Pages - Menu

Tuesday 31 May 2016

பணிவு என்னும் இனிய பாதை 2. பணிவும் செபமும்

பணிவு என்னும் இனிய பாதை
2. பணிவும் செபமும்

அருள்பணி. மகுழன்,
பூண்டி மாதா தியான மையம்.


நம் அன்றாட வாழ்வில் நமக்கு எவ்வளவு பணிவும், தாழ்ச்சியும் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்வதற்கு ஓர்   எளிய வழி இருக்கிறது. தினமும் நாம் எவ்வளவு நேரம் செபம் செய்கிறோம் என்பதுதான் அது. நாம் செபம் செய்யும்போது    நம் இயலாமையையும், இறைவனைச் சார்ந்து வாழ்கிறோம் என்பதையும் வெளிப்படுத்துகிறோம். எனவே, அதிக  நேரம் நாம் செபிப்பதற்கு ஒதுக்கினால் அதிக பணிவு நம்மிடம் உள்ளது என்று அர்த்தம். ஆனால், செபம் செய்வது அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. செபத்திற்கு இலக்கணம் வகுத்த புனிதர்கள்கூட தங்கள் வாழ்வில் ஒரு சில நேரங்களில் இறைநம்பிக்கையைக் கடைப்பிடிப்பதும், இறைவனிடம் வேண்டுவதும் கடினமாக இருந்ததாக சொல்கிறார்கள். செபம் செய்ய கற்றுக் கொள்வதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. அதுதான் தினமும் செபிப்பது. செபிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்குவது. தினமும் செபிக்காமல் நம்மால் செபிக்கக் கற்றுக் கொள்ள முடியாது.

வயலின் வாசிப்பதில் வல்லவர் அவர். அவரைப் போல யாராலும் வயலின் வாசிக்க முடியாது. ஒருமுறை அவரை    பேட்டி எடுத்த ஒரு நிருபர், பயிற்சி இல்லாமல் உங்களால் எத்தனை நாள் தாக்குப் பிடிக்க முடியும்? என்று கேட்டார். அவர் சொன்னார்,  ஒரு நாள் நான் பயிற்சியை நிறுத்தினால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. என்னால் மட்டும்தான் நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லமுடியும். ஒரு வாரம் நான் பயிற்சியை நிறுத்தினால் ஒரு பத்துப்பேராவது அதைக் கண்டுபிடித்து விடுவர். ஒரு மாதம் நிறுத்தினால் மக்கள் அனைவருமே நான் என் அளவிற்கு வயலின் வாசிக்கவில்லை என்பதைச் சொல்லி விடுவார்கள்.

ஒரு பறவைக்கு சிறகுகள் எவ்வளவு முக்கியமோ, ஒரு படகுக்கு துடுப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே ஓர் ஆன்மாவிற்கு செபம் முக்கியம். மனம் உடைந்த நிலையில் நாம் இருந்தால் அதனை சரியாக்குவதற்கு உடைந்த துணுக்குகளை கடவுளிடம் தருவதே சிறந்த வழியாகும். சரி, செபத்தைப்பற்றி 5 கருத்துக்களை தெரிந்து கொள்வோம்.

1. நாம் செபிக்கும்போது கடவுள் அதனை அளித்தால் நம் விசுவாசம் அதிகமாகும். நாம் செபிக்கும்போது அதனைத் தருவதற்கு கடவுள் காலம் கடத்தினால் நம் பொறுமை அதிகமாகும். நாம் செபிக்கும் போது கடவுள் அதனை அளிக்கவில்லை என்றால், அதைவிட சிறந்ததொன்றை கடவுள் நமக்குத் தயார் செய்கிறார் என்பதை நினைவில் கொள்வோம்.

2. நாம் நமக்காக செபிப்பதோடு நின்றுவிடாமல் பிறருக்காகவும் செபிப்போம். நாம் மகிழ்வோடும், நிறைவோடும் இருக்கிறோமா? நினைவில் கொள்வோம். நமக்காக வேறு யாரோ செபிக்கிறார்கள்!

3. நம் தேவைகளைமட்டும் முன்னிறுத்தி செபிப்பதோடு நின்றுவிடாமல், நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளுக்கும் நன்றி கூறுவோம். ஆண்டவர் இயேசு, திரும்பி வராத தொழுநோயாளர்களை குறித்து, “மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்று கேட்டார்.

4. நம் இன்ப, துன்பங்களை இறைவனிடம் பகிர்ந்து கொள்வது ஒரு சிறந்த செபம். ஒருமுறை ஒரு குழந்தையிடம், “நீ என்னசெபம் செய்வாய்?” என்று கேட்டார்கள். அப்போது அந்தக் குழந்தை கூறியது,  ‘கடவுள் என் நண்பர். பொதுவாக நண்பர்கள் சேர்ந்தால் என்ன செய்வார்கள்? அந்த நாள் எப்படி இருந்தது  என்று பகிர்ந்து கொள்வார்கள். நானும் இறைவனிடத்தில் என் இன்ப, துன்பங்களை சொல்வேன்’ என்றது. 

5. புனித லெயோலா இஞ்ஞாசியார், புனித  பிரான்சிஸ் அசிசியார், புனித அவிலா தெரசாள் போன்றவர் செய்த சிறந்த செபத்தை சொல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?  அவர்கள் தினமும் கடவுளிடத்தில் , “கடவுளே நான் இன்று என்னசெய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று கேட்பார்களாம்.                                                                                             
(தொடரும்)

No comments:

Post a Comment

Ads Inside Post