகுறியாக கருதப்பட்டது. ஆனால் கழுதை என்பது அமைதியைக் குறிக்கும்  அறிகுறியாக மாறியது. அது செக்கரியா 9:9வின் வார்த்தைகளை நினைவூட்டும் நிகழ்வை குறித்து காட்டுகிறது. “சீயோன் மகளே! உனது அரசர், கோவேறு  கழுதையின் மீது அமர்ந்து  வருகிறார்”என்கிற வார்த்தைகள், அமைதியை வழங்கும்  அரசர், மக்களை காப்பாற்ற வருகிறார்,  அவரின் வருகை அரசியல் ரீதியான சுதந்திரத்தை நிரந்தரமாக கொடுக்க வந்தார்  என்பதையே  உணர்த்தியது.

மக்கள் கூட்டம் : 

     மூன்று வகையான கூட்டம் இயேசுவை வரவேற்றது. 1.ஜெருசலேம் நகரில் பாஸ்கா திருவிழா சிறப்பிக்க வந்த யூதர்கள். 2. யூதர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட, ஜெருசலேமிற்கு வெளியில் தங்கிய யூதர்கள் ( Diasphora).  3. புறவினத்தார். ஆக இயேசு அனைவருக்காகவும் வந்தார் என்பதையும் , தன்னுடைய  மீட்பு  இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என்பதையும் தெளிவுப் படுத்தவே மூவரின் வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.  இயேசுவை பற்றிய  மக்களின் புரிதல்,  இயேசுவின் இலக்கில் மாற்றம் கொண்டு வரவில்லை. மாறாக தன்னுடைய நோக்கத்தில், இறைதிட்டத்தை நிறைவேற்ற மக்களின் ஆர்ப்பரிப்போடு சாவின் மீது இயேசு வெற்றிவாகை சூட சென்ற நிகழ்வாகவே குருத்து ஞாயிறு இன்றும் நினைவு கூறப்படுகின்றது . 

                மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் பாடுகள் பகுதியில் சில தனிப்பட்ட கருத்துகளைப் பார்க்கிறோம். இயேசுவை கைது செய்த போது  பேதுரு,  தலைமைக் குருவின் ஊழியரை   தாக்கி, அவரின் காதை துண்டித்தபோது , இயேசு, “உன் வாளை அதன் உறையில் போடு . ஏனெனில் வாளை எடுப்போர் வாளால் அழிந்து  போவார்” (மத் 26 : 52) என்ற குறிப்பை மத்தேயு மட்டும்  தருகிறார். யூதாஸ் தற்கொலை செய்துக் கொண்டதும் , பிலாத்துவின் விசாரணையின் போது , பிலாத்து கை கழுவுதல், யூதர் , இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் , எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும் என்று கத்துதல் (மத் 27:25), பிலாத்துவின் மனைவி கனவு கண்டு, பிலாத்துவை  எச்சரித்தல் (மத் 27:19) ஆகியவை மத்தேயு நற்செய்தியில் மட்டும் கூறப்படுகின்றன. மத்தேயுவின் , இயேசுவின் பாடுகளின் தொகுப்பில் , இயேசு மெசியா என்ற கருத்தை வலியுறுத்தப்படுகிறது (மத் 26 : 68 ; 27: 14 -22). இரண்டாவது, இயேசுவின் இறப்பில்  யூதர் தலைவர்களின் பொறுப்பு  நன்கு சுட்டிக்காட்டப்படுகிறது. பாடுகளின் நடுவில் இயேசுவின் பொறுமை, சீடர்களின் முன் மாதிரிகை ஆகியவை முன் வைக்கப்படுகின்றன. இத்தகைய மகத்துவமிக்க குருத்து நாளை சிறப்பிக்கும்  நாமும் பொருளுணர்ந்தவர்களாய்  இயேசுவின் எருசலேம் பயணத்தில் அவரை ஆரவாரத்தோடு வரவேற்று இறைதிட்டம் நிறைவேற துணை நிற்போம். 

No comments:

Post a Comment

Ads Inside Post