Pages - Menu

Monday 16 May 2016

இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா  
                          
29 - 5 - 2016        

தொ நூ 14 : 18 - 20,   1 கொரி 11 : 23 - 26 ,    லூக் 9 : 11 - 17
அண்மைக்காலங்களில் திரு சீமான் அவர்கள் கிறிஸ்துவ மறையைப் பற்றி கிண்டல் அடித்து பேசி வருகிறார். முக்கியமாக, நற்கருணையைப் பற்றி, எப்படி அப்பம், இயேசுவின் உடலாகவும் இரசம், இயேசுவின் இரத்தமாகவும் ஆகும்? இவர்கள் மனித உடலைத் தின்னும் காட்டுமிராண்டிகளா? என்கிறார். இதே குற்றச்சாட்டு தொடக்க திருச்சபையிலும் இருந்தது. ஆனால் முருகன் கோவிலுக்கு அவர் காவடி தூக்குகிறார். அதற்கு அவர் தரும் விளக்கம் நம் மூதாதையர் வேட்டையாட சென்றபோது, வேட்டையில் பிடித்த மிருகத்தை தோளில் போட்டு நடனமாடி வருவார்கள். அதன் நினைவுதான் காவடி ஆட்டம் என்கிறார். நற்கருணை இயேசு தன் அன்பைக் காட்ட அவர் வடித்துக் கொடுத்த அடையாளம் என்பதை புரியாது, தெரியாது சீமான் பேசிவருகிறார். இறைவன் என்றும் நம்மோடு இணைந்து வாழ்பவர், உலகில் வந்த  இறைமகன் இயேசு, இறைவன் நம்மோடு என்றும் வாழ்வதை  செயலாக்க வடிவமாக நற்கருணையை ஏற்படுத்தினார்.

எம்மாவு நிகழ்ச்சியில் அப்பம் பிட்கையில் இயேசுவை சீடர்கள் கண்டுணர்ந்தது குறிப்பிடப்படுகிறது. முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறுகிறார், ‘நற்கருணை இல்லையயனில் திருச்சபை இல்லை’ என்கிறார். புனித பேதுரு ஜீலியான் என்பவர், ‘நற்கருணை, இயேசுவின் அன்பின் உச்சக்கட்ட வெளிப்பாடு அதற்கடுத்தது விண்ணகம் தான்’ என்கிறார்.

இன்றைய நற்செய்தி பகுதியில் ஐயாயிரம் பேருக்கு இயேசு பாலைவனத்தில் உணவு தருகிறார். அந்நிகழ்ச்சியிலும் இயேசு, இறுதி இரவு உணவில் செய்த அதே செயல்களை செய்கிறார். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து அவற்றின் மீது ஆசி கூறி, மக்களுக்கு பரிமாறக் கூறுகிறார். இந்நிகழ்ச்சியை விளக்கும் புனித ஜெரோம், ‘வழியில் பசியால் வீழ்ந்து விடாமல் இருக்க  மக்களுக்கு இயேசு உணவளித்தார். விண்ணக பயணத்திலும் வானக அப்பம் உண்ணாமல் செல்வது, மிகவும் ஆபத்தானது’ என்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளார் தான் பெற்று கொண்ட நற்கருணை பாரம்பரியத்தை மக்களுக்குக் கொடுப்பதாகக் கூறுகிறார். நற்கருணை, உணவு, உடன்படிக்கை பலியாக விளங்குகிறது. மனித பலகீனத்தை மாற்றுவதற்கு இயேசு கொடுத்திருக்கும் மாமருந்தாக இது விளங்குகிறது. அப்பமும், இரசமும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுவதுபோல அதனை பெறுகின்ற நாமும் மாற வேண்டும். இல்லையயன்றால் நற்கருணையினால் பயனில்லை என டீக்மேன் என்பவர் கூறுகிறார். அன்னை தெரசாவின் புதுமையான பணிக்கு அடித்தளமாக விளங்கியது நற்கருணை பக்தியாகும். 24 மணி நேரமும் நற்கருணை ஆராதனை அன்னை தெரசாவின் இல்லங்களில் அவசியம் இடம் பெறுகிறது. 

No comments:

Post a Comment

Ads Inside Post