Pages - Menu

Wednesday 4 May 2016

தேர்தல் விளையாட்டு

தேர்தல் விளையாட்டு

நம் நாட்டில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மிரட்டும் அரசியல் அமர்க்களம் அரங்கேறும். இதற்கு ஜனநாயகத் திருவிழா என்றும் பெயர்.

வெத்து வேட்டு :

தேர்தல் நெருங்கிவிட்டதால், பல யூகங்களும், முடிவுகளும் கிளம்புவது சகஜம். ‘உங்கள் பொன்னான வாக்குகளை, எனக்கு போடுங்கள். உங்கள் தேவைகளை எல்லாம் நூறு சதவிகிதம் நிறைவேற்றி காட்டுகிறேன். உங்கள் தொண்டன் நான், உங்கள் மகனாக, மகளாக, சகோதர, சகோதரியாக என்னை ஏற்றுக்கொண்டு, என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களை என்றும் மறக்க மாட்டேன். உங்கள் தேவைகளை நிறைவேற்ற, உங்கள் வாசலில் காத்திருப்பேன்’ என்ற வெல்லமான பேச்செல்லாம் வெளியாகும் காலம் இது.

ஏமாந்த சோனகிரிகள் :

ஆனால், நாம் இவ்வார்த்தைகளை நம்பி, ஓட்டு போட்டுவிட்டு, பிறகு, சிபாரிசு கடிதம் வாங்க  எம்.எல்.ஏ. வீட்டுக்கும், மந்திரி வீட்டுக்கும், நடையாய் நடந்து, செருப்பு தேய்ந்து அவர் வீட்டில் நாயைப் போல காத்து கிடந்து சுத்தப்போவதுதான் எதார்த்தம். ஆனால் கட்சிகளின் சர்க்கரை வார்த்தைகளை நம்பி கட்சிகள் கொடுக்கும் ரூ.500, ரூ.1000, மூக்குத்தி, குடம், புடவை ஆகியவைகளுக்கு ஆசைப்பட்டு ஓட்டை விற்பது, நமது நடைமுறையாகி விட்டது.

பார்வைகள் பல :

ஒரு சிலர், ‘தேர்தலில் நாங்கள் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை, யாரும் நல்லவர்கள் இல்லை, நல்லவர்கள், நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். எதுக்கு ஓட்டுப்போட்டுக்கிட்டு’ என்று மேதாவியாக பேசுபவர்களும் நம்மில் உண்டு. ‘யாரும் சரியில்லை. எனவே 49ஓக்கு ஓட்டுப்போடு’ என்று சொல்லும் அறிவாளிகளும் உண்டு. ‘குடிக்க குவாட்டரும், சாப்பிட பிரியாணியும் கொடுத்தால் போதும் அண்ணே!’ என்று சொல்லும் நம் நாட்டு குடிமகன்களும் உண்டு. ‘நம் சாதிப்பா ... சாதிக்காரனை ஜெயிக்க வெச்சா நம்மளுக்கு நல்லது நடக்கும், காண்டிராக்ட் கிடைக்கும், நம் ராஜ்ஜியம்தான்’ என்று மார்தட்டுபவர்களும்  உண்டுதான்.

நல்ல வேட்பாளர் எங்கே?

நல்ல வேட்பாளர்கள் வானத்திலிருந்தா குதிப்பார்கள்? நம்மோடு இருப்பவர், நம் கண்முன் நடமாடும் ஒருவர்தானே வேட்பாளர். நமக்காக நம் பகுதி நலத்திட்டங்களை கொண்டுவருபவராகப் பார்த்துதான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிகார, ஆணவ, அழிவு போட்டியில், சாகச விளையாட்டில் நாம் நம்மை அறியாமல், யாரையோ மேலே கொண்டு வருகிறோம். சாதி அரசியல் தலைவிரித்து ஆடும்போது பிறசாதிக்காரர்கள்,  பணத்துக்கும், பரிசு பொருட்களுக்கும் தானே விலைபோவார்கள்.

