Pages - Menu

Sunday 30 April 2017

பாஸ்கா காலம்-நான்காம் ஞாயிறு 07-05-2017

பாஸ்கா காலம்-நான்காம்  ஞாயிறு 
07-05-2017
 தி.ப 14:36-41, 1பேதுரு 2: 20-25;  யோவா 10:1-10 

      “தலைமைத்துவம் என்பது மற்றவர்களின் வாழ்வை உயர்த்துவதற்கு  பெறப்பட்ட அரிய வாய்ப்பு. தங்களின் பேராசைகளை நிறைவு செய்துக் கொள்ள பயன்படுத்தும் வாய்ப்பல்ல”  என்கிறார்  ம்வாய் கிபாக்கி என்பவர்.

யோவான் 10ஆவது  இயல், “இயேசு நல்ல ஆயர்” என்ற கருத்தை வலியுறுத்தி பேசுகிறது. இன்றைய நற்செய்திப்  பகுதியில், நல்ல ஆயருக்கும் திருடருக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காண்பிக்கிறார். இயேசு ஆடுகளின் உண்மையான  ஆயர்  சுதந்திரமாக வாயில் வழியே செல்கிறார். குரல் கொடுக்கின்றார். அவன் முன் செல்கிறார். ஆடுகள் அவரைப் பின் செல்கின்றன.  திருடர்கள் திருட்டுத் தனமாக சுவறேரிக் குதித்து, ஆடுகளை அழிக்க வருகிறார்கள். இயேசு தன்னை முதலில் “வாயில்”என்பதற்கு ஒப்பிட்டு பேசுகிறார், தன் வழியை, தன்முன்மாதிரிகையைப் பின்பற்றும் ஆயர்களுக்கு “ஆபத்தில்லை” என்கிறார்.  ஆயர்களின் வாழ்வு ஆடுகளை  மையப்படுத்தி அமைய வேண்டும். எனவேதான் இன்றைய நற்செய்திப் பகுதியில், எட்டு முறை “ஆடுகள்” என்ற வார்த்தை குறிப்பிடப் படுகிறது.இயேசு,ஆடுகள் ஆயர்  என்ற உவமையைப் பல  பின்னணிகளில் பயன்படுத்துகிறார்.
  - மாற் 6:35      மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல் இருப்பதாக இயேசு குறிப்பிடுகிறார்.
  - லூக் 15 : 3-7 காணாமற்போன ஆடும், அதனைத் தேடும் ஆயரும் என்ற உவமையில், இயேசு பாவிகளைத் தேடி செல்வது  விளக்கப்பட்டது.
 - மத் 7: 15; 10: 16 ஆடுகள், ஓநாய்கள் நடுவில்  வாழ்வதனால் விழிப்பாக அவர்களிடம் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையைத்  தருகிறார்.
 - திபா 23:  தொநூ 49: 24  இறைவன் மக்களின் நல்ல ஆயர் என்று விளக்கப்பட்டுள்ளது.
 - எசே 34: மக்களின் தலைவர்கள் தீய ஆயர்களாக  வாழ்வதாக காண்பிக்கப்படுகின்றனர்.

இன்றைய அருள்வாக்குப் பகுதிகள் ஆடுகள் ஆயனின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டும், ஆயனை அடையாளம்  கண்டுக் கொண்டு அவரைப் பின் செல்ல வேண்டும், என்ற கருத்தை முன்வைக்கின்றன எனலாம். எனவேதான் முதல்வாசகத்தில், பேதுரு,
எருசலேமில் வாழ் மக்களைப் பார்த்து  “மனம் மாறுங்கள்  திருமுழுக்குப் பெறுங்கள், தூய ஆவியைப் பெறுவீர்கள்” என்கிறார். இரண்டாம் வாசகத்தில், நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்க.இதற்காகவே அழைக்கப்பட்டிருக் கிறீர்கள் என்று பேதுரு கூறுகிறார்.மக்களுக்கு ஏற்ற தலைவர்கள்தான் தோன்றுவார்கள். ஏமாற்றி வாழும் எண்ணம் கொண்ட மக்கள் வெகுவாக இருந்தால், ஏமாற்றும் தலைவர்தான் அங்குத் தோன்றுவார். நல்ல நிலத்தில் பயிர்கள் செழித்து வளரும். பாலை நிலத்தில்  பயிர்கள்  கருகி ச்சாகும்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
கொல் குறும்பும்  இல்லது நாடு   (குறள் 785)

 நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பல கட்சிகளும், கூடவேயிருந்தே தீங்கு செய்யும் உட்பகைவர்களும், மக்களை துன்புறுத்தும் தீயவர்களும் இல்லாததுதான் நல்லநாடு என்கிறார் வள்ளுவர்.
               “மனிதனை மனிதன் சாப்பிடுரான்டா தம்பிப் பயலே”  என்பது போல், நம் நாட்டவரிடம் தியாக மனப்பான்மை இல்லாமல் இருப்பதைக் காண்கின்றோம்.
     
          நிருபன் சக்கரவர்த்தி என்பவர் திரிபுராவில் முதலமைச்சராய் இருந்தார். 1988இல் அவர் பதவி முடிந்த போது, ஒரு சிறிய டிரங்க் பெட்டியுடன், ரிக்ஷாவில் ஏறி தன் கட்சி அலுவலகத்திற்குச் சென்றாராம். மக்களுக்காக பணி செய்கிறவர்  அவ்வளவு  எளிமையாக வாழ்ந்தார். 

இந்திய பாராளுமன்றத்தில்  543 உறுப்பினர்களில் 186 பேர் ( 34 சதவீதம் ) குற்றப் பின்னணியுள்ள  தாதாக்களாக வாழ்பவர்கள் என்று கணக்கெடுப்புக் காட்டுகிறது.  தமிழ்நாட்டிலும், சட்டமன்ற உறுப்பினர்களில் மூவருக்கு  ஒருவர் இந்த குற்றப் பின்னணி உள்ளவர். தாயைப்போல பிள்ளை, நூலைப் போல சேலை, மக்கள் போல் மக்கள் தலைவர்கள். 

No comments:

Post a Comment

Ads Inside Post