பணத்திற்கு ஏன் வணக்கம் :

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, டீ செலவுக்கும், போஸ்டர் ஒட்டும் செலவுக்கும், பூத், ஆட்டோ, ரிக்ஷாவுக்கு மட்டும் தான் கட்சிகள் செலவு செய்யும். ஆனால் இப்போது வாக்காளர்களுக்கான செலவே பெரும் செலவு. இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?. ஒரு கூச்சமும் இல்லாமல் ஏன் பணம் வாங்குகிறார்கள்? அடித்தட்டு மக்களுக்கு இது ஒரு போனஸ். ‘கொள்ளை அடிக்கப் போறான். நமக்கு கொஞ்சம் கொடுத்தால் குறைஞ்சாப் போகப்போறான்?’ என்ற நியாயமும் கடைபிடிக்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே  உள்ள மக்கள்தான் இதற்கு அடிமையாகிறார்கள். மத்தியதர மக்கள் ‘கொடுத்தால் வாங்குவோம், கட்டாயம் இல்லை’ என்ற மனநிலையோடு வாழ்கிறார்கள். உயர்மட்டம், தமது தொழிலுக்கு சாதகமாக அமையும் கட்சிக்கே வாக்களிப்பர். பணம் படைத்தவர் முழுமையாக ஓட்டுப்போட வருவதில்லை. அந்த ஓட்டு, கள்ள ஓட்டாக வலுவுள்ள கட்சி ஆட்களால் வாக்களிக்கப்படும்.

கிறிஸ்தவர்களின் மனப்பாங்கு :

நாம் நல்ல கிறிஸ்தவர்கள், அரசியல் நமக்கு ஒத்து வராது அமைதியானவர்கள் நாம். நமது கோவிலை இடித்தாலும், கொளுத்தினாலும் அமைதியாகதான் போராட வேண்டும். அது கிறிஸ்துவின் சாந்திய வழி. நம் குருக்களை, கன்னியர்களை கொல்லும்போது அவர்கள் வேதசாட்சிகளாகி  விடுவார்கள். நமது மதத்திற்காக  உயிர்விடுபவர்கள் பாக்கியவான்கள். எனவே அமைதியாக போராடுவோம். நமது மதத்தலைவர்கள் அன்பானவர்கள், கிறிஸ்து வழியில் நம்மை நடக்க வழிகாட்டும் நல்ல மனம் படைத்தவர்கள். அவர்கள் காட்டும் அறவழியில் செல்வோம். ஆனால் கிறிஸ்தவர்களும் இந்திய குடிமகன்கள் என்ற எண்ணத்தை உணர்வதில்லை. இந்திய நாட்டின் வாக்காளர்கள் என்ற முறையில் நம் மதத்தை மதிப்பவருக்கும், நம் எண்ணங்களுக்கு வாழ்வு கொடுப்பவருக்கும் வாக்களிப்பதுதான் முறை, நாமும் இந்திய வாக்காளர்கள் என்பதை  உணர்ந்து அறநெறியில் வாக்களிக்க வேண்டும். இது நமது கடமை மட்டும் அல்ல, நமது  உரிமையும் கூட.

ஜாதி வெறி, ஏமாற்றும் சதி :

ஜாதி சார்ந்த கட்சிகளை நாம் தேர்ந்தெடுக்கும் போது இந்த சமுதாயத்தில் சாதி அடிப்படையில் பிரிப்பதற்கு நாமும் தானே உடந்தையாக இருக்கிறோம். இதனால் நாம் நம் தனித்துவத்தை தொலைத்து விட்டு ஊழலுக்கும், பிரிவுக்கும் துணை போகிறோம். நாம் ஒவ்வொருவரும் வாங்கும் 500, 1000 ரூபாய்கள். ஒரு இலட்சம், கோடியாக நமக்கு முன்னே நிற்கிறது. 
ஆனால் நாம்தான் மாற்றத்தின் கதாநாயகர்கள், நாம் நினைத்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வரமுடியும். தகுதியுடைய, இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும் வாக்காளர்களாக நாம் மாறவேண்டும். அப்போதுதான் சரியானவர்களை தேர்ந்தெடுத்து, நாட்டை வளர்க்க முடியும், நம்மை வளர்த்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Ads Inside Post